Wednesday, May 9, 2018

மாநில செய்திகள் 

முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த அப்பல்லோ மருத்துவர் மீண்டும் விசாரிக்க ஆணையம் முடிவு




ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவர் விசாரணை ஆணையத்தில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

மே 09, 2018, 05:00 AM

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால், மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று காலை 10.30 மணிக்கு ஆணையத்தில் ஆஜர் ஆகினர்.

அவர்கள் இருவரும் சர்க்கரை நோய் (நீரிழிவு) தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் ஆவர். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே போயஸ்கார்டனில் 20 மருத்துவர்கள் அவருக்கு பல்வேறு காலகட்டங்களில் சிகிச்சை அளித்ததாக சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலத்தில் கூறி அந்த மருத்துவர்களின் பெயர்களையும் கூறி உள்ளார். அந்த அடிப்படையிலேயே ஜெயஸ்ரீகோபால் உள்பட இருவருக்கும் ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் இருவரிடமும் நீதிபதி பல்வேறு கேள்விகள் கேட்டார். நீதிபதி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தெரியாது என்றும், முன்னுக்கு பின் முரணாகவும் ஜெயஸ்ரீகோபால் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆணைய தரப்பு வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் ஜெயஸ்ரீகோபாலிடம் குறுக்கு விசாரணை செய்தனர்.

ஜெயஸ்ரீகோபால் தனது வாக்குமூலத்தில், ‘அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 2015-ம் ஆண்டில் இருந்து 10-க்கும் மேற்பட்ட முறை போயஸ்கார்டனுக்கு சென்று ஜெயலலிதாவுக்கு சர்க்கரை(நீரிழிவு), தைராய்டு நோய் பிரச்சினைக்கு சிகிச்சை அளித்துள்ளேன். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அனைத்து நாட்களும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளேன். ஒருமுறை பிசியோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டியது குறித்து கேட்ட போது தலையை அசைத்தபடி பதில் அளித்தார். சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு ஏற்ற, இறக்கமாகவே இருந்தது. டிசம்பர் 5-ந் தேதி மாலை 4.15 மணிக்கு ஜெயலலிதாவுக்கு திடீர் இருதய அடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை’ என்று கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

மருத்துவர் ராமச்சந்திரன் தனது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவரது குடும்ப மருத்துவர் சிவக்குமார் அழைத்ததன் பேரில் 2016-ம் ஆண்டு மே மாதம் போயஸ் கார்டனுக்கு நேரில் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டேன். அப்போது, ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சில மருந்து, மாத்திரைகளை பரிந்துரை செய்தேன். இதன்பின்னர் என்னை அவர்கள் அழைக்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு அவருக்கு நான் எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை’ என்று கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் இருவரிடமும் குறுக்கு விசாரணை செய்வதற்காக அவர்கள் அளித்த வாக்குமூலத்தை ஆணையத்தில் ஆஜராகி இருந்த சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார்பாண்டியன் பதிவு செய்து கொண்டார்.

இன்று (புதன்கிழமை) அப்பல்லோ மருத்துவர் சாந்தாராம் ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார்.

No comments:

Post a Comment

Playing cricket witha cork ball not a criminal offence: HC

Playing cricket with a cork ball not a criminal offence: HC A scheme for compensating such eventualities could be framed, says judge. Mohame...