Thursday, May 10, 2018


தலையங்கம்
‘நீட்’ தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் தேவையா?


கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மருத்துவப்படிப்பு மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வை எழுதப்போன மாணவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் அளவில் பெரிய கெடுபிடிகள் நடந்தது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மே 10 2018, 03:00

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மருத்துவப்படிப்பு மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வை எழுதப்போன மாணவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் அளவில் பெரிய கெடுபிடிகள் நடந்தது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டீன்ஏஜ் என்று கூறப்படும் பதின்பருவ இளம்வயது பிஞ்சு மலர்களான மாணவர்கள் தேர்வு எழுதப்போகும் முன்பு மிகுந்த அவமானத்துக்கு ஆளாகும் வகையில் பல கெடுபிடிகள் நடந்தன. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த தேர்வுக்கு, காலை 9.30 மணிக்கு முன்பே தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஓரிரு நிமிடங்கள் தாமதமான மாணவர்களை கூட தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. பெல்ட் அணியக்கூடாது, கையில் மோதிரம் போடக்கூடாது, காதில் கம்மல், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜடைமாட்டி, சிலேடு, கைக்கெடிகாரம், பிரேஸ்லட், எந்தவிதமான உலோக ஆபரணங்கள் அணியக்கூடாது. தண்ணீர் பாட்டில் கொண்டுபோகக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருந்தார்கள். இதற்கும் மேலாக, ஷு அணியக்கூடாது. லோஹீல்ஸ் செருப்புகள்தான் அணியவேண்டும். அரை கை சட்டைகள்தான் அதுவும் வெளிர் நிறத்திலான ஆடைகள்தான் அணியவேண்டும். பெரிய பட்டன்கள் கூடாது. தலையில் பூ வைக்கக்கூடாது. சல்வார் அல்லது சுடிதார் அணிந்துதான் வரவேண்டும். மாணவர்கள் பேண்ட் அணிந்துதான் வரவேண்டும் என்று ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

எத்தனையோ தேர்வுகளில் மணமகனும், மணமகளும் திருமண கோலத்திலேயே வந்து தேர்வு எழுதிய படங்கள் எல்லாம் பத்திரிகைகளில் வந்தது. டெலிவி‌ஷன்களில் காட்டப்பட்டது. ஆனால் இந்த தேர்வுகளில் இத்தகைய விதிகள் என்ற பெயரில் கண்காணிப்பில் இருந்தவர்கள் அதிகமாக கெடுபிடியை விதித்தது மாணவர்களை சஞ்சலப்படுத்தவைத்துவிட்டது. செயின், கம்மல், கொலுசு, மோதிரம் அணிந்து வந்தவர்கள் அதை கழற்றவேண்டிய நிலை ஏற்பட்டபோது, அவர்கள் தேர்வு எழுதி முடியும்வரை அதை பாதுகாப்பாக வைக்க வசதிகூட ஒரு இடத்திலும் இல்லை. தலையில் ரப்பர் பேண்ட், கிளிப் அணியக்கூடாது என்ற நிலையில், பல மாணவிகள் தலைவிரி கோலமாக தேர்வு அறைக்குள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோவில்களில் பெற்றுக்கொள்ளும் சாமி கயிறுகளை கழுத்திலும், கையிலும் அணிந்து வந்தனர். அதையெல்லாம் வெட்டி அகற்ற வேண்டிய நிலையில் மிகவும் துயரம் அடைந்தனர்.

முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் கத்திரிகோலால் சட்டையை வெட்டி, அரை கை சட்டையாக்கினர். காதில் டார்ச் அடித்தும் சோதனை நடந்தது. தேர்வு எழுதும் முன்பே இவ்வளவு சோதனைக்கு ஆட்பட்ட மாணவர்கள் ஒரு கலக்கத்துடன் தேர்வு எழுத சென்றனர். மகிழ்ச்சியோடு தேர்வு எழுத வேண்டியவர்கள், மனஉளைச்சலோடு சென்றனர். காப்பி அடிப்பதைத் தடுக்க, எவ்வளவோ சாதனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேர்வு அறை வாசலிலும் மெட்டல் டிடெக்டர், கேமராக்கள் வைத்திருக்கலாம். இதுதவிர, தேர்வை கண்காணிக்க கூடுதல் ஆசிரியர்களை நியமித்திருக்கலாம். இப்படி அதிநவீன வசதிகள் இருக்க, சி.பி.எஸ்.இ. இவ்வாறு நாகரீகமற்ற கெடுபிடிகளை வைத்து மாணவர்களை அவமானப்படுத்தியது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுபோன்ற தேவையற்ற கெடுபிடிகள் விதிக்கப்படுவதை தமிழக அரசு எதிர்க்கவேண்டும். அடுத்த ஆண்டு கண்டிப்பாக இத்தகைய கெடுபிடிகள் இருக்கக்கூடாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024