Thursday, May 10, 2018

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று...ஓய்கிறது! : நாளை மறுநாள் 223 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு : மோடி, ராகுல், சோனியாவால் சூடுபறந்தது களம் : போலி வாக்காளர் அட்டைகளால் கட்சிகள் பீதி

Added : மே 09, 2018 22:57

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம், இன்று மாலை நிறைவடைகிறது. இறுதிக்கட்ட பிரசாரத்தில், பிரதமர் மோடி, காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். கர்நாடகவில் உள்ள, 224 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அட்டவணை, மார்ச், 27ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கும் முன்பே, அனைத்து கட்சித் தலைவர்களும், சுற்றுப் பயணத்தை துவங்கிவிட்டனர். பெங்களூரு, ஜெயநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், 59, பிரசாரத்தின்போது, மயங்கி விழுந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், இந்த தொகுதியில் மட்டும், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற, 223 தொகுதிகளிலும், மொத்தம், 2,654 வேட்பாளர்கள், தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கிய வேளையில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உட்பட, பல தேசிய தலைவர்களும், மத்திய அமைச்சர்களும், கர்நாடகாவில் முகாமிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, பங்கார்பேட்டை, சிக்கமகளூரு, பெலகாவி, பீதர் ஆகிய இடங்களில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல், நேற்று காலை, பெங்களூரு, பசவனகுடியிலுள்ள தொட்டகணபதி கோவிலில் வழிபட்டார். காந்தி நகர், சி.வி., ராமன்நகரில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக, ஒசூர் ரோட்டில், கார்மென்ட்ஸ் ஊழியர்களுடன் ராகுல் கலந்துரையாடினார். பிற்பகலில், எச்.ஏ.எல்., சதுக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பங்கேற்றார். முதல்வர் சித்தராமையா, நேற்று முழுவதும், தான் போட்டியிடும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, கனகபுரா, ராம்நகர், சென்னபட்டணா; முன்னாள் முதல்வர் குமாரசாமி, குலேகுட்டா, பாதாமி உட்பட, பல இடங்களில், பிரசாரம் செய்தனர். பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, துமகூரு, பெங்களூரின் சிவாஜிநகர், சர்வக்ஞ நகர், மகாதேவபுரா ஆகிய தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் தொகுதியான ஷிகாரிபுராவில், நேற்று, நாள் முழுவதும் பிரசாரம் செய்தார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தெர்தல், குப்பி சட்டசபை தொகுதியிலும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹிரேகெரூர், ராணிபென்னுார், ஒசபேட்டை, அத்திபள்ளி உள்ளிட்ட இடங்களிலும் பிரசாரம் செய்தனர். இதுதவிர, சிறிய கட்சிகள் உட்பட அந்தந்த தொகுதி வேட்பாளர்களும், வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். ஓட்டுப்பதிவு நடப்பதற்கு, 48 மணி நேரத்துக்கு முன்னதாக பகிரங்க பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது. எனவே, கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம், இன்று மாலை, 6:00 மணியுடன் முடிவடைகிறது. மேலும், வெளியூர்வாசிகள் தொகுதியை விட்டு வெளியேறும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல், கர்நாடகத்தில் முகாமிட்டுள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், இன்றுடன் பிரசாரத்தை முடிக்கின்றனர். நாளை முதல், அந்தந்த தொகுதி வேட்பாளர்கள், வீடு வீடாக சென்று, ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் கமிஷனும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது. கடைசி இரண்டு நாட்களில் வாக்காளர்களுக்கு, முறைகேடான பணம் வழங்கப்படும் என, தேர்தல் அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால், மாநில எல்லைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் என முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக சோதனைச் சாவடிகளில் இரவு பகலாக வாகன சோதனை நடைபெறுகிறது. இதற்கிடையே, பெங்களூரு, ஜாலஹள்ளி திராட்சை தோட்டம் அருகே, ஒரு லட்சத்துக்கும் அதிகமான நபர்களை, ராஜராஜேஸ்வரி தொகுதி வாக்காளர் பட்டியலில், சட்டவிரோதமாக சேர்க்க நடந்த முயற்சி, நேற்று முன்தினம் அம்பலத்துக்கு வந்தது. பல ஆயிரக்கணக்கான வாக்காளர் போலி அடையாள அட்டைகளும், ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான அசல் அட்டைகளும் கட்டுக்கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்பட்டது, அரசியல் கட்சிகள் மற்றும் மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024