Wednesday, May 9, 2018


காற்றில் கரையாத நினைவுகள்: கருப்பு வெள்ளைச் சித்திரங்கள்!

Published : 08 May 2018 10:03 IST

வெ.இறையன்பு







புகைப்படம் அன்று அரிய ஆவணம், வாழ்ந்ததற்கும் மறைந்ததற்கும். சுவரில் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் இப்போது அழ வைத்துவிட்டுச் சென்ற மனிதரின் அடையாளம். சுவர்கள் புகைப்படங்களை மாட்டுவதற்காகவே கட்டமைக்கப்பட்டன அன்று. வாழ்க்கைச் சரிதத்தை கல்வெட்டுகளைப் போல முகவெட்டுகளால் அளக்க முயன்ற காலம் அது.

அன்று நிலையம் (போட்டோ ஸ்டுடியோ) சென்றுதான் புகைப்படம் எடுக்க வேண்டும். ஒளியைப் பாய்ச்சும் விளக்குகள், ஓவியத் திரை, அருகில் எப்போதும் வாடாத மலரவும் முடியாத செயற்கைப் பூக்கள். இருக்கையில் அமரும்போது லேசான பதற்றம் எடுக்கும். தயாராகச் சொல்லிவிட்டு புகைப்படக் கலைஞர் கருப்புத் துணிக்குள் புகுந்துகொண்டு சிரிக்கச் சொல்லும்போதுதான் முகம் இறுக்கமடையும். கருவியை இயக்கும்போது வெளிச்ச வெள்ளத்தில் கண்கள் கூசும். தூங்குவதுபோல் படம் பதிவாவதும் உண்டு. எடுத்து முடித்ததும் எதையோ சாதித்த திருப்தி.

புகைப்படம் என்பது அழகின் கனவு. எந்தப் படத்திலாவது அழகாகத் தெரிய மாட்டோமா என்கிற அடிப்படை ஆதங்கத்தின் ஏக்கப் பதிவு. படம் எந்த நாளில் கிடைக்கும் என்று பணத்தைக் கட்டியதும் ஆர்வமாய்க் கேட்போம். சொன்ன நாளில் அது கிடைத்ததே இல்லை. கேட்டால் மூக்கையும், முழியையும் தொட்டுச் சரி செய்ய முயற்சி நடப்பதாய் பதில் வரும். பலமுறை நடந்து படத்தைப் பெற்று பரபரப்பாகப் பார்க்கும்போது ‘நம் முகம்போல இல்லையே’ என்று முதலில் தோன்றும். நம்மினும் அழகாக இருப்பதே நல்ல புகைப்படம்.

ஆண் குழந்தைக்கு முடியிறக்கும் முன்பு படமெடுப்பது மரபு. சீவி சிங்காரித்து கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து நிலையத்துக்குச் சென்று படம் பிடிப்பார்கள். அப்படம் அத்தனை வீட்டிலும் தவறாமல் இருக்கும். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் கூந்தலில் வாழைமடல் வைத்து தைத்து பூவலங்காரம் செய்து புகைப்படம் எடுப்பது உண்டு.

’போட்டா புடிச்சா ஆயுசு கொறையும்’

அதிகப் புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என தவிர்த்த பெரிசுகள் உண்டு. தொண்ணூறு வயதில் குறைவதற்கு ஏது ஆயுள் என்று அவர்களை குறுக்குக் கேள்வி கேட்டதில்லை. எல்லோர் வீட்டிலும் திருமணப் புகைப்படம் இருக்கும். துக்கப்படவும் வெட்கப்படவும். நடுத்தர வயதில் இன்னொரு புகைப்படம். கணவன் அமர மனைவி அருகில் நின்றவாறு தோரணையுடன். தோரணையெல்லாம் புகைப்படத்தில்தான் என்பது இருவருக்கும் தெரியும். என் நண்பர் வீட்டில் அறுபது வயதில் தாத்தாவை மட்டும் புகைப்படம் எடுப்பதற்காக பாட்டி கோபித்துக்கொண்டு இரண்டு நாட்கள் சரியாகச் சாப்பிடவில்லையாம். ஆமாம், அன்று புகைப்படம் எடுப்பது இன்று திரைப்படம் எடுப்பதுபோல.

நிழற்படக் கருவி அன்று அரிய சாதனம். பணக்காரர் வசமே இருக்கும் பண்டம். வளைந்தும் நெளிந்தும், குனிந்தும் அசைந்தும் புகைப்படம் எடுப்பவரை எல்லோரும் பயத்துடன் நேசித்த காலம். மேல்நிலை வகுப்பு படிக்கும்போது தாவரவியல் வகுப்புக் காக ஏற்காடு சென்றிருந்தோம். ஒரே ஒரு மாணவன் புகைப்படக் கருவி யோடு வந்தான். அவனைச் சுற்றியே அத்தனை கூட்டமும்.

முதலில் இருந்தது கருப்பு - வெள்ளை காலம். வண்ணப்படங்கள் சாத்தியம் என்றுகூட யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. எண்பதுகளில் வண்ணப்படங்கள் எடுக்கும் தொழில்நுட்பம் வந்தது. ஆனால், படங்கள் எல்லாம் அழுது வடியும். எடுத்தவுடன் பிரதி கிடைக்கும் புகைப்படக் கருவியை திரைப்படம் ஒன்று தெரியப்படுத்தியது. அதற்குப் பின்னர் சந்தையின் சந்துபொந்துகளில் அது புகுந்துகொண்டது.

திருமணம் என்றால் புகைப்படமே பிரதானம் என்றிருந்த நிலை மாறி, காணொலி அதனுடன் கைகோத்துக் கொண்டது. ஆனாலும் யாரும் அதை அடிக்கடி பார்த்ததாய்த் தெரியவில்லை.

தாஜ்மகாலுக்கு முன்பாக..

கல்லூரியில் நாங்கள் படிக்கும்போது அகில இந்தியச் சுற்றுலாவுக்குப் பயணப்பட்டோம். புகைப்பட ஆல்பங்களைப் போகிற இடங்களிலெல்லாம் மலிவு விலையில் வாங்குவோம். எங்கள் நண்பர் ஒருவர் ’சலங்கை ஒலி’ படத்தில் வருகிற சிறுவன்போல டப்பாக் கருவியொன்றை எடுத்து வந்தார். எங்களிடம் அதுகூட இல்லை. வேறு சில நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து உயர் ரகக் கருவி வாங்கி வந்தனர். எங்கள் கருப்பு - வெள்ளைப் புகைப்படங்கள் புகைமூட்டத்துக்குப் பின்பு நிற்பதைப்போல தெளிவாகப் பதிவாயின. அவர்கள் எடுத்த புகைப்படங்கள் பல வண்ணத்தில் பளிச்சென்று மின்னலிட்டன. தாஜ்மகால் முன்பு அதை அவர்களே கட்டியதைப் போல பெருமையோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். எங்களுக்கோ மும்தாஜ் இறந்த சோகம் மட்டுமே.

இன்று தொழில்நுட்பம் வளர்ந்து புகைப்படக் கலை பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிவிட்டது. படச் சுருளின்றி படமெடுக்கும் மின்னணு வசதி. கருப்பு - வெள்ளை இன்று மருந்துக்கும் இல்லை. வீட்டில் விதவிதமாக புகைப்படம் மாட்டும் பழக்கமும் இல்லை. சுவரில் புகைப்படத்தில் யாரேனும் இருந்தால் உயிருடன் இல்லை என்கிற அளவுக்குக் குறைவான காட்சிப்படுத்துதல். வாடகை வீட்டில் ஆணி அடிக்க ஆயிரம் நிபந்தனை. அடிக்கிற ஆணி யால் சுவரே சாயுமோ என்கிற நடுக்கம்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது முக்கியப் பிரமுகர்களை ஊடகவியலாளர் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து அதிசயம் ஏற்படும். அத்தனை நிகழ்வையும் ஒன்றுவிடாமல் அடுக்கடுக்காக எடுத்துச் செல்கிறார்களே, இதில் எதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்கிற கேள்வியும் தோன்றும். ஒன்றுதானே வெளிவரப் போகிறது, எதற்கு இத்தனை பிரயத்தனம். சிறந்ததை எடுக்கவே அத்தனை முயற்சியும் என்று நண்பர் சொன்னபோது அசந்து போனேன். ஒரு விதை முளைக்கவே மரங்களில் அத்தனை மலர்கள்.

ஓவ்வொருவரும் கேமரா மேன்

இன்று கைபேசியிலேயே கேமரா வசதி. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கில் படங்கள் எடுக்கும் புகைப்பட போதையோடு ஒரு சிலர் உண்டு. அவரவர் படத்தை அழகாக்கி, வெண்மையூட்டி உலக அழகோடு முகநூலிலும், புலனத்திலும் போடும் வசதி. எதற்கெடுத்தாலும் சுயமி (ஷெல்ஃபி). நின்றாலும் உட்கார்ந்தாலும் சகட்டுமேனிக்கு எடுத்துத் தள்ளும் ஆர்வம். பிரபலமான மனிதரோடு புகைப்படம் எடுத்து உடனடியாக முகநூலில் ஏற்றுவதே மூல நோக்கம். இத்தனை புகைப்படத்தை என்ன செய்வார்கள் என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் தோன்றும்.

எனக்கு புகைப்படங்களில் ஆர்வம் எப்போதும் இருந்ததில்லை. அந்த நொடியைத் தவறவிட்டு கருவியில் பதிவு செய்வது இரண்டாம் தர இன்பம் என்றே எண்ணுவேன். கண்களைக் காட்டிலும் சிறந்த கருவியும் இல்லை, மனத்தைக் காட்டிலும் உயர்ந்த படச்சுருளும் இல்லை என்பது என் நம்பிக்கை. நாம் இழந்த அனுபவங்களே இனிய புகைப்படங்கள்.

ஒரு காலத்தில் யாருடன் புகைப்படத்தில் நிற்கிறோம் என்பது பெருமைக்கான சேதி. திரைப்படங்களில் பொம்மைக் கத்தியில் நாயகன் வேறொரு பாத்திரத்தை குத்தியதைப் போல புகைப்படம் எடுத்து, வில்லன் மிரட்டும் காட்சிகள் உண்டு. நீதிமன்றங்களில் அன்று அது முக்கிய ஆவணம். இன்றோ யாருடன் இருப்பதுபோலவும் செயற்கையாய் காட்சியைச் செய்துவிட முடியும். அதிகப் புழக்கத்தில் ஆவணத்தன்மையை புகைப்படம் இழந்தது என்னவோ உண்மை.

சுயமி மோகம்

அதிகப் புகைப்படம் எடுப்பது ஆயுளைக் குறைக்கிறதோ இல்லையோ, அதிக சுயமியால் அற்பாயுளில் போனவர்கள் உண்டு. யானையை படம் எடுத்து துதிக்கையில் சிக்கி, அருவியை எடுக்க அதிலேயே விழுந்து, வாழ்வை முடித்த பேதைகள் உண்டு. ’நாம் என்பது நம் உடலல்ல’ என்பதையும், உடலைத் தாண்டிய நாம் யார் என உணர்வதே வாழ்வின் சாரம் என்பதையும் தெரிந்து கொண்டவர்கள் உண்மை முகம் நமக்குத் தெரிய ஒப்பனை முகத்தை அடுத்தவர்களுக்குக் காட்ட ஆயத்தங்கள் செய்வதில்லை. அவர்கள் தங்கள் மூலமுகம் எது என்பதை உணர அணிந்திருக்கும் முகமூடிகளைக் கழற்றுவதிலேயே மும்முரம் காட்டுவார்கள். அப்போது எந்த முயற்சியும் இல்லாமல் அவர்களுக்கே தெரியாத அழகிய முகம் வெளிப்படும்.

மனிதர்களின் கழுத்தில் மாலை அணிவிக்க எப்போதும் மகிழ்ச்சியுடன் புன்னகைக்கும் நான், கண்ணாடிக்குள் இருக்கும் உருவத்துக்கு மாலைபோட கண்கலங்கிப் போகின்றேன்.

- நினைவுகள் படரும்...

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024