dinamalar 07.09.2018
புதுடில்லி : 'வயதுக்கு வந்த இருவர், சுயவிருப்பத்தின் அடிப்படையில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமில்லை' என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கும், 158 ஆண்டுகள் பழமையான, 377வது சட்டப் பிரிவு, அரசியல் சாசனம் அளித்துள்ள தனிமனித உரிமை, சம உரிமைக்கு எதிரானது என்றும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஒருமித்த தீர்ப்பில் கூறியுள்ளது.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமாக பார்க்கும், 377வது சட்டப் பிரிவை எதிர்த்து, 2001ல், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல' என, டில்லி உயர் நீதிமன்றம், 2009ல் அளித்த தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம், 2013ல், தடை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, பிரபல நடனக் கலைஞர் நவ்தேஜ் ஜவ்ஹார், பத்திரிகையாளர் சுனில் மெஹ்ரா, சமையல் கலைஞர் ரீது டால்மியா, ஓட்டல் அதிபர்கள் அமான் நாத், கேஷன் சூரி உள்ளிட்ட பலர், உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, ஆர்.எப்.நரிமன், ஏ.எம். கன்வில்கர் அடங்கிய அரசில் சாசன அமர்வு, நேற்று தீர்ப்பு அளித்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கும், 377வது சட்டப் பிரிவின் ஒரு பகுதியை ரத்து செய்து, ஐந்து நீதிபதிகளும், ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். ஐந்து நீதிபதிகளும், தனித்தனியாக, அதே நேரத்தில், ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 493 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில், அமர்வு கூறியுள்ளதாவது:
பாலியல் உணர்வு என்பது, ஒருவரது உடலில் ஏற்படும் உயிரியல் நிகழ்வாகவும், இயற்கையாகவும் அமைந்தது; இதில் பாகுபாடு பார்ப்பது, அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. ஓரினச் சேர்க்கை என்பது, மனது அல்லது உடலில் ஏற்படும் கோளாறும் அல்ல; அது இயற்கையான ஒரு நிலையே.
ஒருவரது உணர்வு மறுக்கப்படுவது, இறப்புக்கு சமம். அந்த வகையில், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவில், ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்ப்பது, அரசியலமைப்பு சட்டத்தின், 14, 15, 19 மற்றும் 21வது பிரிவுகள் அளித்து உள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது; இது சட்டவிரோதமானது, ஒருதலைபட்சமானது. தனிமனித உரிமை, கண்ணியத்துடன் வாழும் உரிமை, சம உரிமை ஆகியவற்றில் பாரபட்சம் கூடாது.
அதே நேரத்தில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் வைத்துக் கொள்ளும் உறவு, முழுக்க முழுக்க சொந்த விருப்பமானதாக, இருவரும் ஏற்றுக் கொண்டதாக, கட்டுப்பாடு மற்றும் மிரட்டல் இல்லாததாக இருக்க வேண்டும்.
இத்தனை ஆண்டுகளாக, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக பாகுபாடு இருந்ததோடு, இந்தச் சட்டத்தை அவர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிவாரணம், இவ்வளவு தாமதமாக அவர்களுக்கு கிடைத்துள்ளதற்காகவும், அவர்களை ஒதுக்கி வைத்ததற்காகவும், இந்த சமூகம், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கும் பகுதி மட்டுமே நீக்கப்படுகிறது.
அதே நேரத்தில், ஒருவருடைய விருப்பம் இல்லாமல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, சிறுவர் - சிறுமியர் மற்றும் விலங்குகளுடன் உறவு வைப்பது குற்றம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான தண்டனை தொடரும்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், இந்தத் தீர்ப்பு அதற்கு பொருந்தாது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மட்டும், இந்தத் தீர்ப்பு பொருந்தும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொண்டாட்டம் :
ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக போராடி வந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். ஓரினச் சேர்க்கையாளர் உரிமைக்கான அடையாளமாகக் கருதப்படும், வானவில் நிறங்கள் கொண்ட கொடிகளையும் பலர் ஏந்தி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வரலாறு முக்கியம்!
ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நம் நாட்டில் அமலுக்கு வந்தது. அந்த காலத்தில், பெரும்பாலான நாடுகளில், ஓரினச் சேர்க்கைக்கு தடை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தங்கள் ஆதிக்கத்தில் இருந்த அனைத்து நாடுகளிலும், இந்த சட்டத்தை அமல்படுத்தினர். இதனால், பல ஆண்டுகளாக, ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கையர் ஆகியோர், இந்த சட்டத்தை பயன்படுத்தியே நசுக்கப்பட்டனர். தற்போது, இந்த சட்டத்தின் ஒரு பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஓரினச் சேர்க்கையாளர்கள், இதை, தங்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாக கொண்டாடி மகிழ்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், இத்தனை நாட்களாக, ஓரினச் சேர்க்கையாளருக்கு எதிராக பின்பற்றப்பட்டு வந்த அடக்கு முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.