Friday, September 7, 2018

தலையங்கம்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி



1992–ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமண ஒழிப்பில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுவந்த பன்வாரி தேவி என்ற சமூகசேவகர் ஒரு கும்பலால் மிருகத்தனமாக கற்பழிக்கப்பட்டார்.

செப்டம்பர் 07 2018, 03:30

1992–ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமண ஒழிப்பில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுவந்த பன்வாரி தேவி என்ற சமூகசேவகர் ஒரு கும்பலால் மிருகத்தனமாக கற்பழிக்கப்பட்டார். இதை எதிர்த்து ‘விசாகா’ என்ற பெண்கள் உரிமைக்குழுவும் மற்றும் சில குழுக்களும் சேர்ந்து ராஜஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது. இதையொட்டி உச்சநீதிமன்றம், பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்கள் பாலியல் கொடுமையிலிருந்து பாதுகாக்கப்பட ‘விசாகா வழிமுறைகள்’ என்றபெயரில் சில வழிமுறைகளை வகுத்து தீர்ப்பு கூறியது. இந்த வழிமுறைகளை அடிப்படையாக வைத்து பாராளுமன்றத்தில், பணியிடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலை தடுத்தல், தடைசெய்தல் மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக 2013–ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றியது. இந்த சட்டப்படி 10 பெண்களுக்குமேல் பணிபுரியும் இடங்களில் ஒவ்வொரு அலுவலகத்திலும் அங்கு பணிபுரியும் ஒரு பெண் உயர் அதிகாரியை தலைவராக கொண்டு, குறைந்தபட்சம் 2 பெண் ஊழியர்கள் மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினரைக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்குப்பிறகும், மத்திய அரசாங்க சட்டத்துக்குப்பிறகும், பல அரசு அலுவலகங்களில் இன்னும் இத்தகைய கமிட்டி அமைக்கப்பட்டதுபோல தெரியவில்லை.

இந்தநிலையில், தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையில் ஐ.ஜி.யாக பணிபுரியும் ஒரு உயர் அதிகாரி மீது, அதேதுறையில் பெண் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் ஒரு அதிகாரி தனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தியதாக புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரிக்க கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் சீமா அகர்வால் தலைமையில், கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், டி.ஐ.ஜி. தேன்மொழி, டி.ஜி.பி. அலுவலக சீனியர் நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு ஆகியோரும், ஓய்வுபெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரஸ்வதி ஆகியோரும் உறுப்பினர்களாக கொண்ட ஒரு ‘விசாகா கமிட்டி’ அமைக்கப்பட்டது. ஆனால், போலீஸ் துறையில் இப்போது நியமிக்கப்பட்டுள்ள கமிட்டியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்திலிருந்து யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே, இந்த கமிட்டியை மாற்றி அமைக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், இப்போது நியமிக்கப்பட்டுள்ள ‘விசாகா கமிட்டி’யிடம், அந்தப்பெண் பெண் போலீஸ் சூப்பிரண்டு கொடுத்த புகாரின் அடிப்படையிலும், அவரது கோரிக்கையின் அடிப்படையிலும், அந்த உயர் அதிகாரி மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒரு பாடமாகக்கொண்டு, அரசு அலுவலகங்கள் அனைத்திலும் உடனடியாக ‘விசாகா கமிட்டி’ அமைக்கப்படவேண்டும். அந்த கமிட்டி யார் தலைமையில், யார்–யாரை உறுப்பினர்களாக கொண்டு இயங்குகிறது? என்பதை விளக்குகின்ற போர்டுகள் அந்தந்த அலுவலகங்களில் வைக்கப்படவேண்டும். அப்படிப்பட்ட போர்டுகள் வைக்கப்பட்டால்தான் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கோ, வெளியிலிருந்து வரும் பெண்களுக்கோ பாலியல் துன்புறுத்தல் நடந்தால், எங்கு புகார் தெரிவிக்கவேண்டும்? என்பது தெளிவாகத்தெரியும். ‘விசாகா கமிட்டி’யிடம் கொடுக்கப்படும் புகார்களை ஒரு குறிபிட்ட காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு அறிக்கை தரவேண்டும். அந்த அறிக்கையின்பேரில், மேல் நடவடிக்கைகளும் விரைவாக நடத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024