Friday, September 7, 2018

தேசிய செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு எடுக்கலாம்


ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி தமிழக அரசு முடிவு எடுத்து, கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

பதிவு: செப்டம்பர் 07, 2018 05:45 AM
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டு தாக்குதலில் பலி ஆனார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ரவிச் சந்திரன், ஜெயகுமார் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அந்த கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுக்க தாமதம் ஆனதால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அத்துடன் கருணை மனு தாக்கல் செய்து நீண்ட காலமாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யலாம் என்றும் கூறியது.

இதைத்தொடர்ந்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயகுமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இது தொடர்பாக தமிழக சட்ட சபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தர விட்டது.

இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசிடம் மனு அளித்தனர்.

அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து இருப்பதாகவும், அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு கடிதம் எழுதியது.

ஆனால் இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை கடந்த ஏப்ரல் 16-ந் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அந்த உத்தரவில், ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட சில வெளிநாட்டு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால் அவர்களை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்காது என்று கூறப்பட்டு இருந்தது.

7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிரான மத்திய அரசின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சார்பில் வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி வந்தனர். கடந்த மாதம் 20-ந் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, 7 பேரையும் விடுதலை செய்ய அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால், தற்போது நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்குமாறு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 7 பேரும் ஏற்கனவே தமிழக கவர்னருக்கு கருணை மனு தாக்கல் செய்து இருப்பதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் கவர்னரால் முடிவு ஏதும் எடுக்க முடியவில்லை என்றும், எனவே சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மத்திய அரசின் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது 7 பேர் சார்பில் வக்கீல் கோபால் சங்கரநாராயணன் மற்றும் வக்கீல் பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் வாதாடுகையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் அரசியல் சாசனப் பிரிவு 161-ன் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த பிரிவின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைத்து அவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் கூறினார்கள். அதன் அடிப்படையில் தான் எடுக்கும் முடிவையும், தனது பரிந்துரையையும் மாநில அரசு, கவர்னருக்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.

இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் வாதாடுகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ன் கீழ் இதுகுறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத் தான் உண்டு என்று கூறினார். அத்துடன் அந்த அதிகாரத்தை பயன்படுத்தியும் பல்வேறு காரணங்களின் அடிப்படையிலும் மத்திய அரசு இந்த வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்றும், இதுபற்றி தமிழக அரசுக்கு தெரிவித்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், எனவே அந்த மனுவின் மீதான விசாரணையை முடித்து வைப்பதாகவும் கூறினார்கள்.

அத்துடன், அரசியல் சாசனப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து, அதை மாநில கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் கூறினார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024