Friday, September 7, 2018


நோயல்ல, அறிகுறி!

By ஆசிரியர் | Published on : 06th September 2018 01:35 AM |


இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பிய ஆராய்ச்சி மாணவி லூயி சோபியா பிரச்னை பரபரப்பாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. சோபியா மேல் தொடரப்பட்டிருக்கும் வழக்கைத் திரும்பப் பெறவேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி இருக்கின்றன. இந்தப் பிரச்னையை அரசியல் கோணத்தில் மட்டும் பார்ப்பது என்பது சரியாக இருக்காது.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குச் சென்ற விமானத்திலிருந்து இறங்கும்போது, சக பயணியான தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தன்னைக் கடந்து சென்றதைப் பார்த்தவுடன் ஆவேசமாக பாசிச பாஜக அரசு ஒழிக' என்று அத்தனை பயணிகளையும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வைக்கும்படி உரக்கக் கோஷம் எழுப்பினார் சோபியா. அதை தமிழிசை செளந்தரராஜன் பொருட்படுத்தாமல், விமானத்திலிருந்து இறங்கிவிட்டார். அப்படியே அவர் அதை சட்டை செய்யாமல் போயிருந்தால் பிரச்னை பெரிதாகி இருக்காது. லூயி சோபியாவுக்கு தேவையில்லாமல் இந்த அளவிலான ஊடக விளம்பரமும் கிடைத்திருக்காது.

தூத்துக்குடி விமான நிலையத்தின் வரவேற்பறையில், பொது இடத்தில் நடந்துகொண்ட முறை சரிதானா என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியதற்கு, தன்னுடைய கருத்தை வெளியிடும் உரிமை தமக்கு இருக்கிறது என்று லூயி சோபியா பதிலளிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தமிழிசை செளந்தரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் லூயி சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களைத் தூண்டச் செய்யும் விதத்தில் பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனத்தை முன்வைத்திருக்கின்றன. பாசிச பாஜக அரசு ஒழிக' என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில் முழக்கமிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக லூயி சோபியா மீது புகார் அளித்ததற்கும், அவர் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கின்றனர். ஜனநாயக நாட்டில் ஆட்சி ஒழிக' என்று கோஷமிடக் கூட உரிமையில்லையா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. 

லூயி சோபியா குறிப்பிடுவது போல, கோஷம் எழுப்பவோ, எதிர்ப்பைத் தெரிவிக்கவோ நிச்சயமாக அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பொது இடத்தில் இதுபோன்ற கோஷங்களை எழுப்புவது மேலை நாடுகளில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு அநாகரிகமான செயல் என்று தெரியாமல் போனதுதான் ஆச்சரியம். 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவோ, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராகவோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எதிராகவோ, விமானத்திலோ, ரயிலிலோ, பொது இடத்திலோ இதுபோல கோஷம் எழுப்ப முற்பட்டால், அதை அவர்களின் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தனது கருத்தை சொல்ல லூயி சோபியாவுக்கு உரிமை இருந்தாலும் அவர் விமானத்தில் கோஷம் எழுப்பியது தவறு. தமிழிசை அதை சட்டை செய்யாமல் விட்டிருக்கலாம். அவருடன் வாக்குவாதம் செய்ததும், அவர் மீது புகார் அளிக்க முற்பட்டதும் அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அமைப்பு சார்ந்த அரசியல் கட்சிகளின் மீது பரவலாக வெறுப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் 128 நாடுகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அரசியலில் நாட்டம் இருந்தாலும் அவர்கள் அரசியல்ரீதியாகக் களம் இறங்குவதை விட, தெருவில் இறங்கிப் போராடுவதில்தான் கூடுதல் நாட்டம் கொள்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. 9% முதல் 17% வரையிலான 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தெருவில் இறங்கிப் போராடுவதிலும் லூயி சோபியா பாணியில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதிலும் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

மக்கள் ஆட்சி முறைதான் பெரும்பாலானவர்களால் விரும்பப்படுவதாக இருந்தாலும் கூட, வாக்களிப்பில் பங்குபெறும் இளைஞர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கிறது. அவர்கள் கட்சி உறுப்பினர்களாகவோ, தொண்டர்களாகவோ இருப்பதில் நாட்டம் இல்லாதவர்களாகவும், தெருவில் இறங்கிப் போராடுவதிலும், சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு செய்பவர்களாகவும்தான் அதிகமாகக் காணப்படுகின்றனர். 

உலகில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 2% மட்டும்தான் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. 2016 அமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்காதவர்களில் 3-இல் 2 பங்கு வாக்காளர்கள் 50 வயதிற்கும் கீழே உள்ளோர்.

அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் ஊழல்வாதிகள், பணத்தாசையும், பதவி வெறியும் பிடித்தவர்கள் என்கிற கருத்து இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது.
சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் களமிறங்கும் இளைஞர்களுக்கு அரசியல் கட்சிகளில் இடமில்லாமல் இருப்பதுதான் அவர்களை ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகின்றன. 

லூயி சோபியாவின் செயல்பாடு இன்றைய அரசியல் ஆட்சி அமைப்புக்கு எதிராகக் காணப்படும் இளைய தலைமுறையின் மனநிலை வெளிப்பாடு. அதற்கு வடிகால் ஏற்படுத்தித் தீர்வு கண்டாக வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024