Friday, September 7, 2018

கனம் கோர்ட்டார் அவர்களே...

By ஆசிரியர் | Published on : 05th September 2018 01:34 AM |

கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.ஜி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிர்ச்சி அளிக்கும் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. 

இந்தியா முழுவதிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் நீதிபதிகள் உள்ளிட்ட சிறப்புத் தகுதி பெற்றோருக்கு (வி.ஐ.பி.), தனியாக வழி ஒதுக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இதுகுறித்து இந்தியாவிலுள்ள எல்லா சுங்கச் சாவடிகளுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், சிறப்புத் தகுதி பெற்றோருக்கான தனிப் பாதையில் மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அந்த உத்தரவு தெரிவிக்கிறது.
இந்தியா முழுவதும் சிறப்புத் தகுதி பெற்றோர்' கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படியோர் உத்தரவை நீதிபதிகளால் எப்படிப் பிறப்பிக்க முடிந்தது? ஏற்கெனவே சுங்கச் சாவடிகளில் சிறப்புத் தகுதி பெற்றோரிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அப்படி இருக்கும்போது, சில நிமிடத் தாமதங்களைக் கூட சிறப்புத் தகுதி பெற்றோரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதும், ஜனநாயக நாட்டில் மக்களில் ஒருவராக இருக்க அவர்கள் தயாராக இல்லை என்பதும் ஏற்றுக் கொள்ளவே முடியாத மனப்போக்கு.

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் தங்களுக்கு ஏற்படும் சில நிமிடத் தாமதங்களைத் தாங்கிக்கொள்ள முடியாத நீதிபதிகள், இந்தியா முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் கோடிக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் குறித்தோ, அவற்றின் தாமதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் குறித்தோ கவலைப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவின் 24 உயர்நீதிமன்றங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தீர்ப்புக்காகக் காத்துக் கிடக்கின்றன. இந்தியாவின் அனைத்து நீதிமன்றங்களிலும் 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் முழுக்க முழுக்க அரசின் நிர்வாக முடிவுக்கு உட்பட்ட சுங்கச்சாவடிக் கட்டண வசூல் குறித்தும், சிறப்புத் தகுதி பெற்றோருக்கு தனிப்பாதை ஒதுக்குவது குறித்தும் நீதிபதிகள் கவலைப்படுகிறார்களே, இது வேதனை அளிக்கிறது.

நியாயமாகப் பார்த்தால், நீதிபதிகளின் கோபமும் ஆத்திரமும் சுங்கச் சாவடிகள் மீதுதான் திரும்பி இருக்க வேண்டும். செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள 14 நெடுஞ்சாலை சோதனைச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் இரண்டரை மடங்கு அதாவது, 250% சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடாவடி சுங்கக் கட்டணக் கொள்ளை குறித்து நீதிபதிகள் கவலைப்பட்டிருக்க வேண்டும். 

தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் சுமார் 5,324 கி.மீ. அதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பில் 3,285 கி.மீ. சாலைகளும், மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் 2,039 கி.மீ. சாலைகளும் உள்ளன. தமிழ் நாட்டிலுள்ள 44 நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 26 சுங்கச் சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் 18 சுங்கச் சாவடிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. ஆனால், அத்தனை சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூல் செய்யும் பொறுப்பு தனியாரிடம் விடப்பட்டுள்ளது. இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் தொகைக்கும், சுங்கச் சாவடிகளில் வசூலாகும் தொகைக்கும் இடையே இருக்கும் இடைவெளி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டால், சுங்கக் கட்டணக் கொள்ளை எவ்வளவு பெரிய மோசடி என்பது வெளிப்படும்.

தமிழகம் முழுவதும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து சுங்கச் சாவடிகளில் வசூலாகும் கட்டணமும் கணிசமாகவே அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், சுங்கக் கட்டணம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து ஆண்டுதோறும் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 14 சுங்கச் சாவடிகளில் கட்டண
அதிகரிப்பு நடந்திருப்பது குறித்து ஊடகங்களிலோ, பொதுவெளியிலோ எந்தவிதமான சலசலப்போ, விமர்சனமோ இல்லாமல் இருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.

சாலைகளுக்கும் பாலங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது என்பது புதிய நடைமுறை ஒன்றுமல்ல. பல முக்கியமான இடங்களில் கட்டப்பட்ட பாலங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டு பாலத்திற்கான செலவு ஈடுகட்டப்பட்டது. அந்தக் கட்டணத்தை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே வசூலித்தன. பாலத்திற்கான செலவு வசூலாகிவிட்டால் கட்டணம் வசூலிப்பதும் நிறுத்தப்பட்டுவிடும். அதேபோல, கட்டு -பராமரி- ஒப்படை' திட்டத்தின் கீழ்தான் தேசிய நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 

சாலை அமைத்த நிறுவனத்தின் முதலீடு, வட்டி, லாபம் அனைத்தையும் கணித்துப் பார்த்துதான் சுங்கச்சாவடிக் கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், முதலீட்டைவிட 30 மடங்குக்கும் அதிகமாக பணம் ஈட்டிய பிறகும் கூட, தனியார் நிறுவனங்கள் பராமரிப்பு' என்கிற பெயரில் முன்பு வசூலித்ததைவிட அதிகக் கட்டணத்தைத் தொடர்ந்து வசூலித்துக் கொண்டிருக்கும் சுங்கக் கட்டணக் கொள்ளை குறித்து அரசியல்வாதிகளும் பேசுவதில்லை, சமூக ஆர்வலர்களும் பேசுவதில்லை, நீதிமன்றங்களும் தலையிடுவதில்லை, பொதுமக்களுக்கும் இதுகுறித்த பிரக்ஞை' இல்லை.
சுங்கச் சாவடிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளை குறித்து கவலைப்படாமல் சில நிமிடத் தாமதங்களுக்காக தனி வழி அமைக்க வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்று எதிர்பார்ப்போமாக!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024