Friday, September 7, 2018

'குட்கா' ஊழல் வழக்கில் சி.பி.ஐ., நடவடிக்கை

அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் கைது  dinamalar 07.09.2018

சென்னை : 'குட்கா' ஊழல் வழக்கில், 'குடோன்' உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா உள்பட, ஐந்து பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று கைது செய்தனர். இவர்களை, 15 நாள் சிறையில் அடைக்க, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் மாதவ ராவ். இவர் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை, சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் கோடவுனில் மறைத்து வைத்திருந்தார். 2016ல், இவரது வீடு அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பலருக்கு 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்த தகவல்கள் அடங்கிய 'டைரி' சிக்கியது. இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது.


இதையடுத்து குட்கா கோடவுன் உரிமையாளர் மாதவ ராவிடம் விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து, கோடவுனுக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

இந்நிலையில் மாதவ ராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழக சுகாதார துறை அமைச்சர், விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகளில் நேற்று முன்தினம், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் கோடவுன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கலால் வரி துறை அதிகாரிகள் வீடுகள் உள்பட சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை என மொத்தம் 40 இடங்களில் சோதனை நடந்தது.

தமிழக டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் உள்ள ஆவணங்கள் வங்கிக் கணக்குகளை சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தகவல் வெளியானது. முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நேற்று முன்தினம் துவங்கிய சோதனை நேற்று காலை வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சென்னை ராயபுரம், போலீஸ் குடியிருப்பில் உள்ள, இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் வீட்டை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலை 'சீல்' வைத்தனர்.

துாத்துக்குடிக்கு மாற்றலாகி சென்ற பின்னும் இந்த வீட்டை அவர் காலி செய்யவில்லை. நீண்ட காலமாக பூட்டி வைத்திருப்பதால் அதில் நிறைய ஆவணங்கள் இருக்கலாம் என, சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

15 நாள் காவல்:

குட்கா ஊழல் வழக்கில் கோடவுன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, செந்தில்முருகன் மற்றும் கலால் வரி துறை அதிகாரி, எம்.கே.பாண்டியன் ஆகியோரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலை கைது செய்தனர்.

நீண்ட நேர விசாரணைக்கு பின் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருநீலபிரசாத் முன் ஐந்து பேரையும் ஆஜர்படுத்தினார். இவர்களை செப்., 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஸ்டாலின் வலியுறுத்தல் :

அறிவாலயத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி: 'குட்கா' விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அவருடைய உறவினர்கள் நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். தமிழக வரலாற்றில் முதல் முறையாக போலீஸ் டி.ஜி.பி., வீட்டிலும் அவரது அலுவலகத்திலும் சி.பி.ஐ., சோதனை நடந்துள்ளது. அவர்கள் இருவரும் தாமாக முன்வந்து, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் இவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அமைச்சர், டி.ஜி.பி.,யை, உடனே கைது செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024