அண்ணாமலை பல்கலையில் நியமனங்களை ரத்து கோரி மனு : ரத்து செய்யக்கோரி கவர்னருக்கு புகார் மனு
Added : பிப் 12, 2019 23:43
'அண்ணாமலை பல்கலையில், 13 ஆயிரம் பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டது குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, கல்லுாரி ஆசிரியர்கள் அமைப்பு புகார் மனு அனுப்பியுள்ளது.சிதம்பரத்தில் உள்ள, அண்ணாமலை பல்கலையை, ஐந்தாண்டுகளுக்கு முன் அரசே ஏற்றது. இங்கு கூடுதலாக இருந்த, 370 பேராசிரியர்கள், மூன்றாண்டுகளுக்கு முன், அரசு கலை கல்லுாரிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்டனர்.அவர்களின் மூன்றாண்டு பதவி காலம் முடியும் நிலையில், மீண்டும், மூன்றாண்டுகளுக்கு மாற்று பணியை நீட்டித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, முதுநிலை மற்றும், பிஎச்.டி., முடித்த பட்டதாரிகள் அமைப்பான, 'நெட், செட்' சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த அமைப்பின் தலைவர், தங்கமுனியாண்டி மற்றும் பொது செயலர், நாகராஜன் ஆகியோர், கவர்னருக்கு அனுப்பியுள்ள புகார் மனு:பல்கலை மானிய குழு மற்றும், தமிழக உயர்கல்வி துறை விதிகளின்படி, பேராசிரியர் பணிக்கு, ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தகுதி பெற்றுள்ளனர். நெட், செட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும், ஆராய்ச்சி படிப்பான, பிஎச்.டி., முடித்தும், ஏராளமானோர் வேலைக்கு காத்திருக்கின்றனர். இவர்களில் பலர், அரசு கலை கல்லுாரிகளில், கவுரவ விரிவுரையாளர்களாக, மிக குறைந்த சம்பளத்தில், பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில், விதிகளை மீறியும், தகுதி பார்க்காமலும் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களை, தமிழக உயர்கல்வி துறை, அரசு கல்லுாரிகளுக்கு மாற்றுகிறது. இந்த நடவடிக்கை, உயர்கல்வி தரத்தை கடுமையாக பாதிக்கும். மேலும், விதிகளை மீறி, 13 ஆயிரம் பேர், அண்ணாமலை பல்கலையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து, அரசு விசாரணை நடத்தாமல் உள்ளது. எனவே, அரசு கலை கல்லுாரிகளில், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்களுக்கு பணி வழங்குவதை, உடனே ரத்து செய்ய வேண்டும். விதிமீறிய நியமனங்கள் குறித்து, விசாரணை நடத்தி, 13 ஆயிரம் நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -