Wednesday, February 13, 2019

ரூ.2000,இனாம்,நிச்சயம்,அரசு,முடிவு
சென்னை: தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு இனாமாக அரசு அறிவித்துள்ள 2000 ரூபாய் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இம்மாத இறுதிக்குள் அந்தத் தொகை 60 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி நேற்று உறுதி அளித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்:

தி.மு.க. - பொன்முடி: 'தேர்தல் கண்ணோட்டம் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்று பாராட்டி ஒரு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது என்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் படித்து காட்டினார். நடுநிலை நாளிதழான 'தினமலர்' பத்திரிகையில் 'பாழ்' என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

'ஓட்டு வங்கியை உயர்த்துவதற்காக 2000 ரூபாய் உதவித்தொகையை அறிவித்துள்ளனர்' என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பின் கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 'இது நிழல் பட்ஜெட்' என்றார். அப்போது அதற்கு அர்த்தம் புரியவில்லை. தற்போது தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகையை முதல்வர் அறிவித்த பின் தான் நிழல் பட்ஜெட்டிற்கு அர்த்தம் புரிகிறது.




துணை முதல்வர் பன்னீர்செல்வம்: நாங்கள் 2011 முதல் நிஜ பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்து வருகிறோம். மக்கள் ஆதரவை முழுமையாக பெற்றுள்ளோம். அதனால் தான் நாங்கள் இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறோம். நீங்கள் எதிர்க்கட்சியாக அமர்ந்து இருக்கிறீர்கள்.

முதல்வர்: உழைக்கும் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை அறிவித்தது சரியா, இல்லையா என்று மட்டுமே பொன்முடி கூற வேண்டும். ஏழை தொழிலாளர்கள் காக்கப்பட வேண்டும். பருவ மழை பொய்த்து விட்டதால் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்.

இதையெல்லாம் ஆராய்ந்து தான் 2000 ரூபாய் உதவித்தொகையை அரசு அறிவித்துள்ளது.


தேர்தலை மனதில் வைத்து அறிவிக்கவில்லை. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த உதவித்தொகை கிடைக்கும். இதில் அந்த கட்சி இந்த கட்சி என்று பார்க்கவில்லை.

பொன்முடி: இரண்டு நாட்களுக்கு முன் நிஜ பட்ஜெட் தாக்கல் செய்யும் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாமே; உங்களுக்குள் இருக்கும் பிரச்னை பற்றி எனக்கு தெரியாது.

துணை முதல்வர்: சட்டசபையில் 110 விதியின் கீழ் மட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முதல்வருக்கு அதிகாரம் உள்ளது.

பொன்முடி: நெல் கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு சாதாரண ரகம் 50 ரூபாய் சன்ன ரகம் 70 ரூபாய் மட்டுமே

ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் குவிண்டாலுக்கு 2000 முதல் 3000 ரூபாய் வரை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரும்புக்கு உரிய கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யவில்லை.

மின்துறை அமைச்சர் தங்கமணி: கடுமையான வறட்சியால் தான் ஏழை தொழிலாளர்களுக்கு உதவித்தொகையை அரசு அறிவித்துள்ளது.

பொன்முடி: ஏழை தொழிலாளர்களுக்கு கொடுப்பதை தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஏன் இந்த அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிடவில்லை என்று தான் கேட்கிறோம்.

தி.மு.க. - ஆஸ்டின்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ள 2000 ரூபாயை இந்த நிதியாண்டில் வழங்கி இருக்கலாம். அதை விடுத்து 2018 - 19ம் ஆண்டு துணை நிதி நிலை அறிக்கையில் சேர்த்தது ஏன்; அந்தத் தொகை இந்த ஆண்டு வழங்கப்படுமா?

முதல்வர்: இந்த மாதம் இறுதிக்குள் வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படும்.

ஆஸ்டின்: நீங்கள் 1000 ரூபாய் 2000 ரூபாய் மட்டுமல்ல 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் உங்கள் நோக்கம் நிறைவேறாது. ஏனெனில் மக்கள் கொதி நிலையில் உள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024