Wednesday, February 13, 2019

நான்கு பல்கலைகளின் துணைவேந்தர் பதவி காலி : உயர் கல்வி செயலருக்கு நிர்வாக அதிகாரம்

dinamalar 13.02.2019

நான்கு பல்கலைகளின் துணைவேந்தர் பதவி காலியாகும் நிலையில், அதன் நிர்வாக அதிகாரம், உயர்கல்வி துறைக்கு மாற்றப்பட உள்ளது.

தமிழக உயர் கல்வியில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் நிர்வாகங்களில், பல்வேறு குழப்பங்களும், முறைகேடு புகார்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.கல்லுாரி முதல்வர்கள் நியமனம், பதவி உயர்வு, இடமாறுதல், துணைவேந்தர்கள் நியமனம், பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றில், பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.உயர் கல்வி துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில், மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில், உயர் கல்வி அதிகாரிகள் முதல், பல்கலைகளின் நிர்வாகிகள் வரை, விசாரணை வளையத்தில் உள்ளனர்.இந்நிலையில், நான்கு பல்கலைகளில், துணைவேந்தர் பதவிகள்காலியாகின்றன. அவற்றின் நிர்வாக அதிகாரத்தை, உயர்கல்வி துறை செயலருக்கு மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர், தங்கசாமி, திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர், முருகன் ஆகியோரின் பதவிக்காலம், பிப்., 7ல் நிறைவடைந்தது.கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர், வள்ளியின் பதவிக்காலம், வரும், 15லும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர், பாஸ்கரனின் பதவிக்காலம், மார்ச், 2லும் முடிகிறது.இந்த நான்கு பல்கலைகளுக்கும், தற்காலிக நிர்வாக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட உள்ளது. 

இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக, உயர்கல்வி செயலர், மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டு, அவரது நேரடி பார்வையில், நான்கு பல்கலைகளின் நிர்வாகமும்மாற்றப்பட உள்ளது.ஏற்கனவே, கோவை பாரதியார் பல்கலையின் துணைவேந்தர், கணபதி, லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பின், அந்த பதவியும், பல மாதங்களாக காலியாக உள்ளது.இது குறித்து, உயர் கல்வி துறை பேராசிரியர்கள் கூறியதாவது:பல்கலைகளின் நிர்வாகங்களை, உயர் கல்வி சார்ந்த பேராசிரியர்கள் மேற்கொண்டால் மட்டுமே, வெளிப்படை தன்மையுடன் அமையும். ஏற்கனவே, பல துணைவேந்தர்கள் அரசியல் செல்வாக்கால் நியமிக்கப்பட்டு, அரசு அதிகாரிகளின் பரிந்துரைப்படி முடிவு எடுத்தனர்.தற்போது, ஐந்து பல்கலைகளின் நிர்வாகமும், உயர் கல்வி துறையின் நேரடி பார்வையில் வருவதால், குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024