Wednesday, February 13, 2019



தலையங்கம்

மத்திய அரசிடமிருந்து பாக்கிகளை பெறவேண்டும்



எந்த நேரத்திலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டம் இன்றோடு முடிவடைகிறது.

பிப்ரவரி 13 2019, 03:00

‘‘பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே, பழகிக்கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலுக்கேற்ப, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்து விடைபெற்று செல்கிறார்கள். மாநிலங்களவையிலும் அடுத்த சிலமாதங்களில் சில உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிய இருக்கிறது. தமிழகத்தின் கோரிக்கைளை வாதாடி, போராடி பெற மக்களவை உறுப்பினர்களின் வாய்ப்புகள் முடிவடைந்துவிட்டன. இனி தமிழக அரசும், அரசியல்ரீதியாக அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சிகளும்தான் தேர்தல்தேதி அறிவிப்பதற்கு முன் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி பெறவேண்டும். மத்தியஅரசாங்கம் தமிழகத்தின் சிலபல கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலை இருக்கிறது. இந்தஆண்டு தமிழகஅரசு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,314 கோடியே 76 லட்சமாகவும், நிதிபற்றாக்குறை ரூ.44,176 கோடியே 36 லட்சமாகவும் இருக்கிறது. இவ்வளவு பற்றாக்குறையையும் மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டிய நிதிஉதவிகளை மட்டும் வலியுறுத்தி, வாதாடி பெற்றாலேயே சரிசெய்துவிட முடியும்.

தமிழக அரசை பொறுத்தமட்டில், மத்திய அரசாங்கத்திடமிருந்து நிறையத்திட்டங்களுக்கான நிலுவைத்தொகை வராமல் இருக்கிறது. குறிப்பாக, நகர்ப்புற மற்றும் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு செயல்பாட்டு நிதியாக ரூ.565 கோடியே 15 லட்சம், அடிப்படை நிதியாக ரூ.3,216 கோடியே 5 லட்சம் இன்னும் வராமல் இருக்கிறது. இதுபோல, பல்வேறு திட்டங்களுக்காக வரவேண்டிய மானியமும் ரூ.10,883 கோடியே 84 லட்சம் அளவில் வராமல் நிலுவையில் இருக்கிறது. மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திரமோடி வந்தபோது கடந்த மாதம் 27–ந்தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து, 17 தலைப்புகளில் பல்வேறு கோரிக்கைகளை தமிழகஅரசின் சார்பில் கொடுத்தார். அதில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவைத்தொகைகளையும் உடனடியாக வழங்குமாறு கேட்டிருந்தார். இந்தநிலையில், தமிழகத்திற்கு நியாயமாக ஒதுக்கப்படவேண்டிய வறட்சி நிவாரணநிதி, கஜாபுயல் நிவாரணநிதி போன்ற நிதிகளையும் மத்திய அரசாங்கம் முழுமையாக ஒதுக்கவில்லை.

கடந்த 2015–2016–ம் நிதியாண்டிலிருந்து 2017–2018–ம் நிதியாண்டுவரை, 3 ஆண்டுகளில் நாடுமுழுவதும் ஏற்பட்ட வறட்சி நிலைக்காக பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களும் நிவாரணநிதியை கோரியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மராட்டியம், ராஜஸ்தான் உள்பட 14 மாநிலங்கள் ரூ.1,23,605 கோடியே 64 ஆயிரம் நிதிஉதவியை கோரியிருந்தது. ஆனால், இதில் 19 சதவீதநிதியாக ரூ.23,190 கோடியே 69 லட்சத்தை மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. எல்லா மாநிலங்களையும்விட, தமிழகத்திற்குதான் மிகக்குறைவான தொகையை மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. தமிழகம் கேட்டதொகை ரூ.39,565 கோடியாகும். ஆனால், கொடுத்தது ரூ.1,748 கோடியே 28 லட்சமாகும். தமிழகஅரசு கேட்டதொகையில் 4 சதவீத தொகைதான் வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்தமாநிலத்திற்கும் இந்தளவு தொகையை குறைத்துக்கொடுக்கவில்லை. எனவே, தமிழகஅரசு அடுத்த சிலநாட்களுக்குள் மத்திய அரசாங்கத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுத்து, வரவேண்டிய தொகையெல்லாம் பெறுவதற்குள்ள கடைசிவாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க பா.ஜ.க. துடித்துக்கொண்டிருக்கும் நிலையில், துருப்புச்சீட்டு உங்களிடம் இருக்கிறது. அதைவைத்து தமிழ்நாட்டுக்கு பெறவேண்டிய நிதிகளையெல்லாம் அ.தி.மு.க. எளிதில் பெற்றுத்தந்துவிடலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.








No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024