ரூ.8 கோடி பதுக்கியதாக தொடந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சேகர் ரெட்டி உள்பட 5 பேர் மனு: சிபிஐ.க்கு நோட்டீஸ்
ரூ. 8 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கியதாக பதிவு செய்த
வழக்கை ரத்து செய்யக்கோரி தொழிலதிபர் சேகர் ரெட்டி தொடர்ந்த வழக்கில் சிபிஐ
பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோதமாக ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்த்தாக வருமான வரித்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதில்
தொடர்புடைய சேகர் ரெட்டி, பிரேம்குமார், சினிவாசலு, ரத்தினம், ராமசந்திரன்
ஆகியோர் மீது டிசம்பர் 19-ஆம் தேதியும், டிசம்பர் 30- ஆம் தேதியும் என
இரண்டு தனித்தனி வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.
ஏற்கெனவே ஒரு
வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதே போன்ற புகாரில் புதிய வழக்குபதிவு
செய்யப்பட்டுள்ளதால், ரூ.8 கோடி வழக்கில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்-ஐ
ரத்து செய்யக்கோரி ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பாஸ்கரன்,
மனு குறித்து சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி
23- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Dailyhunt
தோண்டத் தோண்ட சோகம்!
By ஆசிரியர் |
Published on : 12th January 2017 01:33 AM
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டம் லால்மாடியா என்கிற இடத்திலுள்ள
நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 50 பேர்
இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கிறார்கள். இதுவரை இவர்களில் 18
பேருடைய சடலங்கள் தேடி எடுக்கப்பட்டிருக்கின்றன. மீட்புப் பணி கடந்த ஒரு
வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.
முந்நூறு அடி ஆழத்தில் நிலக்கரியைத் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது,
சுரங்கத்தின் ஒரு பகுதியில் சுவர் இடிந்து விழத் தொடங்கியது. இப்படி
இடிந்து விழப்போவதற்கான அறிகுறி தோன்றியபோதே, சுரங்கப் பணியை நிறுத்தி
இருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் விவரம்
தெரிந்தவர்கள். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் இந்த
விபத்து மனித அசிரத்தையால்தான் ஏற்பட்டது என்று தெரிவிக்கிறார்கள்.
உலகளாவிய அளவில் சுரங்கப் பணி என்பது இடர்ப்பாடு கொண்டதுதான். ஆபத்தில்லாத
சுரங்கப் பணி என்பது எங்குமே கிடையாது. தொழில்நுட்ப வளர்ச்சி
ஏற்பட்டிருந்தாலும், சுற்றுச்சுவர் சரிதல், நிலத்தடி வெடிப்பு என்பவை
தவிர்க்க முடியாதவை. இந்த ஆபத்துகளைக் குறைக்க முடியுமே தவிர முற்றிலுமாக
இல்லாததாக்க முடியாது.
இதுபோன்ற விபத்துகளில் பெரும்பாலானவை, பாதுகாப்பு ஏற்பாடுகளைப்
பின்பற்றாமல் இருப்பதாலும், பாதுகாப்பு அம்சங்களே இல்லாமல்
இருப்பதாலும்தான் ஏற்படுகின்றன. சுரங்கப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள்
தேவையில்லாமல் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இந்தப் பிரச்னை, அனுமதி பெறாத சட்டவிரோத சுரங்கங்களிலும், வெளி
நிறுவனத்திற்கு ஒப்பந்தப் பணியில் தரப்பட்டிருக்கும் சுரங்கங்களிலும்தான்
மிக அதிகமாகக் காணப்படுகிறது.
லால்மாடியா விபத்து அப்படிப்பட்டதுதான். ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்
நிறுவனத்தின் ராஜ்மஹல் திறந்தவெளிச் சுரங்கப் பணி மகாலட்சுமி
நிறுவனத்திடம், ஒப்பந்தப் பணியாகத் தரப்பட்டிருக்கிறது. இப்படி ஒப்பந்தப்
பணியாகச் சுரங்கங்களில் நிலக்கரி எடுக்கும் வேலையில் ஈடுபடுபவர்கள்,
பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிப்பதில் அக்கறை காட்டுவதில்லை.
அவர்களுக்குத் தொழிலாளர்களின் நலனையோ பாதுகாப்பையோ உறுதி செய்வதைவிட,
எங்கெல்லாம் மிச்சம் பிடித்துத் தங்கள் லாபத்தை அதிகரிக்க முடியும்
என்பதில்தான் அக்கறை அதிகமாக இருக்கும்.
லால்மாடியா விபத்தில்கூட, முதலில் சிறிய அளவில் சுவர்களிலிருந்து மண் சரிவு
ஏற்படத் தொடங்கியது. அதை அபாய அறிவிப்பாக எடுத்துக் கொண்டு, வேலையை
நிறுத்தத் தயாரானார்கள். ஆனால், ஒப்பந்தக்காரர் எப்படியும் குறிப்பிட்ட
நேரம் வரை வேலை நடந்தாக வேண்டும் என்று உத்தரவிட்டதாகப் பார்வையாளர்கள்
தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவிலேயே மிகவும் ஆபத்தான பணி சுரங்கப் பணிதான். பத்து நாள்களுக்கு
ஒரு மரணம் என்கிற அளவில் கடந்த ஆண்டு விபத்துகள் நடந்தன. நிலக்கரி வெட்டி
எடுப்புத் துறையில் மட்டும் 2015-இல் 100 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி
எடுப்பதற்கு 7 உயிர்கள் என்கிற அளவில் சுரங்கங்கள் பலி வாங்கியிருக்கின்றன.
2014-ஆம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைப்படி, சுரங்க
விபத்துகளால் ஏற்படும் மரணங்கள், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
பயிற்சி, பாதுகாப்பு, விபத்து குறித்த விசாரணை ஆகியவற்றில் சர்வதேச அளவிலான
வழிமுறைகளை சுரங்கத் துறையில் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்த
அறிக்கை குறிப்பிடுகிறது.
சுரங்கத் துறையில் பாதுகாப்பு அம்சங்கள் காணப்படவில்லை, சுரங்கத்
தொழிலாளர்களுக்குத் தகுந்த பாதுகாப்பில்லை என்பதை முதலில் உணர்ந்து
செயல்பட்டது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசுதான். 1973-இல்
நிலக்கரிச் சுரங்கங்களை தேசியமயமாக்கிச் சட்டம் இயற்றியதற்குக் காரணமே,
தனியார் துறையினர் சுரங்கங்களில் போதிய பாதுகாப்பை உறுதி செய்யாமல்
இருந்ததும், சுரங்கத் தொழிலாளர்களின் நலனைப் பேணாமல் இருந்ததும்தான்.
அன்றைய நிலைமையிலிருந்து இப்போது சுரங்கத் தொழிலாளர்களின் பணி நேரப்
பாதுகாப்பு மிகவும் அதிகரித்து விட்டிருக்கிறது.
தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, தேசியமயமாக்கப்பட்ட
நிலக்கரிச் சுரங்கங்களில், தனியார் ஒப்பந்ததாரர்களின் மூலம் நிலக்கரி
வெட்டி எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசுத் துறை
சுரங்கத் தொழிலாளர்களின் மெத்தனப் போக்கு நிர்வாகங்களைத் தனியாரிடம்
ஒப்பந்த முறையில் அந்தப் பணியை ஒப்படைக்கத் தூண்டியது. அவர்கள் முறையான
பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்காமல் இருப்பது மீண்டும் பிரச்னையை
எழுப்புகிறது.
2015-இல் மட்டும் இந்தியாவிலுள்ள 570 சுரங்கங்களில் 38 தொழிலாளர்கள்
மரணமடைந்திருக்கிறார்கள். 2016-இல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து கடந்த
ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் 65 மரணங்கள்
நிகழ்ந்திருக்கின்றன. இது வெளியே தெரியவந்த எண்ணிக்கைதானே தவிர சரியான
எண்ணிக்கை அல்ல. பல மரணங்கள் வெளியில் தெரிவதில்லை அல்லது சுரங்க
ஒப்பந்ததாரர்கள் அவற்றை மரணமாக ஏற்றுக் கொள்வதில்லை.
பாதுகாப்பு அம்சங்கள் ஒருபுறம் இருக்க, அதைவிட அதிர்ச்சி அளிப்பது,
சுரங்கப் பணியில் மரணமடையும் தொழிலாளர்களின் குடும்பத்திற்குத் தரப்பட
வேண்டிய இழப்பீடு. மிகவும் ஏழைகளான அந்தச் சுரங்கத் தொழிலாளர்களின்
குடும்பங்களுக்கு அறிவிக்கப்படும் இழப்பீடுகள் போய்ச் சேர்வதில்லை என்கிற
உண்மை சுடுகிறது. லால்மாடியா நமது விழிகளைத் திறந்து சுரங்கங்களின்
பாதுகாப்பை அதிகரித்தால் மகிழ்ச்சி!
கூமுட்டையிடும் சிறைக்கோழிகள்
By ஆர்.எஸ். நாராயணன் |
Published on : 13th January 2017 01:14 AM |
பாய்ச்சல் காளைகள் சித்தரவதை செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தி
உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்துவிட்டது. இது சரியா தவறா
என்ற விவாதம் தொடர்கிறது. எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த
நீதிமன்றத் தடையை நீக்கப் போராடுவதாக மார்தட்டுகிறார்கள்.
ஆனால், கூண்டுச் சிறைக்குள் கூமுட்டையிடும் சிறைக் கோழிகளின் சித்தரவதைக்கு
முற்றுப்புள்ளி உண்டா? இந்தப் பிரச்னை இப்போது உச்சநீதிமன்றத்தின்
கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சென்னையைப்போல் பெரிய நகரங்களில் வாழ்வோர் தினமும் கூமுட்டைகளை உடைத்து
ஆம்லெட் செய்து ரொட்டித் துண்டில் வைத்து ஒரு துரித உணவாக வயிற்றுக்குள்
தள்ளும்போது, ஒரு கணம் இந்த கூமுட்டை எப்படி உற்பத்தியாகிறது என்ற சோகப்
பின்னணியை நினைத்துப் பார்த்தால் அவர்கள் அநேகமாக முட்டை சாப்பிடுவதையே
அன்று முதல் நிறுத்திவிடுவார்கள்.
முக்கியமான மூன்று காரணங்கள் உண்டு. இம்முட்டைகள் அந்நிய தேசத்து வெள்ளைக்
கோழிகளால் இடப்படும் கூமுட்டைகள். அதாவது மலட்டு முட்டைகள். அடைகாத்தால்
குஞ்சு வராது. இப்படிப்பட்ட முட்டைகளைக் கூமுட்டைகள் என்பார்கள்.
இரண்டாவது இவற்றின் தாய்க் கோழிகள் கூண்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டுச்
சித்தரவதைக்குள்ளாகி முட்டை இடுகின்றன. மூன்றாவது, இக்கூமுட்டைகளில்
ஆண்டிபயாட்டிக் - பூச்சி மருந்து விஷம் எஞ்சியிருக்கும். தொடர்ந்து இந்த
முட்டைகளை உண்போர் "சூப்பர் பக்' என்ற கொடிய நோய்க்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு
இருக்கிறது.
உலகிலேயே அதிகபட்ச சித்தரவதைக்கு ஆளாகும் ஒரு உயிரினம் என்றால், அது
கூமுட்டையிடும் வெள்ளைக் கோழிதான். செயற்கையாக வர்த்தக ரீதியில்
வளர்க்கப்படும் கோழிகளில் இறைச்சிக் கோழி வளர்ப்புமுறை வேறு. கூமுட்டைக்
கோழி வளர்ப்பு முறை வேறு.
இறைச்சிக் கோழிகளும் சிறைக் கோழிகளே. ஆனால், கூண்டுகளில் அடைக்காமல்
தனித்தனியாக 10 சதுர அடி கொண்ட அறைகள் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வோர் அறையிலும்
சுமார் 100 குஞ்சுகளை விட்டு அவற்றுக்குத் தீவனம் கொடுத்து தினம் தினம்
ஆண்டிபயாட்டிக் மருந்தை ஸ்ப்ரே செய்வார்கள்.
குஞ்சுகளை கோழிகளாகக் கொழுக்க வைத்து விற்பனைக்கு அனுப்புவார்கள்.
இக்கோழிகளை இறைச்சியாக உண்போருக்கும் "சூப்பர் பக்' நோய்வரும் ஆபத்து
உண்டு. கூமுட்டைக் கோழிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒரு அடி சதுரத்திற்கும்
குறைவான கம்பிச் சிறைக்குள் தன் சிறகை விரிப்பதற்குக்கூட இடமில்லாமல்
அடைத்துவைக்கப்படும். இவை அடைகாக்காத முட்டைகளை ஈனும்.
கூண்டுக்குள் கூண்டு, கூண்டுமேல் கூண்டு, என்று கூண்டுத்தொகுதிக்குள் ஆயிரக்கணக்கான கூமுட்டைக் கோழிகளைக் காணலாம்.
"இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே' என்று மனமுருகி ஆடுகள்
குட்டிகளுக்காக அன்று கவிபாடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இன்று
உயிரோடிருந்து நாமக்கல்லைச் சுற்றியுள்ள ஊர்களில் வளர்க்கப்படும் கோழிச்
சிறைகளைப் பார்த்திருந்தால் என்ன பாடியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கவிஞர் வாழ்ந்த காலத்தில் நாமக்கல் பகுதி முட்டை விஷயத்தில் அவ்வளவு
பிரபலமான ஊராக இல்லை. இன்று கூமுட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முதல்
நிலையில் உள்ளது. இன்று இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும்
ஆயிரக்கணக்கான நாமக்கல்கள் தோன்றியிருக்கின்றன.
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனம் வழங்கும்
புள்ளிவிவர அடிப்படையில் கோழி முட்டை உற்பத்தியில் இந்தியா முதலிடம்
வகித்து வருகிறது. பள்ளிப் பருவத்தில் குறைவான மதிப்பெண் வாங்கிய மாணவனை,
"என்னடா முட்டையா?' என்று கேலி செய்வார்கள்.
ஒலிம்பிக் விளையாட்டில் ஒரு தங்கம் கூடப் பெறாமல் முட்டை வாங்கிய இந்தியா
இன்று முட்டை உற்பத்தியில் முதலிடம் என்று பேசுவது வியப்புக்குரிய விஷயம்
அல்ல. சாதாரண முட்டையல்ல, கூமுட்டைகள்தாம். கூமுட்டை வளர்ச்சி 8 முதல் 10
சதவீதம். இந்த ஆண்டு கூமுட்டை உற்பத்தி இந்தியாவில் எட்டு பில்லியன் (800
கோடி).
இந்த அளவுக்கு முட்டை உற்பத்தி உயர்ந்துள்ள பின்னணி சோகமானது என்பதுதான்
உண்மை. தன் சிறகைக்கூட விரிக்க முடியாத கூண்டுத் தொடர்களில் நெருங்கி
வாழ்ந்து முட்டை போடும் பெட்டைகளை வளர்க்க முதலில் தாய்க் கோழிகள்
வாங்கப்படுகின்றன. அவை முட்டைகளிட்டு அடை காக்கும்.
குஞ்சுகள் பொறித்தவுடன் பெட்டைக் கோழி என்றால் கூண்டில் அடைக்கப்பட்டு
முட்டை உற்பத் திக்கு ஏற்கப்படும். சேவல் என்றால் சிசுவிலேயே கொலை
செய்யப்படும். எப்படி தெரியுமா? மின்சார தோசைக்கல்லில் சிசுச் சேவல்களைப்
போட்டுக் கைமா செய்து அதை பெட்டைக் கோழிகளுக்குச் சத்துணவாக
வழங்கப்படுகிறது.
அந்தக் காலத்தில் கிராமிய அழகில் நாட்டுக் கோழிகளின் பங்கு மிகவும்
சிறப்பானது. கோழி வளர்க்கும் விவசாயிகள் மண் கொடாப்பு போட்டு அதை
வளர்ப்பார்கள். பஞ்சாரம் போட்டு கோழிக் குஞ்சுகளை எதிரிகளிடமிருந்து
காப்பாற்றுவார்கள். சேவல் கூரை மீது ஏறி "கொக்கரக்கோ' என்று கூவி நம்மைத்
துயிலெழுப்பும்.
இயற்கையாக வளரும் நாட்டுக் கோழிகளின் முட்டைகள் இப்போது கிடைப்பது அரிதாக
உள்ளது. நல்லுணவு தரும் நாட்டுக் கோழி முட்டைகளை மறந்துவிட்டு நாம், இன்று
உயிரற்ற கூமுட்டைகளை உண்ணும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.
இப்படிப்பட்ட நோய்க்குறியுள்ள சீமைக் கோழி கூமுட்டைகளை உண்போர் சைவப்
பெருமை பேசுவதுண்டு. கூமுட்டை மலடுதானே தவிர, அது சைவம் உணவு என்று
எப்படிக் கருத முடியும்? இப்படிப்பட்ட கூமுட்டைகளை விரும்பி உண்ணும்
மனிதர்கள் திருந்த வழி உண்டா?
கூமுட்டை போடும் சீமை வெள்ளைக் கோழிகளைக் கூண்டில் அடைத்து தினம் தினம்
சத்தூசி, சினை ஊசி, ஆண்டிபயாட்டிக் ஊசி என்று ஊசிக்கு மேல் ஊசி போட்டுக்
கூண்டிலடைத்துச் சித்தரவதை செய்வது என்ன நியாயம்?
இவ்வாறு கூண்டுகளில் அடைத்து, சிறகு விரிக்கக்கூட இடமில்லாமல் சிறைவாசம்
செய்யும் கூமுட்டைக் கோழிகளுடன் ஒப்பிடும்போது ஜல்லிக்கட்டுக் காளைகள்
சித்தரவதைக்குள்ளாவதாகப் பேசுவது வியப்பாயுள்ளது.
வருடம் 365 நாட்களிலும் ஜல்லிக்கட்டுக் காளைகள் சிறையிலா வாழ்கின்றன.
அவற்றுக்கு சிறந்த பலம் வேண்டுமென்று நல்ல போஷாக்குடன் வளர்கின்றன.
ஜல்லிக்கட்டுக்கு வளர்க்கப்படும் காளைகளில் பெரும்பாலும் காங்கேயம்
காளைகள். காங்கேயம் காளைகள் நாட்டு இனம் என்பதால் அப்படிப்பட்ட நாட்டு இனம்
அழியாமல் காக்கவும் ஜல்லிக்கட்டு காரணமாயுள்ளது.
ஜல்லிக்கட்டு விழாவின்போது அந்தக்காளைகளுக்கு ஏற்படும் காயங்களை காரணம்
காட்டி சித்தரவதை என்று முடிவு செய்ய முடியாது. விளையாட்டு வீரர்கள் புதிய
சாதனைகளைப் பெற வேண்டும் என்று கடுமையாக உடற்பயிற்சி செய்வதை யாராவது
சித்தரவதை என்பார்களா?
ஜல்லிக்கட்டின்போது பாய்ச்சல் காளைகள் துன்புறுத்தப்படுவதாச் சித்தரித்துப்
பாயும் அந்த எஸ்.பி.சி.ஏ. (S.P.C.A.) சட்டம் - அதாவது ஜீவராஜிகளின்
பாதுகாப்பு மற்றும் சித்தரவதைச் சட்டம் 1960 பிரிவு ஐஐ (1)(e) கூமுட்டைக்
கோழி வளர்ப்பிலும் பாய்கிறது.
ஆனால் இந்தச் சட்ட விதியின்படி அபராதம் ரூ.50 தான். கோடிக்கணக்கில் பணம்
புரளும் கூமுட்டைக் கோழி நிறுவனங்களுக்கு ரூ.50 எம்மாத்திரம்? அபராதம்
செலுத்திவிட்டு சித்தரவதை மீண்டும் தொடரும்.
இதை மீறி கூமுட்டைக் கோழிகள் கூண்டிலடைபட்டுச் சித்தரவதை செய்யப்படும்
காட்சிகளை வீடியோ ஆதாரத்துடன், 2014-15 ஆண்டுகளில், மும்பை, அலகாபாத்,
சண்டிகர், ஹைதராபாத் மாநில நீதிமன்றங்களில் தொடரப்பட்ட நான்கு பொதுநல
வழக்குகள், இந்தியக் கால்நடை நல வளர்ப்புக்குழு (Animal Welfare Board of
India) வகுத்துள்ள விதிமுறைகளை மீறி கூமுட்டைக் கோழி வளர்ப்பு நிறுவனங்கள்
இயங்குவதாகக் குற்றம் சுமத்திக் கூமுட்டை உற்பத்திக்குத் தடை விதிக்குமாறு
கோரியுள்ளன.
மேற்படி நான்கு பொதுநல வழக்குகளையும் விசாரணை செய்து ஒரே அமர்வில் தீர்ப்பு
வழங்குமாறு ஜீவராசிகள் நல பாதுகாப்புக் குழு மூலம் தில்லி
உச்சநீதிமன்றத்திற்கு மாநில நீதிமன்றங்கள் மாற்றியுள்ளன. விரைவில்
உச்சநீதிமன்றம் முட்டைக் கோழி வளர்ப்புக்குத் தடை விதிக்கலாம் என்று பரவலாக
எதிர்பார்க்கப்படுகிறது.
கூமுட்டை கோழி வளர்ப்பில் ஒரு முன்னணி மாநிலமான தமிழ்நாட்டில் எந்தப்
பொதுநல விரும்பியும் இந்தச் சித்தரவதைகளைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
ஜல்லிக்கட்டு மீதான உச்சநீதிமன்றத்தின் தடையை ஆதரிப்பவர்கள், ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு நிமிஷமும் சித்திரவதைக்குள்ளாகும் கூமுட்டைக் கோழிகளைக்
கண்டு மனம் இறங்காதது ஏனோ?
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.
சகிப்புத்தன்மை கற்போம்
By எம். அருண்குமார் |
Published on : 13th January 2017 01:10 AM
தனிமனித வாழ்வில் துவங்கி, பொது வாழ்க்கை, குடும்பம், கொடுக்கல்
வாங்கல், அரசியல் என மனித சமூகத்தின் அனைத்திலும் ஆளுமை செலுத்துகிற ஆற்றல்
கொண்ட ஓர் அற்புதப் பண்புதான் சகிப்பு தன்மையாகும்.
சகிப்புத்தன்மையை இழந்து விட்டால் நம் நிலை தவறிவிடும். வாழ்க்கைப் போகும்
வழியும் மாறிவிடும். எப்போது நாம் சகிப்புத்தன்மையை மேற்கொள்கின்றோமோ
அப்போது வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்க துவங்கி
விடுவோம்.
மனித வாழ்க்கையில் சோதனைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். சோதனைகள்
பல்வேறு வடிவங்களில் மனித வாழ்க்கையில் இடம் பெறுகின்றது. அதில் ஒன்று பசி,
பட்டினி. அப்படி ஒருவர் பசி, பட்டினியில் வாடும் போது சகிப்புத்தன்மையைக்
கையாள வேண்டும்.
நோயால் முடங்கும் போது சகிப்புத் தன்மை வேண்டும். மற்றவர்கள் அந்நேரத்தில்
நம்மை கவனிக்க தவறும்பட்சத்தில் கோபப்படாமல் சகிப்புத் தன்மையை
வெளிப்படுத்த வேண்டும்.
நமக்குள்ளே பதிலுக்கு பதில் என்ற உணர்வு இயல்பாக இருக்கும். அவன்
பேசிவிட்டால் நாமும் பேசவேண்டும் ,அவன் அடித்து விட்டால் நாமும் அடிக்க
வேண்டும்.
ஒருவர் நம்மிடம் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டால் நாமும் அவரிடம் அப்படியே
நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தான் பழி வாங்கும் தன்மை. இந்த பழி
வாங்கும் தன்மையை விட்டு விட்டால் அதுதான் சகிப்புத்தன்மை.
அதே போல மற்றவர்கள் எல்லா விதத்திலும் நமது விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து
கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் அவர்களுக்குரிய முறையில் அவர்கள்
இருப்பார்கள் என்று ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மை.
உலகில் நிலவும் பல்வேறு கலாசாரங்களையும் ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை
என்று அழைக்கிறோம். மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை
ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, சகிப்புத் தன்மை நம்மிடையே
இருக்க வேண்டும்.
சகிப்பு தன்மை இல்லை, இல்லை என்ற குரல் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இன, மொழி, மத பேதமின்றி ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
ஒரு மனிதன் சக மனிதனை மதித்தல், அவனின் உரிமைகள், சுதந்திரத்தை மதித்தல்,
ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றுக்கு
மதிப்பளித்து அவர்களின் உரிமைகளில் தலையிடாமல் இருப்பது
சகிப்புத்தன்மையாகும்.
சகிப்புத்தன்மை என்பது ஜாதி, மத, இன, மொழி உணர்வுகளால் வரும் பற்று அல்ல,
மாறாக அது ஒவ்வொருவரின் மனதிலிருந்து எழும் வாழ்வியல் நெறி. அந்த உணர்வை
எந்த ஒரு சமூக நம்பிக்கைகளாலும், நிறுவனங்களாலும், அரசாலும் உருவாக்க
முடியாது.
இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவான முகவுரை இந்தியா ஒரு சமயச்சார்பற்ற சகிப்புத்தன்மை கொண்ட நாடு என விளக்குகிறது.
கருத்து வேறுபாடுகள் எழுதல் என்பது பகுத்தறிவு உலகில் சகஜமான ஒன்று. ஆனால்
வேறுபாடுகளை களைவதற்கான வழி அறவழியாக இருக்க வேண்டும். சகிப்புத்
தன்மையற்றவர்களின் தேர்வே வன்முறை.
எவரிடம் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதோ, அவரே
சகிப்புத்தன்மையுடையவர். தன் தவறுகளை பிறர் சுட்டிக் காட்டும் போது,
பொறுமையுடனும் பகுத்தறிவுடனும் அதை சரிசெய்ய முயல்பவரே
சகிப்புத்தன்மையுள்ளவர் எனக்கருதலாம்.
புத்தர், மகாவீரர் போன்ற சகிப்புத்தன்மை கொண்ட ஞானிகளைத் தந்த நம்
நாட்டுக்கு, சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்துச்
செல்லும் தகுதி அதிகமாகவே உள்ளது.
வருங்கால தலைமுறையின் வாழ்வு இனிதாக அமைய, சகிப்புத்தன்மை என்னும் வேர்களை நம் குழந்தைகள் மனதில் ஆழமாக ஊன்ற வேண்டியது நமது கடமை.
ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்தை வழங்கும்போது தனி மனிதனின் மானத்துக்கு
மதிப்புக்கொடுக்க வேண்டும். ஒரு மனிதனின் சொந்த வாழ்க்கையை தெருவுக்கு
கொண்டுவரும் இழிசெயல்களில் இறங்கக்கூடாது. அச்சுறுத்தலில் ஈடுபடக்கூடாது.
அவனுடைய குடும்பத்தைப் பற்றி பேசக்கூடாது.
அப்படிச் செய்கிறவர்கள் தங்களுடைய தடுமாற்றத்தையும், பலவீனத்தையுமே
வெளிப்படுத்துகிறார்கள். ஒரு கருத்துக்கு எதிர் விமர்சனமளிக்கும்போது
சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். இது இன்றைக்கு சமுதாயத்தில் அருகி
வருகிறது.
இன்னா செய்யாமை என்ற திருவள்ளுவரின் அதிகாரத்துக்கு
விளக்கங்கொடுத்துக்கொண்டே ஒருவரையொருவர் வாயாரத்திட்டிவரும் மனிதர்களை நம்
சமுதாயம் கொண்டிருக்கிறது.
படித்தவர்களுக்கு கூட சகிப்புத் தன்மை இருப்பதில்லை. அண்மையில் ஒரு
தமிழாசிரியர், சுய சேவை உணவகத்திற்கு சென்றார். நமக்கு தேவையான உணவை நாமே
கேட்டுப் பெற்று இருக்கைக்கு எடுத்துச் சென்று உண்ணலாம்.
அது சுய சேவை உணவகம் என்பது தெரியாத அந்த ஆசிரியர், தனக்கு தேவையான உணவை
ஆர்டர் செய்துவிட்டு நாற்காலியில் அமர்ந்துவிட்டார். நீண்ட நேரமாகியும்
தாம் ஆர்டர் செய்த உணவு மேஜைக்கு வராதததால் உணவு பரிமாறும் நபரை அழைத்து
கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் இது சுய சேவை உணகம், உங்களுக்குத்
தேவையானதை நீங்களேதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியள்ளார். அது
தெரியாததால் ஆசிரியர் ஆத்திரத்தில் அந்த தொழிலாளியை அடித்துவிட்டர்.
அனைவருக்கும் சகிப்புத் தன்மையை கற்றுத் தர வேண்டிய ஆசிரியர் சகிப்புத் தன்மை இல்லாமல் இருப்பது வருத்ததத்திற்குரியதாகும்.
சகிப்புத் தன்மை அனைவரிடத்திலும் இருக்கும்பட்சத்தில் உலகம் முழுவதும் அமைதிப் பூங்காவாகத் திகழும்.
சென்னை: மார்கழி 29ஆம் தேதி ஜனவரி 13ஆம் தேதி போகிப்பண்டிகை
கொண்டாடப்படுகிறது. தை முதல் நாள் ஜனவரி 14ஆம் தேதி தை பொங்கல் திருநாளும்,
ஜனவரி 15ஆம் நாள் மாட்டுப்பொங்கலும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
போகி
பண்டைய காலத்தில் இந்திர விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது. இது இந்திரனுக்காக
கொண்டாடப்படும் பண்டிகை. இந்திரனைப் போல நாமும் மகிழ்ச்சியுடன் தினசரியும்
போகம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மழை
பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய
நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை 'போகி'யன்று பூஜிக்கும்
வழக்கமிருந்தது. தற்போது, 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில்
போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சாமி கும்பிட நல்ல நேரம்
பழைய பொருட்களை நீக்கிவிட்டு புதிய பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்பதற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை போகி திருநாளில் பழையவைகளை நீக்கி புதியவைகளை வைத்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை
பொங்கல் பண்டிகை தை முதல்நாள் பொங்கல் வைக்க நல்ல நேரம் பகல் 11.00 - 12.00
மாட்டுப்பொங்கல்
நாளில் பசுக்கள், காளைகளுக்கு நன்றி செலுத்த பொங்கல் வைத்து பூஜை செய்ய
நல்ல நேரம் காலை 8.00 மணி முதல் 10 மணி வரை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00
வரை நல்ல நேரம்
source: oneindia.com
Dailyhunt
சுப்ரமணியன் சாமியின் கருத்துக்கு இல.கணேசன் விளக்கம்
தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தினால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் கருத்து கூறியிருந்தார். இதற்கு வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவர், தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து கூறியவர்களை, மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்தார். இந்நிலையில், பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சுவாமி கருத்து குறித்து விளக்கம் அளித்த பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், சுப்ரமணியன் சுவாமியின் கருத்து, அவரது சொந்தக் கருத்து என்று விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் அவ்வபோது சுப்ரமணியன் சுவாமி, சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறுவதும், அதற்கு பாஜக தரப்பிலிருந்து யாராவது ஒருவர், "சுப்ரமணியன் சுவாமியின் கருத்து, அவரது சொந்தக்கருத்து" என்று விளக்கம் தருவதும் வாடிகையாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
போலீசை அடித்தால் சும்மா விடுவோமா? கடுகடு துணை கமிஷனர்
மத்திய அரசின் செல்லாத ரூபாய் அறிவிப்பைக் கண்டித்து கடந்த டிசம்பர்
மாதம் 31-ம் தேதி பள்ளிக்கரணை மேடவாக்கம் பகுதியில், இந்திய ஜனநாயக
வாலிபர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர்
மோடியைக் கண்டித்தும், பா.ஜனதாவைக் கண்டித்தும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தினால் போக்குவரத்து நெரிசல்
ஏற்படுகிறது என்று கூறி போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முற்சித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொளுத்த முயன்றனர். அதனைத் தடுத்த போலீசார், அவர்களை
சரமாரியாக தாக்கி கைது செய்தனர். சம்பவத்தைப் படம்பிடித்த
பத்திரிக்கையாளரையும் தாக்கிய போலீசார் அவரிடமிருந்து கேமராவை
பறித்துக்கொண்டனர்.
கைது செய்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை வேனில்
ஏற்றிய போலீசார் உள்ளே வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களில் 3
பெண்களும் இருந்தனர். அவர்களையும் அடித்து உதைத்து பாலியல் ரீதியாக
கொடுந்தாக்குதலையும் போலீசார் நடத்தியுள்ளனர். போலீசாரின் தாக்குதலில்
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 14 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் நேற்று
(புதன்) ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுக்க அதிர்ச்சியை
ஏற்படுத்திய போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து பல்வேறு
தரப்பினரும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தச்
சம்பவம் குறித்துக் கள ஆய்வு நடத்திவரும் மக்கள் கண்காணிப்பகத்தின்
ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் தாக்குதலில் ஈடுபட்ட சென்னை போலீசாரிடமும்
ஆய்வு நடத்தி வருகிறார். அதனையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்,
பள்ளிக்கரணை-மேடவாக்கம் பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது
போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சட்டம்
ஒழுங்கு துணை ஆணையர் சங்கரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். துணை ஆணையர்
சங்கர், 'போலீசை அடித்தால் நாங்க சும்மா விடுவோமா' என்று ஆசீர்வாதத்திடம்
கடுகடுத்துள்ளார்.
இது
தொடர்பாக நம்மிடம் பேசிய ஆசீர்வாதம்,"மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு
மீறப்படுமோ அதில் கொஞ்சமும் குறைவு இல்லாமல் மேடவாக்கத்தில் போலீசார்
நடந்துள்ளனர். அதனால் மக்கள் கண்காணிப்பகம் இந்த விஷயத்தில் உரிய கள ஆய்வை
நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர முடிவு செய்தது.
அதன்படி
தாக்குதல் நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வரும் துணை கமிஷனர் சங்கரை
சந்தித்து விளக்கம் கேட்டோம். மாநகர ஆணையரை சந்திக்கத்தான் அனுமதி
கேட்டிருந்தோம். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. துணை ஆணையரை
சந்திக்கத்தான் அனுமதி கிடைத்தது. அதுவும் நீண்ட நேர காத்திருப்புக்குப்
பின்னர் துணை ஆணையர் சங்கர் என்னை அவரின் அறைக்கு அழைத்துப் பேசினார்.
அப்போது எனக்கு மேடவாக்கம் தாக்குதல் சம்பந்தமான வீடியோ காட்சியை
காட்டினார்.
"சார், போலீசார் மிகக் கடுமையாக ஜனநாயக வாலிபர்
சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்கள் என்றும் பாராமல்
பாலியல் துன்புறுத்தலோடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையெல்லாம் ஜுனியர்
விகடன் உள்ளிட்ட வார இதழ்கள், நாளிதழ்களில் தொலைக்காட்சி செய்திகளில்
வந்துள்ளன" என்றோம்.
அதற்கு அவர், 'அதெல்லாம் இருக்கட்டும்,
போலீசாரை யார் தாக்கினாலும் நாங்க சும்மா விடமாட்டோம். அதான் நடந்தது.
'என்று கூறினார். மேலும் அவர், 'சார் அமெரிக்காவில் எல்லாம் போலீஸ்
நில்லுன்னு சொன்னா நிக்கணும் சார். இல்லனா சுட்டுருவான் சார்' என
பதிலளித்தார்.
"அத்தோடு இந்த ஆதாரங்களைத்தான் மனித உரிமை
ஆணையத்தில் கொடுக்க உள்ளோம். ஜனநாயக சங்கத்தினர்தான் போலீசார் மீது
தாக்குதலை நடத்தினார்கள் என்று அங்கு தெரிவிக்கவுள்ளோம்" என்றும்
அதிரடியாகக் கூறினார்.
இது மிக அதிர்ச்சியான விஷயம். மக்கள்
கண்காணிப்பகம் நேரடி கள ஆய்வை நடத்தியுள்ளது. ஆய்வு அறிக்கையை இன்னும் சில
தினங்களில் வெளியிடுவோம்" என்றார் கொந்தளிப்பாக. - சி.தேவராஜன்.