Friday, January 13, 2017

  போலீசை அடித்தால் சும்மா விடுவோமா? கடுகடு துணை கமிஷனர்

மத்திய அரசின் செல்லாத ரூபாய் அறிவிப்பைக் கண்டித்து கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி பள்ளிக்கரணை மேடவாக்கம் பகுதியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடியைக் கண்டித்தும், பா.ஜனதாவைக் கண்டித்தும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முழக்கங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று கூறி போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முற்சித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கொளுத்த முயன்றனர். அதனைத் தடுத்த போலீசார், அவர்களை சரமாரியாக தாக்கி கைது செய்தனர். சம்பவத்தைப் படம்பிடித்த பத்திரிக்கையாளரையும் தாக்கிய போலீசார் அவரிடமிருந்து கேமராவை பறித்துக்கொண்டனர்.

கைது செய்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை வேனில் ஏற்றிய போலீசார் உள்ளே வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களில் 3 பெண்களும் இருந்தனர். அவர்களையும் அடித்து உதைத்து பாலியல் ரீதியாக கொடுந்தாக்குதலையும் போலீசார் நடத்தியுள்ளனர். போலீசாரின் தாக்குதலில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 14 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் நேற்று (புதன்) ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் குறித்து பல்வேறு தரப்பினரும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்துக் கள ஆய்வு நடத்திவரும் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் தாக்குதலில் ஈடுபட்ட சென்னை போலீசாரிடமும் ஆய்வு நடத்தி வருகிறார். அதனையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பள்ளிக்கரணை-மேடவாக்கம் பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது போலீசார் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சங்கரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். துணை ஆணையர் சங்கர், 'போலீசை அடித்தால் நாங்க சும்மா விடுவோமா' என்று ஆசீர்வாதத்திடம் கடுகடுத்துள்ளார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஆசீர்வாதம்,"மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு மீறப்படுமோ அதில் கொஞ்சமும் குறைவு இல்லாமல் மேடவாக்கத்தில் போலீசார் நடந்துள்ளனர். அதனால் மக்கள் கண்காணிப்பகம் இந்த விஷயத்தில் உரிய கள ஆய்வை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர முடிவு செய்தது.

அதன்படி தாக்குதல் நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி வரும் துணை கமிஷனர் சங்கரை சந்தித்து விளக்கம் கேட்டோம். மாநகர ஆணையரை சந்திக்கத்தான் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. துணை ஆணையரை சந்திக்கத்தான் அனுமதி கிடைத்தது. அதுவும் நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னர் துணை ஆணையர் சங்கர் என்னை அவரின் அறைக்கு அழைத்துப் பேசினார். அப்போது எனக்கு மேடவாக்கம் தாக்குதல் சம்பந்தமான வீடியோ காட்சியை காட்டினார்.
"சார், போலீசார் மிகக் கடுமையாக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பெண்கள் என்றும் பாராமல் பாலியல் துன்புறுத்தலோடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையெல்லாம் ஜுனியர் விகடன் உள்ளிட்ட வார இதழ்கள், நாளிதழ்களில் தொலைக்காட்சி செய்திகளில் வந்துள்ளன" என்றோம்.

அதற்கு அவர், 'அதெல்லாம் இருக்கட்டும், போலீசாரை யார் தாக்கினாலும் நாங்க சும்மா விடமாட்டோம். அதான் நடந்தது. 'என்று கூறினார். மேலும் அவர், 'சார் அமெரிக்காவில் எல்லாம் போலீஸ் நில்லுன்னு சொன்னா நிக்கணும் சார். இல்லனா சுட்டுருவான் சார்' என பதிலளித்தார்.
"அத்தோடு இந்த ஆதாரங்களைத்தான் மனித உரிமை ஆணையத்தில் கொடுக்க உள்ளோம். ஜனநாயக சங்கத்தினர்தான் போலீசார் மீது தாக்குதலை நடத்தினார்கள் என்று அங்கு தெரிவிக்கவுள்ளோம்" என்றும் அதிரடியாகக் கூறினார்.

இது மிக அதிர்ச்சியான விஷயம். மக்கள் கண்காணிப்பகம் நேரடி கள ஆய்வை நடத்தியுள்ளது. ஆய்வு அறிக்கையை இன்னும் சில தினங்களில் வெளியிடுவோம்" என்றார் கொந்தளிப்பாக.
- சி.தேவராஜன்.
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024