Friday, January 13, 2017

கூமுட்டையிடும் சிறைக்கோழிகள்

By ஆர்.எஸ். நாராயணன்  |   Published on : 13th January 2017 01:14 AM  | 
narayanan
பாய்ச்சல் காளைகள் சித்தரவதை செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தி உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்துவிட்டது. இது சரியா தவறா என்ற விவாதம் தொடர்கிறது. எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த நீதிமன்றத் தடையை நீக்கப் போராடுவதாக மார்தட்டுகிறார்கள்.

ஆனால், கூண்டுச் சிறைக்குள் கூமுட்டையிடும் சிறைக் கோழிகளின் சித்தரவதைக்கு முற்றுப்புள்ளி உண்டா? இந்தப் பிரச்னை இப்போது உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சென்னையைப்போல் பெரிய நகரங்களில் வாழ்வோர் தினமும் கூமுட்டைகளை உடைத்து ஆம்லெட் செய்து ரொட்டித் துண்டில் வைத்து ஒரு துரித உணவாக வயிற்றுக்குள் தள்ளும்போது, ஒரு கணம் இந்த கூமுட்டை எப்படி உற்பத்தியாகிறது என்ற சோகப் பின்னணியை நினைத்துப் பார்த்தால் அவர்கள் அநேகமாக முட்டை சாப்பிடுவதையே அன்று முதல் நிறுத்திவிடுவார்கள்.

முக்கியமான மூன்று காரணங்கள் உண்டு. இம்முட்டைகள் அந்நிய தேசத்து வெள்ளைக் கோழிகளால் இடப்படும் கூமுட்டைகள். அதாவது மலட்டு முட்டைகள். அடைகாத்தால் குஞ்சு வராது. இப்படிப்பட்ட முட்டைகளைக் கூமுட்டைகள் என்பார்கள்.

இரண்டாவது இவற்றின் தாய்க் கோழிகள் கூண்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டுச் சித்தரவதைக்குள்ளாகி முட்டை இடுகின்றன. மூன்றாவது, இக்கூமுட்டைகளில் ஆண்டிபயாட்டிக் - பூச்சி மருந்து விஷம் எஞ்சியிருக்கும். தொடர்ந்து இந்த முட்டைகளை உண்போர் "சூப்பர் பக்' என்ற கொடிய நோய்க்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

உலகிலேயே அதிகபட்ச சித்தரவதைக்கு ஆளாகும் ஒரு உயிரினம் என்றால், அது கூமுட்டையிடும் வெள்ளைக் கோழிதான். செயற்கையாக வர்த்தக ரீதியில் வளர்க்கப்படும் கோழிகளில் இறைச்சிக் கோழி வளர்ப்புமுறை வேறு. கூமுட்டைக் கோழி வளர்ப்பு முறை வேறு.

இறைச்சிக் கோழிகளும் சிறைக் கோழிகளே. ஆனால், கூண்டுகளில் அடைக்காமல் தனித்தனியாக 10 சதுர அடி கொண்ட அறைகள் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வோர் அறையிலும் சுமார் 100 குஞ்சுகளை விட்டு அவற்றுக்குத் தீவனம் கொடுத்து தினம் தினம் ஆண்டிபயாட்டிக் மருந்தை ஸ்ப்ரே செய்வார்கள்.

குஞ்சுகளை கோழிகளாகக் கொழுக்க வைத்து விற்பனைக்கு அனுப்புவார்கள். இக்கோழிகளை இறைச்சியாக உண்போருக்கும் "சூப்பர் பக்' நோய்வரும் ஆபத்து உண்டு. கூமுட்டைக் கோழிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒரு அடி சதுரத்திற்கும் குறைவான கம்பிச் சிறைக்குள் தன் சிறகை விரிப்பதற்குக்கூட இடமில்லாமல் அடைத்துவைக்கப்படும். இவை அடைகாக்காத முட்டைகளை ஈனும்.

கூண்டுக்குள் கூண்டு, கூண்டுமேல் கூண்டு, என்று கூண்டுத்தொகுதிக்குள் ஆயிரக்கணக்கான கூமுட்டைக் கோழிகளைக் காணலாம்.
"இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே' என்று மனமுருகி ஆடுகள் குட்டிகளுக்காக அன்று கவிபாடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இன்று உயிரோடிருந்து நாமக்கல்லைச் சுற்றியுள்ள ஊர்களில் வளர்க்கப்படும் கோழிச் சிறைகளைப் பார்த்திருந்தால் என்ன பாடியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கவிஞர் வாழ்ந்த காலத்தில் நாமக்கல் பகுதி முட்டை விஷயத்தில் அவ்வளவு பிரபலமான ஊராக இல்லை. இன்று கூமுட்டை உற்பத்தியில் நாமக்கல் மாவட்டம் முதல் நிலையில் உள்ளது. இன்று இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான நாமக்கல்கள் தோன்றியிருக்கின்றன.
பொருளாதாரக் கண்ணோட்டத்தில் ஐ.நா. உணவு மற்றும் விவசாய நிறுவனம் வழங்கும் புள்ளிவிவர அடிப்படையில் கோழி முட்டை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. பள்ளிப் பருவத்தில் குறைவான மதிப்பெண் வாங்கிய மாணவனை, "என்னடா முட்டையா?' என்று கேலி செய்வார்கள்.
ஒலிம்பிக் விளையாட்டில் ஒரு தங்கம் கூடப் பெறாமல் முட்டை வாங்கிய இந்தியா இன்று முட்டை உற்பத்தியில் முதலிடம் என்று பேசுவது வியப்புக்குரிய விஷயம் அல்ல. சாதாரண முட்டையல்ல, கூமுட்டைகள்தாம். கூமுட்டை வளர்ச்சி 8 முதல் 10 சதவீதம். இந்த ஆண்டு கூமுட்டை உற்பத்தி இந்தியாவில் எட்டு பில்லியன் (800 கோடி).

இந்த அளவுக்கு முட்டை உற்பத்தி உயர்ந்துள்ள பின்னணி சோகமானது என்பதுதான் உண்மை. தன் சிறகைக்கூட விரிக்க முடியாத கூண்டுத் தொடர்களில் நெருங்கி வாழ்ந்து முட்டை போடும் பெட்டைகளை வளர்க்க முதலில் தாய்க் கோழிகள் வாங்கப்படுகின்றன. அவை முட்டைகளிட்டு அடை காக்கும்.

குஞ்சுகள் பொறித்தவுடன் பெட்டைக் கோழி என்றால் கூண்டில் அடைக்கப்பட்டு முட்டை உற்பத் திக்கு ஏற்கப்படும். சேவல் என்றால் சிசுவிலேயே கொலை செய்யப்படும். எப்படி தெரியுமா? மின்சார தோசைக்கல்லில் சிசுச் சேவல்களைப் போட்டுக் கைமா செய்து அதை பெட்டைக் கோழிகளுக்குச் சத்துணவாக வழங்கப்படுகிறது.
அந்தக் காலத்தில் கிராமிய அழகில் நாட்டுக் கோழிகளின் பங்கு மிகவும் சிறப்பானது. கோழி வளர்க்கும் விவசாயிகள் மண் கொடாப்பு போட்டு அதை வளர்ப்பார்கள். பஞ்சாரம் போட்டு கோழிக் குஞ்சுகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவார்கள். சேவல் கூரை மீது ஏறி "கொக்கரக்கோ' என்று கூவி நம்மைத் துயிலெழுப்பும்.

இயற்கையாக வளரும் நாட்டுக் கோழிகளின் முட்டைகள் இப்போது கிடைப்பது அரிதாக உள்ளது. நல்லுணவு தரும் நாட்டுக் கோழி முட்டைகளை மறந்துவிட்டு நாம், இன்று உயிரற்ற கூமுட்டைகளை உண்ணும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

இப்படிப்பட்ட நோய்க்குறியுள்ள சீமைக் கோழி கூமுட்டைகளை உண்போர் சைவப் பெருமை பேசுவதுண்டு. கூமுட்டை மலடுதானே தவிர, அது சைவம் உணவு என்று எப்படிக் கருத முடியும்? இப்படிப்பட்ட கூமுட்டைகளை விரும்பி உண்ணும் மனிதர்கள் திருந்த வழி உண்டா?

கூமுட்டை போடும் சீமை வெள்ளைக் கோழிகளைக் கூண்டில் அடைத்து தினம் தினம் சத்தூசி, சினை ஊசி, ஆண்டிபயாட்டிக் ஊசி என்று ஊசிக்கு மேல் ஊசி போட்டுக் கூண்டிலடைத்துச் சித்தரவதை செய்வது என்ன நியாயம்?
இவ்வாறு கூண்டுகளில் அடைத்து, சிறகு விரிக்கக்கூட இடமில்லாமல் சிறைவாசம் செய்யும் கூமுட்டைக் கோழிகளுடன் ஒப்பிடும்போது ஜல்லிக்கட்டுக் காளைகள் சித்தரவதைக்குள்ளாவதாகப் பேசுவது வியப்பாயுள்ளது.

வருடம் 365 நாட்களிலும் ஜல்லிக்கட்டுக் காளைகள் சிறையிலா வாழ்கின்றன. அவற்றுக்கு சிறந்த பலம் வேண்டுமென்று நல்ல போஷாக்குடன் வளர்கின்றன. ஜல்லிக்கட்டுக்கு வளர்க்கப்படும் காளைகளில் பெரும்பாலும் காங்கேயம் காளைகள். காங்கேயம் காளைகள் நாட்டு இனம் என்பதால் அப்படிப்பட்ட நாட்டு இனம் அழியாமல் காக்கவும் ஜல்லிக்கட்டு காரணமாயுள்ளது.

ஜல்லிக்கட்டு விழாவின்போது அந்தக்காளைகளுக்கு ஏற்படும் காயங்களை காரணம் காட்டி சித்தரவதை என்று முடிவு செய்ய முடியாது. விளையாட்டு வீரர்கள் புதிய சாதனைகளைப் பெற வேண்டும் என்று கடுமையாக உடற்பயிற்சி செய்வதை யாராவது சித்தரவதை என்பார்களா?
ஜல்லிக்கட்டின்போது பாய்ச்சல் காளைகள் துன்புறுத்தப்படுவதாச் சித்தரித்துப் பாயும் அந்த எஸ்.பி.சி.ஏ. (S.P.C.A.) சட்டம் - அதாவது ஜீவராஜிகளின் பாதுகாப்பு மற்றும் சித்தரவதைச் சட்டம் 1960 பிரிவு ஐஐ (1)(e) கூமுட்டைக் கோழி வளர்ப்பிலும் பாய்கிறது.

ஆனால் இந்தச் சட்ட விதியின்படி அபராதம் ரூ.50 தான். கோடிக்கணக்கில் பணம் புரளும் கூமுட்டைக் கோழி நிறுவனங்களுக்கு ரூ.50 எம்மாத்திரம்? அபராதம் செலுத்திவிட்டு சித்தரவதை மீண்டும் தொடரும்.
இதை மீறி கூமுட்டைக் கோழிகள் கூண்டிலடைபட்டுச் சித்தரவதை செய்யப்படும் காட்சிகளை வீடியோ ஆதாரத்துடன், 2014-15 ஆண்டுகளில், மும்பை, அலகாபாத், சண்டிகர், ஹைதராபாத் மாநில நீதிமன்றங்களில் தொடரப்பட்ட நான்கு பொதுநல வழக்குகள், இந்தியக் கால்நடை நல வளர்ப்புக்குழு (Animal Welfare Board of India) வகுத்துள்ள விதிமுறைகளை மீறி கூமுட்டைக் கோழி வளர்ப்பு நிறுவனங்கள் இயங்குவதாகக் குற்றம் சுமத்திக் கூமுட்டை உற்பத்திக்குத் தடை விதிக்குமாறு கோரியுள்ளன.
மேற்படி நான்கு பொதுநல வழக்குகளையும் விசாரணை செய்து ஒரே அமர்வில் தீர்ப்பு வழங்குமாறு ஜீவராசிகள் நல பாதுகாப்புக் குழு மூலம் தில்லி உச்சநீதிமன்றத்திற்கு மாநில நீதிமன்றங்கள் மாற்றியுள்ளன. விரைவில் உச்சநீதிமன்றம் முட்டைக் கோழி வளர்ப்புக்குத் தடை விதிக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

கூமுட்டை கோழி வளர்ப்பில் ஒரு முன்னணி மாநிலமான தமிழ்நாட்டில் எந்தப் பொதுநல விரும்பியும் இந்தச் சித்தரவதைகளைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

ஜல்லிக்கட்டு மீதான உச்சநீதிமன்றத்தின் தடையை ஆதரிப்பவர்கள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் சித்திரவதைக்குள்ளாகும் கூமுட்டைக் கோழிகளைக் கண்டு மனம் இறங்காதது ஏனோ?
கட்டுரையாளர்:
இயற்கை விஞ்ஞானி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024