Sunday, January 15, 2017

 எக்ஸ்கியூஸ்மீ... உங்களுக்கு சொந்த வீடா? வாடகை வீடா?

By கார்த்திகா வாசுதேவன்  |

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கென்று இதுவரை சட்ட உரிமைகள் எதுவும் கண்டடையப்படவே இல்லையா? இல்லை எனில்... ஏன்? ஏன்? ஏன்
மிக அதிக வாடகை கொடுத்து ஒரு வீட்டில் குடி இருந்தாலும் யாருக்கோ பயந்து கொண்டு வாழ்வதைப் போலான ஒரு நிலைமையை ஏற்படுத்தும் வீட்டு உரிமையாளர்களின் சர்வாதிகாரப் போக்கை கட்டுப்படுத்த சட்ட உரிமைகள் தேவையா இல்லையா? 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வாடகை கொடுத்து குடியிருக்கும் நபருக்கே அந்த வீடு சொந்தம் என்ற சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா! நடுத்தர குடும்பஸ்தர்களுக்கு தமது ஒட்டு மொத்த வாழ்நாளுக்கும் சேர்த்து தமக்கென்று ஒரே ஒரு சொந்த வீடு என்பது தான் வாழ்நாள் லட்சியம்... கனவு என்று சொல்லலாம், அப்படி கட்டிய வீட்டை விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு மீண்டும் வாடகை வீட்டுக்கு குடியேறும் நிலை வந்தால் அந்த வாழ்வின் அர்த்தம் என்ன?!

வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு குடி இருப்பவர்கள் என்பதைத் தாண்டி இடைத்தரகர்கள் என்றொரு பிரிவு வாடகை வீடு தேடுபவர்களின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறதே, இதை எல்லாம் முறைப்படுத்த சட்ட ரீதியாக எதுவும் செய்ய இயலாதா? அகஸ்மாத்தாக மனிதத் தன்மையும் கொஞ்சம் நேர்மையும் கலந்த வீட்டு உரிமையாளர்கள் அல்லது சட்ட நிபுணர்கள் இதற்கு பதில் அளிக்க முயற்சிக்கலாம்.

800 சதுர அடி வீட்டுக்கு 10000 ரூபாய் வாடகை அட்வான்ஸ் வீட்டு உரிமையாளர்களின் நோக்கம் போல அவர்களது மனநிலைக்குத் தக்க தீர்மானிக்கப்படும் , குறைந்த பட்சம் 50000 லிருந்து 1 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்ட தொகை, முகப்பேரில் உறவினர் ஒருவர் வீடு தேடிக் கொண்டிருந்தார் நகர சந்தடி அற்ற புறநகர் பகுதி வீடு ஒன்றிற்கே, 900 சதுர அடி வீட்டுக்கு 8000 ரூ வாடகை 80,000 ரூ அட்வான்ஸ் கேட்கப் பட்டது ,இந்த அட்வான்ஸ் தொகையை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள் என்று தெரியவில்லை, ரொம்பத் தெரிந்தவர்கள் என்றால் தொகை குறையுமாம், அறிமுகமற்றவர்கள் என்றால் 10 மாத வாடகையை அட்வான்ஸ் தொகையாகத் தர வேண்டியதாய் இருக்கும்.வாடகைக்கு வீடு தேடும் பலரும் இந்த அட்வான்ஸ் தொகையையே பெர்சனல் லோனில் தான் வாங்க வேண்டிய நிலையிலிருப்பார்கள், ஆக மொத்தம் வீட்டு வாடகையோடு இந்த பெர்சனல் லோன் டியூவும் மாதாந்திர செலவில் சேர்ந்து கொள்ளும்,
இன்னொரு சகிக்க முடியாத கஷ்டம், இடைத் தரகர்கள் இல்லாமல் வீடு வாடகைக்குக் கிடைத்தால் சரி இல்லையேல்; அவர்களுக்கு ஒரு மாத வாடகைத் தொகையை கமிஷனாகத் தர வேண்டும். சரி இப்படி கமிஷன் அடிக்கிறார்களே அதில் ஒரு நேர்மை, குறைந்தபட்ச நியாயம் இருக்குமா? என்றால் அதுவும் இல்லை, வீட்டு உரிமையாளர் நிர்ணயித்திருக்கும் வாடகைத் தொகையைக் காட்டிலும் இந்த இடைத் தரகர்கள் 500 அல்லது 1000 ரூ அதிகமாக சொல்லித் தான் வீட்டையே கண்ணில் காட்டுவார்கள்,

எங்களது ஏரியாவில்  400 சதுர அடிகள் கொண்ட சிங்கிள் பெட் ரூம் பிளாட் ஒன்று சென்ற மாதம் காலி ஆனது, முன்பு இருந்தவர்கள் அந்த வீட்டுக்கு கொடுத்து வந்த வாடகை 5000 ரூ ,வீட்டுக்கு வெள்ளை அடித்து புதுபித்து இருக்கும் அதன் உரிமையாளர் இப்போது அந்த வீட்டுக்கு நிர்ணயித்த வாடகைத் தொகை 7000 ரூ ஆனால் உரிமையாளர் இந்தப் பணியை ஒப்டைத்திருக்கும் இடைத்தரகர் அந்த வீட்டுக்கு நிர்ணயித்திருக்கும் வாடகைத் தொகை 8000 ரூபாய்.
இது தவிர குடிநீருக்கு மாதம் 500 ரூபாய், கரண்ட் யூனிட் ஒன்றிற்கு வாடகைக்கு குடி இருப்பவர்கள் மாத்திரம் 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை தீர்மாணிக்கிறார்கள், இதில் வீட்டு உரிமையாளர்கள் வைத்தது தான் சட்டம், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தது யூனிட்டிற்கு 5 ரூபாய்க்கு கீழ் வாங்குவதே இல்லை. அதன்படி பார்த்தால் ஜெ அறிவிப்பின் படி வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம், எனும் சலுகையை அனுபவிப்பவர்கள் பெரும்பாலும் சொந்த வீடு வைத்திருப்பவர்களும், வாடகைக்கு வீடு விட்ட புண்ணியாத்மாக்களும் தான். இதற்கெல்லாம் கேள்விமுறைகளே இல்லை. அப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதும் இல்லை.

வாடகைக்கு வீடு தேடும் போது, இடைத் தரகர்களின் சாகசப் பேச்சு வலையில் சிக்காமல் ஒரு வீட்டுக்கு இத்தனை வாடகை தான் தகும் என நியாயமான வாடகைக்கு குடி போக மக்களுக்கு ஆலோசனை தரும் மையங்கள் எதுவும் தமிழகத்தில் இது வரை உருவானதுண்டா!?அரசு நிர்ணயித்துள்ள மின்சார கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூ, அதை பொருட்படுத்தாமல் அல்லது அரசை மதிக்காமல் தான் யூனிட்டிற்கு 5 ரூபாய் அல்லது அதைவிட கூடுதல் தொகை வசூலிக்கப் படுகிறது எனும் போது, இது தண்டனைக்குரிய குற்றம் ஆகாதா? அரசாங்கத்தை அவமதிக்கும் செயல் ஆகாதா? இதற்கெல்லாம் என்ன வரைமுறைகள்?!
இந்தத் தொல்லைகளில் அலைக்கழிக்கப் பட்டு நொந்து போய் கட்டக் கடைசியாய் சொந்த வீடு இல்லை பிளாட் வாங்குவது என்று முடிவெடுத்தால் சிரமம் குறைந்து விடப் போவதில்லை, அதிகக் குடியிருப்புகள் கொண்ட ஃபிளாட்களில் தான் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பிச் செல்வோம். அங்கே மாதாந்திர மெயிண்டனன்ஸ் தொகை கண்டிப்பாக 2000 க்கு குறையாது, லோனில் வீடு வாங்கியிருந்தால அந்தத் தொகையோடு செலவுக் கணக்கில் இந்த மெயிண்டனன்ஸ் தொகையையும் சேர்த்து தான் கணக்கிட வேண்டியதாய் இருக்கும்.

ஆக மொத்தம் சொந்த வீடு என்று ஆகி விட்டால் செலவு குறையும் என்று ஆசுவாசப்பட்டுக் கொள்ள முடியாது. முன்பு வாடகை வீட்டில் முறைவாசல் செய்பவர்களுக்கும், வீடு பெருக்கி, பாத்திரம் கழுவ வருகிறவர்களுக்கும் கொடுக்கும் தொகை போக இப்போது ஜிம், பார்க், டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர், மெடிக்கல் சாப் வசதிகள் என்று ஃபிளாட்டில் அழ வேண்டியதாய் இருக்கும். இத்தனைக்கும் கூரை நமக்கில்லை, கீழே தரை தளமும் நமக்கில்லை. பாண்டி விளையாட்டில் கோடு கிழிப்பதைப் போல துண்டு துண்டாய் கோடு கிழித்து வைத்திருப்பார்கள், கார் பார்கிங் என்று அதற்கும் லட்சக் கணக்கில் அழுது விட்டு மூச்சுக் காட்டாமல் இருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் ஒரு தேர்ந்த சொந்த ஃபிளாட்வாசி .

இதைக்காட்டிலும் சிரமம் ஒன்றுள்ளது, வாடகை வீட்டில் குடி இருப்பவர்களுக்கு இடையிலான நட்புறவு, நீ யாரோ! நான் யாரோ! என்பதெல்லாம் சாதாரணம், பழைய குடித்தனக்காரர்கள் புதிதாகக் குடி வருபவர்களை எதிரிகளைப் போல அல்லது நாங்கள் இங்கே பல வருடங்களாய் இருக்கிறோம்... நீ முந்தா நாள் மழையில் நேற்று முளைத்த காளான்! ரீதியில் எல்லாம் தெரிந்த ஏகாம்பர தொனியில் தான் கண்ணெடுத்துப் பார்க்கிறார்கள், இவர்களுக்கிடையே நல்ல நட்பு நீடிக்கவோ அல்லது முளைவிடவோ முடியுமா?
பழகும் முறை ரொம்பத் தான் பாழ்பட்டுக் கிடக்கிறது, எப்போதும் நம்மை யாராவது ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம், ஜாக்கிரதை உணர்வு நொடிக்கொரு முறை மண்டையில் அலாரம் அடிக்குமோ என்னவோ! யாரும் யாரோடும் சுமுகமாய் பழகுவதே இல்லை, வெளிப் பகட்டுப் பேச்சுக்கள் எத்தனை நிமிடங்களுக்கு! 

சரி போனாப் போகுது, யாரும் எப்படியும் இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு சொந்த ஃபிளாட் ஆயாச்சு, இனி என்ன கவலைன்னு கொஞ்சம் உட்கார்ந்து மூச்சு வாங்கி விட கூடாது, மாச செலவுன்னா அது ஹவுசிங் லோன் கட்றதும் வீட்டு வாடகை, தண்ணி பில், கரண்ட் பில் கட்டுவதோடு முடிந்து விடுகிறதா என்ன? இல்லையே, இரவில் தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்... உங்கள் குழந்தை படுத்திருக்கும் பொசிஸனில் ஏதோ ஒரு கணத்தில் திடீரென்று அதற்கு கழுத்து சுழுக்கி விடுகிறது! இதென்ன கிராமமா சுழுக்கெடுப்பவர்களைத் தேடிக் கொண்டு ஓட?! இல்லாவிட்டால் வீட்டுக்கு வீடு சுழுக்கெடுக்கவென்றே அனுபவமிக்க பாட்டிகள் தான் இருக்கிறார்களா? தனிக்குடும்ப பேரவஸ்தைகளில் மாட்டிக் கொண்டவர்களால் தான் இந்த தருணத்தின் பேரவஸ்தையை மிக நன்றாக உணர முடியும். வேறு வழியே இல்லை குழந்தை வலியில் கதறும் கதறல், பெற்றவர்களான நம்மை குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடுராத்திரி, நடுப்பகல் என்றெல்லாம் பார்க்காமல் டாக்டர்களிடம் ஓட வைக்கும்.  ,டாக்டர் குழந்தையைத்  தொட்டுக் கூடப் பார்த்திருக்க  மாட்டார், ஆனால் கன்சல்டிங் கட்டணம் 500 ரூ க்கு குறையின்றி வாங்கி விடுவார். இல்லையேல் அவர் திறமையான டாக்டர் இல்லையென்றாகி விடுமாம்! மருத்துவமனையையும் சும்மா சொல்லக் கூடாது இன்டீரியர் டெகரேசன் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சில் மெயிண்டெயின் செய்திருப்பார்கள். அதற்கும் சேர்த்துத் தான் கன்சல்டிங் கட்டணம்  வாங்குகிறார்களோ என்றிருக்கும்.

என்னத்தை சொல்ல இதோடு நிறுத்திக் கொள்ளலாம்... ஏனெனில் நாம் எத்தனை விவாதித்தாலும் மேலே சொன்ன விசயங்கள் எதிலும் எந்த மாற்றமும் வந்து விடப் போவதில்லை. மோடியின் கருப்புப் பண ஒழிப்பு போராட்டத்தின் பின்னும் இதே தான் மாறா நிலை.

மாநகரங்களைப் பொறுத்தவரை சொந்த வீடோ... வாடகை வீடோ! எதுவானாலும் செலவுகள் சாமானியர்களின் மென்னியை முறித்துக் கொண்டு அமுக்கும் நிலையில் தான் எப்போதும் இருக்கின்றன. 

கையில வாங்கினேன்...பையில போடல; காசு போன இடம் தெரியல...” என்று பழைய பாடல் ஒன்றுண்டு.

அந்தக் கதை தான் இப்போதும் பலருக்கு!

ஜல்லிக்கட்டுடன் மல்லுக்கட்டு!

By ஆசிரியர்  |   Published on : 14th January 2017 01:25 AM 

தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான, வீரத்துக்குப் பெயர் பெற்ற ஜல்லிக்கட்டை நடத்த முடியாததால் தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். நமது உரிமைகளையும், உணர்வுகளையும், பாரம்பரியங்களையும் காக்க வேண்டிய உச்சநீதிமன்றம், பீட்டாவின் வாதத்தை ஏற்று நமக்கு எதிராக நிற்கிறது.

நாட்டு மாடுகளின் அழிவுக்கு முதல் காரணம் பாலுக்கு போதிய விலை கிடைக்காததுதான். ஒரு லிட்டர் குடிநீர் ரூ.25-க்கும், குளிர்பானங்கள் ரூ.60 முதல் ரூ.70 வரையும் விற்கப்படுகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு லிட்டர் பசும்பால் ரூ.22 முதல் ரூ.25 வரையிலேயே கொள்முதல் செய்யப்படுகிறது. பால் விலை உயர்வால் மக்கள் சிரமப்படுவார்கள் என்று கவலைப்படும் நமது அரசியல்வாதிகள், பால் உற்பத்தி செய்யும் ஏழை விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது.

மாட்டுக்கு கொடுக்கக்கூடிய அடர் தீவனம் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. நாட்டு மாடு ஒன்று ஒரு வேளைக்கு அதிகபட்சம் 2 லிட்டர் வரை மட்டுமே பால் கொடுக்கும். கறவையில் இருக்கும் மாட்டுக்கு நிச்சயம் ஒரு வேளைக்கு ஒரு கிலோ அடர் தீவனம் கொடுத்தாக வேண்டும். இதுதவிர உலர் தீவனம், பசும்புல், பராமரிப்பு செலவு என இதர விஷயங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாட்டு மாடு வளர்ப்பது என்பது பொருளாதார ரீதியாக பெருத்த நஷ்டம்தான்.
ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி, அரசு அறிமுகப்படுத்திய, அதிக பால் தரக்கூடிய ஜெர்ஸி மற்றும் எச்.எப். என்றழைக்கப்படும் கறுப்பு - வெள்ளை நிறத்திலான கலப்பின பசுக்களை வாங்குவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட, அப்போது ஆரம்பமானது நாட்டு மாடுகளின் அழிவு. வேடிக்கை என்னவென்றால், பிரேஸில் உள்ளிட்ட சில நாடுகள் நமது நாட்டு மாடுகளை வளர்த்து இனப்பெருக்கம் செய்கின்றன. இதற்குக் காரணம் அவற்றிற்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான்.

நமது நாட்டு மாடுகள் வெளுத்து வாங்கும் வெயிலை மட்டுமல்ல, கன மழையையும், கடுங்குளிரையும் தாங்கக் கூடியவை. கடுமையான வறட்சியிலும் நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியும். அபரிமிதமான எதிர்ப்பு சக்தி கொண்ட நாட்டு மாடுகளை அவ்வளவு எளிதாக எந்த நோயும் தாக்காது. ஆனால் கலப்பின மாடுகள், எல்லா காலநிலைகளிலும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம். வெயில் காலத்தில் அயர்ச்சியால் இறக்கும். மழைக் காலத்தில் கால் மற்றும் வாய்ப் பகுதியில் புண் (எப்.எம்.டி.) ஏற்பட்டு இறக்க நேரிடும் அபாயம் உண்டு.
பால் மாடுகளைத் தாக்கும் மிகக் கொடிய நோயான மடிவீக்க நோய், கலப்பின மாடுகளைத் தாக்குவதற்கு 100 சதவீதம் வாய்ப்புள்ளது. கலப்பின மாடுகளுக்கு மாதந்தோறும் மருத்துவ செலவு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கலப்பின மாடுகளைவிட நம்முடைய நாட்டு மாடுகள் எல்லா வகையிலும் மேலானவைதான். ஆனால் பெரிய அளவில் அதில் பால் இல்லாததும், பாலுக்குப் போதிய விலை இல்லாததும்தான் அந்த மாடுகளின் உயிருக்கு உலை வைப்பதாக அமைந்தன.

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும், எண்ணெய் செக்குகளிலும், கமலை கட்டி தண்ணீர் இறைப்பதற்கும் நமது நாட்டு காளைகள்தான் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது எல்லாமே இயந்திரமயமாகிவிட்டதால் காளைகளுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. தற்போது ஒரு சிலர் தங்கள் வீட்டின் பால் தேவைக்காகவும், ஜல்லிக்கட்டுக்காகவும் மட்டுமே நாட்டு மாடுகளை வளர்க்கிறார்கள். ஜல்லிக்கட்டும் தடைபடுமானால் காளைகள் இறைச்சிக் கூடத்துக்கு அனுப்பப்படுவது மேலும் அதிகரிக்கும். நாட்டுக் கன்றுகளின் பிறப்பு விகிதம் குறைந்து, கடைசியில் நாட்டு மாடுகளின் இனமே அழிந்துவிடும்.
மாட்டிறைச்சியை ஒருபுறம் அனுமதித்துக்கொண்டு, காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளையைச் சேர்த்திருப்பது போன்ற அபத்தம் வேறெதுவும் இல்லை. காளையை இறைச்சிக்காகக் கொல்லலாம், ஆனால் வீர விளையாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என்கிற பீட்டாவின் வாதத்தை நீதிமன்றம் எப்படி, ஏன் ஏற்றுக்கொள்கிறது என்று புரியவில்லை.
காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து காளை நீக்கப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள புலி, கரடி, சிறுத்தை, குரங்கு, காளை போன்றவற்றிலிருந்து காளையை நீக்காத வரையில், காளை என்றால் மாடு, எருமை, கன்று, பசு என எல்லாமும் அடங்கும் என்கிற வனத் துறையின் விளக்கமும் அவ்வாறே தொடரும். ஆகவே, காளையை அப்பட்டியலில் இருந்து நீக்காமல் பிரச்னை தீராது.

ஒவ்வொரு மாநிலத்திலும் மரபு, கலாசாரம் போன்றவை வேறுபடுவதாக இருப்பதால், எந்தெந்த விலங்குகளை எவ்வாறு காட்சிப்படுத்துவது என்பது குறித்து முடிவு செய்யும் பொறுப்பு அந்தந்த மாநில அரசிடம் இருப்பதே இந்தப் பிரச்னைக்கு மாற்றுத் தீர்வு. இதற்காவது அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து போராட வேண்டும். தமிழகத்தின் எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் மத்திய அரசு அதற்கு இணங்குவதைத்தவிர வேறு வழியில்லை. நிச்சயமாக பட்டியலிலிருந்து காளை அகற்றப்படும்.
தற்போதைய நிலையில் நாட்டு மாடுகளைப் பாதுகாக்க நம்மிடம் இருக்கும் கடைசி ஆயுதம் ஜல்லிக்கட்டுதான். இதை நம்மால் உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து அவர்களுக்குப் புரியவைக்க முடியாததற்குக் காரணம், நமது வழக்குரைஞர்களின் திறமையின்மையா, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் புரிதல் இல்லாமையா, இல்லை நமது பாரம்பரிய பசு இனம் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்கிற சில சுயநல சக்திகளின் சதியா? தெரியவில்லை.

கல்லூரியிலேயே எல்.எல்.ஆர்., மாணவர்களுக்கு அசத்தல் திட்டம்

மும்பை, ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்கள் படிக்கும் கல்லுாரிகளிலேயே, எல்.எல்.ஆர்., எனப்படும், பயிற்சி ஓட்டுனர் உரிமம் வழங்க, மஹாராஷ்டிரா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, அவர்கள் படிக்கும் கல்லுாரிகளிலேயே, எல்.எல்.ஆர்., வழங்க மாநில போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், அதிகளவில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஓட்டுனர் உரிமத்துக்காக விண்ணப்பிக்கின்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அதிகரிப்பதை தடுக்கவும், மாணவர்களின் நேரம் வீணாவதை தடுக்கவும், அவர்கள் படிக்கும் கல்லுாரிகளிலேயே, எல்.எல்.ஆர்., வழங்க முடிவு செய்யப்பட்டது.
கல்லுாரிகளில் உள்ள கம்ப்யூட்டர்களில், போக்குவரத்து துறையின் மென்பொருளை நிறுவி, அதன் மூலம், பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.
மாணவர்கள், தாங்கள் படிக்கும் கல்லுாரி வழங்கிய அடையாள அட்டையை பயன்படுத்தி, இந்த உரிமத்துக்கு விண்ணப்பிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், மாணவ, மாணவியர், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஏற்பாட்டை, அனைத்து கல்லுாரி மாணவ, மாணவியரும், கல்லுாரி முதல்வர்களும் வரவேற்றுள்ளனர்.

Saturday, January 14, 2017

சேலத்தில் காளைக்கு கண்ணீர் அஞ்சலி



சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே கொண்டையம்பள்ளி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு முன்பு சிறு கன்றுகுட்டியை கிராம மக்கள் நேர்ந்து விட்டனர். இந்த கன்று வளர்ந்து காளையானதும் ஊர்மக்கள் நன்கு உபசரித்து வந்தனர். தங்களது வீட்டில் ஒரு உறுப்பினர் போலவே கோயில் காளையை நடத்தினர். கடந்த 17 ஆண்டுகளாக பொதுமக்களுடன் இணக்கமாக பழகி வந்த இந்த காளை நேற்று வயோதிகம் காரணமாக உயிரிழந்தது. இதனைக்கண்டு கொண்டயம்பள்ளி கிராம மக்கள் கண்ணீர் வடித்தனர்.

கோயில் காளைக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தனர். அதன்படி, ஊரில் யாரும் வேலைக்கு செல்லாமல் துக்கம் அனுசரித்தனர். தொடர்ந்து மாட்டை குளிப்பாட்டி உடல் முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசினர்.
மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கொம்பு பகுதியில் வெள்ளிக்கொடிகளை கட்டி அலங்கரித்தனர். அதன் பிறகு, அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றி கொண்டையம்பள்ளி ஏரிக்கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்குள்ள மதுரகாளியம்மன் கோயில் வளாகத்தில் கோயில் காளை அடக்கம் செய்யப்பட்டது.

Dailyhunt

ஒருமுறை மட்டுமே கருணை வேலை ஐகோர்ட் தீர்ப்பு

மதுரை: கருணை அடிப்படையிலான வேலை என்பது தொடர் ஓட்டம் அல்ல எனக்கூறிய ஐகோர்ட் கிளை, மீண்டும் பணி வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. தஞ்சாவூரை சேர்ந்த தமிழ்மதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''என் கணவர் பால்ராஜ். வேளாண்மைத்துறையில் பணியாற்றினார். பணிக்காலத்தில் கடந்த 24.4.2002ல் இறந்தார். இதனால் கருணை அடிப்படையில் திருமணமாகாத என் 6வது மகள் விக்ேனஸ்வரியின் தகுதிக்கேற்ற வேலை வழங்க உத்தரவிட வேண்டும்,'' என்று கூறியிருந்தார்.

மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அரசு வக்கீல் கிருஷ்ணதாஸ் ஆஜராகி, 'மனுதாரரின் 3வது மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது.

14.7.2015ல் பணியில் சேர்ந்த அவர் 6 மாதத்தில் குடும்ப பிரச்னை காரணமாக வேலையை ராஜினாமா செய்து விட்டார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் இரண்டாவதாக மீண்டும் வாய்ப்பு கேட்கின்றனர். இது ஏற்புடையதல்ல' என்றார்.

இதையடுத்து நீதிபதி, ''கருணை அடிப்படையிலான வேலை என்பது தொடர் ஓட்டம் போன்றதல்ல. வேலைக்கு சேர்க்கப்பட்ட ஒருவர் ராஜினாமா செய்து விட்டார். அதனால் மற்றொருவருக்கு தாருங்கள் என கேட்க முடியாது. மனுதாரர் தரப்பு கோரிக்கை ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்டது. எனவே, இந்த மனு ஏற்புடையதல்ல என்பதால் தள்ளுபடி செய்யப்படுகிறது'' என உத்தரவிட்டார்.
Dailyhunt

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: மெல்போர்னையே திரும்பி பார்க்க வைத்த ஆஸி. தமிழர்கள்

சிட்னி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள் மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரில் இன்று மாபெரும் அமைதி கூடல் நடத்தியுள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்படவில்லை. இது குறித்த வழக்கிலும் பொங்கலுக்கு முன்பு தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் வசிக்கும் தமிழர்கள் வியாழக்கிழமை அமைதி கூடல் நடத்தினர்.

மேலும் மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்கள் விக்டோரியா ஹவுஸ் முன்பு இன்ற மாலை 6 மணிக்கு திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமைதி கூடல் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளைகளை யாரும் துன்புறுத்துவது இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டில் ஒரு நிகழ்ச்சிக்கு இந்த அளவில் தமிழர்கள் கூடியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இதே போன்று சிட்னி நகரில் வசிக்கும் தமிழர்கள் ஓபரா ஹவுஸ் முன்பு திரண்டு அமைதி கூடல் நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழகத்தில் போராடும் சக தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இந்த போராட்டம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
source: oneindia.com
Dailyhunt

100 வயது வரை வாழ்வேன்..மக்களுக்கு நல்லது செய்துவிட்டுதான் என் கட்டை போகும்: விஜயகாந்த் திடீர் பேச்சு

காஞ்சிபுரம்: நான் 100 வயது வரை வாழ்வேன். என் மனைவி இருக்கும் வரை எந்த வியாதியும் என்னை அண்டாது. அண்டவும் முடியாது. 100 வயதில் ஒரு நாளாவது நான் தமிழக மக்களுக்காக நிச்சயமாக ஏதாவது நல்லது பண்ணிட்டுத்தான் என் கட்டை போகும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள காயார் கிராமத்தில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். கிராம மக்களுடன் தேமுதிக தொண்டர்களும் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

விழாவில் பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் நீர்நிலைகள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டதற்கு அதிமுக, திமுக அரசுகள் தான் காரணம் என குற்றம்சாட்டினார்.

மேலும், பொங்கல் விழா தமிழர்களுக்கான வீர தமிழர் திருவிழாவாகும். வர்தா புயல் பாதிப்பு, வறட்சியால் தமிழகத்தில் விவசாயிகள் அனைவரும் நொந்து போய் உள்ளனர். 
 வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது மனைவியும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆகையால்தான் நான் உழவன் மகன் படத்தில் நடித்தேன்.

நான் 100 வயது வரை வாழ்வேன். என் மனைவி இருக்கும் வரை எந்த வியாதியும் என்னை அண்டாது. அண்டவும் முடியாது. 100 வயதில் ஒரு நாளாவது நான் தமிழக மக்களுக்காக நிச்சயமாக ஏதாவது நல்லது பண்ணிட்டுத்தான் என் கட்டை போகும். அதுதான் உண்மை. இவ்வாறு விஜயகாந்த் கூறினார். இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
source: oneindia.com
Dailyhunt

NEWS TODAY 22.08.2026