Wednesday, January 18, 2017


#Jallikattu- பிரதமரை நாளை சந்திக்கின்றனர் அதிமுக எம்.பி.க்கள்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், அ.தி.மு.க எம்.பி-க்கள் நாளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளனர்.

நாளை காலை 10 மணிக்கு, பிரதமரை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க எம்.பி-க்கள் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரில் சென்று ஜல்லிக்கட்டு மீதுள்ள தடையை நீக்கக் கோருவதே இந்த சந்திப்பின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் நிறைவேற்றக்கோரி கடந்த வாரம் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் பிரதமரை சந்திக்கச் சென்றனர். அப்போது, பிரதமரை சந்திக்க முடியவில்லை.
இதனால், பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அதிமுக எம்பிக்கள் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt

சூடு பறக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்.. மோடியை சந்திக்க டெல்லி விரைகிறார் முதல்வர் ஓ.பிஎஸ்.. !

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் வீரியம் அடைந்துள்ளது. இதனால் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வலியுறுத்த உள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. சென்னை மெரினாவில் மாணவர்களால் நடத்தப்படும் போராட்டத்தில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு தொடர்பாக உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற தொடர் போராட்டங்களை அடுத்து, ஓபிஎஸ் நாளை பிரதமரை சந்திக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி நாளை ஓபிஎஸ் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது, அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த உள்ளார். 
 இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டங்களை கைவிடுமாறு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு குறித்து பேச உள்ளதை குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ் இந்த வேண்டுகோளை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விடுத்துள்ளார்.

மேலும், சட்டத்திருத்தை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்பதையும் ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
source: oneindia.com
Dailyhunt

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் குதித்த தமிழக அரசு ஊழியர்கள்.. நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். மாவட்ட மற்றும் வட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைத்துறையினர், வழக்கறிஞர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி நாளை தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் தாலுகா தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என் அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
source: oneindia.com
Dailyhunt

பிரதமரே கூறினாலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் தொடரும்!: அலங்காநல்லூர் மக்கள் அறிவிப்பு

சென்னை: பிரதமரே சமாதானம் கூறினாலும், ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை போராட்டம் தொடரும் என்று அலங்காநல்லூர் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுதும் போராட்டம் நடந்துவருகின்றன. போராட்டம் தீவிரமானதை அடுத்து, போராட்டத்தைக் கைவிடும்படி தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். கேட்டுக்கொண்டார். மேலும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி பிரதமர் மோடியை நாளை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஓ.பி.எஸ்ஸின் வேண்டுகோளை, அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர். வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
மேலும், "பிரதமரே சமாதானம் கூறினாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம். ஜல்லிக்கட்டு நடைபெறும்வரை எங்கள் போராட்டம் தொடரும். போராட்டத்தை கைவிட்டால் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் அமைதியாகிவிடும். ஜல்லிக்கட்டு தடையை நீக்க முயற்சி எடுக்காது" என்று அவர்கள் தெரிவித்துதள்ளனர்.
Dailyhunt

சென்னை மெரினாவில் 2-வது நாளாக செல்போன் வெளிச்சத்தில் மாணவர்கள் போராட்டம்

சென்னை: சென்னை மெரினாவில் 2-வது நாளாக செல்போன் வெளிச்சத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் செல்போன் வெளிச்சத்தை பயன்படுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

போராட்டம் தொடரும்: இளைஞர்கள் முடிவு

சென்னை: 'முதல்வர் பன்னீர் செல்வத்தின் அறிக்கையை ஏற்காத இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டம் தொடரும்' என உறுதியாக தெரிவித்துள்ளனர். முதல்வர் அறிக்கை ஏற்க மறுப்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். 
 
 அந்த அறிக்கையில், "நாளை காலை டில்லியில் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட அவசர சட்டத்தை உடனே பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன். எனவே, அனைவரும் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும்" என கூறியுள்ளார்.இந்த அறிக்கையை மெரினா கடற்கரையில் கூடியுள்ள இளைஞர்கள் மத்தியில் மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் வாசித்தார். முதல்வரின் அறிக்கையை இளைஞர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். போராட்டம் தொடரும் முதல்வர் அறிக்கை வெளிட்டாலும், அவர் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெறும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக தெரிவித்துள்ளனர். மேலும், அறிக்கையால் சமாதானம் அடையாத இளைஞர்கள் 'சுப்ரீம் கோர்ட் மற்றும் மத்திய அரசிடமிருந்து ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு வர வேண்டும். வாடிவாசலிருந்து காளை வெளியேறும் வரை போராட்டத்தை தொடருவோம்.

இளைஞர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள். நாங்கள் பின்வாங்க மாட்டோம்." என்றும் தெரிவித்துள்ளார்கள்.
Dailyhunt

வேதனைக் கலாசாரம்!

By ஆசிரியர்  |   Published on : 17th January 2017 01:42 AM  |
நமது ஜனநாயகம் வெறும் அடையாளப்படுத்தலுடன் நின்று விடுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதற்குக் காரணம், ஜனநாயகம் என்கிற பெயரில் இங்கே அரங்கேறும் கேலிக்கூத்துகள் சர்வதேச அளவில் நம்மைக் கேவலமாக எள்ளி நகையாட வைக்கிறது என்பதுதான்.
வெளிநாடுகளில் அதிபர்களாகவும், பிரதமர்களாகவும், பிரமுகர்களாகவும் இருப்பவர்களும், இருந்தவர்களும் கடைப்பிடிக்கும் எளிமையும், சாமானியத்தனமும் நம்மிடையே இல்லை. உச்சியிலிருந்து அடித்தட்டு வரை பலருக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இன்னின்னாருக்கு மட்டுமே சுங்கக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும் என்று தகவல் பலகையே வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சிறிய பெரிய என்கிற வேறுபாடே இல்லாமல், எந்தவொரு அரசியல் கொடியுடன் வாகனம் கடந்து சென்றாலும் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அரசியல் கட்சிக் கொடிக்கு இப்படியொரு சிறப்புச் சலுகை தரப்படும் ஒரே நாடு இந்தியாவாக மட்டுமே இருக்கும்.
"மிகவும் முக்கியமான நபர்' என்பதைக் குறிக்கும் வி.ஐ.பி. தகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், ஆளுநர்கள், பேரவைத் தலைவர்களுக்கும் மட்டுமல்ல, அரசியல் கட்சியில் தொண்டர்களாக இருப்பவர்களுக்கும் இந்தியாவில் தரப்படும் விசித்திரத்தை உலகமே பார்த்து வியக்கிறது. சாதாரண ஊராட்சி மன்ற உறுப்பினர், கட்சியின் வட்டச் செயலாளர் தொடங்கி, தொண்டர்கள் புடைசூழ பவனிவரும் கலாசாரம் இந்தியாவில் மட்டுமே காணப்படும் விசித்திரம்.
அதிகாரபூர்வமாக வி.ஐ.பி. என்கிற சிறப்புத் தகுதி படைத்த நபர்கள் பிரிட்டனில் வெறும் 84 பேர் மட்டுமே. இவர்கள் குறிப்பிட்ட பதவியிலோ, பொறுப்பிலோ இருந்தால் மட்டுமே அந்தத் தகுதி பெறுகிறார்கள். பதவியிலிருந்து விலகிவிட்டால் அந்தத் தகுதி விலக்கிக் கொள்ளப்படும்.
பிரான்ஸ் நாட்டில் வி.ஐ.பி. அங்கீகாரம் பெற்றவர்கள் 109 பேர் என்றால், ஜெர்மனியில் 142. ஜப்பானில் 125. இந்தச் சலுகை பெற்றவர்கள் விமான நிலைய சோதனையில் முன்னுரிமை பெறுவார்கள், அரசு நிகழ்வுகளில் முன் வரிசையில் அமர்வார்கள். மற்றபடி, அவர்களுக்கு என்று வேறு தனிச்சலுகை எதுவும், பதவிக்கான சலுகைகளுக்கு மேல் தரப்படுவதில்லை.
ஆஸ்திரேலியா (205), அமெரிக்கா (252), தென்கொரியா (282), ரஷியா (312), சீனா (435) போன்ற நாடுகளில் சிறப்புத் தகுதி படைத்த நபர்கள் என்று வெகு சிலரை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். அப்படி அங்கீகரிப்பட பல விதிமுறைகளை, அடிப்படைத் தகுதிகளை வகுத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் சிறப்புத் தகுதி பெற்ற வி.ஐ.பி.களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்டால் தலை சுற்றுகிறது. உலகில் வேறு எதில் நாம் முன்னணியில் இருக்கிறோமோ, இல்லையோ வி.ஐ.பி.களின் எண்ணிக்கையில் முன்னணி வகிக்கிறோம். இங்கே அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் வி.ஐ.பி.களின் எண்ணிக்கை 5,79,092. இவர்கள் இல்லாமல், இவர்களை பயன்
படுத்தி அல்லது இவர்களது பெயரைச் சொல்லித் தங்களைத் தாங்களே வி.ஐ.பி.களாக அறிவித்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை இதைவிடப் பலமடங்கு அதிகம்.
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மாநில ஆளுநர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற, கீழமை நீதிமன்ற நீதிபதிகள், கட்சித் தலைவர்கள் என்று வி.ஐ.பி.களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. வேறு எந்த நாட்டிலும் இதுபோல தேர்ந்தெடுக்கப்படும் எல்லா உறுப்பினர்களுக்கும் வி.ஐ.பி. அந்தஸ்து தரப்படுவதில்லை.
வி.ஐ.பி. அந்தஸ்து தரப்படுவது என்பதில் கூடத் தவறில்லை. அப்படி சிறப்புத் தகுதி பெற்றவர்கள் நடந்து கொள்ளும் முறைதான் மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. வி.ஐ.பி. அந்தஸ்து பெற்றவர்கள் தங்களை கிரீடம் இல்லாத அரசர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். இந்த வி.ஐ.பி. நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று இங்கே தரப்படும் அதே மரியாதையை அங்கும் எதிர்பார்க்கும்போது, நமது தேசமே எள்ளி நகையாடப்படுகிறது.
ஒலிம்பிக் பந்தயத்திற்கு இந்தியாவிலிருந்து விளையாட்டு வீரர்களுடன் சென்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய முற்பட்டதும், அங்கே அவர் தடுத்து நிறுத்தப்பட்டபோது, தான் இன்னார் என்று கூறி அதிகாரம் செலுத்த முற்பட்டு அவமானப்பட்டதும், சர்வதேச ஊடகங்களில் சிரியாய் சிரித்தது.
வி.ஐ.பி. பட்டியலில் உள்ள அரசியல்வாதிகளும் அவர்களின் உற்றார், உறவினர், நண்பர்களும் படுத்தும்பாடு, இந்திய ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக மாற்றிவிட்டிருக்கிறது. இவையெல்லாம் போதாதென்று, பாதுகாப்புக்குத் துப்பாக்கி ஏந்திய காவலர்களை வைத்திருப்பது வி.ஐ.பி. அந்தஸ்தின் தனிச்சிறப்பு என்று கருதுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நல்லவேளையாக, முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களுக்குப் பாதுகாப்பும், உதவியாளர்கள், அலுவலகம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் பதவி விலகிய அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மட்டும் என்று வரையறுக்கப்பட்டுவிட்டது. அதேபோல, வி.ஐ.பி. சிறப்புச் சலுகையும் எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் என்பது அகற்றப்பட்டு, பதவி வகிப்பவர்களுக்கு மட்டுமே என்று வரையறுக்கப்படாவிட்டால், வி.ஐ.பி. எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்தான் இருக்கும். வி.ஐ.பி. கலாசாரத்துக்கு முடிவுகட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது!

NEWS TODAY 23.08.2026