Friday, March 10, 2017

தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி விட்டார்.

மார்ச் 10, 04:15 AM

புதுடெல்லி,

தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2–ந் தேதி லண்டனுக்கு தப்பி விட்டார். அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அவர் நாடு திரும்பி, தன் மீதுள்ள வழக்குகளை சந்திப்பதற்கு மறுத்து விட்டார்.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகியிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். ‘‘விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, சுப்ரீம் கோர்ட்டிடம் தனக்கு உள்ள சொத்துகளின் உண்மையான பட்டியலை அவர் தாக்கல் செய்துள்ளாரா?, சொத்துக்களை தனது ஒப்புதல் இன்றி குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றக்கூடாது என்ற கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை விஜய் மல்லையா மீறி உள்ளாரா?’’ என நீதிபதிகள் வினவினர்.

அதற்கு பதில் அளித்த அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, ‘‘விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது’’ என குறிப்பிட்டார்.
இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961–ன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது.

மார்ச் 10, 04:30 AM

புதுடெல்லி

இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961–ன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த கால அளவை 26 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக மேற்படி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு வகை செய்யும் ‘மகப்பேறு உதவி திருத்த மசோதா–2016’, கடந்த ஆண்டு டெல்லி மேல்–சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த மசோதா நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை தாக்கல் செய்த மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, பெண்களின் பேறுகால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக (2 குழந்தைகளுக்கு) உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 10 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று கூறிய மந்திரி, இதன் மூலம் சுமார் 18 லட்சம் பெண் பணியாளர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார்.

இந்த மசோதா உறுப்பினர்களின் ஆதரவோடு பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை காட்டும் நவீன சிலிண்டர்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மார்ச் 10, 04:45 AM

புதுடெல்லி

கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை காட்டும் நவீன சிலிண்டர்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இரும்பு சிலிண்டர்கள்

வீடுகள், ஓட்டல்களில் சமையலுக்காக தற்போது பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர்கள் முற்றிலும் இரும்பால் செய்யப்பட்டவை ஆகும். சில வீடுகளில் ஒரே ஒரு சிலிண்டரை மட்டுமே வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு அதில் கியாஸ் எப்போது தீரும்? என்பது தெரியாது.

இதனால் கியாஸ் முற்றிலும் தீர்ந்து போன பிறகே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியும். புதிய சிலிண்டர் வரும் வரை அவர்கள் மாற்று ஏற்பாடு செய்துகொள்ள வேண்டி உள்ளது.கியாஸ் இருப்பு

இந்த குறையை போக்க எண்ணெய் நிறுவனங்கள் நவீன சிலிண்டர்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளன. நார்வே நாட்டில் தயாரிக்கப்படும் இந்த நவீன சிலிண்டர்கள் அலுமினியம், இரும்பு கலவையால் ஆனது. கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சிலிண்டர் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நவீன கியாஸ் சிலிண்டர்கள் 6 எடைப்பிரிவுகளில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. மேலும் இதன் எடையும் குறைவு. தற்போது 70–க்கும் மேற்பட்ட நாடுகளில் இவை புழக்கத்தில் உள்ளன.விரைவில் அறிமுகம்

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் இந்த சிலிண்டர்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதை தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் நிறுவனமும் இதை வாங்க உள்ளது. இந்த சிலிண்டர்களில் கியாஸ் கசிவதற்கான வாய்ப்பு மிகவும் அரிது என்ற உத்தரவாதத்தை சிலிண்டர் தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் என்று துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார்.

மார்ச் 10, 03:45 AM

சென்னை,

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது:-

ஆன்லைனில் திருத்தம்

தமிழ்நாட்டில் 38 அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளும், 18 பல் மருத்துவக்கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய விடைத்தாள்கள் இதுவரை ஆசிரியர்களால் கையால் மதிப்பீடு செய்யப்பட்டது. பரீட்சார்த்த முறையில் ஆன்லைனில் விடைத்தாள்களை திருத்த பல்கலைக்கழகம் முடிவுசெய்தது.

முதலாவதாக பல் மருத்துவ படிப்புக்குரிய விடைத்தாள்களை ஆன்லைனில் மதிப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதலில் பி.டி.எஸ். படிப்புக்குரிய 4 ஆயிரம் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் ஆசிரியர்கள் விடைகளை மதிப்பீடு செய்து வருகிறார் கள். இந்த பணிகள் 17-ந்தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எளிமையான வழி

விடைத்தாள்களில் சில மாணவர்களின் கையெழுத்து சரியாக தெரியாது. அதுபோன்ற பகுதிகளை கம்ப்யூட்டரில் பெரிதாக்கி பார்க்கும் வசதி உள்ளதால் மதிப்பீடு செய்வது எளிதாகிறது. மேலும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கம்ப்யூட்டரில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு விடையை மதிப்பீடு செய்த பின்னர் தான் அடுத்த பக்கத்திற்கு செல்ல முடியும். மதிப்பெண் கூட்டலில் தவறு ஏற்படாது.

விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும்போது, முதலில் திருத்திய ஆசிரியர் என்ன மதிப்பெண் வழங்கினார் என்பது ஆன்லைனில் தெரியாது. இந்த முறை வெற்றிகரமாக நடந்தால் அடுத்து முதுநிலை படிப்புக்கும், எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் ஆன்லைனிலேயே விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம்.

இவ்வாறு டாக்டர் கீதாலட்சுமி கூறினார்.
சென்னை புறநகர் பகுதிகளில் நடந்த தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

மார்ச் 10, 03:45 AM

செங்கல்பட்டு,

சென்னையை ஒட்டியுள்ள தாழம்பூர், தையூர், புதுப்பாக்கம், இள்ளலூர், திருப்போரூர், ஆலத்தூர், பையனூர் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தண்ணீர் எடுத்துவருகின்றனர். அந்த தண்ணீரை பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வியாபார நிறுவனங்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.

குறைந்த விலைக்கு எடுத்து அதிக விலைக்கு விற்பதாகவும், அனுமதியின்றி தண்ணீர் எடுப்பதாகவும் வருவாய்த்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஜெயசீலன் தலைமையில் திருப்போரூர் தாசில்தார் ரவிக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து சில நாட்களுக்கு முன்பு 5–க்கும் மேற்பட்ட லாரிகளை கைப்பற்றினர்.பேச்சுவார்த்தை

அந்த லாரிகளை விடுவிக்கக்கோரி தென்சென்னை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 5–ந் தேதி வருவாய்த்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் ஏற்படாததால் 6–ந் தேதி முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஜெயசீலன், திருப்போரூர் தாசில்தார் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட லாரிகளை விடுவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விவசாய நிலத்தில் தண்ணீர் எடுக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.வேலை நிறுத்தம் வாபஸ்

இதை ஏற்று லாரிகள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை முதல் தண்ணீர் லாரிகள் ஓட தொடங்கின. இதனால் புறநகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Thursday, March 9, 2017


50 ரூ.மினிமம் பேலன்ஸ்! கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்... இதெல்லாம் எங்கே தெரியுமா? #GoodToKnow

உண்மை... உண்மை... `50 ரூபாதான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்' என்ற அறிவிப்பை அஞ்சல் அலுவலகம் ஒன்றும் அதிரடியாக அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை பல நாட்களாகவே நீடித்து வருகிறது. ஆனால், நம்மில் பலருக்கும் இதைப் பற்றிய தகவல் தெரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.



வாட்ஸ் அப் வைரல்!

`வங்கிகளின் சேவை வரிகளால் சோர்வடைந்துள்ளீர்களா? எப்பொழுது எப்படி சேவை வரி பிடிப்பார்களோ எனக் குழப்பமடைகிறீர்களா? அஞ்சலகம் வாருங்கள்! கணக்கு துவக்குங்கள்! கட்டணமற்ற சேவைகளை அனுபவியுங்கள்... அஞ்சலகங்களில் SB கணக்கு தொடங்கி, ஏடிஎம் கார்டு பெற்று அனைத்து வங்கி ஏடிஎம்-களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ 50/- மட்டுமே. ஆவணங்கள் - 1) 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள். 2) ஆதார் அடையாள அட்டை நகல். அணுகவும்... அனைத்து அஞ்சலகங்கள்' என இரண்டு முக்கிய பிரச்னைகளால் இதுபோன்ற வாட்ஸ் அப் மெசெஜ்கள் வைரலாகி வருகின்றன.

பிரச்னை ஒன்று!

சமீபத்தில் ஒரே மாதத்தில் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளன. அதன்பின் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் பணத்தை எடுப்பதற்கும் அடங்கும். ஒரு மாதத்தில் இந்த வங்கிக் கிளைகளில் நான்கு முறைக்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணம். இல்லையெனில் ஆயிரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரச்னை இரண்டு!

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 5,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்கத் தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என நம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்சத் தொகையாக 5,000 ரூபாயும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் 3,000 ரூபாயும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2,000 ரூபாயும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்புத் தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. குறைந்த பட்ச இருப்புத் தொகையைவிட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் அபராதத் தொகை வசூலிக்கப்படும். உதாரணமாக, 50 முதல் 75 சதவிகிதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் 75 ரூபாய் மற்றும் அத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ன் அறிவிப்பால் மாணவர்கள், இளைஞர்கள், ஓய்வூதியதாரர்கள், மாதச்சம்பளதாரர்கள் என 31 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், `50 ரூபாதான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்' என்ற அறிவிப்பு உண்மையா என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த அஞ்சல் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

”உண்மை... உண்மை... இது எப்படி என்றால் வங்கிகளுக்கு மட்டுமே பணப்பரிவர்த்தனைக்கான புரோகிராமிங் போடப்பட்டுள்ளது. இந்த அபராதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். ஆகையால், வங்கியால் வழங்கப்படும் கார்டுகளை எந்த ஏடிஎம் சென்டர்களில் பயன்படுத்தினாலும் சர்வர் மூலமாகக் கண்காணிக்கப்பட்டு பின்னர் பணம் பிடித்தம் செய்யப்படும். வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு, அஞ்சல் அலுவலக ஏடிஎம் சென்டரில் பணம் எடுத்தாலும் பணம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் கார்டை, நீங்கள் எந்த வங்கி அல்லது ஏடிஎம் சென்டரில் பயன்படுத்தினாலும் அதற்கு அபராதம் இல்லை. எங்களுடைய அஞ்சல் அலுவலக சர்வர் மூலமாகவே பணம் வழங்குகிறோம். நாங்கள் வாடிக்கையாளரின் பணப் பரிவர்த்தனையைக் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை, வாடிக்கையாளரிடம் பணம் பிடிப்பதும் இல்லை. ஆகையால், வங்கிகளைவிட அஞ்சல் அலுவலகங்களில் கணக்கு துவங்குவது மிகப் பயனுள்ளதாக இருக்கும். அஞ்சல் அலுவலகத்தில் எந்த சர்வீஸ் சார்ஜ்-ம் கிடையாது. ஒரே மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். சாதாரண கணக்கு துவங்க 50 ரூபாய் மினிமம் பேலன்ஸ் இருந்தால் போதுமானது. இதற்கு ஏடிஎம் கார்டு வழங்கப்படும். காசோலைக் கணக்குக்கு 500 ரூபாய். அஞ்சல் அலுவலகத்தில் கணக்குத் துவங்க போட்டோ உடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று வழங்கினால் போதும்!” என்றார்.

அணுகவும்... அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம்!
ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும்... விசாரணை வளையத்தில் 9 மருத்துவ உதவியாளர்களும் !
vikatan.com



ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில், அப்போலோவில் அவருடைய இறுதி நிமிடங்களின்போது நடந்த சிகிச்சைகள் குறித்த தகவல்களை மத்திய உளவுத்துறை சேகரித்து வருகிறது. அதில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு, ஜெயலலிதா மயக்க நிலையில் அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை, போயஸ் கார்டனிலிருந்து எப்படிக் கொண்டுவந்தார்கள், அப்போலோவின் இரண்டாவது தளத்துக்கு அவரை எப்படிக் கொண்டு சென்றார்கள் என்பது குறித்த பல்வேறு வினாக்கள் இப்போது கிளப்பப்பட்டு வருகின்றன. 'ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடும், காய்ச்சலும் உள்ளது' என்று முதலில் அப்போலோ அறிக்கை வெளியிட்டாலும், நாட்கள் செல்லச்செல்ல அவருக்கு இருக்கும் வேறு சில நோய்களையும் பட்டியலிட்டு... அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் வரிசையாக அறிக்கைகளை வெளியிட்டனர், அப்போலோ நிர்வாகத்தினர்.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட சில தினங்கள் கழித்து... அப்போலோ நி்ர்வாகம், ''அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; சாப்பிடுகிறார்; பேசுகிறார்; வீடு திரும்புவதைப் பற்றி அவரே முடிவு செய்வார்” என்றெல்லாம் சொல்லிவந்தது. ஆனால், திடீரென டிசம்பர் 4-ம் தேதி மாலை அவருக்கு இதயஅடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்துவிட்டதாக அதே மருத்துவமனை மூலம் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், அவர் மரணம்வரை அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது அனைத்து தரப்பு மக்களையும் கேள்விக்குள்ளாக்கியது. அ.தி.மு.க-வில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட முன்னணியினர்கூட, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அதிர வைத்தனர். மத்திய அரசிடமும் சசிகலா புஷ்பா எம்.பி-யும்... ஒ.பி.எஸ் ஆதரவு எம்.பி-க்களும் மனு அளித்து மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.

பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர் என்பதால், ஜெயலலிதாவின் மரணம் குறித்த விவகாரம் அவரையும் யோசிக்கவைத்தது. ஜெயலலிதா எதற்காக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் என்ற கேள்வி, மத்திய அரசிடம் இன்னும் உள்ளது. ஓ.பி.எஸ் அணியினர், 'ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும்' என்று கோரிக்கைவைத்தபோதே இந்த விவகாரத்தில் நடந்தது குறித்து மத்திய உளவுத்துறையினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். அதிகாரபூர்மற்ற இந்த விசாரணையில் சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்களாம். இதற்குக் காரணம் மத்திய அரசு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று அறிவித்தால், அதற்கு முன்னேற்பாடாகத்தான் இந்த விசாரணையை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். மத்திய அரசின் மனநிலையை அறிந்துதான் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.



ஜெயலலிதா மரணமடைந்த அப்போலோ மருத்துவமனையில் இருந்துதான் இவர்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் விசாரணையில் இருந்து கிடைத்த தகவல்கள்தான் இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.மத்திய உளவுத்துறை அதி்காரி ஒருவரிடம் நாம் பேசியபோது “ஜெயலலிதாவுக்கு மருத்துவம் செய்த டாக்டர்கள் குழுவோடு ஒன்பது மருத்துவ உதவியாளர்கள் குழுவும் பணியில் இருந்துள்ளார்கள். ஒரு ஷிப்ஃட்டுக்கு 3 பேர் வீதம் ஒன்பது பேரும் மாறிமாறி 75 நாட்களும் பணியில் இருந்துள்ளார்கள். அதில் மூன்று மருத்துவ உதவியாளர்களிடம் ஜெயலலிதா குளோஸாகப் பேசி வந்துள்ளதாகத் தெரிகிறது. முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு ஜெயலலிதாவின் உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் இருந்துள்ளது. அவரைச் சாதாரண வார்டுக்கு மாற்றிய பிறகு, விரைவில் நலம் பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில்தான் அனைவரும் இருந்துள்ளனர். ஜெயலலிதாவின் அறையில் சசிகலா மட்டுமே முழு நேரமும் இருந்துள்ளார். ஷிப்ஃடில் இருக்கும் மருத்துவ உதவியாளர்கள், தேவைப்பட்டால்... அறைக்குள் சென்று செக்கப் செய்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டுள்ளனர்.

டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதா படுக்கையில் இருந்துள்ளார். இயல்பாக அவர் தூங்கிக்கொண்டிருந்ததால், அப்போது பணியில் இருந்த இரண்டு மருத்துவ உதவியாளர்கள் வெளியே இருந்துள்ளனர். திடீரென ஜெயலலிதா இருமல் சத்தம் தொடர்ந்து கேட்டதும், பதறியடித்து இரண்டு மருத்துவ உதவியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். அப்போது ஜெயலலிதா பக்கத்தில் சசிகலா கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஜெயலலிதா இருமியதால், தீடிர் என வாந்தியும் எடுத்துள்ளார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதட்டம் அடைந்துள்ளார்கள். அதன்பிறகுதான் சிறிது நேரத்தில் நெஞ்சு வலியும் மூச்சுத்திணறலும் வந்துள்ளது'' இதுவரை நாங்கள் விசாரித்துள்ளோம் என்கிறார். அடுத்த கட்டமாக “ஜெயலலிதாவிற்கு தீடிர் என இருமலும் அதை தொடர்ந்து வாந்தியும் வந்தது ஏன்?, அவருக்கு அந்த நேரத்தில் ஏதாவது திரவ உணவு கொடுக்கபட்டதா? என்பதையெல்லாம் உடன் இருந்த மருத்துவ உதவியாளர்கள் தான் விளக்க வேண்டும். அவர்களோடு அறையில் இருந்த சசிகலாவும் வாய் திறக்க வேண்டும். இதை தான் நாங்கள் அடுத்து விசாரிக்க உள்ளோம்” என்றும் அந்த உளவுத்துறை அதிகாரி கூறுகிறார்.

இப்போது அதிகாரிகள் விசாரணை வட்டத்தில், ஜெயலலிதாவின் சிகிச்சையில் உடனிருந்த ஒன்பது மருத்துவ உதவியாளர்களும் உள்ளனர். மேலும், டாக்டர் பாலாஜியும் விசாரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு முறையாக விசாரணைக்கு உத்தரவிட்டதும் முதலில் விசாரிக்கப்படும் நபர், சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமார்தான் என்கிறார்கள். அப்போலோவில் பணியாற்றும் சில நபர்களைவைத்து அங்கிருந்து ஆவணங்கள் மற்றும் கேமரா புட்டேஜ்களையும் கைப்பற்றியுள்ளனர்..

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புவரை டாக்டர் சிவக்குமார்தான் ஜெயலலிதாவுக்கு மருத்துவம் அளித்துள்ளார். அதனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்ற விபரம் சிவக்குமாருக்கு மட்டுமே தெரியும் என்று உறுதியாக நம்புகிறது மத்திய அரசு. எனவே, அவர் மீதுதான் இப்போது கண்வைத்துள்ளனர். விரைவில் விசாரணைக்குழு அதிகாரபூர்வ விசாரணையில் இறங்கிவிடும் நிலை வந்துவிடும். மத்திய அரசும் அதற்குத் தயாராக உள்ளது என்பதே கடைசிகட்ட தகவலாகத் தெரிகிறது.

- அ.சையது அபுதாஹிர்

NEWS TODAY 15.05.2026