Thursday, March 9, 2017


50 ரூ.மினிமம் பேலன்ஸ்! கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்... இதெல்லாம் எங்கே தெரியுமா? #GoodToKnow

உண்மை... உண்மை... `50 ரூபாதான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்' என்ற அறிவிப்பை அஞ்சல் அலுவலகம் ஒன்றும் அதிரடியாக அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை பல நாட்களாகவே நீடித்து வருகிறது. ஆனால், நம்மில் பலருக்கும் இதைப் பற்றிய தகவல் தெரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.



வாட்ஸ் அப் வைரல்!

`வங்கிகளின் சேவை வரிகளால் சோர்வடைந்துள்ளீர்களா? எப்பொழுது எப்படி சேவை வரி பிடிப்பார்களோ எனக் குழப்பமடைகிறீர்களா? அஞ்சலகம் வாருங்கள்! கணக்கு துவக்குங்கள்! கட்டணமற்ற சேவைகளை அனுபவியுங்கள்... அஞ்சலகங்களில் SB கணக்கு தொடங்கி, ஏடிஎம் கார்டு பெற்று அனைத்து வங்கி ஏடிஎம்-களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ 50/- மட்டுமே. ஆவணங்கள் - 1) 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள். 2) ஆதார் அடையாள அட்டை நகல். அணுகவும்... அனைத்து அஞ்சலகங்கள்' என இரண்டு முக்கிய பிரச்னைகளால் இதுபோன்ற வாட்ஸ் அப் மெசெஜ்கள் வைரலாகி வருகின்றன.

பிரச்னை ஒன்று!

சமீபத்தில் ஒரே மாதத்தில் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளன. அதன்பின் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் பணத்தை எடுப்பதற்கும் அடங்கும். ஒரு மாதத்தில் இந்த வங்கிக் கிளைகளில் நான்கு முறைக்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணம். இல்லையெனில் ஆயிரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரச்னை இரண்டு!

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 5,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்கத் தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என நம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்சத் தொகையாக 5,000 ரூபாயும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் 3,000 ரூபாயும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2,000 ரூபாயும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்புத் தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. குறைந்த பட்ச இருப்புத் தொகையைவிட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் அபராதத் தொகை வசூலிக்கப்படும். உதாரணமாக, 50 முதல் 75 சதவிகிதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் 75 ரூபாய் மற்றும் அத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ன் அறிவிப்பால் மாணவர்கள், இளைஞர்கள், ஓய்வூதியதாரர்கள், மாதச்சம்பளதாரர்கள் என 31 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், `50 ரூபாதான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்' என்ற அறிவிப்பு உண்மையா என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த அஞ்சல் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

”உண்மை... உண்மை... இது எப்படி என்றால் வங்கிகளுக்கு மட்டுமே பணப்பரிவர்த்தனைக்கான புரோகிராமிங் போடப்பட்டுள்ளது. இந்த அபராதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். ஆகையால், வங்கியால் வழங்கப்படும் கார்டுகளை எந்த ஏடிஎம் சென்டர்களில் பயன்படுத்தினாலும் சர்வர் மூலமாகக் கண்காணிக்கப்பட்டு பின்னர் பணம் பிடித்தம் செய்யப்படும். வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு, அஞ்சல் அலுவலக ஏடிஎம் சென்டரில் பணம் எடுத்தாலும் பணம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் கார்டை, நீங்கள் எந்த வங்கி அல்லது ஏடிஎம் சென்டரில் பயன்படுத்தினாலும் அதற்கு அபராதம் இல்லை. எங்களுடைய அஞ்சல் அலுவலக சர்வர் மூலமாகவே பணம் வழங்குகிறோம். நாங்கள் வாடிக்கையாளரின் பணப் பரிவர்த்தனையைக் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை, வாடிக்கையாளரிடம் பணம் பிடிப்பதும் இல்லை. ஆகையால், வங்கிகளைவிட அஞ்சல் அலுவலகங்களில் கணக்கு துவங்குவது மிகப் பயனுள்ளதாக இருக்கும். அஞ்சல் அலுவலகத்தில் எந்த சர்வீஸ் சார்ஜ்-ம் கிடையாது. ஒரே மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். சாதாரண கணக்கு துவங்க 50 ரூபாய் மினிமம் பேலன்ஸ் இருந்தால் போதுமானது. இதற்கு ஏடிஎம் கார்டு வழங்கப்படும். காசோலைக் கணக்குக்கு 500 ரூபாய். அஞ்சல் அலுவலகத்தில் கணக்குத் துவங்க போட்டோ உடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று வழங்கினால் போதும்!” என்றார்.

அணுகவும்... அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024