Thursday, March 9, 2017

ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும்... விசாரணை வளையத்தில் 9 மருத்துவ உதவியாளர்களும் !
vikatan.com



ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில், அப்போலோவில் அவருடைய இறுதி நிமிடங்களின்போது நடந்த சிகிச்சைகள் குறித்த தகவல்களை மத்திய உளவுத்துறை சேகரித்து வருகிறது. அதில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு, ஜெயலலிதா மயக்க நிலையில் அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை, போயஸ் கார்டனிலிருந்து எப்படிக் கொண்டுவந்தார்கள், அப்போலோவின் இரண்டாவது தளத்துக்கு அவரை எப்படிக் கொண்டு சென்றார்கள் என்பது குறித்த பல்வேறு வினாக்கள் இப்போது கிளப்பப்பட்டு வருகின்றன. 'ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடும், காய்ச்சலும் உள்ளது' என்று முதலில் அப்போலோ அறிக்கை வெளியிட்டாலும், நாட்கள் செல்லச்செல்ல அவருக்கு இருக்கும் வேறு சில நோய்களையும் பட்டியலிட்டு... அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் வரிசையாக அறிக்கைகளை வெளியிட்டனர், அப்போலோ நிர்வாகத்தினர்.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட சில தினங்கள் கழித்து... அப்போலோ நி்ர்வாகம், ''அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; சாப்பிடுகிறார்; பேசுகிறார்; வீடு திரும்புவதைப் பற்றி அவரே முடிவு செய்வார்” என்றெல்லாம் சொல்லிவந்தது. ஆனால், திடீரென டிசம்பர் 4-ம் தேதி மாலை அவருக்கு இதயஅடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்துவிட்டதாக அதே மருத்துவமனை மூலம் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், அவர் மரணம்வரை அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது அனைத்து தரப்பு மக்களையும் கேள்விக்குள்ளாக்கியது. அ.தி.மு.க-வில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட முன்னணியினர்கூட, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அதிர வைத்தனர். மத்திய அரசிடமும் சசிகலா புஷ்பா எம்.பி-யும்... ஒ.பி.எஸ் ஆதரவு எம்.பி-க்களும் மனு அளித்து மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.

பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர் என்பதால், ஜெயலலிதாவின் மரணம் குறித்த விவகாரம் அவரையும் யோசிக்கவைத்தது. ஜெயலலிதா எதற்காக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் என்ற கேள்வி, மத்திய அரசிடம் இன்னும் உள்ளது. ஓ.பி.எஸ் அணியினர், 'ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும்' என்று கோரிக்கைவைத்தபோதே இந்த விவகாரத்தில் நடந்தது குறித்து மத்திய உளவுத்துறையினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். அதிகாரபூர்மற்ற இந்த விசாரணையில் சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்களாம். இதற்குக் காரணம் மத்திய அரசு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று அறிவித்தால், அதற்கு முன்னேற்பாடாகத்தான் இந்த விசாரணையை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். மத்திய அரசின் மனநிலையை அறிந்துதான் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.



ஜெயலலிதா மரணமடைந்த அப்போலோ மருத்துவமனையில் இருந்துதான் இவர்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் விசாரணையில் இருந்து கிடைத்த தகவல்கள்தான் இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.மத்திய உளவுத்துறை அதி்காரி ஒருவரிடம் நாம் பேசியபோது “ஜெயலலிதாவுக்கு மருத்துவம் செய்த டாக்டர்கள் குழுவோடு ஒன்பது மருத்துவ உதவியாளர்கள் குழுவும் பணியில் இருந்துள்ளார்கள். ஒரு ஷிப்ஃட்டுக்கு 3 பேர் வீதம் ஒன்பது பேரும் மாறிமாறி 75 நாட்களும் பணியில் இருந்துள்ளார்கள். அதில் மூன்று மருத்துவ உதவியாளர்களிடம் ஜெயலலிதா குளோஸாகப் பேசி வந்துள்ளதாகத் தெரிகிறது. முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு ஜெயலலிதாவின் உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் இருந்துள்ளது. அவரைச் சாதாரண வார்டுக்கு மாற்றிய பிறகு, விரைவில் நலம் பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில்தான் அனைவரும் இருந்துள்ளனர். ஜெயலலிதாவின் அறையில் சசிகலா மட்டுமே முழு நேரமும் இருந்துள்ளார். ஷிப்ஃடில் இருக்கும் மருத்துவ உதவியாளர்கள், தேவைப்பட்டால்... அறைக்குள் சென்று செக்கப் செய்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டுள்ளனர்.

டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதா படுக்கையில் இருந்துள்ளார். இயல்பாக அவர் தூங்கிக்கொண்டிருந்ததால், அப்போது பணியில் இருந்த இரண்டு மருத்துவ உதவியாளர்கள் வெளியே இருந்துள்ளனர். திடீரென ஜெயலலிதா இருமல் சத்தம் தொடர்ந்து கேட்டதும், பதறியடித்து இரண்டு மருத்துவ உதவியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். அப்போது ஜெயலலிதா பக்கத்தில் சசிகலா கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஜெயலலிதா இருமியதால், தீடிர் என வாந்தியும் எடுத்துள்ளார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதட்டம் அடைந்துள்ளார்கள். அதன்பிறகுதான் சிறிது நேரத்தில் நெஞ்சு வலியும் மூச்சுத்திணறலும் வந்துள்ளது'' இதுவரை நாங்கள் விசாரித்துள்ளோம் என்கிறார். அடுத்த கட்டமாக “ஜெயலலிதாவிற்கு தீடிர் என இருமலும் அதை தொடர்ந்து வாந்தியும் வந்தது ஏன்?, அவருக்கு அந்த நேரத்தில் ஏதாவது திரவ உணவு கொடுக்கபட்டதா? என்பதையெல்லாம் உடன் இருந்த மருத்துவ உதவியாளர்கள் தான் விளக்க வேண்டும். அவர்களோடு அறையில் இருந்த சசிகலாவும் வாய் திறக்க வேண்டும். இதை தான் நாங்கள் அடுத்து விசாரிக்க உள்ளோம்” என்றும் அந்த உளவுத்துறை அதிகாரி கூறுகிறார்.

இப்போது அதிகாரிகள் விசாரணை வட்டத்தில், ஜெயலலிதாவின் சிகிச்சையில் உடனிருந்த ஒன்பது மருத்துவ உதவியாளர்களும் உள்ளனர். மேலும், டாக்டர் பாலாஜியும் விசாரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு முறையாக விசாரணைக்கு உத்தரவிட்டதும் முதலில் விசாரிக்கப்படும் நபர், சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமார்தான் என்கிறார்கள். அப்போலோவில் பணியாற்றும் சில நபர்களைவைத்து அங்கிருந்து ஆவணங்கள் மற்றும் கேமரா புட்டேஜ்களையும் கைப்பற்றியுள்ளனர்..

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புவரை டாக்டர் சிவக்குமார்தான் ஜெயலலிதாவுக்கு மருத்துவம் அளித்துள்ளார். அதனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்ற விபரம் சிவக்குமாருக்கு மட்டுமே தெரியும் என்று உறுதியாக நம்புகிறது மத்திய அரசு. எனவே, அவர் மீதுதான் இப்போது கண்வைத்துள்ளனர். விரைவில் விசாரணைக்குழு அதிகாரபூர்வ விசாரணையில் இறங்கிவிடும் நிலை வந்துவிடும். மத்திய அரசும் அதற்குத் தயாராக உள்ளது என்பதே கடைசிகட்ட தகவலாகத் தெரிகிறது.

- அ.சையது அபுதாஹிர்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024