Saturday, March 11, 2017

வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை இலவசமாகப் பெறலாம்: மாநகராட்சி அறிவிப்பு

By DIN  |   Published on : 11th March 2017 04:07 AM 
restore
சென்னை மாவட்டத்தில் புதிதாகப் பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டையினை இ-சேவை மையங்கள் மூலம் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலின் 2017-க்கான சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பணி முடிவுற்று கடந்த ஜனவரி 5-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் 82,666 புதிய வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிதாக பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கான இலவச வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அரசு இ-சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
புதிதாகப் பெயர்கள் சேர்க்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு கடவுவார்த்தை அனுப்பப்பட்டுள்ளது. அதனை அரசு இ-சேவை மையத்தில் காண்பித்து வாக்காளர்கள் அவர்களுக்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
கடவுவார்த்தை வரப்பெறாதவர்கள் அவர்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை சம்பந்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர்களிடம் (மண்டலம்-4, 5, 6, 8, 9, 10 மற்றும் 13) பெற்று அதன்பின்னர் மேற்குறிப்பிடப்பட்ட இ-சேவை மையங்களில் ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள அட்டையைக் காண்பித்து இலவசமாக வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி, தம்முடைய வண்ண வாக்காளர் அடையாள அட்டையேப் பெற்றுக் கொள்ளலாம்.
இ-சேவை மையம் அமைந்துள்ள இடங்கள்
1. தலைமைச் செயலகம்
2. பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகம்
3. வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மண்டல அலுவலர், தண்டையார்பேட்டை மண்டலம்.
4. ராயபுரம் மண்டலம்.
5. திரு.வி.க.நகர் மண்டலம்
6. அண்ணாநகர் மண்டலம்.
7. தேனாம்பேட்டை மண்டலம்.
8. கோடம்பாக்கம் மண்டலம்.
9. அடையாறு மண்டலம்.
10. வட்டாட்சியர் அலுவலகம், அமைந்தகரை
11. அயனாவரம்
12. எழும்பூர் வட்டம்
13. கிண்டி வட்டம்
14. மாம்பலம் வட்டம்
15. மயிலாப்பூர் வட்டம்
16. பெரம்பூர் வட்டம்
17. புரசைவாக்கம் வட்டம்
18. தண்டையார்பேட்டை வட்டம்
19. வேளச்சேரி வட்டம்
நீட்' தேர்வு விண்ணப்பத்தை ஏற்க மனு : மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: மருத்துவப் படிப்பு நுழைவு தேர்வுக்கான விண்ணப்பத்தை ஏற்கும்படி, மத்திய அரசு மற்றும் தகுதி தேர்வின் இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

.சேலம் மாவட்டம், புல்லகவுண்டம்பட்டி அருகில் உள்ள சீரங்க கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தேசியன் சார்பில், அவரது தந்தை பாரி என்பவர் தாக்கல் செய்த மனு:என் மகன், ௨௦௧௫ல் நடந்த, 10ம் வகுப்பு தேர்வில், ௪௭௮ மதிப்பெண்கள் பெற்றான். தற்போது, பிளஸ் ௨ தேர்வு எழுதி வருகிறான். மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீட் தேர்வுக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி உள்ளது. இது தொடர்பாக, தமிழக சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இன்னும், ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், மே, ௭ம் தேதி, நீட் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச், 1க்குள் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

 மாநில அரசு, நீட் தேர்வுக்கான விலக்கு பெற நடவடிக்கை எடுத்து வருவதால், என் மகன் விண்ணப்பிக்கவில்லை. தற்போது, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளார். கால தாமதமாக அனுப்பும் விண்ணப்பத்தை ஏற்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.கோவிந்தராமன் ஆஜரானார். மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் மதனகோபால் ராவ், மாநில சுகாதார துறை சார்பில், கூடுதல் பிளீடர் சஞ்சய்காந்தி, 'நோட்டீஸ்' பெற்றார்.

மருத்துவ கவுன்சில், தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு இயக்குனருக்கு தனிப்பட்ட முறையில், நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Friday, March 10, 2017


ரயில் இன்ஜின் காதலிக்கு குடியரசுத் தலைவர் விருது!

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், ரயில் ஓட்டுநர் பணிக்கு வீட்டுக்குத் தெரியாமல் விண்ணப்பித்தார் அந்தப் பெண். அவர் கட்டுப்பாடுமிக்க இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். பொதுவாக, நம் சமூகத்தில் ஆபத்து நிறைந்த பணிகளில் பெண்களை அனுமதிப்பதுமில்லை... விரும்புவதுமில்லை. இருந்தும், கட்டுப்பாடு நிறைந்த ஒரு குடும்பத்தில் இருந்துதான் இந்தியாவுக்கு முதல் பெண் ரயில் ஓட்டுநர் கிடைத்தார். மும்பையை சேர்ந்த அவர் பெயர் மும்தாஜ்.



தந்தை ஒரு ரயில்வே ஊழியர். ரயில்வே குடியிருப்பு வாழ்க்கை. கோழி விழிக்கும் முன்பே ரயில் விழிக்கும் நகரம் மும்பை. ரயில் சத்தம் கேட்டுதான் மும்தாஜ் விழிப்பார். மும்தாஜ் மட்டுமல்ல... மும்பை மக்கள் வாழ்க்கையுடன் இணைந்தது புறநகர் ரயில். தினமும் 75 லட்சம் மக்களை புறநகர் ரயில்கள் சுமந்து செல்லும். இது தவிர தினமும் குறைந்தது 500 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நகருக்குள் வந்து செல்லும்.

வித விதமான இன்ஜின்களைக் கொண்ட ரயில்கள் அவை. அந்த இன்ஜின்களை எல்லாம் பார்த்துப்பார்த்து மும்தாஜுக்கும் அவற்றின் மீது பெருங்காதல். 1989-ல் பள்ளிப்படிப்பை முடித்த அவர், சத்தமில்லாமல் ரயில் டிரைவர் பணிக்கு விண்ணப்பித்தார். விஷயம் தெரியவர, வீட்டில் பூகம்பம் வெடித்தது. தந்தை அல்லார்க்கு இஸ்மாயில் கொந்தளித்தார். 'கல்யாணம் கட்டிக் கொடுக்கப் போகிறேன்... பிள்ளைய பெத்துட்டு வீட்டுல கிட...' என அதட்டினார். தந்தைக்கும் மகளுக்கும் தினமும் சண்டை. மும்தாஜ் அசைந்து கொடுக்கவில்லை. தன் முடிவில் உறுதியாக, தெளிவாக இருந்தார்.

‘வேலை என்று பார்த்தால், அது ரயில் டிரைவர் வேலைதான்’ என மும்தாஜ் உறுதிபட தந்தையிடம் கூறினார். இந்தப் பிடிவாதத்தைப் பார்த்து உறவினர்களும் நண்பர்களும் இஸ்மாயிலை சமாதானப்படுத்தினார். முடிவில் தந்தையும் பிடிவாதத்தை கைவிட்டு, இறங்கி வந்தார். இரு ஆண்டுகள் தீவிர பயிற்சிக்குப் பின், 1991-ம் ஆண்டு துணை ரயில் ஓட்டுநர் ஆனார் மும்தாஜ்.

அந்தச் சமயத்தில் ரயிலுக்கு பிரசித்திபெற்ற ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கூட பெண் ரயில் ஓட்டுநர்கள் கிடையாது. அதனால், இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே ரயிலை ஓட்டிய முதல் பெண் மும்தாஜ்தான். இப்போது டீசல் முதல் மின்சார ரயில் வரை அனைத்தும் மும்தாஜுக்கு அத்துப்படி. ஆயிரம் டன் எடை கொண்ட, இன்ஜின்களைக் குழந்தை போல கையாள்கிறார் மும்தாஜ்.

கடந்த 1995ம் ஆண்டு ‘லிம்கா’ புத்தகத்தில் மும்தாஜ் இடம் பிடித்தார். ஒரு கட்டத்தில் புறநகர் ரயில்களை ஓட்டுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். மும்பை நகரில் பெண்கள் ஸ்பெஷல் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதன் மோட்டார்வுமன் பணி தேடி வந்தது. தற்போது, மும்பை மத்திய புறநகர் ரயில்வேயில் மோட்டார்வுமனாக பணியாற்றி வருகிறார். இந்தியாவிலேயே பெரியதும், அதிக ரயில் போக்குவரத்து நெரிசலும் கொண்ட பாதை அது. தினமும் அந்த பாதையில் 650 மோட்டார்மேன்கள் ரயில்களை இயக்குகின்றனர். அதில் 8 பேர் பெண் ஓட்டுநர்கள். அவர்களுக்கு மும்தாஜ்தான் 'இன்ஸ்பிரேஷன்'.

உலகிலேயே ஆண்கள் மட்டுமே நிறைந்த உலகம் என்று பார்த்தால் அது ரயில் டிரைவர் பணியாகத்தான் இருக்க முடியும். இரவுபகல் பாராமல் எங்கு வேண்டுமானாலும் தங்க வேண்டியது இருக்கும். சவால் நிறைந்த பணியும் கூட. அத்தகையத் துறையில் சாதித்ததற்காக மும்தாஜுக்கு 'மகளிர் சக்தி விருது' அளிக்கப்பட்டது. நடப்பாண்டில் இந்த விருதுக்கு 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதில் மும்தாஜும் ஒருவர்.

மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், மும்தாஜுக்கு இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். தற்போது 43 வயதான மும்தாஜை அவரது குடும்பமே கொண்டாடுகிறது. ‘‘நான் வேலைக்கு சேரும்போது, இரண்டே இரண்டு பெண்கள்தான் இருந்தோம். இப்போது காலம் மாறி விட்டது. ஏராளமான பெண்கள் ரயில் ஓட்ட முன்வருகின்றனர். அதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்’’ என பெருமிதம் கொள்கிறார். இந்த ரயில் இன்ஜின்களின் காதலி!

-எம்.குமரேசன்

சம்மருக்கு தண்ணீரைவிட இளநீர்தான் பெஸ்ட்... ஏன்? #SummerTips
அழகான பச்சை நிறத் தோற்றம்; உள்ளே ஜில்லென்ற தண்ணீர்; அதையும் தாண்டி லேசான இனிப்புச் சுவையில் நாவைச் சுண்டி இழுக்கும் `வழுவழு’ வழுக்கை! இளநீர்... இளைய தலைமுறை முதல் முதியோர் வரை அத்தனைபேரையும் ஈர்க்கும் ஒப்பற்ற பானம். இயற்கை கொடுத்த அற்புதக் கொடை. வெயிலுக்கு இதமானது. உடனடியாக எனர்ஜியைக் கொடுக்கும் பானங்களில் முதலிடம் இளநீருக்கே! இது, நோயாளிகளின் உடல்நிலையை மேம்படுத்தும் பானமும்கூட. `இரண்டாம் உலகப் போரின்போது, பிளாஸ்மாவுக்குப் பதிலாக இளநீரைத்தான் காயமடைந்தவர்களுக்கு ரத்தத்தில் ஏற்றினார்கள்’ என வரலாற்றில் குறிப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு மருத்துவக் குணங்கள்கொண்டது. லிக்விட் டயட்களில் மிகச் சிறந்த எனர்ஜி டிரிங்க். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு தென்னை மரம் இருந்தால் போதும்... ஆயுள் முழுக்க ஆரோக்கியம் இலவசம்!



இளநீர் தரும் இதமான பலன்கள்...

தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் இளநீரிலும் இருக்கு!

தாய்ப்பாலில் உள்ள லாரிக் ஆசிட் இளநீரிலும் இருப்பதால் பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இந்த லாரிக் அமிலத்தை உடலானது, மோனோலாரினாக (Monolaurin) மாற்றி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். குடலில் உள்ள புழுக்கள், கிருமிகள் ஆகியவற்றை வெளியேற்ற உதவும்.

வயிற்றைச் சுத்தப்படுத்தும் க்ளென்ஸர்!

வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வயிற்றுப் பொருமல், உப்புசம், குமட்டல், பசியின்மை ஆகியவற்றைச் சரிப்படுத்தும். இந்தப் பிரச்னைகள் இருந்தால், வயிறு சற்று வீங்கிக் காணப்படும். எரிச்சல் உணர்வு ஏற்படும்; இவற்றைச் சரிசெய்யும் மருந்துதான் இந்த இயற்கைப் பானம். இளநீரில் உள்ள டானின் (Tannin) எனும் ஆன்டிபாக்டீரியல் பொருள்கள், எரிச்சல் உணர்வைப் போக்கும். வயிற்றில் உள்ள வீரியம் குறைந்த தொற்றைக்கூடச் சரிசெய்யும்.



எலெக்ட்ரோலைட் பொக்கிஷம்

ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. தசைநார்கள், செல்கள், நரம்புச் செல்கள் (Nerve cells) ஆகியவை சரியாக இயங்குவதற்கு சோடியம், பொட்டாசியம், மக்னீஷியம் ஆகிய மூன்றும் தேவை. உடலுக்கான எலெக்டிரிக்கல் செயல்பாட்டுக்கு இவை அத்தியாவசியமும்கூட. இவற்றை அள்ளித்தருவதில் இளநீருக்கே முதலிடம். இதைக் குடிப்பதால், அதீத டென்ஷன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுக்குள் வரும்.

கிட்னி ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்!

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சோடியம் அதிக அளவில் இருந்தால், சிறுநீரகம் பாதிக்கும். சிறுநீரகத்தின் பணி என்பது உடல் கழிவை, சிறுநீராக வெளியேற்றுவது. இதைச் சரியாகச் செய்யவிடாமல் தடுப்பது உடலில் உள்ள அதிகச் சோடியம்தான். இளநீரில் உள்ள பொட்டாசியம், சிறுநீரைப் பெருக்கி சோடியத்தை வெளியேற்றும். மேலும், சிறுநீரகக் கற்கள் உருவாகாமலும் தடுக்கும். மலச்சிக்கலும் சீராகும். நச்சுக்களும் வெளியேறும்.




தண்ணீரைவிடச் சிறந்தது!

தண்ணீரைவிட இளநீரை, உடல் வெகு சுலபமாகக் கிரகித்துகொள்ளும். நீர்ச்சத்துகளைக் கொடுத்து, உடலைத் தேற்றும். இதில் உள்ள தாதுஉப்புக்கள் வயிற்றுக்கு நன்மை செய்கின்றன. அடிக்கடி வாந்தி, பேதியால் பாதிக்கப்படும் நபர்கள், இளநீரைச் சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துகளை உடனே பெறலாம். இதன் சுவையும், குமட்டலைக் கட்டுப்படுத்தும். மேலும், அதிக ரத்தபோக்கு இருக்கும்போது, இதைச் சாப்பிட்டால் உடலுக்கு எனர்ஜி கிடைக்கும். முதல் மூன்று மாத (Trimester) கர்ப்பிணிகளால் உணவைச் சரியாகச் சாப்பிட முடியாது. இதனால் அவர்கள் சோர்வடைவார்கள். அதற்குச் சிறந்த மாற்றாக இளநீர் அமையும். சோர்வைப் போக்கி புத்துணர்வு தரும்.

பளபளப்பான சருமம் பெறலாம்!

சருமத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரத்துக்குத் தக்கவைத்து, சருமத்தைப் பாதுகாக்கும். கடைகளில் மாய்ஸ்சரைசர் வாங்கிப் பயன்படுத்தினால், சருமம் மிருதுவாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், தொடர்ந்து இளநீர் குடித்தால், மாய்ஸ்சரைசரை பயன்படுத்தாமலேயே சருமம் அழகாக, பளபளப்பாக மாறும். சருமம் ஜொலிப்பது இதிலுள்ள போனஸ் பலன்.

சீக்கிரமே ஸ்லிம்மாகலாம்!

உடல்பருமனைக் குறைக்க நேரடியாக வேலைசெய்யும் உணவுகளில் இதுவும் ஒன்று. உடல் எடையைக் குறைக்கும் நல்ல பழக்கங்களான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகிய பயிற்சிகளில் இளநீரைக் குடிப்பது என்ற பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வெயிட் லாஸ் நிச்சயம். ஏனெனில், இது கிரேவிங் உணர்வைக் கட்டுப்படுத்தும். உணவு சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு கிளாஸ் இளநீரைக் குடித்தால், உணவு உண்ணும் அளவும் குறையும். இயற்கையாகவே நாம் குறைவாகச் சாப்பிடும்படி மாற்றும். வொர்க்அவுட் செய்த பிறகு, சர்க்கரை சேர்த்த செயற்கை எனர்ஜி பானத்தைக் குடிப்பதைவிட நேச்சர் கிஃப்ட் இளநீரை குடிப்பது நல்லது; ஹெல்த்தியும்கூட.

- ப்ரீத்தி

வாழவைக்கும் வாழை இலை... மலைக்கவைக்கும் மருத்துவப் பலன்கள்!

நம் பாரம்பர்யத்தோடு நெருங்கியத் தொடர்புடையது வாழை இலை. விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் இதில் உணவு பரிமாறுவது மரியாதையின் வெளிப்பாடு. ஹோட்டல்களில்கூட இந்த இலையில் வைத்துக் கட்டித்தரப்படும் உணவுகளுக்கு மவுசு அதிகம். பல நூற்றாண்டுகால மரபும் பண்பாடும் இருக்கட்டும்... இது சுகாதாரமானது; சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதையும் தாண்டி, இதன் மருத்துவக் குணங்கள் மலைக்கவைப்பவை. ஆரோக்கியப் பலன்களை அள்ளித் தருபவை!



தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் வாழை இலையில் உணவு வைத்து உண்ணவும், விழாக்களில் அலங்காரத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தென் இந்தியாவில் உணவும் வாழை இலையும் பிரிக்க முடியாதவை; கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்தவை. எவ்வளவோ இலைகள் இருக்கும்போது இதற்கு மட்டும் ஏன் இந்தத் தனிச்சிறப்பு? விடை இங்கே...

அப்படி என்ன இருக்கிறது?

இதில் பாலிபினால்கள் (Polyphenols) நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஈ.ஜி.சி.ஜி (Epigallocatechin gallate-EGCG) எனும் பாலிபினால் இதில் இருக்கிறது. இது ஓர் இயற்கை ஆன்டிஆக்ஸிடன்ட். காற்று மாசுபாடு, புகைபிடித்தல் போன்றவற்றின் மூலம் நம் செல்களைச் சிதைக்கும் இதய நோய், புற்றுநோய், விரைவாக மூப்படைதல் போன்றவற்றுக்கு எதிராக இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் செயல்படுகிறது. கிரீன் டீயின் இலைகளிலும் இது இருக்கிறது.

அப்படியே சாப்பிடக் கூடாதா?

இவ்வளவு நன்மைகள் இருக்கும் இந்த இலையை அப்படியே பச்சையாகச் சாப்பிடலாமே என்று தோன்றலாம். ஆனால், இந்த இலையை அப்படியே சாப்பிட்டால், செரிமானமாகத் தாமதமாகும். சூடான உணவைப் பரிமாறும்போது இந்த இலையில் இருக்கும் பாலிபினால்கள் உணவால் உறிஞ்சப்படுகின்றன. இதன் மூலம் நம் உடலை வந்தடைகின்றன. கூடுதலாக, பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மை (Anti-bacterial properties), வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம், கரோட்டின் ஆகியவையும் இதில் இருக்கின்றன.



வாழை இலையில் பரிமாறும் உணவைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்...

முக்கியமாக, இது மிக ஆரோக்கியமானது. ஏனென்றால், சூடாக இந்த இலையில் உணவு பரிமாறப்படும்போது, இதில் இருக்கும் பல்வேறுவிதமான ஊட்டச்சத்துக்கள் உணவோடு கலக்க வாய்ப்பு உள்ளது.
இதில் உள்ள குளோரோபில் (Chlorophyll), அல்சர் மற்றும் தோல் நோய்கள் வருவதைத் தடுக்கும். தோல் ஆரோக்கியம் காக்கவும் உதவும்.

ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு நல்ல தீர்வு தரும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உணவை எளிதில் செரிக்க உதவும்.

ஏன் பெஸ்ட்?

சூடான பொருள் இந்த இலையில் பரிமாறப்படும்போது உணவின் சுவை இன்னமும் கூடும்.

பிளாஸ்டிக்போல் அல்லாமல் இது சுற்றுப்புறத்துக்கு உற்ற, உகந்த தோழன்! இதை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும்போது நம் வளர்ப்புப் பிராணிகளுக்கும் பயனாகும்.

இயல்பாகவே இது தூய்மையானது, ஆரோக்கியக்கூறுகளை உள்ளடக்கியது. இதில் லேசாக நீரைத் தெளித்துவிட்டே பயன்படுத்தலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் தட்டுகூட சுத்தமில்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு; வாழை இலை சுத்தமாக இல்லை என்பதற்கு வாய்ப்பே இல்லை.

நச்சுப்பொருள்களோ, வேதிப்பொருள்கள் கலப்போ இதில் இல்லை.

நீர்ப்புகாத் தன்மையுடையதாக இருப்பதால், இதில் குழம்பு, ரசம் போன்ற திரவ உணவுகளையும் பரிமாற முடியும்.

மேலும் சில பலன்கள்!

இந்த இலையைச் சாறாக அரைத்துப் பூசினால் சிறிய தோல் காயங்கள் நீங்கும். அரிப்பு, வேனல் கட்டி போன்ற தோல் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும். குளிர்ந்த நீரில் சிறிது வாழை இலையை ஊறவைத்து, அரைத்துப் பூசினால் வேனல் கட்டி சரியாகும்.

பூச்சிக்கடி, தேனீக்கடி, சிலந்திக்கடி போன்றவற்றுக்கு இதன் மருத்துவக் குணங்கள் உதவுகின்றன. 

முடிந்த வரை வாழை இலையைப் பயன்படுத்துவோம்; வாழை இலை வாழவைக்கும்!

- அகில் குமார்

அமைச்சர்கள் கையில் அங்குசம்... அரண்டு கிடக்கும் முதல்வர் பழனிசாமி...!vikatan.com



“அமைச்சராக இருந்தபோது கிடைத்த சுதந்திரம்கூட முதல்வரான பிறகு இல்லையே. என்னுடைய அமைச்சர்களே, எனக்கு இப்போது சோதனையாக இருக்கிறார்கள்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய இலாக்காவைக் கையில் வைத்திருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அப்போதே சசிகலா தரப்புடன் நெருக்கமாக இருந்தார். ஆனால், ஒ.பன்னீர்செல்வத்தைத் தாண்டி இவரால் எதுவும் செய்யமுடியாத நிலைதான் இருந்துவந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அடுத்த முதல்வர் தேர்வுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போதே சசிகலா தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அப்போது இருந்த அரசியல் சூழ்நிலையின் காரணமாக முதல்வர் பதவி அவருக்கு தள்ளிப்போனது. எந்தப் பன்னீர்செல்வத்தினால் முதலில் முதல்வர் பதவி தள்ளிப்போனதோ, அதே பன்னீர்செல்வத்தின் போர்க்கொடியால் முதல்வர் பதவி எடப்பாடி வசமாகியுள்ளது.

சசிகலா முதல்வர் ஆவதற்கு பன்னீர்செல்வம் எதிர்ப்பு காட்டியதும், தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. போதாக் குறையாக எட்டு மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் தூங்கிக்கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிரூட்டப்பட்டது. உச்ச நீதிமன்றம் சசிகலாவின் முதல்வர் கனவுக்கு முடிவுரை எழுதியதும், அடுத்த சாய்ஸ் குறித்து சசிகலா ஆலோசனை நடத்தியபோது, டி.டி.வி.தினகரனை முன்மொழிந்தார்கள், அந்தக் கட்சியின் பெரும்பாலானவர்கள். ஆனால், “இப்போதுள்ள சூழ்நிலையில் நமது குடும்பத்தில் இருந்து யாரும் இந்தப் பதவிக்கு வேண்டாம்” என்று முடிவு செய்த சசிகலா, அடுத்த சாய்ஸாகத் தேர்வு செய்தது எடப்பாடி பழனிசாமியை. முதல்வர் பதவியின் மீது ஏக்கத்தில் இருந்த பழனிசாமிக்கு வழியவே வாய்ப்பு வந்ததும், அதைவிடாமல் பிடித்துவிட வேண்டும் என்று முதல்வர் பதவிக்கு ஓ.கே சொன்னார். ஆனால், அடுத்தகணமே சசிகலா தரப்பில் இருந்து சில டிமாண்ட்கள் வைக்கப்பட்டன. கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏ-க்களை நீங்கள்தான் கவனிக்க வேண்டும் என்று சொன்னதும், அதற்கும் ஓ.கே சொன்னார்.

தங்கள் அணிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ-க்களைக் கவனிக்க அப்போது பழனிசாமிக்கு கைகொடுத்தனர், முக்கிய அமைச்சர்கள் சிலர். எல்லாம் முடிந்த பிறகு அமைச்சர்கள் தங்கள் டிமாண்டை பழனிசாமியிடம் சொன்னதும், சற்று அதிர்ச்சி ஆனவர்... பிறகு அதற்கு ஓ.கே சொல்லியுள்ளார். அதாவது, “ 'நீங்கள் முதல்வராக இருந்துகொள்ளுங்கள். ஆனால், எங்கள் துறைக்கு நாங்கள்தான் முதல்வர். டெண்டர் முதல் போஸ்ட்டிங்வரை எதிலும் நீங்கள் தலையிடக் கூடாது' என்ற ரீதியில் அவர்கள் சொன்ன டிமாண்டை வழியில்லாமல், அப்போது ஏற்றுக்கொண்டுள்ளார் பழனிசாமி்.




இப்படி அன்று அமைச்சர்களிடம் ஒப்புக்கொண்ட டிமாண்டுக்காக இப்போது புலம்ப ஆரம்பித்துள்ளார். 'ஆட்சியைக் கைப்பற்றியதும் சிறப்பான முறையில் நமது பணியிருக்க வேண்டும்' என்று முதல்வர் திட்டமிட்டார். அமைச்சர்களிடமும் இதைத் தெரிவித்தார். முதலில் அனுசரித்துப்போவோம் என்று சொன்னவர்கள், இப்போது ஒத்துழைக்க மறுத்துவருகிறார்கள். குறிப்பாக மூத்த அமைச்சர்கள் மூன்று பேர், 'எங்கள் கைவசம் கணிசமான எம்.எல்.ஏ-க்கள் உள்ளார்கள்' என்று நேரடியாகச் சொல்லி முதல்வருக்குக் கிலியை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆறு எம்.எல்.ஏ-க்கள் பறிபோனால் ஆட்சி பறிபோய்விடும் என்ற நிலையில், அமைச்சர்களே இப்படிச் சொன்னதும் செய்வதறியாது திகைத்துவிட்டார் முதல்வர்.

'எங்கள் துறைக்குள் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்வோம் நீங்கள் கேட்கக் கூடாது' என்று சொன்ன கொங்கு மண்டல மூத்த அமைச்சர் ஒருவர், அவர் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு திட்டத்தை மாற்றி அமைத்துள்ளார். முதல்வரின் ஒப்புதல் இல்லாமலே இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், 'நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தத்தில் நான் சொல்லும் நபர்களுக்கு ஏன் நீங்கள் ஒப்பந்தம் வழங்கவில்லை' என்று எகிறி, அந்த ஒப்பந்தத்தையே ரத்துசெய்ய வைத்துவிட்டார். இவர்கள், துறைரீதியாகத் தங்கள் பவரை காமிக்கிறார்கள். மத்திய மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர், 'முதல்வர் கைவசம் உள்ள ஒரு துறை தனக்கு வேண்டும்' என்று நெருக்கடி கொடுக்க... என்ன செய்வது என்று புரியாமல் முழித்து வருகிறாராம் முதல்வர். அதற்கு அந்த அமைச்சர் சொல்லும் காரணம், 'கூவத்துாரில் நான் எம்.எல்.ஏ-க்களைச் சரிசெய்யாமல் போயிருந்தால்... நீங்கள் ஆட்சியில் இருந்திருக்க முடியுமா' என்று சென்டிமென்டாகச் சொல்லியுள்ளார். நிர்வாகரீதியாக இருக்கும் பிரச்னைகளைவிட அமைச்சர்கள் தரும் நெருக்கடிகள்தான் முதல்வருக்கு இப்போது சிக்கலாகிவிட்டன. அமைச்சர்கள் அனைவரும் ஆளுக்கு ஐந்து எம்.எல்.ஏ-க்களைக் கையில் வைத்துக்கொண்டு முதல்வருக்கு நெருக்கடி கொடுத்துவருவதால், முதல்வர் பதவி மீது எடப்பாடிக்கு வெறுப்பே வந்துவிட்டது” என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்கள்.

'ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பார்கள், இங்கு கட்சி ரெண்டுபட்டது அமைச்சர்களுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது.


- அ.சையது அபுதாஹிர்

சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன்: நீதிபதி கர்ணன் விர்ர்.
,


புதுடில்லி: எனது வாழ்க்கையையும், பதவியையும் கெடுக்கவே, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக, கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் கூறியுள்ளார். ஆஜரில்லை: சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு, அவர், பிரதமர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் கடிதங்களை அனுப்பினார். இதனை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்காக பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக கர்ணனுக்கு இரண்டு முறை உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. உத்தரவு: இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், பினாகி சந்திரகோஸ், குரியன் ஜோசப் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கர்ணன் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆவணத்தை செலுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையில்லை: பத்திரிகையாளர்களிடம் கர்ணன் கூறியதாவது: பிடிவாரன்ட் தொடர்பாக ஜனாதிபதியிடம் முறையிடுவேன். வாரன்ட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுப்பேன்.

வாரன்ட் பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன். சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக பிரதமரிடம் புகார் தெரிவித்தேன். முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை தொடர்பாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகளுக்கு எதிராக பிரதமரிடம் புகார் தெரிவித்தேன். புகார் தொடர்பாக எந்தவித ஆலோசனை, விசாரணையில்லாமல் எனக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

நான் தலித்தாக இருப்பதால் எனக்கு நெருக்கடி ஏற்படுகிறது. எனது வாழ்க்கையையும், பதவியையும் கெடுக்கவே தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Dailyhunt

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...