Monday, March 13, 2017

மொய் எழுத புதிய சாப்ட்வேர் சிக்கம்பட்டி இளைஞர் சாதனை

செக்கானுாரணி:செக்கானுாரணியில் பட்டதாரி இளைஞர் திருமண விழாக்களில் மொய் எழுத புதிய சாப்ட்வேரை உருவாக்கி சாதித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் திருமணம், காதணி விழா போன்ற விழாக்கள் அதிகம். வார விடுமுறை நாட்களில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் ஏதாவது ஒரு விழா நடக்கும். இந்த விழாக்களில் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள் மொய் எழுதுவது வழக்கம். ஆரம்பத்தில் வெறும் சம்பிரதாயமாக இருந்த மொய் எழுதும் கலாச்சாரம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

செக்கானுாரணி அருகே சிக்கம்பட்டி பி.பி.ஏ., பட்டதாரி பிரபு,33, மொய் எழுதவும், அவற்றை சரி பார்க்கவும் புதிய சாப்ட்வேரை உருவாக்கியுள்ளார். லேப்-டாப், பிரிண்டரில் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி மொய் எழுதுபவர்களின் பெயர் விபரம், விழா நடத்துபவரின் விபரம், தேதி, திருமண மண்டபம், தொகை ஆகியவற்றை ஊர் வாரியாக பிரித்து கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்கின்றனர்.

உடனே மொய் எழுதிய விபரங்கள் அடங்கிய ரசீது வழங்கப்படுகிறது. விழா முடிந்த சில நிமிடங்களில் கலந்து கொண்டவர்கள், மொத்த தொகை குறித்து அறிந்து கொள்ள முடியும். இது விழா நடத்துபவர், மொய் எழுதுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

பிரபு கூறியதாவது: செக்கானுாரணியில் மொபைல் கடை நடத்துகிறேன். எனது குடும்ப விழாவின் போது மொய் எழுதவும், ஒவ்வொரு முறையும் மொய் எழுதியுள்ளவர்களின் லிஸ்ட்டை சரி பார்க்கவும் மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் அனைவருக்கும் பயன்படும் வகையில் புதிய சாப்ட்வேரை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.

3 மாதங்களாக உழைத்து இந்த சாப்ட்வேரை உருவாக்கினேன். இதன் சோதனை முயற்சியை யாருடைய விழாவில் நடத்துவது. மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமா? என்ற தயக்கம் இருந்தது. இந்நிலையில் எனது நண்பர் மதிவீரசோழனிடம் தெரிவித்த போது பாராட்டி, அவரது குழந்தைகளின் காதணி விழாவில் வாய்ப்பளித்தார்.முதல் முயற்சியே வெற்றி பெற்றது. இந்த விபரங்களை டிவிடி, மெமரி கார்டில் பதிவு செய்து தருகிறேன். மெமரி கார்டை மொபைல் போனில் பொருத்தி எளிதாக விபரங்களை சாரி பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.
நாளை முதல் இரு நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

12.03.2017

நாளை முதல், இரண்டு நாட்களுக்கு, இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு வாரமாக, கோடை மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது. இந்த மழையால், பல இடங்களில் நீர் நிலைகளில், நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், மதுரை மாவட்டம், மேட்டுப்பட்டியில் அதிகபட்சமாக 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

இது குறித்து, வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், 'நாளை முதல், இரண்டு நாட்களுக்கு, கோவை, நீலகிரி, தர்மபுரி, கன்னியாகுமரி, கொடைக்கானல், மதுரை, சேலம், திருச்சி, வேலுார், ஈரோடு, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், சில இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யலாம்' என்றனர்.
சென்னை, வேலுாரில் வெப்பம் அதிகரிப்பு: பல மாவட்டங்களில் கோடை மழையால் வெப்ப தாக்கம் குறைந்துள்ளது. ஆனால், சென்னை, விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், வெப்பம் அதிகரித்துள்ளது. வேலுாரில், நேற்று அதிகபட்சமாக, 39 டிகிரி செல்சியஸ் பதிவானது; இன்று, 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என, கணிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
சிறப்பு சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி., அறிவிப்பு

பதிவு செய்த நாள்  12மார்  2017   20:33

சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு, சிறப்பு சுற்றுலாவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., என்ற, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ளது.சுற்றுலாவில், புரி ஜெகநாதர் ஆலயம், கோனார்க் சூரியநாராயணர் கோவில்; கோல்கட்டாவில், காளி கோவில்; தாஜ்மகால், டில்லி, குதுப்மினார், ஆகியவற்றை பார்க்க, வரும் ஏப்., 15ல், தனி சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம், 11 தினங்கள் கொண்ட அந்த சுற்றுலாவுக்கு, ஒரு நபருக்கு, 9,595 ரூபாய், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கட்டணத்தில், ரயிலில், இரண்டாம் வகுப்பு துாங்கும் வசதி, சைவ உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவை அடங்கும். பயணம் செய்ய விரும்புவோர், 044 - 64594959, 9003140681 என்ற தொலைபேசி எண்கள்; www.irctctourism.com என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.
2019–ல் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எல்லோருமே மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்குமா?, அல்லது காங்கிரஸ் உயிர்பெற்று எழுந்துவிடுமா? என்ற கணிப்புகளுடன் இருக்கிறார்கள்.

மார்ச் 13, 03:00 AM

2019–ல் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எல்லோருமே மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்குமா?, அல்லது காங்கிரஸ் உயிர்பெற்று எழுந்துவிடுமா? என்ற கணிப்புகளுடன் இருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 4–ந் தேதி முதல் இந்த மாதம் 8–ந் தேதிவரை உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபிறகு நடக்கும் முதல் தேர்தல் என்றநிலையில், இதற்கு பொதுமக்களின் ஆதரவு இருக்கிறதா? இதுபோல, பா.ஜ.க. அரசாங்கத்தின் திட்டங்கள் அனைத்துக்கும் மக்கள் ஆதரவு உண்டா? என்பதை இந்த தேர்தலிலே பார்த்துவிடலாம் என்ற பொதுவான கருத்து இருந்தது. இதில், உத்தரபிரதேச மாநில தேர்தல் முடிவு எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்தது. ஏனெனில், நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். ஜனாதிபதி தேர்தலில் தங்கள் வேட்பாளரின் வெற்றிக்கும், டெல்லி மேல்–சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை தங்கள் கட்சிக்கு அதிகரிக்கவும், உத்தரபிரதேச தேர்தல் வெற்றி எல்லோருக்கும் பெரிதும் கைகொடுக்கும்.

இப்போது நடந்த சட்டமன்ற தேர்தல்களில் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. 14 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. மற்றகட்சிகளை பக்கத்திலேயே காணவில்லை. சுனாமி புயல்போல இது அரசியலில் ‘சுநமோ’ புயல் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜ.க. 312 இடங்களில் தனியாக வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணி கட்சிகள் 13 இடங்களை கைப்பற்றியுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் 57 இடங்களில் பா.ஜ.க.தான் வெற்றி வாகை சூடியுள்ளது. பஞ்சாப்பில் மட்டும் சிரோமணி அகாலிதளம்–பா.ஜ.க. கூட்டணியை தோற்கடித்து மொத்தமுள்ள 117 இடங்களில் காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் அரியணை ஏறுகிறது. கோவா, மணிப்பூரில் நிலைமை இழுபறியாக உள்ளது. மொத்தம் 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பா.ஜ.க. 13 இடங்களிலும்தான் வெற்றிபெற்று இருக்கிறது. இதுபோல, மணிப்பூரிலும் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களிலும், பா.ஜ.க. 21 இடங்களிலும் வெற்றிபெற்று இருக்கிறது. இருவருக்குமே தனிப்பெரும்பான்மை இல்லாதநிலையில் ஒருசில இடங்களில் மட்டும் வெற்றிபெற்று இருக்கும் சுயேட்சைகளும், மாநில கட்சிகளும்தான் ‘கிங்மேக்கர்’களாக இருந்து இரு கட்சிகளில் ஒருவரை ஆட்சி கட்டிலில் அமர வைப்பார்கள். ஓட்டு சதவீதத்தை எடுத்துக்கொண்டால் பஞ்சாப்பை தவிர மற்ற மாநிலங்கள் எல்லாவற்றிலும் மற்ற கட்சிகளைவிட பா.ஜ.க.வுக்குதான் அதிகம் கிடைத்துள்ளது. மொத்தத்தில் 2012 தேர்தல் முடிவுகள் அப்படியே மாறிவிட்டன.

உத்தரபிரதேச மாநிலத்தில் தலித்துகள் ஏறத்தாழ 20 சதவீதமும், இஸ்லாமியர்கள் ஏறத்தாழ 20 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஏறத்தாழ 40 சதவீதமும், உயர்வகுப்பினரும் ஏறத்தாழ 20 சதவீதத்தினரும் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், மக்கள் சாதிவாரி கணக்குகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. இந்த தேர்தல் அளித்துள்ள பாடம், வாக்காளர்கள் மிகத்தெளிவான முடிவுகளை எடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதுதான். சாதி, மதம், இனம் அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். தங்கள் மாநிலத்தில் எந்தக்கட்சி வெற்றிபெற்றால், சிறப்பான ஆட்சி நடத்துவார்கள் என்றவகையில், அந்தந்த மாநிலங்களுக்குரிய சாதக, பாதகங்களை ஆராய்ந்து ஓட்டளித்திருக்கிறார்கள். மிக முக்கியமாக ஊழல் புகார்களுக்கு கடும் எதிரான உணர்வலையில்தான் இன்றைய இளைய சமுதாயம் இருக்கிறது. மொத்தத்தில், மக்கள் மனதில் இப்போது வளர்ச்சி ஒன்றுதான், அதுவும் தங்கள் மாநிலத்தின் வளர்ச்சிதான் கண்ணில் தெரிகிறது. இதுதான் இனி எல்லா தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.

Sunday, March 12, 2017


கொத்து, வீச்சு, சில்லி... பரோட்டா பிரியர்களே... சிறுநீரகம், கல்லீரல் கவனம்! #HealthAlert
`பரோட்டா’, `புரோட்டா’, வட இந்தியாவில் `பராத்தா’, மொரீஷியஸில் `ஃபராட்டா’, மியான்மரில் `பலாட்டா’... எப்படி அழைக்கப்பட்டாலும், இது இந்தியர்களை வசீகரிக்கும் ஓர் உணவு. முக்கியமாக தெற்காசியா முழுக்கப் பிரபலமான ஒன்று. இதன் அலாதியான சுவை காரணமாகவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ், மாலத்தீவுகள், பங்களாதேஷ்... எனப் பல நாடுகளில் பிரபலமாகியிருக்கிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிக எளிமையாகத் தயாரிக்கப்படுகிற, அதே நேரத்தில் பிரபலமான உணவு. பரோட்டா குறித்த சர்ச்சை அவ்வப்போது எழுவதும், ஆறிப்போவதும் இங்கே வழக்கம். பரோட்டா அப்படி என்னதான் நம் உடலுக்குத் தீங்கு விளைத்துவிடும்... தெரிந்துகொள்வோமா?



`இலங்கையில் இருந்து வந்தது’ என்று சிலர் அடித்துச் சொன்னாலுமேகூட, பரோட்டா பிறந்த வீடு இந்தியா என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. `பராத்தா’ என்கிற வார்த்தை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. வேத காலத்தில், `புரோதாஷா’ என்கிற உணவை, யாகம் செய்யும்போது அக்னி பகவானுக்குப் படைப்பார்களாம். அதில் பருப்பையும் நறுக்கிய காய்களையும் ஸ்டஃப் செய்திருப்பார்களாம். அந்த `பு-ரோ-தா-ஷம்’தான் `பராத்தா’ ஆனது என்கிறார்கள். ஆரம்பத்தில் பரோட்டா செய்யப் பயன்பட்டது நெய்தான். வெகு நாட்களுக்குப் பிறகுதான் எண்ணெயைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

வட இந்திய பராத்தா முதன்முதலில் பாகிஸ்தானின் பெஷாவரில்தான் உருவானது என்கிறார்கள். அங்கிருந்து மெள்ள மெள்ள வட இந்தியா முழுமைக்கும் பரவியதாம். ஆரம்பத்தில் குட்டி டிபனாக காலை உணவுக்கு மட்டும் இதைச் சாப்பிட்டிருக்கிறார்கள் பஞ்சாபிகள்.

தென் தமிழகத்தில் பரோட்டாவுக்கு புகழ்பெற்ற சைடுடிஷ் சால்னாவும் குருமாவும். கூடவே, சிக்கன் குருமா, மட்டன் குருமா என்று இருந்தால் கேட்கவே வேண்டாம். இவற்றைத் துணைக்கு வைத்துக்கொண்டு நடிகர் சூரி மாதிரி, `நான் முதல்ல இருந்து சாப்பிடுறேன்... நீ போர்டை அழி’ என்று சவால்விடச் செய்யும் சக்தி பரோட்டாவுக்கு உண்டு. வட இந்தியாவில் உருளைக்கிழங்கையும் மசாலாவையும் உள்ளே வைத்து பராத்தாவாகச் செய்கிறார்கள். ஆலு பராத்தா, சென்னா பராத்தா... என விதவிதமான வகைகள் உள்ளன. இன்னும் பனீர், காய்கறிகள், காலிஃப்ளவர், முள்ளங்கி இவற்றால் ஆன பரோட்டாக்களும் உண்டு. தொட்டுக்கொள்ள ரெய்த்தா, தால் என அமர்க்களப்படுகிறது. சில வட இந்தியர்களுக்கு பராத்தாவுக்கு வெறும் ஊறுகாயும் யோகர்ட்டுமே போதுமானது.



வீச்சு பரோட்டா, கைமா பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, சிலோன் பரோட்டா, கேரளா பரோட்டா... எனப் பல வகைகளில் பட்டையைக் கிளப்பும் இதன் சுவைக்கு ஈடில்லை. அதனால்தான் பரோட்டா ரசிகர்கள் உலகமெங்கும் வியாபித்திருக்கிறார்கள். இன்றைக்கு, பெரும்பாலான தமிழர்களின் இரவு உணவாகிவிட்டது பரோட்டா. ஆரம்பத்தில் இது கோதுமையில் தயாரிக்கப்பட்ட வரை நம் ஆரோக்கியத்துக்குப் பிரச்னை எதுவும் இல்லை. மைதாவுக்கு மாறிய பிறகுதான் சிக்கல். இது குறித்து விரிவாகப் பேசுகிறார் அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்...

``இன்றைக்கு பரோட்டாக்கள் தயாரிக்கப்படுவது பெரும்பாலும் மைதாவில்தான். கோதுமைக் கழிவுகள்தான் மைதா உற்பத்தியின் மூலப்பொருட்கள். தெற்கு ஆசியாவில் உள்ள சில நாடுகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்தும் உற்பத்தி செய்கிறார்கள். மைதா வந்த புதிதில் பசை காய்ச்சுவதற்குத்தான் பயன்பட்டது. அமெரிக்காவில் இதற்குப் பெயரே `பேஸ்ட்ரி பவுடர்’ (Pastry Powder) என்பதுதான். இரண்டாம் உலகப் போர்... அதன் விளைவாக எழுந்த பஞ்சம் காரணமாக மைதாவை சமையலுக்குள் கொண்டு வந்தார்கள். சமையலுக்குப் பயன்படும் விதத்தில் மைதாவை அறிமுகப்படுத்திய பெருமை அமெரிக்காவையே சாரும்.

கோதுமைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மைதாவின் நிறம் மஞ்சளாகத்தான் இருக்கும். ஆனால், பல ரசாயனக் கலவைகளால் சுத்தம் செய்யப்பட்ட பிறகு வெள்ளை வெளேர் நிறத்துக்கு வந்துவிடுகிறது. இதற்குப் பயன்படுவது பிளீச்சிங் கெமிக்கல். தெளிவாக, புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால், பினாயிலைப் பயன்படுத்தித்தான் மைதாவை அந்த வெள்ளை நிறத்துக்குக்கொண்டு வருகிறார்கள். அதாவது, பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) என்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம்தான் பயன்படுகிறது. இந்த ரசாயனத்தால் சுத்திகரிக்கப்படும் மைதாவை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.



மைதாவையும், அதிலிருந்து தயாரிக்கப்படும் நாண், ஃபுல்கா போன்றவற்றையும் பலரும் விரும்புவதற்குக் காரணம், அதன் மென்மைத்தன்மை. கோதுமை மாவு கொஞ்சம் கடினத்தன்மையோடு இருக்கும். கோதுமைக் கழிவில் இருந்து தயாரிக்கப்படும் மைதா எப்படி மென்மையாக இருக்கிறது? இதற்கும் காரணம் ரசாயனம்தான். அதன் பெயர் `அல்லோக்ஸான்’ (Alloxan). இதுதான் மைதாவின் மென்மைத் தன்மைக்கு உறுதுணையாக இருக்கிறது. இது ஒரு நச்சுப்பொருள். நம் கல்லீரலையும், சிறுநீரகங்களையும் மிக மோசமாகப் பாதிக்கக்கூடியது. அல்லோக்ஸான் ரசாயனம் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடம் பரிசோதனைக் கூடங்கள். ஒரு நோய்க்கு பொருத்தமான மருந்து கண்டுபிடிக்க பரிசோதனை நடக்கும் அல்லவா... அந்த இடம். சர்க்கரைநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க, முதலில் எலிகளுக்கு சர்க்கரைநோயை வரவழைப்பார்கள். அதற்கு அல்லோக்ஸான் ரசாயனம் கலந்த கலவையை அதன் உடலில் செலுத்துவார்கள். பிறகு, எலிகளுக்கு இன்சுலின் சுரப்பு நின்றுவிடும்.

ஆக, அல்லோக்ஸான், சர்க்கரைநோயை வரவழைக்கும் ரசாயனம். மைதாவில் இருக்கும் அல்லோக்ஸான், பென்சாயில் பெராக்ஸைடோடு இணைந்து நம் உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் உயர்ந்துகொண்டே போகும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு துணையாக நின்றதில் மைதாவுக்கும் பெரும் பங்கு உண்டு; பரோட்டாவுக்கும்!’’ என்கிறார் உமர் பாரூக்.



ஏற்கெனவே ரசாயனம் தெளிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கத்தோடு உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள்தான் நம் அன்றாட உணவுக்கானவை என்கிற சூழல். இதில், மைதாவிலும் உடலுக்கு ஒவ்வாத ஏதோ ஓர் எண்ணெயிலும் தயாரிக்கப்பட்ட பரோட்டா நமக்குத் தேவைதானா என யோசிக்கவேண்டிய தருணம் இது.

பரோட்டா பிரியர்கள் ஒன்று செய்யலாம்... வீட்டிலேயே கோதுமையில் தயாரிக்கப்பட்ட பரோட்டாவை சாப்பிடலாம். அது ஆரோக்கியத்துக்கும் நம் எதிர்காலத்துக்கும் நல்லது.

- பாலு சத்யா

"பாலைவனமாகும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்" தேவை உடனடி தீர்வு..!



"போலியான ஆவணங்களின் மூலம் இம்மாநிலத்தில் அமைந்துள்ள சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்புச் செய்யப்படுவதாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள சதுப்பு நிலங்களில் உள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணப் பதிவுகள் ஏதும் பதிவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படாது" எனத் தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் 1985-86-ம் ஆண்டு மத்திய அரசால் சதுப்பு நிலப்பகுதிகளைப் பாதுகாக்க தேசிய சதுப்பு நிலப்பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதில் 94 சதுப்பு நிலங்கள் கொண்டு வரப்பட்டன. 2007-ம் ஆண்டுச் சதுப்புநிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதி எனத் தமிழக அரசு அறிவித்தது. இவ்வாறு அறிவிப்புகள் மட்டும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், ஆக்கிரமிப்புகள் மட்டும் குறைந்தபாடில்லை... அப்படி நம் கண்முண்ணே அழிந்த நிலம்தான் பள்ளிக்கரணை.



சென்னையின் மத்திய கைலாசத்தில் ஆரம்பித்து மேடவாக்கம் வரை சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்டது, அந்தப் பகுதி. அப்பகுதிதான் தற்போதைய நிலையில் வெறும் 500 ஹெக்டேராகச் சுருங்கிக் காணப்படும் பள்ளிக்கரணை. உள்ளூர்ப் பறவைகளின் வாழிடமாகவும், சீசனுக்கு வந்து செல்லும் வெளிநாட்டுப் பறவைகளுக்கான புகலிடமாகவும் விளங்கியதும் இந்தப்பகுதிதான். சென்னையில் இருப்பவர்கள் தவிர்த்து உலகம் முழுவதும் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் பெரும்பாலோனோருக்குப் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தினைப் பற்றித் தெரிந்திருக்கும். 5,000 ஹெக்டேராக இருந்த நிலப்பகுதி 500 ஹெக்டேராகச் சுருங்க எடுத்துக்கொண்ட கால அவகாசம் கடந்த 35 ஆண்டுகளுக்கு குறைவுதான் என்பது இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.



பொதுவாக சதுப்பு நிலப்பகுதி என்பது தனிப்பட்ட ஒரு நிலப்பகுதி அல்ல. கடல்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளுடன் தொடர்புடைய முக்கியமான பகுதியாகும். ஒர் ஏரியின் உபரி நீரோ அல்லது ஆறினுடைய உபரிநீரோ நீண்ட காலமாக ஒரே இடத்தில் சேர்வதால் உருவாகும் நிலப்பகுதிதான் சதுப்பு நிலம். இந்த நிலப்பகுதியானது 'ஸ்பாஞ்ச்' போல செயல்பட்டு நீரை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும் தன்மையை உடையது. இந்த நிலப்பகுதியானது மழைக்காலத்தில் நிலத்துக்கு வரும் தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும். பிறகு வறட்சி நிலவும்போது தண்ணீரை வெளியேற்றி நிலத்தினைத் தானே ஈரப்பதமாக வைத்துக் கொள்ளும். இதனால் பறவைகள் வருகை எந்த நேரமும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் உபரித் தண்ணீரின் வருகை இல்லாதபோது தரைப்பகுதியானது பிளவுபடத் தொடங்கிவிடும். ஆனால், பிளவுபட்ட நிலமானது தொடர்ச்சியாக அப்படியே நீடித்தால் நிச்சயமாக ஒருநாள் பாலைவனமாக மாறிவிடும்.



பள்ளிக்கரணை காண்பதற்காக வரும் சுற்றுலா பயணிகளையும், விடுமுறையை கழிக்க வரும் பொதுமக்களையும் அப்பகுதி மக்கள் அதிகமாக கண்டதுண்டு. அந்தக் காட்சியும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும்தான். அதன் பின்னர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களும், குப்பைகளும் சதுப்பு நிலத்தை அலங்கரிக்கத் தொடங்கின. தமிழக அரசும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. மாநகராட்சி அதிகாரிகளும் 'கண்டும்' காணாமல் இருந்து விட்டனர். இதற்கெல்லாம் காரணம், நமது அதிகாரிகள் சதுப்பு நிலம் என்றால் எதற்கும் உதவாத வீணான நிலம் என்று கருதினர். இதில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் சற்று முக்கியத்துவம் வாய்ந்த நன்னீர் சதுப்பு நிலமாகும். இந்த நன்னீர் சதுப்பு நிலத்தில்தான் பல்லுயிர்களின் பெருக்கம் அதிகமாகக் காணப்படும். இதன் காரணமாக, முக்குளிப்பான்கள் நீர்க்கோழிகள், நாரை, கொக்கு, கரிச்சான், கூழைக்கடா போன்ற 50-க்கும் மேற்பட்ட பறவைகள் வாழும் சூழலைக் கொண்டது. மிகப்பெரிய சதுப்புநிலமாகக் காட்சியளித்த பள்ளிக்கரணை நிலம்தான் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட சதுப்பு நிலங்களில் முதன்மையானதாகவும் ஆகிவிட்டது. சரியாக அழிந்த சதுப்பு நிலத்தின் பரப்பினை கணக்கிட்டால் பத்தில் ஒரு பங்கு நிலம் கூடத் தற்போது இல்லை என்பதே நெற்றிப்பொட்டில் அறையும் நிஜம்.



கடலின் அருகில் அமைந்திருப்பதால் கடல் நீரையும், கடல் பொங்கும் நேரத்தில் நிலத்துக்குள் வரும் நீரைத் தேக்கி வைக்கும் தன்மையும் சதுப்பு நிலத்துக்கு மட்டுமே உண்டு. அத்தகைய விலை மதிப்பில்லாத சதுப்பு நிலமானது சாலைகள், சாக்கடைகள், குப்பைகள் மற்றும் கட்டிடங்கள் என மூச்சு விட முடியாமல் திணறித் தவிக்கிறது. இதுதவிரத் தனியார் நிறுவனங்களின் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் எனப் பல கழிவுகள் சதுப்பு நிலத்தில் கொட்டப்படுகின்றன. நீரை மட்டுமே உறிஞ்சும் 'ஸ்பாஞ்ச்' ஆனது திடக்கழிவுகளை எப்படி உள்வாங்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத மாநகராட்சி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது. செழிப்புமிக்கச் செல்வத்தைக் கொண்டிருந்த பள்ளிக்கரணையின் இன்றைய நிலை பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. உள்ளூர்ப் பறவைகளும், வெளிநாட்டுப் பறவைகளும் தண்ணீரைத்தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. நிலப்பரப்பும் பிளவுபடத் தொடங்கிவிட்டது. அடுத்து என்ன நிகழப்போகிறது? நீங்கள் நினைப்பதுபோலப் பாலைவனம்தான்...



இதை எப்படி மீட்பது:

சற்றுக் கடினம்தான், சென்னைக்கு வரும் ஆறுகளில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்குத் தண்ணீரை கொண்டு வரும் துணைத் தண்ணீர் வழித்தடங்களைப் பள்ளிக்கரணை வரை தூர்வார வேண்டும். அப்போதுதான் தண்ணீரானது சதுப்பு நிலத்தில் பாயும். நிலமும் தனக்குத் தேவையான தண்ணீரை தக்க வைத்துக் கொள்ளும். மேலும், அருகிலுள்ள ஏரிகள், குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டால் அதனுடைய உபரிநீரும் இந்தச் சதுப்பு நிலத்துக்கு வர வாய்ப்புண்டு. அதே போலப் பள்ளிக்கரணையை ஆக்கிரமித்திருக்கும் குப்பைகளும், கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும். மருத்துவ கழிவுகளைக் கொட்டினால் மருத்துவமனைக்குக் கடுமையான தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும். சதுப்பு நிலங்களைச் சுற்றிலும் அதிகமாகக் குப்பை கொட்டும் இடங்களில் கேமராக்கள் வைக்கலாம். கழிவுநீர் கலக்கும் இடங்களைக் கண்டறிந்து தடுக்கலாம். மேலே சொன்னவற்றைத் தவிர்த்துச் சதுப்பு நிலத்தைக் காக்க இன்னும் பல வழிகள் உள்ளன. சதுப்பு நிலங்களுக்குள் நன்னீரானது வந்து தண்ணீரின் அளவு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டாலே உள்ளே இருக்கும் ஆக்கிரமிப்புகள் தானாக வெளியேற ஆரம்பித்துவிடும். மேற் சொன்னவற்றை அதிகாரிகள் செய்ய ஆரம்பித்தாலும் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் விடுவார்களா என்பது சந்தேகம்தான். இயற்கை ஆர்வலர்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியாக அறிவித்தது. வெற்று அறிவிப்புடன் மட்டுமே நின்றுபோனதுதான் இப்போதைய சீரழிவுக்குக் காரணம்.



இயற்கையினைப் பாழ்படுத்திவிட்டு நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் வருங்காலத்தில் 'பள்ளிக்கரணை பாலைவனம்' என்று சொல்லும் காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேபோல முன்பு வேளச்சேரி ஏரியாக இருந்த நிலம் கட்டிடங்களாக மாறிவிட்டதுபோல இருபது வருடங்கள் கழித்துப் பள்ளிக்கரணை முழுவதும் கட்டிடங்கள் கொண்ட பகுதியாக மாறியிருக்கலாம். இதற்கெல்லாம் ஒரே சாட்சி... இப்போது தண்ணீரில்லாமல் பாலையாக வறண்டுவிட்ட பள்ளிக்கரணை நிலம்தான்... அன்று நன்னீர் குடித்துத் தாகம் தனித்த பறவைகள், இன்று கழிவுநீரை குடித்துத் தாகம் தீர்த்துக் கொள்கின்றன. பறவைகளுக்கு நேர்ந்த இந்த அவலம் மனிதனுக்கு நேரும் என்ற காலம் தூரத்தில் இல்லை. இயற்கையைப் பாழ்படுத்திவிட்ட பிறகு மனிதன் வாழ்ந்து என்ன பயன்? இந்த வருடம் நீடிக்கும் நிலை தொடர்ந்து நீடித்து மழை இல்லாமல் போனால் தமிழ்நாடே தண்ணியில்லா காடாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பள்ளிக்கரணையில் பத்தில் ஒரு பங்கு நிலம் கூட இல்லாத இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வெறும் அறிவிப்பை மட்டும் வெளியிட்டுள்ளது. இப்போது தேவை, அறிவிப்பு இல்லை... உடனடித்தீர்வு.

வாடகை சைக்கிள், சட்டி சோறு, ஆடலும் பாடலும்! - #WeekEndRewind
பால்ய கால நினைவுகள்ங்கிறது எப்போதும் திகட்டாத பால்கோவா. அவற்றை நினைவுகளால் அள்ளி அள்ளித் தின்னலாம். எப்போ வேணும்னாலும் எல்லோர் வாழ்விலும் நிகழும் அப்படிச் சில எத்திக்கும் தித்திக்கும் பலகார நினைவுகள் இதோ...



* இன்னைக்குத் திரும்புன பக்கமெல்லாம் ஸ்கூட்டரும் பைக்கும் இருக்கு. ஆனா சின்ன வயசுல சைக்கிளை கூட நாம அப்படிப் பார்க்க முடியாது. அப்போவெல்லாம் 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்குமா வாடகை சைக்கிள் பிடிச்சு தெருத்தெருவா சுத்தியதை எப்போ நினைச்சாலும் எத்திக்கும் தித்திக்கும்தானே..! #அந்த ரெண்டு ரூவாய்க்கு நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்!

* ஊர் ஊருக்கு கோழிப்பண்ணை மாதிரி பள்ளிக்கூடங்களைத் திறந்து நாள்பூராம் நண்டுசிண்டுகளை போட்டு அடைச்சி வெச்சிக்கிறாங்க. ஆனால் பத்து வருஷத்துக்கு முன்னாடிவரைக்கும் ஸ்கூல் வாசல்ல தள்ளுவண்டில விற்பாங்களே கொய்யா, மாங்கா, எலந்தைப்பழ இத்யாதிகள்... அதை அடிச்சிபிடிச்சி வாங்கி, வெறுப்பேத்துற ஃப்ரெண்ட் கடுப்பாகுற மாதிரி வக்கணை காட்டிச் சாப்பிட்ட நாட்கள் எல்லாம் கண்ணுமுன்னாடி வந்து வந்து போகுதே!

* குளுகுளு அறைக்குள்ளே ஆப்ஸ் கேமும், வீடியோ கேமும் விளையாடி சோர்வடையறாங்க பசங்க இப்போ. ஆனா பம்பரம், கோலி, கிட்டிப்புள், பாண்டினு சீஸனுக்கு ஒரு விளையாட்டு வருமே... அதையெல்லாம் சளைக்காம கண்விழிச்சதுலேர்ந்து இருட்டுற வரை போறபோக்குல வெயிலும் புழுதியும் பார்க்காம போட்டி போட்டு விளையாடிட்டு தாய்க்குலத்துக்கிட்ட தாறுமாறா வசவு வாங்கிக் கொண்டாடுனதெல்லாம் எத்திக்கும் தித்திக்குமா இல்லையா? #யய்யாடி... என்னா அடி?



* யாரோ ஒரு வீட்டுக்காரங்க புது வீடு கட்ட மணலும் செங்கல்லும் வாங்கித் தெருவுல கொட்டி வெச்சிருப்பாங்க. ஆனா அப்போதைய கனவில் இன்ஜினீயர்களா வாழ்ற நம்ம குட்டி வானரப்படை சின்னச்சின்னதா பல வீடுகள் கட்டி செங்கல்லை வெச்சு பஸ் விட்டு விளையாடினா விரட்டியடிப்பாங்க. இப்போ நிஜமாவே இன்ஜினீயரிங் படிச்சிட்டு வேலை கிடைக்காம திரியும்போது ‘நல்லவேலை அப்பவே நாம வீடுகட்டிட்டோம்’னு மனசைத் தேத்திக்கிடவா, இல்லை அப்பவே வருங்காலத்தில் உனக்கு வேலை கிடைக்காதுன்னு நம்ம இன்ஜினீயரிங் மூளைய ஓடஓட விரட்டுனவங்களை தீர்க்கதரிசின்னு நினைச்சி மனசுக்குள்ளேயே புழுங்கவானு அப்பப்போ நெஞ்சம் கொஞ்சம் எகிறி மிதிக்கும்.

* பல வீடுகளில் டாய்லெட் இல்லாம இருந்த காலத்தில், செப்டிக் டேங்க்னா என்னன்னே தெரியாத வயசுல, திண்ணை மாதிரி ஆங்காங்கே சில வீடுகளில் இருக்கிற செப்டிக் டேங்க்தான் ஆடல்பாடல் அரங்கேறும் கலையரங்கம். அங்கே நடந்த டான்ஸ் பெர்பார்மன்ஸையெல்லாம் இன்னிக்கு ஜோடியிலேயும் பார்க்க முடியாது... மானாட மயிலாடலையும் பார்க்கமுடியாது. ஒரே கூத்தா இருக்கும்.

* எந்த ஃப்ரெண்ட் வீட்டுல அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்களோ அந்த வீடுதான் சகலத்துக்குமான சோதனைக்கூடம். ஒரு டிஷ்ஷும் பண்ணத் தெரியாதுன்னாலும் கடுகையும் சோம்பையும் அள்ளிக் கொட்டி தினுசு தினுசா சமையல் செய்து சட்டிச்சோறு கட்டியதும் சுவை அனுபவமே..!

* வீட்டுப்பாடம் கொடுக்கிறது டீச்சர் கடமைன்னா அதை விட்டுக்கொடுக்காம தட்டிக்கழிச்சது நம்ம பெருமை. சிலேட்ல எழுதிட்டு வரச்சொன்னா பேக் உள்ளே வெச்சு, பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வரும்போது அழிஞ்சதாவும், நோட்ல எழுதச்சொன்னா தம்பிப்பாப்பா கிழிச்சிட்டதாவும் கப்சா விட்டது கதகத சமாளிப்பு.

* சாக்குபோக்குச் சொல்லி, கோக்குமாக்கு பண்ணி டீச்சரைக் குழப்பி, திட்டமிடாம செய்த திகுதிகு சேட்டைகள் தித்திக்கும் ஞாபகமே...டியூசன் என்றால் படிக்க மட்டுமில்லை. காதலுக்கு தூதுபோதல், வீட்டுவேலைகளுக்கு ஒத்தாசை செய்தல், குழந்தைகளைப் பராமரித்தல், கடைகளுக்குப் போய்வருதல்னு எக்கச்சக்கமா சில்லறை வேலை பார்த்து டிமிக்கி கொடுத்தது தாறுமாறுன்னா, இதெல்லாம் வீட்டுக்கு தெரியவரும்போது அப்பாவும், அம்மாவும் ரவுண்ட் கட்டி வெளுப்பாங்களே... அப்போ வெளிப்படுறது தக்காளிச்சோறுதான். என்ன ஒண்ணு, எத்திக்கும் கொஞ்சம் ரத்தம் வெளிப்படும். சண்டையில கிழியாத சட்டையா..?

- வெ.வித்யா காயத்ரி
மாணவப் பத்திரிகையாளர்.

NEWS TODAY 21.12.2025