மொய் எழுத புதிய சாப்ட்வேர் சிக்கம்பட்டி இளைஞர் சாதனை
மதுரை மாவட்டத்தில் திருமணம், காதணி விழா போன்ற விழாக்கள் அதிகம். வார விடுமுறை நாட்களில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் ஏதாவது ஒரு விழா நடக்கும். இந்த விழாக்களில் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள் மொய் எழுதுவது வழக்கம். ஆரம்பத்தில் வெறும் சம்பிரதாயமாக இருந்த மொய் எழுதும் கலாச்சாரம் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
செக்கானுாரணி அருகே சிக்கம்பட்டி பி.பி.ஏ., பட்டதாரி பிரபு,33, மொய் எழுதவும், அவற்றை சரி பார்க்கவும் புதிய சாப்ட்வேரை உருவாக்கியுள்ளார். லேப்-டாப், பிரிண்டரில் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி மொய் எழுதுபவர்களின் பெயர் விபரம், விழா நடத்துபவரின் விபரம், தேதி, திருமண மண்டபம், தொகை ஆகியவற்றை ஊர் வாரியாக பிரித்து கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்கின்றனர்.
உடனே மொய் எழுதிய விபரங்கள் அடங்கிய ரசீது வழங்கப்படுகிறது. விழா முடிந்த சில நிமிடங்களில் கலந்து கொண்டவர்கள், மொத்த தொகை குறித்து அறிந்து கொள்ள முடியும். இது விழா நடத்துபவர், மொய் எழுதுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
பிரபு கூறியதாவது: செக்கானுாரணியில் மொபைல் கடை நடத்துகிறேன். எனது குடும்ப விழாவின் போது மொய் எழுதவும், ஒவ்வொரு முறையும் மொய் எழுதியுள்ளவர்களின் லிஸ்ட்டை சரி பார்க்கவும் மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் அனைவருக்கும் பயன்படும் வகையில் புதிய சாப்ட்வேரை உருவாக்கும் எண்ணம் தோன்றியது.
3 மாதங்களாக உழைத்து இந்த சாப்ட்வேரை உருவாக்கினேன். இதன் சோதனை முயற்சியை யாருடைய விழாவில் நடத்துவது. மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமா? என்ற தயக்கம் இருந்தது. இந்நிலையில் எனது நண்பர் மதிவீரசோழனிடம் தெரிவித்த போது பாராட்டி, அவரது குழந்தைகளின் காதணி விழாவில் வாய்ப்பளித்தார்.முதல் முயற்சியே வெற்றி பெற்றது. இந்த விபரங்களை டிவிடி, மெமரி கார்டில் பதிவு செய்து தருகிறேன். மெமரி கார்டை மொபைல் போனில் பொருத்தி எளிதாக விபரங்களை சாரி பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment