"பாலைவனமாகும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்" தேவை உடனடி தீர்வு..!
"போலியான ஆவணங்களின் மூலம் இம்மாநிலத்தில் அமைந்துள்ள சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்புச் செய்யப்படுவதாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள சதுப்பு நிலங்களில் உள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணப் பதிவுகள் ஏதும் பதிவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படாது" எனத் தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் 1985-86-ம் ஆண்டு மத்திய அரசால் சதுப்பு நிலப்பகுதிகளைப் பாதுகாக்க தேசிய சதுப்பு நிலப்பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதில் 94 சதுப்பு நிலங்கள் கொண்டு வரப்பட்டன. 2007-ம் ஆண்டுச் சதுப்புநிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதி எனத் தமிழக அரசு அறிவித்தது. இவ்வாறு அறிவிப்புகள் மட்டும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், ஆக்கிரமிப்புகள் மட்டும் குறைந்தபாடில்லை... அப்படி நம் கண்முண்ணே அழிந்த நிலம்தான் பள்ளிக்கரணை.
சென்னையின் மத்திய கைலாசத்தில் ஆரம்பித்து மேடவாக்கம் வரை சுமார் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்டது, அந்தப் பகுதி. அப்பகுதிதான் தற்போதைய நிலையில் வெறும் 500 ஹெக்டேராகச் சுருங்கிக் காணப்படும் பள்ளிக்கரணை. உள்ளூர்ப் பறவைகளின் வாழிடமாகவும், சீசனுக்கு வந்து செல்லும் வெளிநாட்டுப் பறவைகளுக்கான புகலிடமாகவும் விளங்கியதும் இந்தப்பகுதிதான். சென்னையில் இருப்பவர்கள் தவிர்த்து உலகம் முழுவதும் வசிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் பெரும்பாலோனோருக்குப் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தினைப் பற்றித் தெரிந்திருக்கும். 5,000 ஹெக்டேராக இருந்த நிலப்பகுதி 500 ஹெக்டேராகச் சுருங்க எடுத்துக்கொண்ட கால அவகாசம் கடந்த 35 ஆண்டுகளுக்கு குறைவுதான் என்பது இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
பொதுவாக சதுப்பு நிலப்பகுதி என்பது தனிப்பட்ட ஒரு நிலப்பகுதி அல்ல. கடல்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளுடன் தொடர்புடைய முக்கியமான பகுதியாகும். ஒர் ஏரியின் உபரி நீரோ அல்லது ஆறினுடைய உபரிநீரோ நீண்ட காலமாக ஒரே இடத்தில் சேர்வதால் உருவாகும் நிலப்பகுதிதான் சதுப்பு நிலம். இந்த நிலப்பகுதியானது 'ஸ்பாஞ்ச்' போல செயல்பட்டு நீரை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும் தன்மையை உடையது. இந்த நிலப்பகுதியானது மழைக்காலத்தில் நிலத்துக்கு வரும் தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும். பிறகு வறட்சி நிலவும்போது தண்ணீரை வெளியேற்றி நிலத்தினைத் தானே ஈரப்பதமாக வைத்துக் கொள்ளும். இதனால் பறவைகள் வருகை எந்த நேரமும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் உபரித் தண்ணீரின் வருகை இல்லாதபோது தரைப்பகுதியானது பிளவுபடத் தொடங்கிவிடும். ஆனால், பிளவுபட்ட நிலமானது தொடர்ச்சியாக அப்படியே நீடித்தால் நிச்சயமாக ஒருநாள் பாலைவனமாக மாறிவிடும்.
பள்ளிக்கரணை காண்பதற்காக வரும் சுற்றுலா பயணிகளையும், விடுமுறையை கழிக்க வரும் பொதுமக்களையும் அப்பகுதி மக்கள் அதிகமாக கண்டதுண்டு. அந்தக் காட்சியும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும்தான். அதன் பின்னர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களும், குப்பைகளும் சதுப்பு நிலத்தை அலங்கரிக்கத் தொடங்கின. தமிழக அரசும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. மாநகராட்சி அதிகாரிகளும் 'கண்டும்' காணாமல் இருந்து விட்டனர். இதற்கெல்லாம் காரணம், நமது அதிகாரிகள் சதுப்பு நிலம் என்றால் எதற்கும் உதவாத வீணான நிலம் என்று கருதினர். இதில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் சற்று முக்கியத்துவம் வாய்ந்த நன்னீர் சதுப்பு நிலமாகும். இந்த நன்னீர் சதுப்பு நிலத்தில்தான் பல்லுயிர்களின் பெருக்கம் அதிகமாகக் காணப்படும். இதன் காரணமாக, முக்குளிப்பான்கள் நீர்க்கோழிகள், நாரை, கொக்கு, கரிச்சான், கூழைக்கடா போன்ற 50-க்கும் மேற்பட்ட பறவைகள் வாழும் சூழலைக் கொண்டது. மிகப்பெரிய சதுப்புநிலமாகக் காட்சியளித்த பள்ளிக்கரணை நிலம்தான் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட சதுப்பு நிலங்களில் முதன்மையானதாகவும் ஆகிவிட்டது. சரியாக அழிந்த சதுப்பு நிலத்தின் பரப்பினை கணக்கிட்டால் பத்தில் ஒரு பங்கு நிலம் கூடத் தற்போது இல்லை என்பதே நெற்றிப்பொட்டில் அறையும் நிஜம்.
கடலின் அருகில் அமைந்திருப்பதால் கடல் நீரையும், கடல் பொங்கும் நேரத்தில் நிலத்துக்குள் வரும் நீரைத் தேக்கி வைக்கும் தன்மையும் சதுப்பு நிலத்துக்கு மட்டுமே உண்டு. அத்தகைய விலை மதிப்பில்லாத சதுப்பு நிலமானது சாலைகள், சாக்கடைகள், குப்பைகள் மற்றும் கட்டிடங்கள் என மூச்சு விட முடியாமல் திணறித் தவிக்கிறது. இதுதவிரத் தனியார் நிறுவனங்களின் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் எனப் பல கழிவுகள் சதுப்பு நிலத்தில் கொட்டப்படுகின்றன. நீரை மட்டுமே உறிஞ்சும் 'ஸ்பாஞ்ச்' ஆனது திடக்கழிவுகளை எப்படி உள்வாங்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத மாநகராட்சி இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது. செழிப்புமிக்கச் செல்வத்தைக் கொண்டிருந்த பள்ளிக்கரணையின் இன்றைய நிலை பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. உள்ளூர்ப் பறவைகளும், வெளிநாட்டுப் பறவைகளும் தண்ணீரைத்தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. நிலப்பரப்பும் பிளவுபடத் தொடங்கிவிட்டது. அடுத்து என்ன நிகழப்போகிறது? நீங்கள் நினைப்பதுபோலப் பாலைவனம்தான்...
இதை எப்படி மீட்பது:
சற்றுக் கடினம்தான், சென்னைக்கு வரும் ஆறுகளில் இருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்குத் தண்ணீரை கொண்டு வரும் துணைத் தண்ணீர் வழித்தடங்களைப் பள்ளிக்கரணை வரை தூர்வார வேண்டும். அப்போதுதான் தண்ணீரானது சதுப்பு நிலத்தில் பாயும். நிலமும் தனக்குத் தேவையான தண்ணீரை தக்க வைத்துக் கொள்ளும். மேலும், அருகிலுள்ள ஏரிகள், குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டால் அதனுடைய உபரிநீரும் இந்தச் சதுப்பு நிலத்துக்கு வர வாய்ப்புண்டு. அதே போலப் பள்ளிக்கரணையை ஆக்கிரமித்திருக்கும் குப்பைகளும், கட்டிடங்களும் அகற்றப்பட வேண்டும். மருத்துவ கழிவுகளைக் கொட்டினால் மருத்துவமனைக்குக் கடுமையான தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும். சதுப்பு நிலங்களைச் சுற்றிலும் அதிகமாகக் குப்பை கொட்டும் இடங்களில் கேமராக்கள் வைக்கலாம். கழிவுநீர் கலக்கும் இடங்களைக் கண்டறிந்து தடுக்கலாம். மேலே சொன்னவற்றைத் தவிர்த்துச் சதுப்பு நிலத்தைக் காக்க இன்னும் பல வழிகள் உள்ளன. சதுப்பு நிலங்களுக்குள் நன்னீரானது வந்து தண்ணீரின் அளவு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டாலே உள்ளே இருக்கும் ஆக்கிரமிப்புகள் தானாக வெளியேற ஆரம்பித்துவிடும். மேற் சொன்னவற்றை அதிகாரிகள் செய்ய ஆரம்பித்தாலும் அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் விடுவார்களா என்பது சந்தேகம்தான். இயற்கை ஆர்வலர்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியாக அறிவித்தது. வெற்று அறிவிப்புடன் மட்டுமே நின்றுபோனதுதான் இப்போதைய சீரழிவுக்குக் காரணம்.
இயற்கையினைப் பாழ்படுத்திவிட்டு நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் வருங்காலத்தில் 'பள்ளிக்கரணை பாலைவனம்' என்று சொல்லும் காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேபோல முன்பு வேளச்சேரி ஏரியாக இருந்த நிலம் கட்டிடங்களாக மாறிவிட்டதுபோல இருபது வருடங்கள் கழித்துப் பள்ளிக்கரணை முழுவதும் கட்டிடங்கள் கொண்ட பகுதியாக மாறியிருக்கலாம். இதற்கெல்லாம் ஒரே சாட்சி... இப்போது தண்ணீரில்லாமல் பாலையாக வறண்டுவிட்ட பள்ளிக்கரணை நிலம்தான்... அன்று நன்னீர் குடித்துத் தாகம் தனித்த பறவைகள், இன்று கழிவுநீரை குடித்துத் தாகம் தீர்த்துக் கொள்கின்றன. பறவைகளுக்கு நேர்ந்த இந்த அவலம் மனிதனுக்கு நேரும் என்ற காலம் தூரத்தில் இல்லை. இயற்கையைப் பாழ்படுத்திவிட்ட பிறகு மனிதன் வாழ்ந்து என்ன பயன்? இந்த வருடம் நீடிக்கும் நிலை தொடர்ந்து நீடித்து மழை இல்லாமல் போனால் தமிழ்நாடே தண்ணியில்லா காடாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பள்ளிக்கரணையில் பத்தில் ஒரு பங்கு நிலம் கூட இல்லாத இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வெறும் அறிவிப்பை மட்டும் வெளியிட்டுள்ளது. இப்போது தேவை, அறிவிப்பு இல்லை... உடனடித்தீர்வு.
No comments:
Post a Comment