Saturday, March 18, 2017

பி.எச்டி., ஆராய்ச்சி மாணவர்கள், தங்கள் ஆராய்ச்சி விபரங்களை, பல்கலை இணையதளத்தில், இரண்டு மாதங்களில் பதிவு செய்யும்படி, யு.ஜி.சி., கெடு விதித்துள்ளது. 

பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., கட்டுப்பாட்டில், பல்கலைகள், கல்லுாரிகள் செயல்படுகின்றன. எனவே, யு.ஜி.சி., விதிகளை பின்பற்றாத கல்லுாரி மற்றும் பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய, யு.ஜி.சி.,யால் நடவடிக்கை எடுக்க முடியும்.

அதேபோல், ஆராய்ச்சி படிப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றுக்கு, ஒவ்வொரு பல்கலைக்கும்,
யு.ஜி.சி., மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, ஆராய்ச்சி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, பல்கலைகள் கணக்கு காட்டுகின்றன. இந்த பட்டியலில், பல போலி விபரங்கள் இடம்பெறுவதாக, புகார் எழுந்துள்ளது.
எனவே, அனைத்து பல்கலைகளும், ஆராய்ச்சி படிப்பு விபரங்களை, தங்கள் பல்கலை இணையதளத்தில் வெளிப்படையாக பதிவேற்றம் செய்ய, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. பல்கலை மாணவர்களும், தங்களின் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளை, பல்கலை இணையதளத்தில், இரண்டு மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.

- நமது நிருபர் -
5 நகரங்களில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு

புதுடில்லி: 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, முதல் கட்டமாக 5 நகரங்களில் சோதனை முறையில் புழக்கத்தில் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

5 நகரங்களில்

பார்லி.யில் லோக்சபாவில் எழுத்துபூர்வமான கேள்வி ஒன்றிற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ராம் அர்ஜூன் மெஹ்வால் கூறியது, ஆஸ்திரேலியாவில் தான் முதன்முறையாக பிளாஸ்டிக் நோட்டுகள் பழக்கத்தில் விடப்பட்டன. இதே போன்று இந்தியாவிலும் விரைவில் பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்படும் என கடந்த டிசம்பரில் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சக்கடிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக கொச்சி, மைசூரூ, ஜெய்ப்பூர், ஷிம்லா, புவனேஸ்வர் ஆகிய 5 நகரங்களில் புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் நாடு முழுவதும் புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
30-ந் தேதி முதல் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது

மார்ச் 18, 02:45 AM
நாமக்கல்,

வருகிற 30-ந்தேதி முதல் நடக்கும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் தமிழகத்தில் உள்ள 4 லட்சம் லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

அவசர பொதுக்குழு கூட்டம்

நாமக்கல்-திருச்செங்கோடு ரோட்டில் உள்ள பில்டர்ஸ் மகாலில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். தென் மாநிலங்களின் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து சண்முகப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் 363 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அதில் 117 சுங்கச்சாவடிகள் தென்னிந்தியாவிலும் 41 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டிலும் உள்ளன. அதில் 26 சுங்கச்சாவடிகளில் வரி வசூல் செய்து கொள்வதற்கான ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் வரி வசூல் செய்து வருகின்றனர். இதை கண்டிக்கிறோம்.

லாரிகள் வேலைநிறுத்தம்

மாநில அரசு டீசல் மீது வாட் வரியை உயர்த்தி உள்ளதால் இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தில் டீசல் பிடிக்காமல் வெளிமாநிலங்களுக்கு சென்று டீசல் பிடிக்கிறது. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, உயர்த்தப்பட்ட காப் பீடு கட்டணம், வாகன பதிவு கட்டணம், 15 ஆண்டு கடந்த லாரிகளை அழித்தல், டீசல் மீது வாட் வரி ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டி வருகிற 30-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளோம்.

இதனால் தென்னிந்திய அளவில் சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட மாட்டாது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.600 கோடி முதல் ரூ.800 கோடி மதிப்பிலான வியாபாரம் பாதிக்கப்படும். இது நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 1.5 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் ஓடாது

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்னிந்திய அளவிலான லாரிகள் சம்மேளனம் அறிவித்து உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் 30-ந்தேதி முதல் தமிழகத்தில் இயங்கும் சுமார் 4 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படும். எனவே மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பாதிக்கப்படும் நடைமுறை உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையில் அரசு பொது மருத்துவமனையில் போராடி வந்த பயிற்சி டாக்டர்களின் கோரிக்கைகள் உடனடியாக ஏற்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மார்ச் 18, 05:00 AM
சென்னை,

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரி மாணவர் விஜய்யை (வயது 22), பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் சிகிச்சை பெறும் வார்டுக்கு கூட்டமாக நுழைந்தனர். இதனை தடுத்தபோது பயிற்சி டாக்டர்கள்-உறவினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் தாங்கள் தாக்கப்பட்டதாக கூறி பயிற்சி டாக்டர்கள் 250-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் கேட்டுக்கொண்டதின் பேரில் போராட்டத்தை கைவிட்டு, ஆஸ்பத்திரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பத்திரிகையாளர்களை நோக்கி பயிற்சி டாக்டர்கள் தகாத வார்த்தைகளை கூறியதற்காக ஆஸ்பத்திரி ‘டீன்’ நாராயணசாமி பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

உள்ளிருப்பு போராட்டம்

தொடர்ந்து 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்த பயிற்சி டாக்டர் களுடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, மருத்துவர்கள் இனிமேல் நோயாளிகளால் தாக்கப்படுவதை தடுக்க மருத்துவ தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். இந்த சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது. தாக்கப்படும் மருத்துவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறையும், ரூ.2 லட்சம் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். திரையரங்குகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மருத்துவ தனிச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பயிற்சி டாக்டர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி டீன் நாராயணசாமி, ஆர்.எம்.ஓ. இளங்கோ மற்றும் முதுநிலை பேராசிரியர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

போராட்டம் வாபஸ்

இந்த பேச்சுவார்த்தையில் பயிற்சி டாக்டர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேல்மருவத்தூர் பொறியியல் கல்லூரி மாணவர் விஜய்யை சந்திக்க 15-க்கும் மேற்பட்ட உறவினர்கள் அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கு வந்திருக்கின்றனர். கூட்டமாக வந்த காரணத்தினால் அவர்களை அங்கிருக்கும் பயிற்சி டாக்டர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

இதையடுத்து அந்த பயிற்சி டாக்டர்களை உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதையடுத்து பயிற்சி டாக்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சமாதானமடைந்த அவர்கள் ஆஸ்பத்திரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை தாக்கியதாக திலீப், பாலகிருஷ்ணன், நிஷா, லதா, பத்மபிரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோரிக்கைகள் ஏற்பு

பயிற்சி டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அவர்கள் விடுத்த பல கோரிக்கைகளை ஏற்று இருக்கிறோம். அதன்படி இனி சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஒரு சிறப்பு பாதுகாப்புப்படை உருவாக்கப்பட உள்ளது. இதில் 25 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், மாவட்ட ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கை குழு அமைக்கப்படும். சுகாதார செயலாளர் தலைமையில் இந்த குழு இயங்கும். மாவட்டங்களில் அந்தந்த கலெக்டர் தலைமை தாங்குவார். மாதம் ஒருமுறை இக்குழுவின் சார்பில் கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐகோர்ட்டில் வழக்கு

டாக்டர்கள் போராட்டம் குறித்து ராயப்பேட்டையை சேர்ந்த சி.குமரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். இது அவசர வழக்காக நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

போராட்டத்துக்கான காரணங்களை கேட்டறிந்த நீதிபதி, ‘டாக்டர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து, நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யவேண்டும். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்கள் உள்ளனரா? அவசர சிகிச்சை பிரிவில் எத்தனை டாக்டர்கள் உள்ளனர்? போதிய மருந்து, மாத்திரைகள் உள்ளதா? ஆஸ்பத்திரிக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு? என்பவை குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை 20-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:–

மார்ச் 17, 01:50 AM

சென்னை,
ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.20 ஆயிரம் அளவிற்கு மிகாமல் 50 சதவீத மானியம் வழங்க முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7–வது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளில் உள்ள அனைத்து கூறுகளையும் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும் பொருட்டு உயர் அலுவலர்கள் குழுவினை தற்போது இந்த அரசு அமைத்துள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் இந்த அரசால் நிர்ணயிக்கப்படும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை செயல்படுத்தவதற்காக பட்ஜெட்டில் ரூ.290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக ரூ.116 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேகர்ரெட்டி உள்பட 3 பேருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.

மார்ச் 18, 04:00 AM

சென்னை,

சென்னை தியாகராய நகரை சேர்ந்த சேகர்ரெட்டியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த டிசம்பர் மாதம் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுகள், பல கோடி மதிப்பில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகர்ரெட்டி, சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன், கொல்கத்தாவை சேர்ந்த பரஸ்மால் லோதா ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே, திண்டுக்கல் ரத்தினம், ராமசந்திரன் ஆகியோர் ஜாமீனில் வெளியில் சென்றுவிட்டனர். இந்த நிலையில், சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதி வெங்கடசாமி, விசாரித்து சேகர்ரெட்டி உள்பட 3 பேருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில், 3 பேரும் தலா ரூ.5 லட்சத்துக்கு சொந்த உத்தரவாதமும், அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதமும் வழங்கவேண்டும். தங்களது பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்’ என்று நீதிபதி கூறியுள்ளார்.
தலையங்கம்
பெண்களுக்கு 6 மாதகாலம் மகப்பேறு விடுமுறை
மார்ச் 18, 02:00 AM

இப்போது பெண்கள் ராக்கெட்டில் செல்லும் விஞ்ஞானிகள் வரை அனைத்து பணிகளிலும் கோலோச்சு கிறார்கள். அவர்கள் கால்வைக்காத இடமேயில்லை என்ற வகையில், எல்லா பணிகளிலும் குறிப்பாக ராணுவத்தில்கூட பெண்கள் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு அரசு பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மகப்பேறு என்பது பெண்களுக்கே கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும். மகப்பேறு காலங்களில் நிச்சயமாக பெண்கள் வேலைக்கு வர முடியாது. தற்போது மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறையாக 6 மாதகாலம் வழங்கப்படுகிறது.

ஆனால், தமிழ்நாடு எல்லாவற்றிலுமே முன்னோடி என்றவகையில், ஏற்கனவே மகளிருக்கு வழங்கப்பட்டுவந்த பேறுகால விடுமுறை 6 மாதகாலமாக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தலின்போது மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 6 மாதகாலம் மகப்பேறு விடுமுறையை, 9 மாதகாலமாக அறிவித்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அது நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் அனைத்து முறைசார் பிரிவுகளிலும் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 3 மாத காலத் திலிருந்து அதாவது, 12 வாரகாலத்திலிருந்து சம்பளத்துடன் கூடிய 26 வாரகாலம் விடுமுறை அளிக்க வகைசெய்யும் மசோதா ஏற்கனவே டெல்லி மேல்–சபையில் நிறைவேற்றப் பட்டு, இப்போது பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. மகப்பேறு பலன் (திருத்த மசோதா) என்றழைக்கப்படும் இந்த மசோதாவால், நாடுமுழுவதிலும் உள்ள 18 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள். இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தவுடன், 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக்கொண்ட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு முதல் 2 பிரசவங்களுக்கு 26 வார காலவிடுமுறை வழங்கப்பட வேண்டும். 3–வது பிரசவத்துக்கு 12 வாரகாலம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

இதுமட்டுமல்லாமல், இந்த மசோதாப்படி, குழந்தை களை தத்தெடுக்கும் பெண்களுக்கும், வாடகைத்தாய்மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் 12 வாரகாலம் விடுமுறை அளிக்கப்படவேண்டும். மேலும், 50 அல்லது 50–க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக்கொண்ட நிறுவனங்களில் கண்டிப்பாக ‘குழந்தைகள் காப்பகம்’ இருக்கவேண்டும். பெண்கள் அந்த காப்பகத்திலுள்ள தங்கள் குழந்தைகளை பார்ப்பதற்கு நாளொன்றுக்கு 4 தடவை அனுமதிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு நிச்சய மாக இந்த மசோதா ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால், 10 அல்லது 12 தொழிலாளர்களை மட்டும் கொண்டு நடத்தும் ஒரு சிறுதொழிற்கூடத்தில் 3 பெண்கள் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வேலைபார்ப் பார்கள். சிலநிறுவனங்கள் குறிப்பாக ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்ற சில நிறுவனங்களில் முழுக்க முழுக்க பெண்கள்தான் வேலைபார்ப்பார்கள். அப்படிப்பட்ட சிறு தொழிற்கூடங்களில் பெண்களுக்கு 6 மாதகாலம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டால், அதுவும் சம்பளத்துடன்கூடிய விடுப்பு அளிக்கவேண்டும் என்ற சூழ்நிலையில் அவர்களின் உற்பத்தி நிச்சயமாக பாதிக்கும். வேறு பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டிய கட்டாயத்தில், அத்தகைய நிறுவனங்களுக்கு நிதிநெருக்கடி ஏற்படும். பெண்களுக்கு நிச்சயமாக மகப்பேறுவிடுமுறை அளிக்கவேண்டியது கட்டாயம்தான். ஆனால், சிறுதொழில் நடத்துபவர்களின் நிதிநிலையையும், அந்த நிறுவனங்களின் உற்பத்தியையும் கருத்தில்கொண்டு, மத்திய அரசாங்கம் அதுபோன்ற நேரங்களில் அந்த நிறுவனங்களுக்கும் குறிப்பாக, சிறு நிறுவனங்களுக்கு கண்டிப்பாக நிதிஉதவி அளிக்கவேண்டும். சிலநேரங்களில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தால் இதுபோன்ற செலவுகள், உற்பத்தி பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தினால், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க இதுபோன்ற நிறுவனங்களுக்கு தயக்கம் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே, பெண்கள் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக மத்திய அரசாங்கம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.





PrevNext
March 2017
SuMoTuWeThFrSa26 27 28 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1





Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...