Saturday, March 18, 2017

தலையங்கம்
பெண்களுக்கு 6 மாதகாலம் மகப்பேறு விடுமுறை
மார்ச் 18, 02:00 AM

இப்போது பெண்கள் ராக்கெட்டில் செல்லும் விஞ்ஞானிகள் வரை அனைத்து பணிகளிலும் கோலோச்சு கிறார்கள். அவர்கள் கால்வைக்காத இடமேயில்லை என்ற வகையில், எல்லா பணிகளிலும் குறிப்பாக ராணுவத்தில்கூட பெண்கள் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு அரசு பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மகப்பேறு என்பது பெண்களுக்கே கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும். மகப்பேறு காலங்களில் நிச்சயமாக பெண்கள் வேலைக்கு வர முடியாது. தற்போது மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறையாக 6 மாதகாலம் வழங்கப்படுகிறது.

ஆனால், தமிழ்நாடு எல்லாவற்றிலுமே முன்னோடி என்றவகையில், ஏற்கனவே மகளிருக்கு வழங்கப்பட்டுவந்த பேறுகால விடுமுறை 6 மாதகாலமாக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தலின்போது மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 6 மாதகாலம் மகப்பேறு விடுமுறையை, 9 மாதகாலமாக அறிவித்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அது நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் அனைத்து முறைசார் பிரிவுகளிலும் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 3 மாத காலத் திலிருந்து அதாவது, 12 வாரகாலத்திலிருந்து சம்பளத்துடன் கூடிய 26 வாரகாலம் விடுமுறை அளிக்க வகைசெய்யும் மசோதா ஏற்கனவே டெல்லி மேல்–சபையில் நிறைவேற்றப் பட்டு, இப்போது பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப் பட்டுள்ளது. மகப்பேறு பலன் (திருத்த மசோதா) என்றழைக்கப்படும் இந்த மசோதாவால், நாடுமுழுவதிலும் உள்ள 18 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள். இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தவுடன், 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக்கொண்ட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு முதல் 2 பிரசவங்களுக்கு 26 வார காலவிடுமுறை வழங்கப்பட வேண்டும். 3–வது பிரசவத்துக்கு 12 வாரகாலம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

இதுமட்டுமல்லாமல், இந்த மசோதாப்படி, குழந்தை களை தத்தெடுக்கும் பெண்களுக்கும், வாடகைத்தாய்மூலம் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் 12 வாரகாலம் விடுமுறை அளிக்கப்படவேண்டும். மேலும், 50 அல்லது 50–க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக்கொண்ட நிறுவனங்களில் கண்டிப்பாக ‘குழந்தைகள் காப்பகம்’ இருக்கவேண்டும். பெண்கள் அந்த காப்பகத்திலுள்ள தங்கள் குழந்தைகளை பார்ப்பதற்கு நாளொன்றுக்கு 4 தடவை அனுமதிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு நிச்சய மாக இந்த மசோதா ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால், 10 அல்லது 12 தொழிலாளர்களை மட்டும் கொண்டு நடத்தும் ஒரு சிறுதொழிற்கூடத்தில் 3 பெண்கள் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வேலைபார்ப் பார்கள். சிலநிறுவனங்கள் குறிப்பாக ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்ற சில நிறுவனங்களில் முழுக்க முழுக்க பெண்கள்தான் வேலைபார்ப்பார்கள். அப்படிப்பட்ட சிறு தொழிற்கூடங்களில் பெண்களுக்கு 6 மாதகாலம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டால், அதுவும் சம்பளத்துடன்கூடிய விடுப்பு அளிக்கவேண்டும் என்ற சூழ்நிலையில் அவர்களின் உற்பத்தி நிச்சயமாக பாதிக்கும். வேறு பணியாளர்கள் நியமிக்கப்படவேண்டிய கட்டாயத்தில், அத்தகைய நிறுவனங்களுக்கு நிதிநெருக்கடி ஏற்படும். பெண்களுக்கு நிச்சயமாக மகப்பேறுவிடுமுறை அளிக்கவேண்டியது கட்டாயம்தான். ஆனால், சிறுதொழில் நடத்துபவர்களின் நிதிநிலையையும், அந்த நிறுவனங்களின் உற்பத்தியையும் கருத்தில்கொண்டு, மத்திய அரசாங்கம் அதுபோன்ற நேரங்களில் அந்த நிறுவனங்களுக்கும் குறிப்பாக, சிறு நிறுவனங்களுக்கு கண்டிப்பாக நிதிஉதவி அளிக்கவேண்டும். சிலநேரங்களில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தால் இதுபோன்ற செலவுகள், உற்பத்தி பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தினால், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க இதுபோன்ற நிறுவனங்களுக்கு தயக்கம் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே, பெண்கள் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக மத்திய அரசாங்கம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.





PrevNext
March 2017
SuMoTuWeThFrSa26 27 28 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1





No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024