Sunday, June 4, 2017



அதிகரிப்பு!
மின்னணு பண பரிவர்த்தனை...கை கொடுக்கும் ஆதார்;இன்டர்நெட்


புதுடில்லி, மத்திய அரசின், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், மின்னணு முறை யிலான பணப் பரிவர்த்தனை பெருமளவு உயர்ந்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு தவிர, மொத்தம், 100 கோடி பேருக்கு, 'ஆதார்' எண் வழங்கப்பட்டதும், சில தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், 'மொபைல் இன்டர்நெட்' கட்டணத்தை கணிசமாக குறைத்ததும், மின்னணு பணப் பரிவர்த்தனை உயர்ந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.





கடந்த, 2016 நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது உட்பட, பல்வேறு அறிவிப்புகளை, மத்திய அரசு வெளியிட்டது.

இதையடுத்து, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,க ளுக்கு நேரடியாக சென்று பணம் எடுப்பதில் சிக்கல் நிலவியது; மக்கள், மணிக்கணக்கில் வங்கிகளில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. எனவே, ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்வது வேகமெடுத்தது. செல்லாத ரூபாய்

நோட்டு அறிவிப்பு வெளியான, 2016 நவ., முதல், மின்னணு பணப் பரிவர்த்தனை கணிச மான அளவு அதிகரித்துள்ளது. இதை, உலகளவில், இன்டர்நெட் பயன்பாடு குறித்த புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. சமீபத் தில் வெளியான, அந்த புள்ளி விபரங்கள் படி, செல் லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், இந்தியாவில், இன்டர்நெட் இணைப்புகள் எண்ணிக்கை, 35.5 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகை யில், இது, 28 சதவீதம் அதிகம். இதில், மொபைல் போன் இன்டர்நெட் பயன்பாடு, 80 சதவீதம் உயர்ந்துள்ளது.

தேசிய பணப் பரிவர்த்தனை அமைப்பு மூலம் நடந்த நேரடி பணப் பரிவர்த்தனைகளின் மதிப்பு, 2,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 'இ - வாலட்' மூலம், 21.5 கோடி பணப் பரிவர்த்தனைகள் நடந் துள்ளன; முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டால் இது, 350 சதவீதம் அதிகமாகும். மின்னணு பணப் பரி வர்த்தனை அதிகரித்துள்ளதற்கு, அதிகளவில், ஆதார் எண் வழங்கப் பட்டதும் காரணமாக கூறப்படு கிறது. ஆதார் எண்ணுடன் இணைந்த, 'மொபைல் ஆப்' வழியாக, மின்னணு பணப் பரிமாற்றம் அதிகரிக்க, இது ஏதுவாகி உள்ளது.

2,500 கோடி பரிவர்த்தனை

கடந்த, 2016 - -17ம் நிதியாண்டில், மொத்தம், 300 கோடி டிஜிட்டல்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன; நடப்பு நிதியாண்டில், 2,500 கோடி டிஜிட்டல்
பரிவர்த்தனைகள் நடந்துள்ளன
*மொபைல் போனில் உள்ள, 'ஆப்'கள் மற்றும் 'இ - வாலட்' மூலம், தினமும், 200 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடக்கிறது
* அரசு சார்பில் உருவாக்கப்பட்ட, 'பீம் ஆப்' 2 கோடி பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளது
* 'டெபிட் கார்டு' மூலம், 2015 - 16ம் நிதியாண் டில், 1.58 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை கள் நடந்துள்ளன; நடப்பு நிதியாண்டில், 3.3 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது
* செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், ஆன்லைனில் பொருட்களை வாங்குவதும் கணிசமாக உயர்ந்துள்ளது* 'ஆன்லைன்' ரயில் மற்றும் பஸ் டிக்கெட் முன்பதிவு, சினிமா டிக்கெட் முன்பதிவு போன்றவையும் அதிகரித் துள்ளன.

கட்டணம் குறைப்பு

சில தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், 'பைல் இன்டர்நெட்' பயன்பாட்டிற்கான கட்ட ணத்தை, சமீபகாலமாக கணிசமாக குறைத்தன. இதன் காரணமாக, மொபைல் போன் பயன்படுத் தும் பலர், மின்னணு பணப் பரிமாற்றம் செய்ய ஏதுவாகின. குறிப்பாக, 'மொபைல் ஆப்' மூலம் பணப் பரிமாற்றம் செய்வது கணிசமாக உயர்ந்துள்ளது.
மாநில செய்திகள்
சென்னையில் கோலாகலம் 94-வது பிறந்த நாள்-சட்டப்பேரவை வைர விழாவையொட்டி கருணாநிதிக்கு புகழாரம்



தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா, 94-வது பிறந்த நாள் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

ஜூன் 04, 2017, 05:45 AM
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவும், அவரது 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர் பணியை கவுரவிக்கும் வகையில் சட்டப்பேரவை வைர விழாவும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழா மேடை தமிழக சட்டப்பேரவை வடிவில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவுக்கு, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கினார். கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் துரைமுருகன் அனை வரையும் வரவேற்றார்.

கருணாநிதிக்கு புகழாரம்

சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. மஜித் மேனன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.

விழாவில், பேசிய தலைவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அரசியல் பயணத்தை சுட்டிக்காட்டி புகழாரம் சூட்டி பேசினார்கள்.

பங்கேற்ற தலைவர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தலைவர்கள் அனைவரும் கைகளை பற்றிக்கொண்டு உயர்த்திக் காண்பித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.

ராகுல்காந்தி

விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, “கருணாநிதி மேலும் பல பிறந்த நாட்களை காண வேண்டும் என்றும், நல்ல உடல்நலத்தோடு அவர் இருக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். கருணாநிதி கோடானு கோடி தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்படுகிறார். இதுவே அவருக்கு மிகப்பெரிய பலம். அவர் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதற்கு காரணம், மக்கள் மீது அவர் வைத்திருக்கும் நேசமும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நேசமும் தான். கருணாநிதி பேசும்போது, அது அவர் குரலாக மட்டும் அல்லாமல், தமிழக மக்களின் குரலாகவும் இருக்கிறது” என்றார்.

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் பேசும்போது, “கருணாநிதி 60 ஆண்டு காலம் சட்டசபை உறுப்பினராக பணியாற்றிய பெருமைக்குரியவர். இதன் மூலம் புதிய அத்தியாயத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். அகில இந்திய அளவில் கருணாநிதி படைத்த சரித்திரத்தை யாரும் தகர்க்க முடியாது. இதுவரை யாரும் இந்த சாதனையை படைக்கவில்லை. சட்டசபை தேர்தலில் ஒருமுறைகூட தோற்காத தலைவராக அவர் இருக்கிறார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்து இருக்கிறார். இப்படிப்பட்ட அரசியல் அனுபவம் இந்தியாவில் வேறு யாருக்கும் இருக்காது” என்றார்.

பாரத ரத்னா விருது

புதுச்சேரி மாநில முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, “தமிழுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுக்கொண்டு இருப்பவர் கருணாநிதி. தமிழ் மக்களுக்காக அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியவர். கின்னஸ் புத்தகத்தில் எழுதப்படக்கூடிய தலைவராக கருணாநிதி இருக்கிறார். மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்” என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை குழு தலைவர் டெரிக் ஓ பிரையன் எம்.பி. பேசும்போது, “மம்தா பானர்ஜியின் கொள்கையும், கருணாநிதியின் கொள்கையை எதிரொலிக்கிறது. தமிழகத்தில் தமிழ் இருக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புவதுபோல, வங்காளத்தில் பெங்காலி இருக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி உறுதியாக இருக்கிறார்” என்றார்.

இந்திய அரசியலில் முக்கியமானவர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசும்போது, “கருணாநிதியின் அரசியல் பணி பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும். 60 ஆண்டு காலம் சட்டசபையில் உறுப்பினராக இருந்திருக்கிறார். இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருந்தவர். அரசியல், சினிமா, பத்திரிகை துறையில் முத்திரை பதித்தவர். சேலம் உருக்காலையை தனியார் மயம் ஆவதை தடுத்தவர் கருணாநிதி” என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி பேசும்போது, “தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், அமைச்சராகவும் பல்வேறு நிலைகளில் 60 ஆண்டுகள் திறம்பட பணியாற்றி மக்களின் அன்பை பெற்றவர் கருணாநிதி. அதுமட்டுமல்லாமல் பல்வேறு காலக்கட்டங்களில் இந்திய அரசியலிலும் முக்கிய பங்காற்றி உள்ளார். அவருடைய 94-வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன்” என்றார்.

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா பேசும்போது, “எனது குடும்பத்தினரின் ஈடுபாடு, கருணாநிதியின் குடும்பத்தினருடன் 3 தலைமுறையாக உண்டு. எனக்கு ஒரு தேர்தலை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். ஆனால், 60 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாகவும், முதல்-அமைச்சராகவும் கருணாநிதி இருந்துள்ளார். யாராலும் அசைக்க முடியாத இந்த சாதனையை இந்திய அளவில் செய்துள்ளார். அவரைப் போன்ற தலைவரும், தி.மு.க. போன்ற கட்சியும், தற்போது இந்தியா எதிர்கொள்ளும் சவால்களை சந்திப்பதற்கு தேவையாக உள்ளது” என்றார்.

நோபல் பரிசு கிடைக்க வேண்டும்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசும்போது, “கருணாநிதி தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் பன்முக ஆளுமை கொண்ட தலைவர். கருணாநிதி உடல்நலம் பெற்று அவருடைய பேனா மீண்டும் எழுத வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் நல்ல ஆரோக்கியம் பெற்று மீண்டும் செயல்பட வேண்டும்” என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் பேசும்போது, “கருணாநிதிக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு முன்னதாக பாரத ரத்னா விருதை மத்திய அரசு உடனடியாக வழங்கி, இதுவரை தமிழகத்துக்கு செய்து வந்த துரோகத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. மஜித் மேனன் பேசும்போது, “இந்தியாவே இந்த விழாவில் இணைந்துள்ளது. தேசிய நலனுக்காக குரல் கொடுத்த மாபெரும் தலைவர் கருணாநிதி. வருகின்ற தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறும். தமிழகத்தில் அமையும் அரசு மதவாதிகளிடம் இருந்து இந்த நாட்டை மீட்கும்” என்றார்.

இறுதியாக, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில், முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் தலைவர்கள், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, கவிஞர் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், டி.கே.ரங்கராஜன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயாளர் ஈஸ்வரன், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா, சென்னை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு, தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், இலக்கிய அணி புரவலர் இந்திரகுமாரி, மகளிரணி பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துசோழன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் அபுபக்கர், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு, கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதாஜீவன், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், முன்னாள் எம்.பி. ஜெயதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Saturday, June 3, 2017

அன்புக்கு இன்னொரு பெயர் அப்துல் ரகுமான்! #RIP
RAJASEKARAN K

தமிழ்மகன்

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது, அந்த இளைஞன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். சற்று தயங்கி வந்து, ‘‘நீங்கள் தமிழ்மகன் சார் தானே?’’ என்றான்.

எனக்கும் போன பிறவியில் பார்த்த மாதிரி புகைபோல நினைவுக்கு வந்தது... ‘‘நீங்..?’’ நீ என்பதா, நீங்கள் என்பதா?

‘‘மேகநாதன் சார்.’’

அப்படி ஒரு பெயரை என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. அந்தப் பெயரைச் சொன்னால் எனக்கு சட்டென நினைவுவரும் என்ற நம்பிக்கையில் அவர் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டேயிருந்தார்.

‘‘இந்திரஜித் சார்!’’

‘‘அட நீயா?’’

‘‘ஆமா சார். பெயரை மாத்திக்கிட்டேன்.’’

அவன் பெயர் இந்திரஜித். அவனுக்கு மேகநாதன் எனச் செல்லப் பெயர் வைத்தது கவிக்கோ அப்துல் ரகுமான்.





கலாநிதி மாறன் அனைத்துப் பக்கங்களும் வண்ணத்தில் என்ற அறிவிப்போடு ‘தமிழன்’ நாளிதழ் தொடங்கினார். இது நடந்தது 1991-ம் ஆண்டில்.

அந்த நாளிதழின் இணைப்பிதழாக மூன்று இதழ்கள் உருவாகின. அதற்குச் சிறப்பாசிரியராக அப்துல் ரகுமான் இருந்தார். அந்த மூன்று இதழ்களைக் கவனிக்கும் பொறுப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் சுகுமாரன் ஆகியோரோடு நானும் இருந்தேன். அங்கு அலுவலக உதவியாளராக இருந்தவர்தான் இந்திரஜித்.

சொன்ன வேலையைச் சரியாகச் செய்யாதவர். விளையாட்டுத்தனமானவர். ஒருமுறை அப்துல்ரகுமான், அவரிடம் சிகரெட் வாங்கிவரச் சொன்னார். அவர் சொன்ன பிராண்டுக்குப் பதில் வேறு ஒன்றை வாங்கிவந்தார் இந்திரஜித். அடுத்த முறை சரியாகச் சொல்லி அனுப்பினார். மீண்டும் வேறு ஒரு சிகரெட்டை வாங்கிவந்தார். கலைஞர் வருவதற்குள் ஒரு சிகரெட் பிடித்துவிட்டுத் தயாராகலாம் என்ற பதற்றம் கவிஞருக்கு. உதவியாளரோ, மூன்றாவது முறையும் தவறாக வாங்கிவந்தார். கோபத்தில் கவிஞர், ‘‘அறிவு உனக்குக் குறைவாக இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டார். முட்டாள் என்று சொல்லவில்லை.

உதவியாளரோ, அவர் திட்டினார் என்பதையே உணர்ந்தார் இல்லை. எங்களுக்கும்தான் தெரியவில்லை. ஆனால், கவிஞர் அன்று வெகுநேரம் யோசனையில் ஆழ்ந்தவராக இருந்தார். அவரை அழைத்து, ‘‘ஒரு தடவை சொன்னா மனசுல உள் வாங்கிக்கணும். அதனால்தான் உன்னைத் திட்டிட்டேன்’’ என்றார். வழக்கமான சிரிப்போடு, ‘‘எப்ப சார்?’’ என்றான் இந்திரஜித். கவிஞருக்கு அப்போதுதான் மனசே லேசானது.

கவிஞர் அப்துல் ரகுமானோடு சுமார் ஆறு மாதங்கள் பழகினேன். பண்பான மனிதர். உலக இலக்கியங்கள் குறித்து நிறைய பேசுவார். கண்ணதாசனோடு தனக்கிருந்த நட்பு, கலைஞரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய உழைப்பு என நிறைய...



கோபப்பட்டுப் பார்த்ததில்லை. அதாவது, அவருடைய வார்த்தைகளிலிருந்து அதைக் கண்டுபிடிப்பது கடினம். இரண்டு மூன்று நாள்கள் வரிசையாகத் தாமதமாக வந்தேன். ‘‘சீக்கிரமா வந்தாத்தான் நல்லது’’ என்று மட்டும் சொன்னார். ‘குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி’ அது.

இந்திரஜித், தன் பெயரை மேகநாதன் என மாற்றிக்கொண்டதும் மொழிப்பற்றினால் அல்ல; அவருடைய அன்புக்காகத்தான்!

அப்துல் ரகுமான் கவிதைகள் சிலவற்றை இங்கே நினைவுகூர்வோம்.

தேர்தல்

புறத்திணை சுயம்வர மண்டபத்தில்

போலி நளன்களின் கூட்டம்.

கையில் மாலையுடன்

குருட்டு தமயந்தி.


சிலப்பதிகாரம்

பால் நகையாள்

வெண்முத்துப் பல்நகையாள்

கண்ணகியாள் கால் நகையால்

வாய்நகைபோய்க்

கழுத்து நகை இழந்த கதை!

காதல்!

நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்

என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
எம்.ஜி.ஆர் வழி அல்ல; என்.டி.ஆர் வழி!' -தீவிர ஆலோசனையில் ரஜினிகாந்த்
ஆ.விஜயானந்த்




' நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் எப்போது?' என்ற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. " ஆகஸ்ட் மாதத்துக்குள் அவர் உறுதியாகக் கட்சியைத் தொடங்குவார். கடந்த சில நாள்களாக அவருக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்' என்கின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும், அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி பதில் கூறுவதும் பின்னர் அந்த அறிவிப்பு நீர்த்துப் போவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. அதேபோல், கடந்த மாதம் ரசிகர்களை நேரில் வரவழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டவர், ' சூழ்நிலை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன். போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்' என அதிரடியைக் கிளப்பினார். அடுத்து வந்த சில நாட்களில் இயக்குநர் ரஞ்சித்தின் 'காலா' படத்தில் ரஜினி நடிக்கும் தகவல்கள் வெளியானது. தற்போது காலா படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருக்கிறார். அங்கிருந்தபடியே, தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் மணிக்கணக்கில் விவாதித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். " அரசியல் பயணத்தைத் தொடங்குவதில் உறுதியாக இருக்கிறார் ரஜினி. அதற்கான சாதக, பாதகங்களை ஆய்வு செய்து வருகிறார். தற்போதுள்ள மாநில அரசு ஸ்திரத்தன்மை இல்லாமல் இருப்பதை தனக்கு சாதகமானதாகப் பார்க்கிறார். தற்போது ரசிகர் மன்றங்களை கிராமம்தோறும் வலுப்படுத்தும் வேலைகளைத் துரிதப்படுத்தி இருக்கிறார். மன்றத்தின் விதிகளுக்கு முரணாக நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். காலா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அரசியல் பணிகளில் வேகமாக இறங்குவார்" என விவரித்த ரசிகர் மன்ற மூத்த நிர்வாகி ஒருவர், தொடர்ந்து நம்மிடம் சில விஷயங்களைப் பட்டியிலிட்டார்.

" ரசிகர்களுடன் சந்திப்பு முடிவடைந்த நாளில் இருந்தே, தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினி. ஓரிரு நாட்களுக்கு முன்பு அரசியல் பிரமுகர் ஒருவரிடம், நாடாளுமன்றத் தேர்தல், மக்கள் செல்வாக்கு உள்பட பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். விவாதத்தில் ரஜினி பேசும்போது, ' அரசியலுக்கு வருவது பெரிதல்ல. மக்களின் பெரும்பான்மை ஆதரவைத்தான் எதிர்பார்க்கிறேன். 50 சதவீதத்துக்கும் மேல் மக்கள் ஆதரவு கிடைத்தால், தலைமைப் பதவியை ஏற்பது குறித்து ஒரு முடிவுக்கு வரலாம். அதற்கும் குறைவான ஆதரவு கிடைத்தால், என்னுடைய கட்சியின் சார்பில் மற்றவர்களை ஆட்சி அதிகாரத்தில் முன்னிறுத்துவேன். எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கிய நேரத்தில் 30 சதவீதம் வரையில் ஆதரவைப் பெற்றார். இந்த அளவு ஆதரவைவிட, என்.டி.ராமாராவைப் போல் 50 சதவீத ஆதரவை எதிர்பார்க்கிறேன். அப்படிக் கிடைத்தால், ஆட்சி பொறுப்பில் அமரவும் தயாராக இருக்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து ரஜினியிடம் பேசிய அவரது நண்பர் ஒருவர், ' தேர்தலில் போட்டியிட விரும்பினால், எதிர் எதிர் சமூகங்கள் வலுவாக இருக்கும் பகுதிகளில் போட்டியிடுங்கள். அப்போதுதான் இரண்டு சமூகத்தினரின் வாக்குகளும் சம அளவில் உங்களுக்குக் கிடைக்கும். உதாரணமாக, வடக்கே குடியாத்தத்தில் வன்னியர்களும் அட்டவணை சமூகத்து மக்களுக்கு சம எண்ணிக்கையில் உள்ளனர். இங்கே நீங்கள் போட்டியிடும்போது பொதுவான தலைவராக உருவெடுக்க முடியும். கூடவே, தெற்கில் ராஜபாளையம் அல்லது சிவகாசி போன்று ஏதேனும் ஒரு தொகுதியைத் தேர்வு செய்யலாம். இரண்டு வெவ்வெறு தொகுதிகளில் ஒரேநேரத்தில் போட்டியிடும்போது, மாநிலம் முழுவதும் உங்கள் ரசிகர்கள் கடுமையாக தேர்தல் வேலை பார்ப்பார்கள். உங்கள் படம் வெளியாகும்போது, என்ன உற்சாகத்தில் இருக்கிறார்களோ, அதே உற்சாகத்தை தேர்தல் பணிகளில் காட்டுவார்கள்' என விவரித்துவிட்டு, ' நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கும்போது, சிறுபான்மை வாக்குகள் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அதுவே, சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதுதான் சரியானதாக இருக்கும். இதே நிலைப்பாட்டைத்தான் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் பல நேரங்களில் எடுத்துள்ளனர்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டார் ரஜினி. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அரசியல் பிரவேசம் குறித்த உறுதியான தகவல் வெளியாகும்" என்றார் விரிவாக.

" தமிழ்நாட்டில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் செய்யாத பணிகளைச் செய்ய வேண்டும் என்பதுதான் ரஜினியின் பார்வையாக இருக்கிறது. மாநிலத்தின் அனைத்து கிராமங்களிலும் தன்னுடைய கால்தடம் வலுவாக பதிய வேண்டும் என ஆசைப்படுகிறார். யாரையும் பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய அவர் விரும்பவில்லை. பாசிட்டிவ் அரசியல் பற்றித்தான் தன்னை சந்திக்க வருபவர்களிடம் பேசுகிறார். ' என்னை எதிரியாக நினைப்பவர்கள் நினைத்துக் கொள்ளட்டும். நான் யாருக்கும் எதிரி அல்ல' என்பதுதான் அவருடைய தாரக மந்திரம். மற்றவர்கள் தன்னை எதிரியாக நினைப்பதையே மூலதனமாகப் பார்க்கிறார். 'அனைத்து சமூகத்து மக்களுக்கும் பொதுவான தலைவராகக் காட்டிக் கொள்வதற்கும் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த செயல்களைச் செய்வதற்கும் இது சரியான தருணம்' என நினைக்கிறார். அதற்கு வெள்ளோட்டமாக, தனக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடம் மணிக்கணக்கில் விவாதிக்கிறார்" என்கிறார் ரஜினியை அண்மையில் சந்தித்த அரசியல் பிரமுகர் ஒருவர்.

'எந்தவொரு செயலிலும் தீவிரம் காட்டுவதற்கு முன்பு ஆழ்ந்து யோசிப்பவர்கள், அதனை செயல்படுத்துவதிலும் தாமதம் செய்வார்கள்' என்பார்கள். ரஜினியின் அரசியல் பிரவேசமும் அதையொட்டியே அமைந்திருக்கிறது. ' இந்தமுறை ரசிகர்களை அவர் ஏமாற்றுவதற்கு வாய்ப்பில்லை' என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.

இவர்களும் இந்தியர்கள்தான்!

By ஆசிரியர்  |   Published on : 03rd June 2017 01:29 AM  |   
யுனெஸ்கோ நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, இந்தியாவிற்குள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு வேலைவாய்ப்புத் தேடிக் குடியேறி இருப்பவர்களின் எண்ணிக்கை, இந்திய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு. வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புத் தேடிப் போகிறவர்களின் எண்ணிக்கையைவிட இது பல மடங்கு அதிகம். இப்படி வேலை தேடி இடம்பெயர்பவர்கள்தான் இந்தியப் பொருளாதாரத்தையே இயக்கி வருகிறார்கள்.
தங்கள் சொந்த ஊரிலிருந்து வேறு ஊர்களுக்கு வேலைவாய்ப்புத் தேடி இடம் பெயர்கிறவர்களில் பெரும்பாலோர், அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபடுபவர்கள். படித்து, நிரந்தர வேலை கிடைத்து இடம்பெயர்பவர்கள் எந்தவிதப் பிரச்னையையும் எதிர்கொள்வதில்லை. ஆனால், அதிகம் படிக்காத தினக்கூலி வேலைகளிலும், விவசாய, கட்டடப் பணி உள்ளிட்ட வேலைகளிலும் ஈடுபடுகிற இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது.
இப்படி இடம்பெயர்ந்தவர்கள் அரசின் சமூகநலத் திட்டங்களில் பயனாளிகளாக இருப்பதில்லை. அதுமட்டுமல்ல, இடம்பெயர்ந்த பெண்கள், குழந்தைகளின் நிலைமை அதைவிடப் பரிதாபம். அவர்கள் எல்லாவிதக் கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள் என்பதும், குறைவான கூலி கூடத் தரப்படாமல் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும்தான் உண்மை நிலை.
இன்றைய சூழலில், இந்தியாவிலுள்ள எந்தவொரு நகரமும், இடம்பெயர்ந்து வந்திருக்கும் வெளியூர் தொழிலாளிகளின் உதவியில்லாமல் இயங்க முடியாது. அன்றாட வீட்டு வேலைகளில் தொடங்கி, உணவு விடுதிகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர், குடியிருப்புக் காவலாளிகள், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்கள் என்று அனைத்துத் தரப்பு உழைக்கும் வர்க்கத்தினரும் இடம்பெயர்ந்து வெளியூர்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வந்திருப்பவர்கள்தான். இவர்களது உழைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நகர்ப்புற வாசிகள், தங்கள் சொந்த ஊரை விட்டு வயிற்றுப் பிழைப்புக்காகப் பட்டணம் வந்திருக்கும் இடம்பெயர்ந்தவர்களின் நிலைமை குறித்து சற்றேனும் கவலைப்படுகிறார்களா என்றால் இல்லை.
இந்தியாவிலுள்ள எல்லா நகரங்களிலும் இதுதான் நிலைமை என்றாலும், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் சென்னையில், அதுவும்கூட கூவம், அடையாறு கரையோரங்களிலும், கடற்கரைப் பகுதியிலும் மட்டும்தான் குடிசைப் பகுதிகள் இருந்த நிலைமை மாறி, தமிழகத்தில் தாலூகா தலைநகர்வரை குடிசைப் பகுதிகள் காணப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
குடிசைப் பகுதிகள் காளான்களாகத் தோன்றுவது போதாதென்று, நகர்ப்புறங்களில் தெருவோரம் வசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், அவர்களது உழைப்பையும் சேவையையும் பயன்படுத்திக் கொண்டு, மறுபுறம் தெருவோரம் வசிப்பவர்களும், குடிசைப்புறவாசிகளும் நகரத்தின் அழகையும், சுகாதாரத்தையும் கெடுப்பதாகவும் கருதும் நகர்ப்புறவாசிகளின் இரட்டை முகம் குறித்து வேதனைதான் பட முடிகிறது.
இடம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு வேலைத் தேடி வருபவர்களைக் குறை கூறுவதை விட்டுவிட்டு, அவர்கள் அடிப்படை வசதிகளுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இதுகுறித்து 60 ஆண்டுகளுக்கு முன்னால் 'சுயராஜ்யா' இதழில் ராஜாஜி விரிவாக எழுதியிருக்கும் கட்டுரை, இன்றளவுக்கும் பொருத்தமானதாக இருப்பது, அந்த மூதறிஞரின் தீர்க்கதரிசனத்தை எடுத்துரைக்கிறது.
இடம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு வருபவர்களைவிட, அதிகமாக பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள்தான். கல்வி கற்கும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது என்றாலும், கூலி வேலை, கட்டட வேலையில் ஈடுபட்டிருப்பவர்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி வழங்குவது நடைமுறை சாத்தியமாகவில்லை. தினந்தோறும் தமிழகத்தில் ஏதாவது ஓர் இடத்தில் ஓர் கட்டடத் தொழிலாளர் மரணம் அடைகிறார். அப்படி இருக்கும்போது, கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருப்போரின் குழந்தைகளின் கதி என்ன என்பது குறித்து சிந்திக்கத் தோன்றுகிறது. விபத்துகளில் அந்தக் குழந்தைகள் சிக்காமல் தப்பினாலும், சிமெண்ட், மணல், செங்கல் துகள்களால் நுரையீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது. நடமாடும் மருத்துவமனைகள், குழந்தைகள் பாதுகாப்பு, தங்குமிடம், கல்வி வசதி போன்றவை எல்லாம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் கூறப்படுகின்றனவே தவிர, நடைமுறையில் பயனளித்திருப்பதாகத் தெரியவில்லை.
சட்டப்படி பெரிய கட்டடப் பணிகளில் 50 பெண்களுக்கு மேல் பணியாற்றினால் குழந்தைகள் காப்பகம் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதில்லை. ஏதாவது விபத்து ஏற்பட்டால் மருத்துவமனையில்கூட அவர்களை அனுமதிக்க முடியாது. காரணம், இடம்பெயர்ந்து, முகவரி இல்லாமல் இருக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை, பருவமழையும் பொய்த்து, ஆறுகளும் வறண்டு கிடக்கும் நிலையில், கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து நகர்ப்புறங்களுக்கு வேலை தேடிச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டிருக்கிறது. இவர்களது பிரச்னைகளை விசாரித்து அறிந்து, தீர்வு காண்பதற்காகவே தனியாக ஒரு துறை அமைக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்னையை சரியான முறையில் அணுகாமல் போனால், வருங்காலத்தில் சமூக விரோதிகளை உருவாக்குவதற்கு நாம் வழிகோலுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

குறைந்துவரும் பொறியியல் கனவு

By ஐ.வி. நாகராஜன்  |   Published on : 03rd June 2017 01:26 AM  |   
ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கத்தின் கனவாக பொறியியல் படிப்பு இருந்தது. பொறியியல் படிப்பு மீதான மக்களின் மோகத்தால் மழையில் முளைத்த காளான்கள் போல் நாடு முழுவதும், குறிப்பாக, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் வேகமாக பரவின. ஆனால் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு கல்வியின் தரம் அதிகரிக்கவில்லை என்பதுதான் வேதனை.
பல பொறியியல் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. பாடம் நடத்துவதற்கு தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் பற்றாக்குறை. இதன் விளைவாக பொறியியல் பட்டதாரிகளின் 70 சதவீதம் பேர் தொழில் திறன் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.
இந்த அளவிற்குத் தான் பொறியியல் கல்லூரிகளின் தரம் இருக்கிறது. அதேபோல் ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்தவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் தொழில் நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரிகளை புறக்கணிக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் பொறியியல் படித்தவர்களே முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழகத்தில் சமீப ஆண்டுகளாக பொறியியல் படிப்பின் மீதான மோகம் குறைந்து அறிவியல், கலை மற்றும் வணிகவியல் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 527.
இதில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்து 481. இதில் பூர்த்தி செய்யப்பட்ட இடங்களின் எண்ணிக்கை ஓரு லட்சத்து 56 ஆயிரத்து 867. இதனால் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 614 இடங்கள் காலியாக இருந்தன.
குறிப்பாக தமிழகத்தில் இருந்த 148 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 20 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இது போல பொறியியல் படிப்பு முடித் து தமிழ்நாட்டில் மட்டும் 70 சதவீதம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்.
இந்திய அளவில் தமிழகம் தான் இதில் முதலிடம் வகிக்கிறது என்பது பெரும் வேதனை. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் 7.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளியில் வருகின்றனர். கலை, அறிவியல் பட்டதாரிகள் எண்ணிக்கை 15 லட்சத்திற்கும் மேல் ஆகும்.
தமிழ்நாட்டில் மட்டும் 2 லட்சம் பேர் இந்த படிப்பை முடித்து விட்டு வெளியில் வருகின்றனர். இவர்களை தொடர்ந்து 1.5 லட்சம் பேர் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வெளியில் வருகின்றனர்.
அவர்களுக்கு அரசு தரப்பில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக பொறியியல் படித்த மாணவர்களுக்கு பொதுப்பணித்துறையில் 700, நெடுஞ்சாலைத் துறையில் 972, மின் வாரியத்தில் 1650 பொறியாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் இப்போதைய நிலையில் காலியாக உள்ளன.
அந்த பணியிடங்களை நிரப்பவும் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இருப்பினும் அவர்கள் அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
குறிப்பாக 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்த நாளுக்கு முந்தைய நாள் வரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 377 பொறியியல் பட்டதாரிகள் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர் என தமிழக வேலைவாய்ப்பு அலுவலக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இப்படி அரசு மற்றும் தனியார் துறைகளில் போதுமான வேலை பெற முடியாதது மட்டுமின்றி, பி.இ. படித்தும் சாதாரண வேலையில் ரூ.5,000 சம்பளத்திற்கு பணியாற்றும் கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் இன்னும் பல லட்சம் பேருக்கு இப்படி வேலை பாதிப்பு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இவர்களுக்கான வேலைவாய்ப்பை உடனடியாக உருவாக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போதைய தாராளமய சூழலில் கார்பரேட் நிறுவனங்கள் மின்னனு, மின்னியல், ஆட்டோ மொபைல் போன்ற பல துறைகளிலும் இந்தியா கால் பதித்து வருகிறது. இவற்றில் இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதை பயிற்சி என்ற அளவிலேயே தந்து அவர்களின் உழைப்பை சுரண்டுகின்றன.
இவ்வாறு பயிற்சியாளராக சேரும் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு உள்ளேயே தள்ளப்படுகின்றனர். இத்தகைய நிலை சென்னை, பெங்களூரு, ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் சர்வ சாதரணமாக நடைபெறுகிறது. இதன்மூலம் தொழிலாளர் நல சட்டங்களையும், இந்திய அரசியல் நடைமுறைகளையும், மிக சாமார்த்தியமாக அந்த நிறுவங்கள் மீறுகின்றன.
அதே நேரத்தில் மிகப்பெரிய சலுகைகளை மத்திய மாநில அரசுகள் மூலம் பெற்று நமது பணத்தை பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு அள்ளி செல்கின்றன.
நடப்பு கல்வியாண்டில் (2017 - 18) தமிழகத்தில் முதல் கட்டமாக 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே 44 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50 சதவீதம் வரை குறைக்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக நிகழாண்டும் பொறியியல் இடங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. ஏற்கெனவே 527-ஆக இருந்த பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 510-ஆக குறைய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பொறியியல் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை இல்லாததால் பொறியியல் கல்லூரிகள் பல இழுத்து மூடப்பட்டு வருகிறது. பல கல்லூரிகள் விற்பனைக்கும் தயாராய் உள்ளன. போதிய மாணவர் கோரிக்கை இல்லாத கல்லூரிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன.
அரசு ஆக்கப்பூர்வமாக யோசித்தால் திறன் வாய்ந்த கல்வியாளர்களையும் அற்புதமான கல்விச்சாலைகளையும் உருவாக்க முடிவும். அதற்கு மத்திய மாநில அரசுகள் முன்வருமா?

முற்றுப்பெற்றது ஒரு சகாப்தம்!

By முனைவர் ஜெ. ஹாஜாகனி  |   Published on : 03rd June 2017 01:28 AM 
Haja
Ads by Kiosked
உலகம் வியக்கும் வகையில் தமிழை உச்ச உயரத்திற்கு உயர்த்திய ஆளுமைகள் காலந்தோறும் இருந்துள்ளனர். நம் காலத்து ஆளுமையில் அத்தகையத் தகுதியை மிகுதியாய் பெற்று திகழ்ந்த மேதை கவிக்கோ அப்துல் ரகுமான் என்றால் மிகையில்லை.

வாழ்வின் ஒவ்வொரு கணமும் கவித்துவம் ததும்ப, தத்துவச் சுடர் வீசி நிறைவாழ்வு வாழ்ந்த அவர், நேற்று (மே 2, 2017) தன் சுவாசிப்பையும் வாசிப்பையும் நிறுத்தி பிரியா விடை பெற்றுள்ளார்.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், 9.11.1937 அன்று உயிரெழுத்தால் உதித்த கவிக்கோ அப்துல் ரகுமானின் தந்தை ஹதியும், பாட்டனார் அஷ்ரஃபும் மிகச் சிறந்த உருதுக் கவிஞர்கள். தான் பயின்ற மதுரை தியாகராசர் கல்லூரியை தனது இரண்டாம் கருப்பை என்பார் கவிக்கோ.
கவித்துவம் இவரது பால்யத்திலேயே பரிணமித்துள்ளது. பள்ளி மாணவனாக 14 வயதில் இவர் எழுதிய 'காதல் கொண்டேன்' என்ற கவிதை 'ஆனந்த விகடன்' இதழில் பிரசுரமாகியுள்ளது. இவருக்குள் ஊற்றாய்ச் சுரந்த கவியுணர்வைக் காட்டாற்று வெள்ளமாய்க் கட்டுடைத்து பிரவகிக்கச் செய்தது ரமலான் மாதத்து சஹர் (வைகறைக்கு முந்தைய) பொழுது பாடல்களே.
நோன்பு நோற்பதற்காக மக்களை துயிலெழுப்பி, உணவுண்ணச் செய்வதற்காக, மதுரை சந்தைப் பேட்டையில் பாடும் சிறுவர் குழாமுக்குத் தலைமை ஏற்று, தந்தையும் பாட்டனும் எழுதித் தந்தப் பாடல்
களைத் தெருக்களில் பாடிச்சென்றபோது, கவியுணர்வும் பெரும் தாக்கத்தோடு வளர்ந்ததாக 'கவிதை என் பிதுரார்ஜிதம்' (1994) என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
அதே ரமலான் மாதத்தில், கவிக்கோ தன் மூச்செழுத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டது வருத்தம் தோய்ந்த பொருத்தம் ஆகும்.
'நான் கவிதை சமைப்பதற்காக படைக்கப்பட்டேன். காலம் என்னை அப்படித்தான் உருவாக்கியது. அட்சயப் பாத்திரம்போல இளம்வயதிலிருந்தே நான் கவிதைகளைப் பிச்சையாகப் பெற்றேன். கவிதைகளையே பரிமாறினேன். கவிதைக்குப் புறம்பான எதுவும் என்னில் கலந்துவிடாமல் சூழல் என்னைப் பத்திரமாகக் காப்பாற்றியது' என்று குறிப்பிடும் கவிக்கோ, தமிழிலக்கிய உலகிற்குச் செய்துள்ள பங்களிப்பு வியக்கத் தக்கதாகும்.
இவரது முதல் கவிதைத் தொகுப்பான 'பால் வீதி' தமிழில் மீமெய்மையியல் (sur-realism)  கோட்பாட்டின் முதல் பரிசோதனை முயற்சியாகும்.
இத்தொகுப்பு ஏற்படுத்திய அதிர்வும், அதன் விளக்கமாக இவர் எழுதிய 'மரணம் முற்றுப்புள்ளி அல்ல' என்ற கட்டுரைத் தொகுப்பும் புதுமைத் திறத்தால் புல்லரிப்பு தருபவை. 'சையத் அப்துல் ரகுமான் எழுத்துலகிலும், பேச்சுலகிலும் இணையற்றவராய் திகழும் திறன் பெற்றவர்' என்று இவரை மாணவப் பருவத்தில் வாழ்த்தி எழுதியுள்ளார் செந்தமிழ் மாமணி சி. இலக்குவனார். அ.கி. பரந்தாமனார், ஒளவை சு. துரைசாமியார் உள்ளிட்ட பேரறிஞர்களிடம் பிரியத் தமிழ் பெற்று அதைப் பிரியாத வரங்கொண்டார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
தமிழ்க் கவிதைக்கு முதல் சாகித்ய அகாதெமி விருது, இவரது 'ஆலாபனை' தொகுப்புக்காக, 1999-இல் கிடைத்தது.
கவிஞராய், எழுத்தாளராய், பேராசிரியராய், தத்துவ ஞானியாய், அரசியல் விமர்சகராய், புதிய தலைமுறையின் வழிகாட்டியாய், பல்வேறு பரிமாணங்கள் கொண்ட கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழ் இலக்கிய உலகுக்குச் செய்துள்ள பங்களிப்புகள் ஏராளம். கவிதையின் வடிவத்திலும், கவியரங்க வடிவத்திலும் ரசனைக்குரிய மாற்றங்களைச் செய்தார்.
ஜப்பானிய ஹைகூ வடிவக் கவிதையை தமிழில் அறிமுகம் செய்து வெகுஜன இதழ்களில் கட்டுரை எழுதி, ஏராளமானோரை ஹைகூ எழுதவும் வைத்தார்.
அரபியிலும், பாரசீகம் மற்றும் உருது மொழியிலும் புகழ்பெற்ற 'கஸல்' என்னும் கவிதை வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். 'நஜ்ம்' என்ற இசைப்பா வடிவையும், 'இரு சீர் ஓர் அடி' என்ற புதிய கவி வடிவத்தையும் தமிழுக்குத் தந்தார்.
'புதுக்கவிதையில் குறியீடு' என்ற புதிய தளத்தில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
இந்தியாவின் பிற மொழிகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் புகழ்பெற்றுத் திகழும் கவிதைகள், இலக்கிய இயக்கங்கள் குறித்து எழுதி, உலகச் சாளரத்தைத் தமிழர்க்குத் திறந்து வைத்தார்.
1984-ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்ட இந்திய ஒப்பிலக்கியம் (Competitive Indian Literature)  என்ற தொகுப்பில் தமிழ் நவீன கவிதை இலக்கியம் குறித்து, Tamil Modern Policy  என்ற தலைப்பில் விரிவான கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
உலகைத் தமிழுக்கும், தமிழை உலகுக்கும் அறிமுகப்படுத்தும் அற்புதப் பணியை ஆழமாகவும், அழகாகவும் செய்தவர் கவிக்கோ.
தொலைக்காட்சியில் இவர் நடத்திய 'கவிராத்திரி' நிகழ்வு புதுமையுள்ளம் கொண்ட கவிஞர்களை, இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டியது.
கவியரங்கங்கள் அவருக்கு மகுடம் சூட்டின. கவியரங்கக் கவிதைகளுக்கு அவர் சிம்மாசனம் தந்தார். கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் நடந்த கவியரங்கங்கள் அனைத்திலும் பங்கேற்ற ஒரே கவிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'வெற்றி பல பெற்று நான்
விருது பெற வரும்போது
வெகுமானம் என்ன
வேண்டும் எனக் கேட்டால்
அப்துல்
ரகுமானைத் தருக என்பேன்'

என்று கலைஞர் கருணாநிதி இவரைப் பற்றி பாடிய கவிதை பிரசித்தமானது. கலைஞர் கருணாநிதி மண்ணுக்கு வந்த ஜூன் 3-ஆம் தேதியன்று அவரின் காதலரான கவிக்கோ மண்ணுக்குள் போவது சோகம் ததும்பும் முரண்.
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் முப்பதாண்டுகள் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றிய காலத்தில், இளைய உள்ளங்களில் இலக்கிய வேளாண்மையை முழு வீச்சோடு செய்துள்ளார்.
'அம்மி கொத்த சிற்பி எதற்கு' என்று கேட்டு திரைப்படத்திற்குப் பாடல் எழுதுவதை மறுத்தவர். திரையுலக மாமேதைகளின் பெரும் மதிப்பைப் பெற்றவர்.
'அந்தி ஏன் சிவக்கிறது', 'சுடுகாட்டில் ஒரு தொட்டில்' 'இலவசத்திற்கு ஒரு விலை' என வித்தியாசமான தலைப்புகளை மாணவர்களுக்குத் தந்து, செம்மையாக எழுத வைத்து அவற்றை நூலாக்கி வெளிவரச் செய்தவர்.
மீரா, இன்குலாப், மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், சிலம்பொலியார் உள்ளிட்ட இலக்கிய உள்ளங்களோடான இவரது அனுபவங்களைக் கேட்கும்போது, இளம் தலைமுறைக்கு புலன்களெல்லாம் பூப்பூக்கும்.
தமிழ்கூறு நல்லுலகமெங்கும் தலைமீது வைத்துக் கொண்டாடப்பட்ட காலத்திலும், கல்லூரி பேராசிரியராக, அப்போதைய வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி நிர்வாகம் அவருக்குத் தந்த வலிமிகு அனுபவங்களை, அவருடனான கடைசி சந்திப்பில் என்னிடம் விரிவாகக் கூறினார்.
அவர் பொழிந்த பாசமும், ஊட்டிய அறிவும், உணர்வும், உள்ளம் கலங்கும் நேரத்திலெல்லாம் உந்துசக்திகளாகி உதவியுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு, கவிஞர் யுகபாரதி, இசாக் ஆகியோருடன் அவரை நலம் விசாரிக்கப் போனேன். சிறுநீரகக் கட்டிக்கு சிகிச்சை பெற்ற வலிக்கு மத்தியிலும், தான் குறிப்பெடுத்து வைத்திருந்த மிகப் பழைய ஏட்டைத் தேடிப் பிடித்து எடுத்து வந்து, மலையாளக் கவிஞர் வயலார் உள்ளிட்டோரின் வசீகரக் கவிதைகளை வாசித்துக காட்டினார்.
அவரது உடல்நிலை குறித்து ஓரிரு வரிகளே சொன்னார். அன்றைய உரையாடல் முழுவதும், இலக்கியத்தாலும், சமூக அக்கறையாலும் கனத்தது.
அபாரமான ரசனை உடையவர் அப்துல் ரகுமான். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, குடிக்கும் தேநீர், கேட்கும் இசை, பூசும் மணம் அனைத்திலும் அவரிடம் ரசனை ததும்பும்.
கீழக்கரையில் ஒரு நிகழ்ச்சிக்காக அவருடன் பயணம். அதிகாலையில், தொழுது விட்டு மீண்டும் தொடர் வண்டியில் தூக்கத்தைத் தொடர்ந்தபோது, கவிக்கோ எழுப்பினார். வாருங்கள் என்றார். உடன் சென்றேன், ரயில் பெட்டியின் கதவைத் திறந்து, வயல்வெளிகளின் மீது கூட்டங் கூட்டமாய்க் கொக்குகள் பறப்பதைக் காட்டினார்.
'யான் பெற்ற இன்பம் பெறுக யாவரும்' என்பது அவரது நல்லுள்ளம்.
தனது கவித் தோன்றல்களை ஒரு தாய்க்கோழி போல அரவணைத்தவர் அவர்.
'இலக்கியங்களின் மூலம் இந்திய இணைப்பு' என்ற மிகப் பெரிய நூலில்,
தமிழ்க் கவிஞர்களின் பிரதிநிதியாக கவிக்கோ அப்துல் ரகுமானிடம் பேட்டி கண்டிருப்பார் எழுத்தாளர் சிவசங்கரி.
'நூலகங்களில் பல மணி நேரம் செலவிட்டு பல நூற்களைப் படிக்க முடியாதவர்கள், அப்துல் ரகுமானிடம் உரையாடினால் அந்த அறிவையும், அனுபவத்தையும் பெறலாம் என்று குறிப்பிட்டிருப்பார்.
உரையாடலை அவர் நிறுத்தியிருக்கலாம். அவர் எழுத்துகளோ, நம்மிடம் உரையாடிக் கொண்டேயிருக்கும்.