Friday, July 7, 2017

மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையை நடத்தலாம் : ஐகோர்ட் தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

பதிவு செய்த நாள் 06 ஜூலை
2017
23:33

புதுடில்லி: தமிழகத்தில், மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்யும் வகையில், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட், தடை விதித்துள்ளது. இதன் மூலம், 1,000த்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் துவங்கும்.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், 50 சதவீத இடங்கள் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கும், 50 சதவீத இடங்கள் மாநில அரசு இட ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு : அதில், மாநில அரசுக்கான, 50 சதவீத இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக, 50 சதவீத இடங்கள், கிராமப்புறங்கள், மலைப்பகுதியில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில், தமிழகத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கிராமப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையின் போது சலுகை மதிப்பெண் இல்லையென இந்திய மருத்துவ கவுன்சில் விதி கூறுகிறது.
இந்நிலையில், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக, மே, 6ல், புதிய அரசாணையையும், அதன் அடிப்படையில் மே, 7-ல் தகுதிப் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டது. அதில், தமிழக அரசு ஒதுக்கீட்டான, 1,066 இடங்களில், 999 இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.கிராமப்புறங்களில் சேவையாற்றிய டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது; அதன்படி கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த அரசாணை மற்றும் கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி, விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் பிரணிதா உள்ளிட்ட பலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த ஐகோர்ட், மருத்துவ மேற்படிப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை மற்றும் தகுதிப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன், புதிய தகுதிப் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டது.

மேல் முறையீடு : இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நேற்று அளித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: மாணவர்கள் தொடர்பான வழக்குகளில், இது போன்று மாணவர் சேர்க்கை நடைமுறையை ரத்து செய்து தீர்ப்பு அளிக்கக் கூடாது. இந்த வழக்கில், மாணவர் சேர்க்கையை ரத்து செய்யும் வகையில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.

கிராமப்புறங்களில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் அரசாணை செல்லும். கிராமப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையின் போது சலுகை மதிப்பெண் இல்லையெனக் கூறும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. பிற விதிகளைப் பின்பற்றி மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்தலாம்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.வழக்கின் விசாரணை, செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையில் வருவாய்த்துறையினர் மோதல் : 22 பேர் மீது வழக்கு: 2 தாசில்தார்கள் 'சஸ்பெண்ட்'

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
00:33

சிவகங்கை: சிவகங்கையில் வருவாய்த்துறையினர் இடையே ஏற்பட்ட மோதலில் 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இரண்டு தாசில்தார்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று முன்தினம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழியிடம் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வெளியே வந்தபோது அவர்களிடம் வருவாய்த்துறை அலுவலர் சங்க விடியல் டீமைச் சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கினர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன், மாவட்டச் செயலாளர் தமிழரசன், துணைத் தலைவர் அசோக்குமார் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழரசன் புகாரில் விடியல் டீமைச் சேர்ந்த மகேந்திரன், பாலாஜி, பாலகுரு, ஆனந்தபூபாலன் உட்பட 8 பேர் மீதும், மகேந்திரன் புகாரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த குமரேசன், பார்த்தீபன், கண்ணன், மூக்கையன், அசோக்குமார், தமிழரசன் உட்பட 14 பேர் மீதும் சிவகங்கை டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். இதுதொடர்பாக விடியல் டீமைச் சேர்ந்த பறக்கும் படை தாசில்தார் பாலகுரு, வனத்திட்ட தாசில்தார் பாலாஜி ஆகியோரை நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்தது.

மேலும் வருவாய் அலுவலர்துறை அலுவலர் சங்க நிர்வாகிகளை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்றுமுன்தினம் இரவில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு வரவில்லை. ஊழியர்கள் போராட்டத்தால் பணிகள் ஸ்தம்பித்தன.
அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது: கலெக்டர் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதலுக்கு சாட்சியே கலெக்டர் தான். தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்காமல், காயமடைந்த தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலெக்டர் அறைமுன் இருந்த 'சி.சி.டி.வி.,' கேமராவில் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. அதனை அழித்துள்ளனர். இதற்கு போலீசாரும் உடந்தை. உரிய நடவடிக்கை எடுக்காத எஸ்.பி.,யை கண்டிக்கிறோம். தாக்கியோரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும். கலெக்டரை மாறுதல் செய்ய வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

புதிய பிரச்னையைகிளப்பும் போலீசார்

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல போலீசார் தடை விதித்தனர். '144 தடை' உத்தரவு போன்று நிருபர், அதிகாரிகளை கூட அனுமதிக்கவில்லை. அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அனுமதித்தனர். ஆனால் கடைசி வரை மக்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலிடத்து உத்தரவால் தடை போட்டதாக போலீசார் கூறினர். இதனால் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இறந்த டாக்டர் உயிரோடு இருப்பதாக சான்று : டாக்டர் மீது வழக்கு

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
00:18

மதுரை: மதுரையில் இறந்த டாக்டர் முரளி உயிரோடு இருப்பதாக கூறி சான்று அளித்து இடவிற்பனைக்கு உதவியதாக, டாக்டர் கணேசன் மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை ஒத்தக்கடை ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் டாக்டர் முரளி. நரசிங்கத்தில் வீட்டு மனை விற்பனைக்காக திருவாதவூர் திராவிடமணிக்கு,67, ஜெனரல் பவர் பத்திரம் கொடுத்தார். இந்நிலையில் அவர் கடந்த ஏப்.,28 ல் இறந்தார். இதைதொடர்ந்து வீட்டு மனைகளை விற்க திட்டமிட்ட திராவிட மணி, மேலுார் டாக்டர் கணேசனிடம் முரளி உயிரோடு இருப்பதாக 'ஆயுள் சான்று' பெற்றார். இதைதொடர்ந்து, திருவாதவூர் செழியன், பார்த்தசாரதி மனைவி ஜீவாவுக்கு திராவிட மணி கிரைய பத்திரம் செய்து கொடுத்தார். இதுகுறித்து ஒத்தக்கடை சார்பு பதிவாளர் நாகசுப்பிரமணியன் புகாரில் பத்திர எழுத்தர் ராஜமாணிக்கம்,49, டாக்டர் கணேசன் உட்பட 5 பேர் மீது ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்தார். திராவிடமணி, ராஜமாணிக்கம் கைது செய்யப்பட்டனர்.
பிரச்னைகளை சமாளிக்கும் திறனுள்ளவரை தனி அலுவலராக நியமிக்க அரசு உத்தரவு

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
00:49

'பிரச்னைகளை எளிதாக கையாளுபவர்களையும், அனுபவம் வாய்ந்தவர்களையும், தனி அலுவலர் பொறுப்புடன் கூடிய, வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2016 அக்., 24ல் நிறைவடைந்தது. அதன்பின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய அளவிலான அனைத்து ஊராட்சிகளுக்கான, தனி அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வறட்சி பாதிப்பு : மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தனி அலுவலர்களுக்கு, 'செக் பவர்' வழங்கப்பட்டு உள்ளது. பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், அந்தந்த செயல் அலுவலர் மற்றும் கமிஷனர்கள், தனி அலுவலர்களாக பணியாற்றுகின்றனர்.

ஒன்றிய அளவிலான பிரச்னைகளையும், நிர்வாகப் பணிகளையும், ஒன்றிய கமிஷனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.இருப்பினும், ஊராட்சி தலைவர்கள் கவனித்து வந்த பொறுப்புகளை சுமப்பது, பெரும் சிரமமாக உள்ளது. வறட்சி பாதிப்பு, குடிநீர், தெரு விளக்கு, திடக்கழிவு மேலாண்மை, ஊரக வேலை உறுதித் திட்டம் என, ஊராட்சி தலைவர் கவனித்த பொறுப்புகளை, திறன் வாய்ந்த தனி அலுவலர்கள் மட்டுமே, பிரச்னையின்றி கவனிக்க முடிகிறது.

சுற்றறிக்கை : நிதியாண்டு துவங்கிய பின், வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிட மாற்றம் நடந்தது. அவர்களில், நீண்ட அனுபவம் வாய்ந்தவர்கள், பணிகளுக்கு திரும்பினர்.அனுபவம் இல்லாதவர்கள், தனி அலுவலர் பொறுப்புடன் கூடிய, வட்டார வளர்ச்சி அலுவலராக செயல்பட்ட போது, பலரால், மக்கள் பிரச்னைகளை சமாளிக்க முடியவில்லை.இதையடுத்து, அனுபவம் வாய்ந்தவர்களை மட்டுமே, தனி அலுவலர் பொறுப்புடன் கூடிய, வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்க வேண்டும் என, தமிழக அரசு, கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியது. இதன்படி, மீண்டும் பணியிட மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே, மக்கள் பிரச்னைகளை எளிதாக கையாண்ட, அனுபவம் வாய்ந்தவர்கள், தனி அலுவலர் பொறுப்புடன் கூடிய, வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளதாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 அசல் சான்றிதழ் 10ம் தேதி வினியோகம்

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
00:47

சென்னை: 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, 1௦ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வந்ததும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி, மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்தனர்.இந்நிலையில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், வரும், 10ம் தேதி காலை, 10மணி முதல், பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தனித்தேர்வர்கள், தேர்வு எழுதிய பள்ளிகளில், சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது
நாக்' தர மதிப்பீடு பெறாவிட்டால் கல்லூரி அங்கீகாரம் ரத்து

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
00:04

ஆசிரியர் பயிற்சி படிப்பு நடத்தும், பி.எட்., கல்லுாரிகள், 'நாக்' தர மதீப்பீடு பெறாவிட்டால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு, ஆசிரியர் பணிக்கான, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை, கல்வியியல் கல்லுாரிகள் நடத்துகின்றன. இந்த கல்லுாரிகளுக்கு, தேசிய கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., மூலம் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், பி.எட்., கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை மூலம் இணைப்பு தரப்படுகிறது. இந்நிலையில், ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கான விதிகளில், என்.சி.டி.இ., மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, அங்கீகாரம் பெற்ற அனைத்து பி.எட்., கல்லுாரிகளும், அங்கீகாரம் பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குள், தேசிய தர மதிப்பீட்டு நிறுவனமான, 'நாக்' அமைப்பின் தர மதிப்பீடு பெற வேண்டும். அவ்வாறு பெறாத கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், தமிழகத்திலுள்ள, ௭௫௦க்கும் மேற்பட்ட பி.எட்., கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர், ரவீந்திரநாத் தாகூர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நர்சிங் மாணவி மர்ம சாவு 'ராகிங்' கொடுமையா?

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
02:17

வேலுார்: மாணவி மர்மமான முறையில் துாக்கில் பிணமாக தொங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.

வேலுார், பாகாயத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 56; தொழிலதிபர். இவரது மகள் நளினி, 18, சி.எம்.சி., நர்சிங் கல்லுாரி விடுதியில் தங்கி, முதலாமாண்டு நர்சிங் படித்து வந்தார். நேற்று காலை, நளினி கல்லுாரிக்கு செல்லவில்லை. காலை, 9:00 மணிக்கு, சக மாணவியர், அவரது அறைக்கு சென்று பார்த்த போது, நளினி துாக்கில் பிணமாக தொங்கினார். மாணவியின் குடும்பத்தினர், நளினி சாவில் மர்மம் இருப்பதாகவும், 'ராகிங்' கொடுமையால், தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் புகார் அளித்தனர்.

NEWS TODAY 20.08.2026