Friday, July 7, 2017

மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையை நடத்தலாம் : ஐகோர்ட் தடையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

பதிவு செய்த நாள் 06 ஜூலை
2017
23:33

புதுடில்லி: தமிழகத்தில், மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை ரத்து செய்யும் வகையில், சென்னை ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட், தடை விதித்துள்ளது. இதன் மூலம், 1,000த்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் துவங்கும்.
இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில், 50 சதவீத இடங்கள் அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கும், 50 சதவீத இடங்கள் மாநில அரசு இட ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு : அதில், மாநில அரசுக்கான, 50 சதவீத இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக, 50 சதவீத இடங்கள், கிராமப்புறங்கள், மலைப்பகுதியில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில், தமிழகத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கிராமப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையின் போது சலுகை மதிப்பெண் இல்லையென இந்திய மருத்துவ கவுன்சில் விதி கூறுகிறது.
இந்நிலையில், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக, மே, 6ல், புதிய அரசாணையையும், அதன் அடிப்படையில் மே, 7-ல் தகுதிப் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டது. அதில், தமிழக அரசு ஒதுக்கீட்டான, 1,066 இடங்களில், 999 இடங்கள் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.கிராமப்புறங்களில் சேவையாற்றிய டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது; அதன்படி கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த அரசாணை மற்றும் கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி, விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் பிரணிதா உள்ளிட்ட பலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த ஐகோர்ட், மருத்துவ மேற்படிப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை மற்றும் தகுதிப் பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன், புதிய தகுதிப் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டது.

மேல் முறையீடு : இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நேற்று அளித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: மாணவர்கள் தொடர்பான வழக்குகளில், இது போன்று மாணவர் சேர்க்கை நடைமுறையை ரத்து செய்து தீர்ப்பு அளிக்கக் கூடாது. இந்த வழக்கில், மாணவர் சேர்க்கையை ரத்து செய்யும் வகையில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.

கிராமப்புறங்களில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கும் தமிழக அரசின் அரசாணை செல்லும். கிராமப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையின் போது சலுகை மதிப்பெண் இல்லையெனக் கூறும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. பிற விதிகளைப் பின்பற்றி மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்தலாம்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.வழக்கின் விசாரணை, செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024