Friday, July 7, 2017

சிவகங்கையில் வருவாய்த்துறையினர் மோதல் : 22 பேர் மீது வழக்கு: 2 தாசில்தார்கள் 'சஸ்பெண்ட்'

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
00:33

சிவகங்கை: சிவகங்கையில் வருவாய்த்துறையினர் இடையே ஏற்பட்ட மோதலில் 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இரண்டு தாசில்தார்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று முன்தினம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழியிடம் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வெளியே வந்தபோது அவர்களிடம் வருவாய்த்துறை அலுவலர் சங்க விடியல் டீமைச் சேர்ந்த சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கினர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன், மாவட்டச் செயலாளர் தமிழரசன், துணைத் தலைவர் அசோக்குமார் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழரசன் புகாரில் விடியல் டீமைச் சேர்ந்த மகேந்திரன், பாலாஜி, பாலகுரு, ஆனந்தபூபாலன் உட்பட 8 பேர் மீதும், மகேந்திரன் புகாரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த குமரேசன், பார்த்தீபன், கண்ணன், மூக்கையன், அசோக்குமார், தமிழரசன் உட்பட 14 பேர் மீதும் சிவகங்கை டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். இதுதொடர்பாக விடியல் டீமைச் சேர்ந்த பறக்கும் படை தாசில்தார் பாலகுரு, வனத்திட்ட தாசில்தார் பாலாஜி ஆகியோரை நிர்வாகம் 'சஸ்பெண்ட்' செய்தது.

மேலும் வருவாய் அலுவலர்துறை அலுவலர் சங்க நிர்வாகிகளை தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்றுமுன்தினம் இரவில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திற்கு வரவில்லை. ஊழியர்கள் போராட்டத்தால் பணிகள் ஸ்தம்பித்தன.
அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது: கலெக்டர் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதலுக்கு சாட்சியே கலெக்டர் தான். தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்காமல், காயமடைந்த தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலெக்டர் அறைமுன் இருந்த 'சி.சி.டி.வி.,' கேமராவில் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. அதனை அழித்துள்ளனர். இதற்கு போலீசாரும் உடந்தை. உரிய நடவடிக்கை எடுக்காத எஸ்.பி.,யை கண்டிக்கிறோம். தாக்கியோரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும். கலெக்டரை மாறுதல் செய்ய வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

புதிய பிரச்னையைகிளப்பும் போலீசார்

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல போலீசார் தடை விதித்தனர். '144 தடை' உத்தரவு போன்று நிருபர், அதிகாரிகளை கூட அனுமதிக்கவில்லை. அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அனுமதித்தனர். ஆனால் கடைசி வரை மக்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலிடத்து உத்தரவால் தடை போட்டதாக போலீசார் கூறினர். இதனால் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024