Wednesday, September 6, 2017

6 வகையான விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிம சோதனை: காவல்துறை விளக்கம்

Published : 06 Sep 2017 14:30 IST

சென்னை



6 விதிமுறை மீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும் என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அசல் வாகன ஓட்டுநர் வாகன உரிமம் புதன்கிழமை முதல் கேட்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது, இது பற்றிய விவரம் வருமாறு:

வாகன ஓட்டிகள் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் காவல்துறையினரோ அல்லது போக்குவரத்துத் துறை அதிகாரிகளோ கேட்கும்போது அதைக் காட்ட வேண்டும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

அசல் வாகன ஓட்டுநர் உரிம கட்டாயத்துக்கான தடையை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் இன்று முதல் அசல் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை கையில் வைத்திருந்தால் தொலைந்துவிடும் வாய்ப்பும், பாதுகாப்பு இல்லாதா சூழ்நிலையும் இருப்பதாக சுட்டிக்காட்டினர். ஆனால் வாகன ஓட்டிகள் அனைவரிடமும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்பதோ, இதற்காக தனி சோதனையோ நடத்தப்போவதில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களிடம் மட்டுமே அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் குழு தெரிவித்துள்ளது.

அத்தகைய 6 விதிமீறல்களில் ஈடுபட்டு போலீஸாரிடம் சிக்குபவர்களிடம் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்பட உள்ளதால் வாகன ஓட்டிகள் பயமின்றி பயணிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

6 விதிமீறல்கள் என்னென்ன என்பது குறித்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்:

1. மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல்

2. அதி வேகமாக வாகனம் ஓட்டுதல்

3. மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்

4. வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு பாரம் ஏற்றுதல்

5. போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லுதல்

6. சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றுதல்

மேற்கூறிய 6 விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். அசல் ஓட்டுநர் உரிமத்தை சோதனை செய்வதற்காக தனியாக வாகன சோதனை நடைபெறப் போவதில்லை. வழக்கமான சோதனையே நடைபெறும்.

இந்தச் சோதனை மூலம் பறிமுதல் செய்யப்படும் வாகன ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகனச் சட்டப்படி வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் குறைந்தது 3 மாதங்களாவது தற்காலிக நீக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: அன்புமணி
Published : 06 Sep 2017 15:19 IST

சென்னை





அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை தமிழக அரசே நேரடியாக நடத்த வேண்டும்; கல்விக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கல்லூரிகளின் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு, அதற்கு மாறாக மாணவர்கள் போராட்டத்தை அடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த நேரத்தில் அப்பல்கலைக்கழகத்தை அரசே கையகப்படுத்தி நடத்த வேண்டும் என்ற யோசனையை முதன்முதலில் முன்வைத்தது பாமகதான். அதன்படியே அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், அதனுடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் அரசுடைமை ஆக்கப்பட்டன. ஆனால், அதன் பயன்கள் இன்று வரை மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைக்கவில்லை. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானதாகும்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை நிர்வகிப்பதற்காகவே தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதுதான் முறையாகும். ஆனால், தமிழக அரசோ அதை செய்யாமல் அந்த இரு கல்லூரிகளையும் அண்ணாமலைப் பல்கலையின் அங்கமாகவே நிர்வகித்து வருகிறது. இந்த இரு கல்லூரிகளும் தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்த போது அவற்றில் மருத்துவப் படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அண்ணாமலை பல்கலை அரசுடைமையாக்கப்பட்ட பிறகும் அதே கட்டணத்தை தமிழக அரசு வசூலிப்பது ஏற்க முடியாததாகும்.

தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வின் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆனால், இளநிலை மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக அரசு கல்லூரிகளில் 13,600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ 5 லட்சத்து 54 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், இளநிலை பல் மருத்துவம், முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பு, முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் முறையே ரூ.11,600, ரூ. 42,025, ரூ.31,325 மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இப்படிப்புகளுக்கு முறையே ரூ.3.40 லட்சம், ரூ.9.80 லட்சம், ரூ.8.00 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4 லட்சத்துக்கும் குறைவாகவே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அதைவிட அதிகமாக கட்டணம் வசூலிப்பது அரசே நடத்தும் கட்டணக் கொள்ளையாக அமையாதா?

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு நிதியில் தான் இயங்குகிறது. மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித் தகுதியில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மட்டும் மிக அதிகமாக கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் சரியாகும்? இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்பதாவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பது தான் சரியான அணுகுமுறை.

மாறாக, மருத்துவம் மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம், விடுதிகளையும் மூடி மாணவர்களை கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறது. அதுமட்டுமின்றி, போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறது.

மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அன்பும், பேச்சும் தான் சிறந்த ஆயுதங்கள் ஆகும். மாறாக, அடக்குமுறையை ஏவ நினைத்தால் அது எரியும் தீயில் ஊற்றப்பட்ட பெட்ரோலாக போராட்டத்தை மேலும் பரவச்செய்து விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து- உயர் நீதிமன்றம்

Published : 06 Sep 2017 17:31 IST

சென்னை



அரசு நிலத்தை அபகரித்த வழக்கிலிருந்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2002-ம் ஆண்டு பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது, 1996-2001 -ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் 1998ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, அரசுக்கு சொந்தமாக சைதாப்பேட்டையில் இருந்த 3600 சதுர அடி நிலத்தை மோசடி செய்து தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பதிவு செய்து வீடு கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. 2007ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை மூன்றாவது அமர்வு நீதிமன்றம் வழக்கிலிருந்து பொன்முடியை விடுவித்தது. நீதிமன்ற உத்தரவில் சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த சொத்தும் அடங்கி இருப்பதால் ஒரு குற்றத்திற்காக இரு வேறு விசாரணைகள் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அரசு நில அபகரிப்பு வழக்கிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டார்.

அவரது தீர்ப்பில், சொத்துக் குவிப்பு வழக்கும், அரசு நில அபகரிப்பு வழக்கும் ஒரே மாதிரியானவையாக இல்லாதபோது, சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவித்ததற்காக நில அபகரிப்பு வழக்கிலும் விடுவித்தது செல்லாது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொன்முடி தன் மீதான அரசு நில அபகரிப்பு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீட் தேர்வு சர்ச்சையால் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சிஎம்சி

Published : 06 Sep 2017 10:54 IST




நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை வேலூர் சிஎம்சி (கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்) நிறுத்திவைத்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனமான சிஎம்சி சார்பில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட் தேர்வை) நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தேசிய நுழைவுத்தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என ஏற்கெனவே சிஎம்சி உச்ச நீதிமன்றம்வரை வலியுறுத்திவந்தது.

இந்நிலையில் நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பாண்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள 100 இடங்களில் ஓரிடமும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு மருத்துவப் படிப்பில் உள்ள 62 இடங்களில் ஓரிடமும் மட்டுமே நிரப்பப்படுவதாக சிஎம்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிஎம்சி இயக்குநர் சுனில் சாண்டி கூறியதாவது:

நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த ஆண்டு சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்படுவார். அவர், போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் வாரிசு. மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் அவருக்கு இந்த இடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் இதயநோய் நிபுணத்துவம் பிரிவில் ஒருவருக்கு இடம் வழங்கப்படுகிறது. அது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்படுகிறது.

மருத்துவ முதுகலை படிப்பிற்கான சேர்க்கை வழக்கமான நடைமுறையை பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில், அரசு உத்தரவு வருவதற்கு முன்னதாகவே சிஎம்சியில் மருத்துவ முதுகலை படிப்பிற்கான சேர்க்கை நடந்து முடிந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிஎம்சி கோரிக்கை என்ன?

சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் 85 இடங்கள் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுகிறது. 15 இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சிஎம்சி மருத்துவக் கல்லூரி சார்பில் தனியாக நுழைத்தேர்வும் நடத்தப்படுகிறது. அத்தேர்வில் மாணவர்களின் தலைமைப் பண்பு, குழுவாக செயல்படும் திறன், கிராமப்புறங்களில் பணியாற்றும் மனப்பாங்கு ஆகியன சோதிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்கள் கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனைகளில் இரண்டாண்டுகள் சேவை புரிவது கட்டாயம். இத்தகைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயேன் மருத்துவ இடம் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதேவேளையில் மருத்துவக் கல்வி கட்டணமாக வெறும் ரூ.3000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

எனவே சேவை அடிப்படையில் சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய சிறுபான்மையினருக்காக நடத்தப்படும் தங்கள் மருத்துவக் கல்லூரியில் தாங்களே நுழைவுத் தேர்வு நடத்த அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என நிர்வாகம் கூறுகிறது.

இருப்பினும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கள் மருத்துவக் கல்லூரி விதிகளின்படி தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதே அவர்களது தற்போதையை நிலைப்பாடாக உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் மற்ற இடங்களை நிரப்பாமல் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இரண்டு சிறப்பு இடங்களை மட்டும் நிரப்புவதாக சிஎம்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 'நீட்' போராட்டத்துக்கு தடை கோரும் மனு: உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published : 06 Sep 2017 11:23 IST

சென்னை




மாணவி அனிதா மரணத்தை அடுத்து நீட்டுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் வலுத்து வருகிறது இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை அமல்படுத்துவதில் தமிழகத்துக்கு விதிவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதில் இந்த ஆண்டு விதிவிலக்கு கட்டாயம் உண்டு என்று நம்பிய நிலையில் திடீரென நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விதிவிலக்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற அரியலூர் மாணவி அனிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவி அனிதா திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். இதற்கு நீதி கேட்டும் நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஜி.எஸ்.மணி என்ற வழக்கறிஞர் அனிதாவின் மரணத்தை அடுத்து, நீட் உத்தரவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. நீட் விவகாரத்தில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது இது. உத்தரவை மீறுவதாகும்.

அனிதாவின் மரணத்தை அடுத்து நடக்கும் இத்தகைய போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இதில் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவசர வழக்காக இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு எடுப்பதற்கு அப்படி என்ன தேவை வந்தது, உடனடியாக வழக்கை விசாரிக்கும் அளவுக்கு என்ன நடந்து விட்டது என்று கூறி அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இந்த வழக்கு பின்னர் ஒரு நாளில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
சந்தேகம் சரியா 50: நகம் கடிக்கும் பழக்கம் நோயின் அறிகுறியா?

Published : 26 Aug 2017 11:09 IST

டாக்டர் கு. கணேசன்





எனக்குச் சில மாதங்களாக நகம் கடிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இது ஒரு நோயின் அறிகுறி என ஒரு ஆங்கில மருத்துவப் பத்திரிகையில் படித்தேன். அதற்கு மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டும் என்றும் அதில் பரிந்துரை செய்திருந்தனர். அது சரியா?

நீங்கள் படித்த தகவல் முற்றிலும் சரி.

தலைமுடியைக் கோதுவதுபோல், மூக்கைச் சொறிவதுபோல், ஒரு முறை, இருமுறை என எப்போதாவது நகம் கடித்தால், அது நோயின் அறிகுறி இல்லை. ஆனால், நகம் கடிப்பது என்பது விடமுடியாத பழக்கமாகிவிட்டது என்றாலோ, தங்களை அறியாமலேயே நகத்தைக் கடித்துத் துப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றாலோ, என்னதான் முயன்றாலும் நகம் கடிக்காமல் இருக்க முடியவில்லை எனும் நிலைக்கு வந்துவிட்டாலோ, அது ஓர் உளவியல் பிரச்சினையின் வடிகாலாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டால், அதை வெளியேற்றுவதற்கு மூளை பல வழிகளைத் தேடும். அதில் ஒன்று நகம் கடித்தல். இது ஓர் அனிச்சைச் செயல். மனதில் புதைந்திருக்கும் பிரச்சினையின் தன்மையைப் பொறுத்து, ஆழ்மனதின் கட்டளைப்படி விரல்கள் தானாகச் செயல்படுவதால், நகம் கடிப்பதைக் கட்டுப்படுத்துவது சற்று சிரமமாகத்தான் இருக்கும். இம்மாதிரி நிலைமையில் உள்ளவர்களுக்கு உளவியல் சிகிச்சைகளும் ஆலோசனைகளும் தேவைப்படும்.

ஏன் வருகிறது?

பெரும்பாலானோருக்கு நகம் கடிக்கும் பழக்கம் ஏற்படுவதற்கு உடல் அலுப்பே காரணமாக இருக்கும். எதையும் செய்வதற்கு மனம் ஒப்புக்கொள்ளாதபோது, வெறுமனே இருக்கும்போது, வெறுத்துப் போயிருக்கும்போது, கவலைப்படும்போது, மனம் பதற்றமாக இருக்கும்போது, ஏதாவது தோல்விகளைச் சந்திக்கும்போது, உணர்ச்சிவசப்படும்போது, நெருக்கடிகளைச் சந்திக்கும்போது, ஏமாற்றங்கள் மிஞ்சும்போது, தனக்கு விருப்பமில்லாமல் அடுத்தவரின் கட்டாயத்துக்காகச் செயல்படும்போது, தன்னம்பிக்கையை இழக்கும்போது எனப் பலதரப்பட்ட உளவியல் பிரச்சினைகள் நகம் கடிக்கும் பழக்கத்தைத் தூண்டும். பலருக்கும் இம்மாதிரியான பிரச்சினைகள் எளிதாக முடிந்துவிடும். அதனால், நகம் கடிக்கும் பழக்கமும் பிரச்சினை முடிந்தவுடன் மறைந்துவிடும்.

சிலருக்கு இம்மாதிரியான தோல்விகளும் ஏமாற்றங்களும் அச்சங்களும் நீடிக்கும். அப்போது அது மன அழுத்த நோய்க்குப் பாதை அமைத்துவிடும். அதிலிருந்து தற்காலிக விடுதலை பெறுவதற்கான வழியாக, நகம் கடிக்கும் பழக்கம் நீடித்துவிடும். இவர்களால் நகம் கடிப்பதை எளிதில் விட்டுவிடமுடியாது. உளவியல் சிகிச்சைக்குப் பிறகே இதற்குத் தீர்வு கிடைக்கும்.

நோய் காட்டும் கண்ணாடி

நகத்தை நோய் காட்டும் கண்ணாடி என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்தசோகை, மஞ்சள் காமாலை, இதயநோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, உடலில் பிராணவாயு குறைவு போன்ற பல பிரச்சினைகளை நகங்கள் உடனே வெளிக்காட்டும். எவ்வித பரிசோதனையும் இல்லாமலேயே இம்மாதிரியான நோய்களை எளிதில் இனம் காணமுடியும். எனவே, நகங்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

கெரட்டின் எனும் புரதத்தால் ஆன நகங்கள் உயிரற்றவை. இறந்துபோன செல்களின் தொகுப்பே நகங்கள். அதனால்தான் அவற்றைக் கடிக்கும்போதும், நகவெட்டியால் வெட்டும்போதும் வலிப்பதில்லை. வலி இல்லை என்பதால்தான், நகம் கடிக்கும் பழக்கம் பலருக்கும் நீடிக்கிறது.

நகம் கடிக்கும் பழக்கம் பெண்களைவிட ஆண்களிடம்தான் அதிகம். காரணம், பெண்கள் தங்கள் நகங்களை அழகுபடுத்துவதில் அதிக அக்கறை செலுத்துவது வழக்கம். அதனால், அவற்றைக் கடிக்க அவர்களுக்கு மனம் வராது. (ஒரு சில பெண்கள் விதிவிலக்காக இருக்கலாம்). அத்துடன் மன அழுத்தத்திலிருந்து விடுபட பெண்கள் வேறு வழிகளைத் தேடுகின்றனர். வளரிளம் பருவத்தில் அநேகம் பேருக்கு இது இருக்கிறது. இந்தப் பழக்கம் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை. 100-ல் 35 குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். புத்தகம் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வேறு செயல்களில் ஈடுபடும்போதுகூட பலர் தங்களை அறியாமலேயே நகம் கடிக்கின்றனர்.

என்ன பாதிப்பு ஏற்படும்?

நகத்தை அழகுபடுத்த எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறோமோ, அதே அளவுக்கு அவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்வதிலும் கவனம் தேவை. இல்லாவிட்டால், நகங்கள் உடல் நோய்களுக்கு வாசலாகிவிடும்.

நகம் கடிக்கும் பழக்கத்துக்கு மருத்துவ உலகம் ‘ஆனிகோஃபேஜியா’ (Onychophagia) என்று பெயர் சூட்டியுள்ளது. சிலர் திரும்பத் திரும்ப கை கழுவுவதுபோல், நகம் கடிக்கும் பழக்கமும் அடிக்கடி செய்யத் தூண்டும் செயலாகக் கருதப்படுவதால், ‘ஓ.சி.டி’ (Obsessive Compulsive Disorder – OCD) எனும் உளவியல் பிரச்சினையோடு இதற்குத் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

புகைபிடித்தலைப் போல் நகம் கடிக்கும் பழக்கமும் ஒரு கெட்டப் பழக்கம். அது நாகரிகம் குறைந்த செயலாகவும் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் இருக்கிறது. குடலில் புழுக்கள் தோன்றுவதற்கு நகம் கடிக்கும் பழக்கம் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை, டைபாய்டு காய்ச்சல், வாந்தி பேதி, சீதபேதி, அஜீரணம், குடல் நோய்கள் போன்றவை ஏற்படவும் இந்தப் பழக்கம் வழி அமைக்கிறது. சிலர் மிகவும் தீவிரமாக நகம் கடித்து, கடித்த இடத்தில் புண் ஏற்பட்டு, ரத்தம் கசியும் அளவுக்கு பிரச்சினையைப் பெரிதாக்கி விடுகின்றனர். அப்போது அங்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. நகத்தின் முனையில் தசை பழுதடைந்து, விரிசல் விழுந்து பார்ப்பதற்கு அசிங்கமாகிவிடுகிறது.

என்ன செய்யலாம்?

நகத்தைச் சுத்தமாகக் கழுவி, ஒட்ட வெட்டிவிட வேண்டும்.

நகம் கடிக்கத் தோன்றும்போது, கைவிரல்களுக்கு வேறு வேலை கொடுத்துவிட வேண்டும். எடுத்துக்காட்டாக, செல்போனை நோண்டுவது, பேனாவால் எழுதுவது போன்ற வேலைகளைச் செய்யலாம்.

நகத்தின்மீது துவர்ப்புச் சுவை கொண்ட வர்ணத்தைப் பூசிக்கொள்ளலாம்.

அக்ரலிக் செயற்கை நகங்களைப் பொருத்திக்கொள்ளலாம்.

நகத்தில் பிளவுகள், தொற்றுகள் போன்றவை காணப்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

தட்டச்சு செய்வது, கணினியில் வேலை பார்ப்பது, வாகனம் ஓட்டுவது போன்றவை சிரமமாக இருக்கும் அளவுக்கு நகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மனதை வாட்டும் பிரச்சினைகளுக்கு உளவியல் தீர்வு காண வேண்டும்.

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com
டிமென்ஷியா: அக்கறை கூடினால் பிரச்சினை குறையும்

Published : 26 Aug 2017 11:09 IST

டி. கார்த்திக்




எழுபது ஆண்டுகளுக்கு முன் ஓர் இந்தியரின் சராசரி ஆயுட்காலம் 37 வயதுதான். இந்த 70 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 63 வயதுக்கு மேலாகக் கூடியிருக்கிறது. மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள் போன்றவை மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரித்திருக்கின்றன. அந்த வகையில் உலகெங்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

டிமென்ஷியா தாக்கம்

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைப்போலவே இன்னொரு புறம் அவர்களுக்கு வரக்கூடிய நோய்களும் அதிகரித்திருக்கின்றன. அதில் முக்கியமானது ‘டிமென்ஷியா’ என்றழைக்கப்படும் ஞாபக மறதி நோய். தொடக்கத்தில் சிறுசிறு ஞாபக மறதியாகத் தொடங்கி முற்றிய பிறகு பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி அல்லது கணவனைகூட மறந்துவிடும் அளவுக்கு இந்த நோயின் தாக்கம் இருக்கும். இந்த நோய்க்கு முக்கிய காரணம் மூளை தேய்வதுதான். இது எப்படி ஏற்படுகிறது?

காரணம் என்ன?

மூளையில் படியக்கூடிய சில நச்சுப் புரதங்களால் ஞாபக மறதி நோய் வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, முதியவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு நாட்பட்ட நீரிழிவு, உயர் ரத்தஅழுத்த நோயும் முக்கியக் காரணம். விபத்துகளால் ஏற்படும் தலைக் காயம், போதைப் பொருள் பயன்பாட்டாலும் ஞாபக மறதி நோய் வருகிறது. குறிப்பாக மூளையில் புரதங்கள் படிவதற்கு போதைப் பொருள் பழக்கமே காரணம். இப்படி வரக்கூடிய ஞாபக மறதி நோயைத்தான் அல்சைமர் என்று அழைக்கிறார்கள். அல்சைமர் என்பது டிமென்ஷியாவில் ஒரு வகை. இதன் பாதிப்புகளும் விளைவுகளும் ஒரே மாதிரியானவைதான்.

நவீன மருந்துகள்

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஞாபக மறதி நோய்க்கு குறிப்பிட்ட சில மருந்துகளே இருந்தன. இன்று ஞாபக மறதி நோய்க்கான சிகிச்சை முறைகள் மாறியிருக்கின்றன. “ஞாபக மறதி நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த நவீன சிகிச்சை முறைகள் இன்று வந்துவிட்டன. முன்பைவிட மேம்பட்ட மருந்துகளும் உள்ளன. அதிகபட்சமாக ஞாபக மறதி நோய்க்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி வேகம் எடுத்திருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் அதற்கான முயற்சிகள் வேகம் அடைந்துள்ளன. ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். அதைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் நவீன மருந்துகள் உள்ளன” என்கிறார் திருச்சி மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம்.

பராமரிப்பு முக்கியம்

ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது சவாலான காரியம். தினசரி மருந்து, மாத்திரைகள் எடுக்கவும் உணவைச் சாப்பிடவும்கூட அவர்கள் மறந்துவிடுவார்கள். அவர்களைக் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கண்காணித்து பராமரிக்க முன்வருவது பாதிக்கப்பட்டவருக்குப் பெரிதும் உதவும்.

மாறிவரும் வாழ்க்கை முறையில் தனித்துவிடப்படும் முதியவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இதுபோன்ற முதியவர்களுக்கு ஞாபக மறதி நோயும் வந்துவிட்டால் பெரும் சிக்கல்தான். பாதிக்கப்பட்டவர்களைத் தனியாக ஒருவர் பராமரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பவர் ஞாபக மறதியின் பாதிப்பைக் குறைக்கக்கூடிய சில விஷயங்களை செய்தாகவும் வேண்டும்.

அக்கறை அவசியம்

“ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பழக்க வழக்க மாறுதல்களால், வீட்டில் பலரும் அதைத் தொல்லையாக நினைப்பார்கள். ஞாபக மறதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, பழக்கவழக்களில் ஏற்படும் மாறுதல்களைத் தவிர்ப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மன சஞ்சலங்களைப் போக்குவது போன்றவற்றை மருந்து, மாத்திரை மூலம் கட்டுப்படுத்தலாம்.


டாக்டர் அலீம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி அறிவு, கம்ப்யூட்டர் அறிவைப் பெருக்குவதன் மூலம், இந்த நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று ஆய்வு முடிகள் வந்திருக்கின்றன. கல்வி அறிவும், கனிணியை இயக்கும் அறிவும் இருந்தால் சுடோகு, புதிர்கள், சவாலான விஷயங்களைப் படிப்பது போன்றவற்றால், மூளைக்கு வேலை கொடுத்து ஞாபக மறதியின் பாதிப்பைக் குறைக்கலாம்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதைத் தானாகவே செய்ய மாட்டார்கள். அவர்களைக் கவனிப்போர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அவர்களை அதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும். அதற்குப் பொறுமை வேண்டும்” என்கிறார் டாக்டர் அலீம்.

மேம்பட்ட மருத்துவத்தின் மூலம் ஞாபக மறதி நோயின் பாதிப்பை வேண்டுமானால் குறைக்கலாம்.

ஆனால், ஞாபக மறதியால் பாதிக்கப்படும் முதியவர்கள் குழந்தைகளுக்கு சமம் எனும் சிந்தனை விசாலமானால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் குறைத்துவிடலாம்.

NEWS TODAY 27.07.2026