Wednesday, September 6, 2017

டிமென்ஷியா: அக்கறை கூடினால் பிரச்சினை குறையும்

Published : 26 Aug 2017 11:09 IST

டி. கார்த்திக்




எழுபது ஆண்டுகளுக்கு முன் ஓர் இந்தியரின் சராசரி ஆயுட்காலம் 37 வயதுதான். இந்த 70 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 63 வயதுக்கு மேலாகக் கூடியிருக்கிறது. மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள் போன்றவை மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரித்திருக்கின்றன. அந்த வகையில் உலகெங்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

டிமென்ஷியா தாக்கம்

முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைப்போலவே இன்னொரு புறம் அவர்களுக்கு வரக்கூடிய நோய்களும் அதிகரித்திருக்கின்றன. அதில் முக்கியமானது ‘டிமென்ஷியா’ என்றழைக்கப்படும் ஞாபக மறதி நோய். தொடக்கத்தில் சிறுசிறு ஞாபக மறதியாகத் தொடங்கி முற்றிய பிறகு பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி அல்லது கணவனைகூட மறந்துவிடும் அளவுக்கு இந்த நோயின் தாக்கம் இருக்கும். இந்த நோய்க்கு முக்கிய காரணம் மூளை தேய்வதுதான். இது எப்படி ஏற்படுகிறது?

காரணம் என்ன?

மூளையில் படியக்கூடிய சில நச்சுப் புரதங்களால் ஞாபக மறதி நோய் வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, முதியவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு நாட்பட்ட நீரிழிவு, உயர் ரத்தஅழுத்த நோயும் முக்கியக் காரணம். விபத்துகளால் ஏற்படும் தலைக் காயம், போதைப் பொருள் பயன்பாட்டாலும் ஞாபக மறதி நோய் வருகிறது. குறிப்பாக மூளையில் புரதங்கள் படிவதற்கு போதைப் பொருள் பழக்கமே காரணம். இப்படி வரக்கூடிய ஞாபக மறதி நோயைத்தான் அல்சைமர் என்று அழைக்கிறார்கள். அல்சைமர் என்பது டிமென்ஷியாவில் ஒரு வகை. இதன் பாதிப்புகளும் விளைவுகளும் ஒரே மாதிரியானவைதான்.

நவீன மருந்துகள்

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஞாபக மறதி நோய்க்கு குறிப்பிட்ட சில மருந்துகளே இருந்தன. இன்று ஞாபக மறதி நோய்க்கான சிகிச்சை முறைகள் மாறியிருக்கின்றன. “ஞாபக மறதி நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்த நவீன சிகிச்சை முறைகள் இன்று வந்துவிட்டன. முன்பைவிட மேம்பட்ட மருந்துகளும் உள்ளன. அதிகபட்சமாக ஞாபக மறதி நோய்க்கு தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி வேகம் எடுத்திருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் அதற்கான முயற்சிகள் வேகம் அடைந்துள்ளன. ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். அதைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் நவீன மருந்துகள் உள்ளன” என்கிறார் திருச்சி மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம்.

பராமரிப்பு முக்கியம்

ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது சவாலான காரியம். தினசரி மருந்து, மாத்திரைகள் எடுக்கவும் உணவைச் சாப்பிடவும்கூட அவர்கள் மறந்துவிடுவார்கள். அவர்களைக் குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கண்காணித்து பராமரிக்க முன்வருவது பாதிக்கப்பட்டவருக்குப் பெரிதும் உதவும்.

மாறிவரும் வாழ்க்கை முறையில் தனித்துவிடப்படும் முதியவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இதுபோன்ற முதியவர்களுக்கு ஞாபக மறதி நோயும் வந்துவிட்டால் பெரும் சிக்கல்தான். பாதிக்கப்பட்டவர்களைத் தனியாக ஒருவர் பராமரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களைக் கவனிப்பவர் ஞாபக மறதியின் பாதிப்பைக் குறைக்கக்கூடிய சில விஷயங்களை செய்தாகவும் வேண்டும்.

அக்கறை அவசியம்

“ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பழக்க வழக்க மாறுதல்களால், வீட்டில் பலரும் அதைத் தொல்லையாக நினைப்பார்கள். ஞாபக மறதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது, பழக்கவழக்களில் ஏற்படும் மாறுதல்களைத் தவிர்ப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மன சஞ்சலங்களைப் போக்குவது போன்றவற்றை மருந்து, மாத்திரை மூலம் கட்டுப்படுத்தலாம்.


டாக்டர் அலீம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி அறிவு, கம்ப்யூட்டர் அறிவைப் பெருக்குவதன் மூலம், இந்த நோயின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று ஆய்வு முடிகள் வந்திருக்கின்றன. கல்வி அறிவும், கனிணியை இயக்கும் அறிவும் இருந்தால் சுடோகு, புதிர்கள், சவாலான விஷயங்களைப் படிப்பது போன்றவற்றால், மூளைக்கு வேலை கொடுத்து ஞாபக மறதியின் பாதிப்பைக் குறைக்கலாம்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதைத் தானாகவே செய்ய மாட்டார்கள். அவர்களைக் கவனிப்போர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் அவர்களை அதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும். அதற்குப் பொறுமை வேண்டும்” என்கிறார் டாக்டர் அலீம்.

மேம்பட்ட மருத்துவத்தின் மூலம் ஞாபக மறதி நோயின் பாதிப்பை வேண்டுமானால் குறைக்கலாம்.

ஆனால், ஞாபக மறதியால் பாதிக்கப்படும் முதியவர்கள் குழந்தைகளுக்கு சமம் எனும் சிந்தனை விசாலமானால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் குறைத்துவிடலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024