Wednesday, September 6, 2017

நீட் தேர்வு சர்ச்சையால் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சிஎம்சி

Published : 06 Sep 2017 10:54 IST




நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை வேலூர் சிஎம்சி (கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்) நிறுத்திவைத்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனமான சிஎம்சி சார்பில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட் தேர்வை) நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தேசிய நுழைவுத்தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என ஏற்கெனவே சிஎம்சி உச்ச நீதிமன்றம்வரை வலியுறுத்திவந்தது.

இந்நிலையில் நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பாண்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள 100 இடங்களில் ஓரிடமும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு மருத்துவப் படிப்பில் உள்ள 62 இடங்களில் ஓரிடமும் மட்டுமே நிரப்பப்படுவதாக சிஎம்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிஎம்சி இயக்குநர் சுனில் சாண்டி கூறியதாவது:

நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த ஆண்டு சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்படுவார். அவர், போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் வாரிசு. மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் அவருக்கு இந்த இடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் இதயநோய் நிபுணத்துவம் பிரிவில் ஒருவருக்கு இடம் வழங்கப்படுகிறது. அது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்படுகிறது.

மருத்துவ முதுகலை படிப்பிற்கான சேர்க்கை வழக்கமான நடைமுறையை பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில், அரசு உத்தரவு வருவதற்கு முன்னதாகவே சிஎம்சியில் மருத்துவ முதுகலை படிப்பிற்கான சேர்க்கை நடந்து முடிந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிஎம்சி கோரிக்கை என்ன?

சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் 85 இடங்கள் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுகிறது. 15 இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சிஎம்சி மருத்துவக் கல்லூரி சார்பில் தனியாக நுழைத்தேர்வும் நடத்தப்படுகிறது. அத்தேர்வில் மாணவர்களின் தலைமைப் பண்பு, குழுவாக செயல்படும் திறன், கிராமப்புறங்களில் பணியாற்றும் மனப்பாங்கு ஆகியன சோதிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்கள் கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனைகளில் இரண்டாண்டுகள் சேவை புரிவது கட்டாயம். இத்தகைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயேன் மருத்துவ இடம் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதேவேளையில் மருத்துவக் கல்வி கட்டணமாக வெறும் ரூ.3000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

எனவே சேவை அடிப்படையில் சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய சிறுபான்மையினருக்காக நடத்தப்படும் தங்கள் மருத்துவக் கல்லூரியில் தாங்களே நுழைவுத் தேர்வு நடத்த அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என நிர்வாகம் கூறுகிறது.

இருப்பினும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கள் மருத்துவக் கல்லூரி விதிகளின்படி தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதே அவர்களது தற்போதையை நிலைப்பாடாக உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் மற்ற இடங்களை நிரப்பாமல் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இரண்டு சிறப்பு இடங்களை மட்டும் நிரப்புவதாக சிஎம்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024