Wednesday, September 6, 2017

புளூவேல் விளையாடிய இளைஞரின் திகிலூட்டும் அனுபவம்: இது கேமோ, ஆப்-போ அல்ல!


By DIN  |   Published on : 06th September 2017 05:48 PM  |   
student
புளூவேல் விளையாட்டிலிருந்து மீட்கப்பட்ட இளைஞருடன் காவல்துறை அதிகாரி.

காரைக்கால்: விபரீத விளையாட்டான புளூவேல் விளையாடிய காரைக்காலைச் சேர்ந்த இளைஞர், தனக்கு நேரிட்ட திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, யாரும் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
காரைக்கால் பகுதியில் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் பணியாற்றும் அலெக்சாண்டர், விடுமுறையில் ஊருக்குச் சென்ற போது இந்த ப்ளூவேல் விளையாட்டை விளையாடத் தொடங்கியுள்ளார். ஆனால் விளையாட்டின் காரணமாக அவர் விடுமுறை முடிந்தும் சென்னை திரும்பவில்லை.
இதுகுறித்து, புளூவேல் கேம் விளையாடிய அலெக்ஸ்சாண்டர் கூறியதாவது, இது டவுன்லோடு செய்யும் ஆப்-போ அல்லது டவுன்லோடு செய்து ஆடும் விளையாட்டோ அல்ல. வெறும் லிங்க் மட்டுமே இருக்கும். வாட்ஸ் அப்பில் (கட்செவி அஞ்சல் ) லிங்க் கிடைத்தவுடன் இந்த விளையாட்டை எப்படியாவது விளையாட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. இருப்பினும் இது உயிர் சம்பந்தப்பட்ட விளையாட்டு என்பது போகப்போகத்தான் தெரிந்தது.
 
குறிப்பாக, முதலில் நமது பெயர், இமெயில், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அட்மின்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகு போட்டோ அனுப்ப வேண்டும். பின்னர் நள்ளிரவில் பேய் படம் பார்க்க வேண்டும். அனைத்துமே நள்ளிரவு 2 மணிக்கு மேல்தான். பயமே இந்த கேமில் இருக்கக்கூடாது என்பதுதான் நோக்கம் என்று அட்மின்கள் கூறுகிறார்கள்.
பின்னர் சுடுகாடு அல்லது கடல் பகுதி, ஏரி போன்ற இடங்களுக்கு நள்ளிரவில் தனியாக சென்று செல்ஃபி எடுத்து குரூப் அட்மின்களுக்கு அனுப்ப வேண்டும். 5-ஆவதாக கையில் கத்தி அல்லது பிளேடால் புளூவேல் திமிங்கலம், மீன் போன்றவைகளை வரைய வேண்டும். நான் 5-ஆவது நிலையை நோக்கி போகும்போதுதான், காவல் துறையினர் என்னை மீட்டனர். 
தினமும் பயங்கர காட்சிகள் நிறைந்த சினிமாவை பார்த்துக் கொண்டிருந்தேன். பயத்தைப் போக்குவதே இந்த விளையாட்டின் நோக்கம் என்றாலும் மனதளவில் பாதிக்கப்பட்டேன்.
இந்த விளையாட்டால் நான் என் குடும்பத்தாரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டேன். எப்போதும் என் அறைக்குள்ளேயே இருப்பேன். இது எனக்கு மிக மோசமான மன அழுத்தத்தை தந்தது. இந்த விளையாட்டில் இருந்து வெளியே வர விரும்பினேன். ஆனால் என்னால் செய்ய முடியவில்லை.
இனி இதுபோன்ற விளையாட்டில் ஈடுபட மாட்டேன். இது இக்கட்டான விஷயங்களை சவாலாக எடுத்து செய்தாலும் கூட, மனதளவில் பெரிய பாதிப்பு ஏற்படுத்துகிறது. யாரும் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டாம் என்று கூறினார்.
பின்னணி: 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செல்லிடப்பேசியில் ஆன்லைன் மூலம் புளூவேல் விளையாடும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கண்காணிக்கும்படி காவல்துறை டிஜிபி சுனில்குமார் கவுதம் சைபர் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காரைக்கால் பகுதி நிரவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெரோம்ஜேம்ஸ்பாண்டுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தனது மூத்த சகோதரர் புளூவேல் கேம் விளையாடுவதுபோல் தெரிகிறது. நள்ளிரவில் வெளியே புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். அவரது நடவடிக்கை சரியில்லை. நாங்கள் ஏதாவது கேட்டால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, நிரவி போலீஸார் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த அலெக்ஸ்சாண்டர் (23) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரது செல்லிடப் பேசியை பரிசோதித்தபோது, அவர் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து, அலெக்ஸாண்டரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, புளூவேல் விளையாட்டால் ஏற்படும் விபரீதம் குறித்து அறிவுரை அளித்தனர்.
பின்னர், மண்டல காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

காராகிரக நெரிசல்!

By ஆசிரியர்  |   Published on : 06th September 2017 02:16 AM 
நாகரிக சமுதாயத்தில் சிறைச்சாலை என்பது தண்டிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்கப்படும் இடம் என்பதாக அல்லாமல், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மனம் திருந்தவும் தண்டனைக்குப் பிறகு அவர்கள் மற்றவர்களைப்போல வாழவும் வழிகோலுகிற சீர்திருத்தக்கூடமாக இருக்க வேண்டும். கடந்த அரைநூற்றாண்டு காலமாக உலகளாவிய அளவில் சிறைச்சாலைகளின் வசதிகள் மேம்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளைக் கையாளும் முறையிலும் மாற்றங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. 
இந்தியாவைப் பொருத்தவரை ஒருசில சிறைச்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு அல்லது புதிதாகக் கட்டப்பட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும்கூட, சிறைக்காவலர்களின் அணுகுமுறையிலும், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் நடத்தப்படும் விதத்திலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. தவறிழைத்து தண்டிக்கப்பட்டவர்கள், தண்டனைக்காலம் முடிந்து வெளியேவரும்போது புதிய மனிதர்களாக வெளிவருவது இல்லை என்பது ஒரு புறம், தவறிழைக்காத விசாரணைக் கைதிகள்கூட சிறைக்குச் சென்று வெளியே வரும்போது தவறான வழிக்குத் திரும்புபவர்களாக மாறிவிடுகின்றனர் என்பது இன்னொருபுறம். இதுதான் இன்றைய இந்தியச் சிறைச்சாலைகளின் நிலைமை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் முதலில் வெளியிடும் அறிக்கை, நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பேன் என்பதுதான். ஆனால், அந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைவது இல்லை. அதனால் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. 
விசாரணைக் கைதி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தால் சாட்சியங்கள் கலைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர். இவர்களில் பலரும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவும் வாய்ப்புண்டு. அப்படியிருந்தும் தேவையில்லாமல் பலர் நீண்ட நாட்கள் சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.
2015-இல் இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 2.82 லட்சம். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் குறைவான அதிகம் படிப்பறிவில்லாத இளைஞர்கள். ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பே, தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேல் சிறையில் கழித்திருக்கும் விசாரணைக் கைதிகள் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2014-இல் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றங்களுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தும்கூட, இதுவரை இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரியது. 
விசாரணைக் கைதிகள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. கைதிகளின் உடல் நலமும், சிறைச்சாலையின் சுகாதார ஏற்பாடுகளும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலைகளின் பாதுகாப்பும்கூட இதனால் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆட்டுக்கொட்டடியில் அடைத்து வைத்திருப்பதுபோலக் கைதிகள் அடைத்து வைக்கப்படுவது அவர்களது மனநிலையைக் கடுமையாக பாதித்து, நிரபராதிகள் குற்றவாளிகளாகவும், குற்றவாளிகள் கடும் குற்றவாளிகளாகவும் மாறிவிடும் போக்குக்கு வழிகோலுகிறது. சிறைச்சாலைத் தற்கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் இது ஒரு முக்கிய காரணம்.
கடந்த மாதம் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, இந்தியாவின் சிறைச்சாலைகள் சிலவற்றில் 200%-க்கும் அதிகமான கைதிகள் இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் குறிப்பிட்டிருந்தார். 'மாதிரி சிறைச்சாலை 2014 கையேட்டின்படி, ஒவ்வொரு சிறைக்கைதிக்கும் குறைந்தது 8.92 சதுர மீட்டர் அளவிலான இடம் தரப்பட வேண்டும். ஆனால், எவ்வளவு இடம் வழங்கப்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரம் இல்லை' என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் 1,401 சிறைச்சாலைகள் இருக்கின்றன. சிறைச்சாலை மாநில பட்டியலில் இருந்தாலும் அதனை மேம்படுத்த 2002-இல் மத்திய அரசு ரூ.1,800 கோடி ஒதுக்கியது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தின் புழல் சிறைச்சாலை உள்பட 125 புதிய சிறைச்சாலைகள் கட்டப்பட்டன. ஏனைய சிறைச்சாலைகளில் 1,579 அறைகள் அதிகரிக்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும்கூட சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன என்றால், அதற்குக் காரணம் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கைதான். 
இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரம் 2015-இன்படி, இந்தியாவிலுள்ள 1,401 சிறைச்சாலைகளில் இருக்கும் 4,19,623 கைதிகளில் 67 சதவீதம் பேர் அதாவது, 2,82,076 பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் பலரும் இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள்.
முன்பே கூறியதுபோல, சிறைச்சாலை என்பது குற்றவாளிகள் மனம் திருந்தி புதிய மனிதர்களாக வெளியில் வருவதற்காக ஏற்படுத்தப்பட்டவையாக இல்லை. விசாரணைக் கைதிகளும் சிறு குற்றம் புரிந்தவர்களும் சிறைச்சாலையிலிருந்து கடும் குற்றவாளிகளாக வெளியேறும் அவலம் தடுக்கப்பட வேண்டுமானால், சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடி குறைக்கப்பட வேண்டும். தேவையில்லாமல் குற்றவாளிகள் விசாரணைக் கைதிகளாக தொடர்வது தவிர்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் சட்ட உதவியும், விரைந்த தீர்ப்பும் மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்.
 
    வாழ்ந்திருக்க வேண்டும் அனிதா: வைரமுத்து இரங்கல்

    Published : 02 Sep 2017 15:01 IST

    BHARATHI PARASURAMAN_50119




    உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், 'அடி பாவி மகளே' என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன.

    ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

    மொத்தம் மரணம் மூன்று வகை. இயல்பான மரணம் – அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு; இன்னொன்று கொலை – அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு; மூன்றாவது தற்கொலை – அது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.

    அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது? தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது?

    தற்கொலை தீர்வல்ல; வாழ்வுதான் தீர்வு.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    வேளாங்கண்ணி திருவிழா: எழும்பூர்-நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்

    Published : 06 Sep 2017 09:22 IST

    சென்னை

    வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு எழும்பூர்-நாகப்பட்டினம் இடையே வரும் 8-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

    இதன்படி, இந்த சிறப்பு ரயில் (06097) எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். இதேபோல், வேளாங்கண்ணி-பன்வேல் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06099) 9-ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேளாங்கண்ணியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.55 மணிக்கு பன்வேல் சென்றடையும்.

    கன்னியாகுமரி-சந்திரகச்சி இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06905) 7-ம் தேதி (நாளை) இரவு 11 மணிக்கு கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டு 9-ம் தேதி இரவு 9.15 மணிக்கு சந்திரகச்சி சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எம்.பில்., பிஎச்.டி மாணவர்கள் காப்பியடித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தால் படிப்பு பதிவு ரத்து: யுஜிசி விரைவில் புதிய விதிமுறை

    Published : 06 Sep 2017 09:38 IST


    ஜெ.கு.லிஸ்பன் குமார்

    சென்னை




    எம்.பில்., பிஎச்.டி மாணவர்கள் காப்பியடித்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தால் படிப்பின் பதிவை ரத்து செய்யும் வகையில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவர பல்கலைக்கழக மானியக்குழு முடிவுசெய்துள்ளது.

    ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) புதிய விதிமுறைகளைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. காப்பியடிக்கப்படும் அளவுக்கு ஏற்ப தண்டனைகளை விதிக்கவும், அப்பட்டமாக காப்பியடித்திருந்தால் சம்பந்தப்பட்ட மாணவர்களை டிஸ்மிஸ் செய்யும் வகையில் வரைவு விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

    அதன்படி, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வுக்கட்டுரைகள் அவை காப்பியடிக்கப்பட்டதா என்பதை கண்டுபிடிக்கும் வகையில் உரிய மென்பொருள் சாதனம் வைத்திருக்க வேண்டும். ஆய்வுகட்டுரையானது சொந்தமாக உருவாக்கப்பட்டது என்றும் மற்றவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டதல்ல என்றும் மாணவர்களிடமிருந்து உறுதிமொழி பெறப்பட வேண்டும்.

    ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வுசெய்ய ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி ஒழுங்கீன நடவடிக்கைக்குழுவும் அதற்கு மேலாக, காப்பியடித்தல் ஒழுங்கு நடவடிக்கை ஆணையம் என்ற ஓர் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் பாதிப்பு 10 முதல் 40 சதவீதம் இருந்தால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு மதிப்பெண் அளிக்கக் கூடாது.

    அந்த பகுதிக்குரிய திருத்தப்பட்ட கட்டுரையை சமர்ப்பிக்க ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டும். பாதிப்பு 40 முதல் 60 சதவீதம் வரை இருப்பின் அதற்கு ஒரு மதிப்பெண் கூட அளிக்கக்கூடாது. புதிய ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒன்றரை ஆண்டை தாண்டக்கூடாது. பாதிப்பு 60 சதவீதத்துக்கு மேல் இருந்தால் ஆய்வுக்கட்டுரைக்கு மதிப்பெண் வழங்காததுடன் படிப்புக்கான பதிவு ரத்து செய்துவிட வேண்டும்.

    காப்பியடித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான வரைவு விதிமுறைகள் குறித்த கருத்துகளை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் தெரியப்படுத்துமாறு யுஜிசி செயலர் பி.கே.தாகூர் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ஆன்லைனில் வெளியிடலாம்

    வழக்கமாக, ஒப்புதல் பெறப்பட்ட எம்பில் ஆய்வுக்கட்டுரையானது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இடம்பெறும். அதே நேரத்தில் பிஎச்.டி. ஆய்வுக்கட்டுரை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இடம்பெறுவதோடு யுஜிசி-க்கும் அனுப்பப்படும். இந்த ஆய்வுக்கட்டுரைகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் வெளியிடலாம் என கல்வியாளர்கள் யோசனை தெரிவித்தனர்.
    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    Published : 06 Sep 2017 11:16 IST


    கி.மகாராஜன்

    மதுரை




    தமிழகத்தில் செப். 7 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரிய மனு தொடர்பாக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரையைச் சேர்ந்த டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

    தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழு மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என அறிவித்துள்ளது. அன்று அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள் இயங்காது என்றும், இந்த வேலை நிறுத்தத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த வேலை நிறுத்தப் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் நிறுத்தி அரசு பள்ளிகள், கல்லூரிகள் சமூகமாக செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு 24.8.2017-ல் மனு அனுப்பினேன். என் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறு ஏற்படும்.

    அரசு ஊழியர்களுக்கு அரசு ஏற்கெனவே போதுமான அளவு ஊதியம் வழங்கி வருகிறது. அரசின் மொத்த வருவாயையும் சம்பளம் வழங்குவதற்கு மட்டும் பயன்படுத்த முடியாது. மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவும் தேவைப்படுகிறது. கூடுதல் ஊதியம் பெறுவதற்காக வேலை நிறுத்தம் என்ற மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுப்பது தவறு.

    கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு வழிகள் உள்ளன. அரசிடம் மனு அளிக்கலாம். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம். இதை செய்யாமல் பொதுமக்களையும், அரசு நிர்வாகத்தையும் ஸ்தம்பிக்க செய்யும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறு. வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை அல்ல. மேலும் வேலை நிறுத்தம் செய்வது அரசு ஊழியர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.

    வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசு பள்ளிகளில் 10, 11, 12 பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவர். அரசு அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7.9.2017 முதல் மேற்கொள்ள உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (புதன்கிழமை) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக அரசிடம் தகவல் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க அரசு வழக்கறிஞரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
    உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் கட்டாயத்தில் தமிழக அரசு: நீட் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி

    Published : 06 Sep 2017 11:59 IST

    சென்னை



    உச்ச நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வை அமல்படுத்தும் கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    தமிழக அரசு பெரும்பான்மையுடன் உள்ளது. இந்த ஆட்சி பதவி விலக வேண்டும் என்று நாங்கள் எப்போது பதவி ஏற்றோமோ அப்போது முதல் ஸ்டாலின் கூறி வருகிறார். அதிமுகவுக்கு சபாநாயகருடன் சேர்த்து 135 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதிமுக அறுதி பெரும்பான்மையோடு உள்ளது.

    அனைவரும் அதிமுக ஆட்சிக்கு ஆதரவை அளித்து வருகின்றனர். நேற்றைய கூட்டத்துக்கு பல்வேறு காரணங்களினால் சிலர் வரவில்லை.

    தமிழகத்தில் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணமும். அதற்காகத்தான் போராடினோம், டெல்லிச்சென்று முயற்சி எடுத்தோம். ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நீட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசு தள்ளப்பட்டு விட்டதை அனைவரும் அறிவீர்கள்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    NEWS TODAY 27.07.2026