Wednesday, September 6, 2017

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Published : 06 Sep 2017 11:16 IST


கி.மகாராஜன்

மதுரை




தமிழகத்தில் செப். 7 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரிய மனு தொடர்பாக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரையைச் சேர்ந்த டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழு மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என அறிவித்துள்ளது. அன்று அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள் இயங்காது என்றும், இந்த வேலை நிறுத்தத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் நிறுத்தி அரசு பள்ளிகள், கல்லூரிகள் சமூகமாக செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு 24.8.2017-ல் மனு அனுப்பினேன். என் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறு ஏற்படும்.

அரசு ஊழியர்களுக்கு அரசு ஏற்கெனவே போதுமான அளவு ஊதியம் வழங்கி வருகிறது. அரசின் மொத்த வருவாயையும் சம்பளம் வழங்குவதற்கு மட்டும் பயன்படுத்த முடியாது. மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவும் தேவைப்படுகிறது. கூடுதல் ஊதியம் பெறுவதற்காக வேலை நிறுத்தம் என்ற மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுப்பது தவறு.

கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு வழிகள் உள்ளன. அரசிடம் மனு அளிக்கலாம். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம். இதை செய்யாமல் பொதுமக்களையும், அரசு நிர்வாகத்தையும் ஸ்தம்பிக்க செய்யும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறு. வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை அல்ல. மேலும் வேலை நிறுத்தம் செய்வது அரசு ஊழியர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.

வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசு பள்ளிகளில் 10, 11, 12 பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவர். அரசு அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7.9.2017 முதல் மேற்கொள்ள உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (புதன்கிழமை) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக அரசிடம் தகவல் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க அரசு வழக்கறிஞரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024