Wednesday, September 6, 2017

எம்.பில்., பிஎச்.டி மாணவர்கள் காப்பியடித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தால் படிப்பு பதிவு ரத்து: யுஜிசி விரைவில் புதிய விதிமுறை

Published : 06 Sep 2017 09:38 IST


ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை




எம்.பில்., பிஎச்.டி மாணவர்கள் காப்பியடித்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தால் படிப்பின் பதிவை ரத்து செய்யும் வகையில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவர பல்கலைக்கழக மானியக்குழு முடிவுசெய்துள்ளது.

ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) புதிய விதிமுறைகளைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. காப்பியடிக்கப்படும் அளவுக்கு ஏற்ப தண்டனைகளை விதிக்கவும், அப்பட்டமாக காப்பியடித்திருந்தால் சம்பந்தப்பட்ட மாணவர்களை டிஸ்மிஸ் செய்யும் வகையில் வரைவு விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வுக்கட்டுரைகள் அவை காப்பியடிக்கப்பட்டதா என்பதை கண்டுபிடிக்கும் வகையில் உரிய மென்பொருள் சாதனம் வைத்திருக்க வேண்டும். ஆய்வுகட்டுரையானது சொந்தமாக உருவாக்கப்பட்டது என்றும் மற்றவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டதல்ல என்றும் மாணவர்களிடமிருந்து உறுதிமொழி பெறப்பட வேண்டும்.

ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வுசெய்ய ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி ஒழுங்கீன நடவடிக்கைக்குழுவும் அதற்கு மேலாக, காப்பியடித்தல் ஒழுங்கு நடவடிக்கை ஆணையம் என்ற ஓர் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் பாதிப்பு 10 முதல் 40 சதவீதம் இருந்தால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு மதிப்பெண் அளிக்கக் கூடாது.

அந்த பகுதிக்குரிய திருத்தப்பட்ட கட்டுரையை சமர்ப்பிக்க ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டும். பாதிப்பு 40 முதல் 60 சதவீதம் வரை இருப்பின் அதற்கு ஒரு மதிப்பெண் கூட அளிக்கக்கூடாது. புதிய ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒன்றரை ஆண்டை தாண்டக்கூடாது. பாதிப்பு 60 சதவீதத்துக்கு மேல் இருந்தால் ஆய்வுக்கட்டுரைக்கு மதிப்பெண் வழங்காததுடன் படிப்புக்கான பதிவு ரத்து செய்துவிட வேண்டும்.

காப்பியடித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான வரைவு விதிமுறைகள் குறித்த கருத்துகளை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் தெரியப்படுத்துமாறு யுஜிசி செயலர் பி.கே.தாகூர் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆன்லைனில் வெளியிடலாம்

வழக்கமாக, ஒப்புதல் பெறப்பட்ட எம்பில் ஆய்வுக்கட்டுரையானது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இடம்பெறும். அதே நேரத்தில் பிஎச்.டி. ஆய்வுக்கட்டுரை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இடம்பெறுவதோடு யுஜிசி-க்கும் அனுப்பப்படும். இந்த ஆய்வுக்கட்டுரைகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் வெளியிடலாம் என கல்வியாளர்கள் யோசனை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024