Wednesday, November 8, 2017


மா.நன்னன் மரணம் முதல்வர் இரங்கல்


 மா.நன்னன் மரணம் முதல்வர் இரங்கல்
சென்னை, ஊடகங்களின் வழியே, தமிழ் கற்பித்த பேராசிரியரும், முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருமான, மா.நன்னன், 94, காலமானார்.
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, அவரது இல்லத்தில், அவரது உடலுக்கு, தமிழறிஞர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் பழனிசாமி, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் உள்ளிட்ட பலர், இரங்கல் தெரிவித்துள்ளனர்.நன்னன், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகில் உள்ள, சாத்துக்குடல் என்ற கிராமத்தில் பிறந்தார். அண்ணாமலை பல்கலையில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார். சென்னை, மாநிலக் கல்லுரி உள்ளிட்ட பல கல்லுாரிகளில் பேராசிரியராக பணியாற்றினார். 1980 முதல், 1983 வரை, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனராக இருந்தார்.பின், வயது வந்தோர் கல்வி வாரிய துணை தலைவராக பதவியேற்று, கற்பித்தலில் புதிய உத்திகளை புகுத்தினார். சென்னை தொலைக்காட்சியில், 'எண்ணும் எழுத்தும்' என்ற நிகழ்ச்சி; தனியார் தொலைக்காட்சியில், 'தமிழ் பண்ணை' என்ற நிகழ்ச்சிகளின் வழியாக, தமிழ் கற்பித்தார். ஊடகவியலாளர்களுக்கு, தமிழ் உச்சரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினார். 70க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி உள்ளார். இவரின் பல நுால்கள், பள்ளி, கல்லுாரிகளில் பாடங்களாக உள்ளன.
தீவிர தமிழ் பற்றாளரான இவர், தன் இயற்பெயரான, திருஞானசம்பந்தன் என்பதை, நன்னன் என, மாற்றிக்கொண்டார். தன் பிள்ளைகளுக்கும், வேண்மாள், அவ்வை, அண்ணல் என, தமிழ் பெயர்களை வைத்தார். இவருக்கு, பார்வதி என்ற மனைவி உள்ளார்.
மழை,விடுமுறை,முடிவெடுக்க,தலைமை ஆசிரியர்களுக்கு,அதிகாரம்

மழை பாதித்த மாவட்டங்களில், பள்ளிகளை திறப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்க, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த மாவட்ட நிலவரத்தையும் அறிந்து, விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிக்க தேவையில்லை. பாதிப்புக்கு ஏற்ப, பள்ளி தலைமையே முடிவு செய்து கொள்ள, கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, மழை நேரத்தில் பள்ளி உண்டா, இல்லையா என்ற, மாணவர்கள், பெற்றோர் குழப்பத்திற்கு விடிவு பிறந்துள்ளது.



தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கிய முதல் வாரத்திலேயே, யாரும் எதிர்பார்க்காத வகையில், பல மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனால், பள்ளிகளுக்கு, அக்., 30 முதல், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலை, சட்ட பல்கலை, சென்னை பல்கலையில், நவ., 3ம் தேதி மட்டும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், சென்னையை மிரட்டிய கன மழை முடிவுக்கு வந்து, மிதமான மழையாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து, மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட, சில பள்ளிகளுக்கு மட்டும், விடுமுறை தொடர்கிறது. அங்கு, சீரமைப்பு பணி முடிந்ததும், பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளி திறப்பை முடிவு செய்யும் அதிகாரம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மழை மற்றும் இயற்கை சீற்ற பிரச்னைகளின் போது, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். பள்ளியை திறப்பதா, விடுமுறை விடுவதா என்பது குறித்து, உரிய காரணங்களுடன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தால் போதும். அவர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

அதன்பின், எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை என்பதை, மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பாக வெளியிடுவர். அதற்கு முன், பள்ளிகள் உண்டா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள, மாணவர்களும், பெற்றோரும், 'டிவி' செய்தியை எதிர்பார்த்து காத்திருப்பதை தவிர்க்க, தலைமை ஆசிரியர்களே, குறுஞ்செய்தி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் குழப்பத்துக்கு, விடிவு கிடைத்துள்ளது.

முன் அரையாண்டு தேர்வு ரத்து

நமது நாளிதழ் செய்தியை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த, முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை, பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற வைக்கும் முயற்சியாக, அரையாண்டு தேர்வுக்கு முன், முன் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், இத்தேர்வு, வரும், 13ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.

கன மழையால், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டது. முன் அரையாண்டு தேர்வில்,காலாண்டு தேர்வுக்கான பாடங்கள் மற்றும் அதற்கு பின் நடத்திய பாடங்களையும், படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தொடர் விடுமுறையால், நவம்பர் வரை நடத்த வேண்டிய பாடங்கள் நடத்தப்படாமல்,
பற்றாக்குறையாக இருந்ததால், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று விரிவான செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, சென்னை மாவட்ட தேர்வு குழு நிர்வாகிகள் கூடி, நேற்று ஆலோசனை நடத்தினர். முடிவில், முன் அரையாண்டு தேர்வை ரத்து செய்வதாக, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மனோகரன் அறிவித்துள்ளார்.'மழையால் ஏற்பட்ட விடுமுறையாலும், ஆசிரியர்கள் பாடங்களை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாத சூழல் உள்ளதாலும், சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த முன் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுகிறது' என, அவர்
தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிப்பு எப்படி?

பள்ளி விடுமுறை குறித்து, கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட, ஒவ்வொரு நாளும் தாமதமாகிறது. எனவே, கலெக்டர் ஒப்புதல் வழங்கியதும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, பெற்றோரின் மொபைல் போன் எண்களுக்கு, நேரடியாக, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பப்படும். அதேபோல், வகுப்பு ஆசிரியர்களின் மொபைல் போனுக்கும், தகவல் அனுப்பப்படும். அவர்கள், தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு, குறுஞ்செய்தி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும். இதன் வாயிலாக, மாணவர்களுக்கு, பள்ளி விடுமுறை குறித்து, அதிகாரப்பூர்வமான தகவல் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

இதற்காக, மாணவர் விபரங்கள் அடங்கிய, 'எமிஸ்' தகவல் தொகுப்பில் இருந்து, பெற்றோர் மொபைல் போன் எண்களை பெறும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழக சுற்றுப்பயணத்திற்கு பின்
கட்சி பெயர் அறிவிப்பு: கமல்


சென்னை, ''கட்சி ஆரம்பிப்பதற்கு முன், மக்கள் மனநிலையை அறிவதற்காக, தமிழகம் முழுவதும், ஜனவரி முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். அதன்பின், கட்சியின் பெயர், கொடி குறித்து முடிவெடுப்பேன்,'' என, நடிகர் கமல் தெரிவித்தார்.




நடிகர் கமல், தன், 63வது பிறந்த நாளை,நேற்று கொண்டாடினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

விவேகானந்தர், காந்தியடிகள் போன்றோரை, நாட்டை சுற்றிப் பார்த்து, மக்களை புரிந்து கொள்ள, அவர்களது முன்னோடிகள் அறிவுறுத்தினர்.ஐ.ஏ.எஸ்., பயிற்சி பெறுவோர், மக்களையும்,மண்ணையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, 'பாரத் தர்ஷன்' என்ற பெயரில், நாட்டை சுற்றிப் பார்க்க செல்கின்றனர்.
அதேபோல், அனைத்து தரப்பு மக்கள் குறித்து அறிவதற்காக, நானும் ஜனவரி முதல், மாநிலத்தை சுற்றி வர திட்டமிட்டிருக்கிறேன். பின், தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், கட்சி பெயர் குறித்தும் அறிவிப்பேன். அதற்கான ஆயத்தங்களை, இப்போதே துவங்கி விட்டேன். கட்சி குறித்து அறிவிப்பதற்கு முன், சில முன்னேற் பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். மக்களுக்காக இதை செய்வதால், எனக்குப் பின்னும், அது தொடர வேண்டும்.அதனால், அறிஞர்களுடன் கூடி, அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளோம். நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் தருணம் வந்து விட்டது; அதை செய்ய துவங்கியிருக்கிறேன். நிதி திரட்டி கட்சி செலவுகளுக்காக, ரசிகர்களிடம் பணம் பெற மாட்டேன்.

ஏழை மக்களிடம் நிதி திரட்டி, கட்சி நடத்துவேன். அது,வெளிப்படையாக இருக்கும்.எவ்வளவு பணம் வந்தது; எப்படி செலவு செய்யப்பட்டது என்பது போன்ற விஷயங்கள் வெளிப்படையாக இருக்கும். என் கட்சியில், யாராவது ஊழல் புகாரில் சிக்கினால், கடுமையாக தண்டிப்பேன்.

இந்து மதம் குறித்து, நான் கூறிய தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என் மீது மிகுந்த அன்பு கொண்டவரை, தீவிர ரசிகன் என்கிறேன். அந்த பொருளில் தான், 'தீவிரம்' என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். பயங்கரவாதம் என்பதற்கும், அதற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. என் குடும்பத்திலும், இந்துக்கள் உள்ளனர். நான், இந்துக்களின் விரோதி அல்ல. இவ்வாறு கமல் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில், 200 பேருக்கு மேற்பட்டோர் பங்கேற்றதால், அரங்கு நிரம்பி வழிந்தது. முன்னதாக, காலையில், சென்னை, ஆவடியில் நடந்த நிகழச்சியில், மக்களுக்கு தொண்டு செய்யவே, அரசியலுக்கு வருவதாக, கமல் பேசினார்.இதற்கிடையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'கமலஹாசனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். நீங்கள் உடல் ஆரோக்கியத் துடன், பல்லாண்டு வாழ விழைகிறேன்' என, குறிப்பிட்டு உள்ளார்.

நில ஆரமிப்பை மீட்க முடிவு!

கமல் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அரசியல் பாடம் கற்க போனதாக அப்போது கூறினார். பின், கம்யூனிச ஆர்வலர்களுடன், சென்னையின் சில பகுதி களை பார்வையிட்டார். அதனால், அவர் கம்யூனிச சிந்தனை உள்ளவர்களுடன் கூட்டு சேரக்கூடும் என்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால் நேற்று பேசும்போது, 'நான் இடது அல்லது வலது என, எப்பக்கமும் சாராமல், மக்கள் பிரச்னைக்காக பாடுபடுவேன்' என்றார்.

அவரிடம், நம் நிருபர் கேட்டபோது, ''நான் நாத்திகன் அல்ல. கோவில் நில ஆக்கிரமிப்பு களுக்கு எதிராகவும், நான் களம் இறங்க உள்ளேன். அது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளிவரும்,'' என்றார்.

செயலி அறிமுகம்!

''நியாயத்திற்காக குரல் எழுப்புவோரை, ஆங்கிலத்தில் 'விசில் ப்ளோயர்' என்பர். அதேபோல் தங்கள் குறைகள் குறித்து, மக்கள், ஒலி எழுப்புவதற்காக ஜனவரி முதல் maiamwhistle என்ற செயலியை அறிமுகம் செய்யவிருக்கிறேன். அதை உருவாக்கும் பணியில், 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு உள்ளனர். அதில், அனைவரும் புகார் தெரிவிக்கலாம்,'' என, கமல் தெரிவித்தார்.

'கடம்' மீனாட்சி அம்மாள் மறைவு


   'கடம்' மீனாட்சி அம்மாள் மறைவு

மானாமதுரை,சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த கடம் தயாரிப்பாளர் மீனாட்சி அம்மாள், 75, நேற்று மாரடைப்பால் காலமானார்.மானாமதுரையில் நான்கு தலைமுறைகளாக கடம் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள். கடம் வித்வான்கள் விக்கு விநாயக்ராம், உமாசங்கர், கிரிதர் உடுப்பா, சிவன்யா ராஜகோபால் மற்றும் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இவரிடம் கடம் வாங்கி கச்சேரிகளில் பயன்படுத்தியுள்ளனர். இவருக்கு 'நிர்மல் புரஷ்கார்' விருதை 2014ல் ஜனாதிபதி பிரணாப் வழங்கினார்.
நேற்று அதிகாலை மீனாட்சி அம்மாளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது உடலுக்கு மண்பாண்ட கலைஞர்கள், கடம் வித்வான்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலையில் உடல் தகனம் செய்யப்பட்டது.

அந்தமான் அருகே புயல் சின்னம்; தமிழக கடலோரத்தில் அச்சம்


அந்தமான்,புயல் சின்னம்,தமிழக,கடலோரத்தில்,அச்சம்,Storm,Weather,புயல்,மழை,வானிலை
வங்க கடலில் அந்தமான் அருகே புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கூடுதல் மழையை தரும் என, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்த வட கிழக்கு பருவ மழை சில பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வங்க கடலில் அந்தமான் தீவுகள் அருகே, புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது, மேலும் வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மேலும் வலுப்பெறும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அது புயலாக மாறினால் சென்னை, நெல்லுார், கோல்கட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள புரி என, எந்த திசையிலும் கரையை கடக்கும். தற்போதைய நிலவரப்படி இது புயலாக மாறாது; காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழலும் என, கணிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே சுழன்றால் புதுச்சேரி முதல் சென்னை வரையிலும் ஆந்திர தெற்கு கடற்பகுதியிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 10ம் தேதி இதன் இறுதி நிலை தெரிய வரும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும், குரூப்-4 பணிகளுக்கும் ஒரே தேர்வு நடத்துவது ஏன்?


கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும், குரூப்-4 பணிகளுக்கும் ஒரே தேர்வு நடத்துவது ஏன் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

நவம்பர் 08, 2017, 03:30 AM
சென்னை

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 2-ந் தேதி செய்தி வெளியீட்டின் மூலம் பல்வேறு காரணிகளை முன்னிட்டு குரூப்-4ல் அடங்கிய பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளுக்கான தெரிவுகளை ஒரே தேர்வின் மூலம் தேர்வு செய்வது என்ற முடிவினை வெளியிட்டது.

இது குறித்து கிராம நிர்வாக சங்க மாநில தலைவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து குறித்து தேர்வாணையம் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது.

கிராம நிர்வாக அலுவலர், பதவிக்கான வயது வரம்பில் எவ்வித மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. இப்பதவிக்கான குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 என்கின்ற விதியே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். மேலும் குரூப்-4ல் அடங்கியுள்ள பதவிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான வயது மற்றும் இதர தகுதிகளில் மாற்றம் ஏதுமில்லை. போட்டித்தேர்வு மட்டுமே ஒரே தேர்வாக நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் மூன்றில் ஒருபங்கு விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வு கட்டணம் செலுத்தியுள்ளனர். மூன்றில் இருபங்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றவர்களாவர். மேலும் விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரையில் ஒருமுறை நிரந்தரப்பதிவு செய்து விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்கள் 5 வருடங்கள் அப்பதிவினை பயன்படுத்தி அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இத்தகைய சூழலில் இத்தேர்வுகளை தனித்தனியாக நடத்துவதற்கு பெருந்தொகை அரசால் செலவிடப்படுகிறது. ஆகையால் இரு தேர்வுகளையும் சேர்த்து நடத்துவதன் மூலம் அரசிற்கு சுமார் 15 கோடி வரை செலவு தவிர்க்கப்படுவதுடன், காலியிடங்கள் விரைவில் நிரப்பப்பட ஏதுவாகிறது.

பல்வேறு நடைமுறை சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பலதரப்பட்ட இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வாணையம் ஒரே தேர்வு முறையினை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை மாவட்டத்தில் மழை 10, 11, 12 வகுப்புகளுக்கு அரையாண்டு மாதிரி தேர்வு ரத்து


சென்னை மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மாதிரி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 08, 2017, 03:45 AM
சென்னை,

சென்னை மாவட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வுக்கு முன்பாக, மாதிரி அரையாண்டு தேர்வுகளை வருகிற 11-ந் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சென்னை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 10, 11 மற்றும் 12-வது வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்த இருந்த மாதிரி அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி அரையாண்டு தேர்வுதான் நடக்கும்.

இந்த தகவலை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்.எம்.மனோகரன் தெரிவித்தார்.

NEWS TODAY 03.07.2026