Wednesday, November 8, 2017

தமிழக சுற்றுப்பயணத்திற்கு பின்
கட்சி பெயர் அறிவிப்பு: கமல்


சென்னை, ''கட்சி ஆரம்பிப்பதற்கு முன், மக்கள் மனநிலையை அறிவதற்காக, தமிழகம் முழுவதும், ஜனவரி முதல் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். அதன்பின், கட்சியின் பெயர், கொடி குறித்து முடிவெடுப்பேன்,'' என, நடிகர் கமல் தெரிவித்தார்.




நடிகர் கமல், தன், 63வது பிறந்த நாளை,நேற்று கொண்டாடினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

விவேகானந்தர், காந்தியடிகள் போன்றோரை, நாட்டை சுற்றிப் பார்த்து, மக்களை புரிந்து கொள்ள, அவர்களது முன்னோடிகள் அறிவுறுத்தினர்.ஐ.ஏ.எஸ்., பயிற்சி பெறுவோர், மக்களையும்,மண்ணையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, 'பாரத் தர்ஷன்' என்ற பெயரில், நாட்டை சுற்றிப் பார்க்க செல்கின்றனர்.
அதேபோல், அனைத்து தரப்பு மக்கள் குறித்து அறிவதற்காக, நானும் ஜனவரி முதல், மாநிலத்தை சுற்றி வர திட்டமிட்டிருக்கிறேன். பின், தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், கட்சி பெயர் குறித்தும் அறிவிப்பேன். அதற்கான ஆயத்தங்களை, இப்போதே துவங்கி விட்டேன். கட்சி குறித்து அறிவிப்பதற்கு முன், சில முன்னேற் பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். மக்களுக்காக இதை செய்வதால், எனக்குப் பின்னும், அது தொடர வேண்டும்.அதனால், அறிஞர்களுடன் கூடி, அதற்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளோம். நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் தருணம் வந்து விட்டது; அதை செய்ய துவங்கியிருக்கிறேன். நிதி திரட்டி கட்சி செலவுகளுக்காக, ரசிகர்களிடம் பணம் பெற மாட்டேன்.

ஏழை மக்களிடம் நிதி திரட்டி, கட்சி நடத்துவேன். அது,வெளிப்படையாக இருக்கும்.எவ்வளவு பணம் வந்தது; எப்படி செலவு செய்யப்பட்டது என்பது போன்ற விஷயங்கள் வெளிப்படையாக இருக்கும். என் கட்சியில், யாராவது ஊழல் புகாரில் சிக்கினால், கடுமையாக தண்டிப்பேன்.

இந்து மதம் குறித்து, நான் கூறிய தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என் மீது மிகுந்த அன்பு கொண்டவரை, தீவிர ரசிகன் என்கிறேன். அந்த பொருளில் தான், 'தீவிரம்' என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். பயங்கரவாதம் என்பதற்கும், அதற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. என் குடும்பத்திலும், இந்துக்கள் உள்ளனர். நான், இந்துக்களின் விரோதி அல்ல. இவ்வாறு கமல் கூறினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில், 200 பேருக்கு மேற்பட்டோர் பங்கேற்றதால், அரங்கு நிரம்பி வழிந்தது. முன்னதாக, காலையில், சென்னை, ஆவடியில் நடந்த நிகழச்சியில், மக்களுக்கு தொண்டு செய்யவே, அரசியலுக்கு வருவதாக, கமல் பேசினார்.இதற்கிடையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'கமலஹாசனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள். நீங்கள் உடல் ஆரோக்கியத் துடன், பல்லாண்டு வாழ விழைகிறேன்' என, குறிப்பிட்டு உள்ளார்.

நில ஆரமிப்பை மீட்க முடிவு!

கமல் கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அரசியல் பாடம் கற்க போனதாக அப்போது கூறினார். பின், கம்யூனிச ஆர்வலர்களுடன், சென்னையின் சில பகுதி களை பார்வையிட்டார். அதனால், அவர் கம்யூனிச சிந்தனை உள்ளவர்களுடன் கூட்டு சேரக்கூடும் என்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால் நேற்று பேசும்போது, 'நான் இடது அல்லது வலது என, எப்பக்கமும் சாராமல், மக்கள் பிரச்னைக்காக பாடுபடுவேன்' என்றார்.

அவரிடம், நம் நிருபர் கேட்டபோது, ''நான் நாத்திகன் அல்ல. கோவில் நில ஆக்கிரமிப்பு களுக்கு எதிராகவும், நான் களம் இறங்க உள்ளேன். அது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளிவரும்,'' என்றார்.

செயலி அறிமுகம்!

''நியாயத்திற்காக குரல் எழுப்புவோரை, ஆங்கிலத்தில் 'விசில் ப்ளோயர்' என்பர். அதேபோல் தங்கள் குறைகள் குறித்து, மக்கள், ஒலி எழுப்புவதற்காக ஜனவரி முதல் maiamwhistle என்ற செயலியை அறிமுகம் செய்யவிருக்கிறேன். அதை உருவாக்கும் பணியில், 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு உள்ளனர். அதில், அனைவரும் புகார் தெரிவிக்கலாம்,'' என, கமல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024