Wednesday, November 8, 2017


கட்சி துவங்க காசு கேட்ட கமல்: ஜெயக்குமார் கிண்டல்


  கட்சி துவங்க காசு கேட்ட கமல்: ஜெயக்குமார் கிண்டல்
சென்னை, ''உலகிலேயே கட்சி துவங்க, தொண்டர்களிடம், 30 கோடி ரூபாய் கேட்டது, நடிகர் கமலாக தான் இருப்பார்,'' என, அமைச்சர், ஜெயக்குமார் கூறினார்.
அவரது பேட்டி:கன மழை பெய்யும் போது, சாலைகளில் மழை நீர் தேங்கும். மழை நின்றதும் தேங்கிய நீர் வடிந்து விடும். சென்னையை பொறுத்தவரை, 14 
ஆண்டுகளாக, சராசரி மழை இருந்தது. 2005ல், பெரு மழை பெய்தது. அதன்பின், 2015ல் பெரு மழை பெய்தது. அப்போது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், எதிர்வரும் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என, திட்டம் வகுத்து செயல்படுகிறோம்.
நடிகர் கமலுக்கு, பிறந்த நாள் வாழ்த்துகள். யார் வேண்டுமானாலும், கட்சி ஆரம்பிக்கலாம்; அங்கீகாரம் தருவது மக்கள். அவர்கள் தான் இறுதி எஜமானர்கள். மக்கள், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., பக்கம் உள்ளனர். தலைவர்கள் யாரும், தொண்டர்களிடம் பணம் கேட்கவில்லை. கமல், தொண்டர்களிடம், 30 கோடி ரூபாய் கேட்கிறார். அது, என்ன கணக்கு என்று தெரியவில்லை. உலகிலேயே கட்சி துவக்க, 30 கோடி ரூபாய் கேட்டது, இவராக தான் இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளி மாணவிகளுக்கு 10 மணி நேர கராத்தே பயிற்சி



தேனி, அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் பத்து மணி நேரம் கராத்தே பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாணவிகளுக்கு பாலியல், சமூக விரோதிகளின் தொந்தரவுகள் அதிகரித்துள்ளன. மாநில குற்றவியல் ஆவண காப்பகத்தின் பதிவேடுகளின் மூலம் பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில், அரசு பள்ளி மாணவிகளில் 18 சதவீதம் பேர், பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பள்ளி மாணவிகளின் தைரியம், மனோதிடத்தை அதிகரிக்கவும் எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள புதிய அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி ஏற்கனவே 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில் அளிக்கப்பட்டு வந்த கராத்தே பயிற்சியை, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்து கற்றுத்தர முடிவு செய்யப்பட்டது.
வாரத்திற்கு ஒன்றரை மணி நேரம் என இரு வகுப்புகளும், மாதத்திற்கு தலா 10 மணி நேர பயிற்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வசந்தி கூறியதாவது: 
அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் வட்டாரத்திற்கு அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு திறன்மிக்க பயிற்சியாளர்களை வைத்து கராத்தே பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வளரிளம் மாணவிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை அளிக்கும், என்றார்.

'ஆதார்' இல்லாமல் வருமான கணக்குஅனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி



சென்னை, 'ஆதார்' எண் இல்லாமல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, அனுமதி கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்றத்தில், தியாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'வருமான வரி கணக்கை, நேரிலோ அல்லது மின்னணு முறையிலோ தாக்கல் செய்ய உள்ளேன். 
வருமான வரி கணக்கு தாக்கலின் போது, என் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என, வருமான வரித் துறை கட்டாயப் படுத்தக் கூடாது. 
ஆதார் எண் இல்லாமல், கணக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி சிவஞானம் விசாரித்தார். மத்திய நிதி அமைச்சகம் சார்பில், மத்திய அரசு மூத்த வழக்கறிஞர், 
ரபுமனோகர், வருமான வரித்துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஜி.ராஜகோபாலன், வழக்கறிஞர், ஹேமா முரளிகிருஷ்ணன் ஆஜராகினர்.
நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தாக்கல் செய்த மனுவோடு, இந்த நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் இணைத்துள்ளார். 
அந்த உத்தரவில், ஆதார் எண்ணை வற்புறுத்தாமல், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, வருமான வரித்துறை அனுமதிக்கும்படி கூறப்பட்டுள்ளது. 
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மேற்கோள் காட்டி உள்ளார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்தில், 'உச்ச நீதிமன்ற உத்தரவை, தவறாக காட்டுகின்றனர். 
வேறு பரிவர்த்தனைகளுக்கு தான், உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், ஆதார் எண் இல்லாமல், வருமான வரி கணக்கை ஏற்கும்படி, உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்படவில்லை' என, தெரிவித்துள்ளார்.
எனவே, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு, இதற்கு பொருந்தாது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க, எந்த முகாந்திரமும் இல்லை. மனுதாரர் கோரிய நிவாரணத்தையும் வழங்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு தேதி தள்ளி வைப்பு
தாமதமாவதன் பின்னணி என்ன

'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு எப்போது அறிவிக்கப்படும் என்ற தேதி, மீண்டும் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதன் பின்னணியில் தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், ராஜாவின் வாதங்களும் அவர் தரப்பில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை ஏப்ரல் மாதமே முடிந்துவிட்டது. இது கிரிமினல் வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் சிறு சந்தேகம் இருந்தாலும் அதை குற்றவாளிக்கு சாதகமாக அளிக்க வேண்டும்.மாணவி, ஆருஷி கொலை வழக்கில்கூட குற்றத்தை, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியதாலேயே அந்த சந்தேகத்தின் பலன் ஆருஷியின் பெற்றோருக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா, சந்தேகத்தின் பலனைக் கூட கேட்கவில்லை. 'குற்றப்பத்திரிகையே தவறு' என கூறி, வழக்கின் அடிப்படையையே கேள்விக்கு ஆளாக்கியுள்ளார். ஒரு கொலை நடந்து, 'அதை நான் செய்யவில்லை' என்பது ஒருவகை. 'அப்படியொரு கொலையே நடக்கவில்லை; இதோ உயிருடன் அவர் உள்ளார்' என, வாதிடுவது மற்றொரு வகை; இதில், ராஜா விவகாரம் இரண்டாவது வகை.

நிர்வாக ரீதியிலானது என்றாலும் பெருமளவு தொழில்நுட்ப ரீதியில் அமைந்த நுட்பமானது தான் இந்தஸ்பெக்ட்ரம் வழக்கு. மத்திய தணிக்கைக் குழுவான, சி.ஏ.ஜி., அளித்த அறிக்கைதான், இந்த வழக்கிற்கு அடிப்படையே. ஆனால் அந்த சி.ஏ.ஜி., அறிக்கையே தவறு என்பது தான் ராஜாவின் பிரதான வாதம்.
இதற்கு காரணம், 2010ல், தொலைத்தொடர்பு அமைச்சகம், சி.ஏ.ஜி.,க்கு எழுதிய பதில்கள்.

அதில் சி.ஏ.ஜி.,யின் குற்றசாட்டு ஒவ்வொன்றையும் கடுமையாகசாடியதுடன் 'ஸ்பெக்ட்ரம் குறித்த போதுமான சட்டப்புரிதலோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாமல் தயாரிக்கப்பட்ட அறிக்கை. போதிய விஷய ஞானமே இல்லாத இந்த அறிக்கை துாக்கியெறியப்படவேண்டியது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எழுதிய உயர் அதிகாரி தான் சி.பி.ஐ., தரப்பின் பிரதான சாட்சிகளில், ஒருவர்; இவர், சாட்சியளிக்க கூண்டில் நின்றபோது, அவரிடம், ராஜாவே குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, 'சி.ஏ.ஜி.,க்கு எழுதியுள்ள பதில்கள் உண்மையே. பிரதமர் அலுவலகம் நிதியமைச்சகம் என அனைத்து தரப்போடும் ஆலோசித்து, கூட்டுமுடிவே எடுக்கப் பட்டது' என, அந்த அதிகாரி ஒப்புக் கொண்டார்.

சி.ஏ.ஜி.,க்கும், தொலைத் தொடர்புத் துறைக்கும் இடையிலான இதுபோன்ற முக்கிய கடித போக்குவரத்துக்கள் இருக்கும் விபரங்களை, சி.பி.ஐ., காவலில் இருந்தபோதுகூட ராஜா, தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்.இந்த ஆவணங்களை கைப்பற்றாமலேயே ஊடகங்கள், சுப்ரீம் கோர்ட் போன்றவற்றின் அழுத்தங்கள் காரணமாக, சி.பி.ஐ.,

அவசரகதியில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் விசாரணை ஆரம்பித்த பிறகு, நீதிபதிமுன்பாக, ஆவணங்களை ஒவ்வொன்றாக ராஜா வெளியில் விட ஆரம்பித்த போதுதான், இத்தகைய ஆவணங்கள் இருப்பதே, மற்றவர் களுக்கு தெரிந்தது.தேதியை மாற்றியது, முதலில் வருபவருக்கே முன்னுரிமை இரட்டை தொழில்நுட்பம் என, சி.பி.ஐ.,யின் குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும், தொலைத் தொடர்புத் துறை, பிரதமர் மற்றும் நிதியமைச்சக ஆவணங்களே எதிராக உள்ளன. ராஜா கூறியோ, கட்டாயப்படுத்தியோ, முடிவுகள் எடுக்பட்டதாக எந்தவொரு இடத்திலும் இல்லை.

வழக்கை கையில் எடுத்த பின்பாவது, 'அமைச்சரின் நிர்ப்பந்தம் காரணமாகவே, இந்த கடிங்களை எழுத நேரிட்டது' என, வாக்கு மூலம் வாங்கியிருக்கலாம்; அதையும், சி.பி.ஐ., செய்யவில்லை.இந்த பின்னணியில்தான், ஆவணங்களை சரிபார்த்து, தரப்போகும் தீர்ப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் நியாயப்படுத்தி, 10 ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக தீர்ப்பு விபரங்கள் தயாராவதே, தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவது தாமதமாவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 5க்கு ஒத்திவைப்பு

தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை. மேலும் மூன்று வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, தீர்ப்பு தேதி குறித்த அடுத்த கட்ட விசாரணை டிசம்பர், 5க்கு ஒத்தி வைக்கப் படுகிறது.

-ஓ.பி.சைனி,
சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி, டில்லி
நாகையில் தொடரும் அடைமழை சம்பா பயிர்கள் அழுகும் அபாயம்

நாகப்பட்டினம், நாகை மாவட்டத்தில், 10 நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் ஓய்வெடுத்த மழை, இரவில் மீண்டும் துவங்கி, நேற்றும் தொடர்ந்தது.
சம்பா விளைநிலங்களில் விதை தெளித்த சில நாட்களில், தண்ணீர் தேங்கியதால், கந்து வட்டிக்கு கடன் வாங்கி, சம்பா பயிர்களை காப்பாற்ற முயன்ற விவசாயிகள், தொடர் மழையால் சோர்வடைந்துள்ளனர். 3 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளன.
கடல் சீற்றம் காரணமாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், வீடுகளில் முடங்கியுள்ளனர். வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்களும் முடங்கி உள்ளனர். சீர்காழி அருகேயுள்ள கிராமங்களில், ஒன்பது நாட்களாக பெய்து வரும் கனமழையால், 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியுள்ளது.
வெள்ள பாதிப்பை பார்வையிட வராத அதிகாரிகளை கண்டித்தும், வாய்க்கால்களை துார் வாரக் கோரியும், பாதிக்கப்பட்ட பயிருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், ஐந்து கிராம விவசாயிகள், அரசூர் புறவழி சாலையில் நேற்று, மறியலில் ஈடுபட்டனர். இதனால், சீர்காழி- - சிதம்பரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு நடத்தி, மறியலை கைவிடச் செய்தனர்.
பாதிப்பே இல்லை
தஞ்சை மாவட்டத்தில் வயல்களில் 
தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது. நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் நெற்பயிர் மூழ்கியது தொடர்பாக அந்த மாவட்ட அமைச்சர் மணியன் ஆய்வு செய்து வருகிறார். அங்கும் மழைநீர் வடிந்து வருகிறது. வடகிழக்கு பருவ மழையால் காவிரி டெல்டாவில் சம்பா நெற்பயிருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. குடிமராமத்து பணியில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. இந்த பணிகள் முறையாக நடைபெற்றதால் தான் 
தற்போது மழைநீர் வாய்க்கால்களில் வடிந்து வருகிறது.
துரைக்கண்ணு, வேளாண் அமைச்சர்

பிறந்த குழந்தையை பார்க்க வசூல் நெல்லையில் 2 நர்ஸ், 'சஸ்பெண்ட்'

திருநெல்வேலி, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டில் குழந்தையை பார்க்க பணம் வசூலித்த இரண்டு நர்சுகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர்.இங்குள்ள பிரசவ வார்டில் பணிபுரியும், மகப்பேறு மருத்துவ பணியாளர்கள் பேச்சியம்மாள், செல்வி ஆகியோர், பிரசவித்த பெண்ணின் உறவினர்களிடம், பிறந்த குழந்தையை பார்க்க, பணம் பெறுவதை வாடிக்கையாக வைத்திருத்தனர். ஆண் குழந்தை என்றால், ஒரு 'ரேட்', பெண் குழந்தை என்றால் ஒரு ரேட் என நிர்ணயித்து, பணம் வசூலித்து வந்தனர்.இது குறித்து, பல்வேறு தரப்பில் புகார்கள் எழுந்தன. டீன் சித்தி அத்திய முனவரா விசாரணை நடத்தினார். இதில், இருவரும் பணம் வாங்கியது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை, சஸ்பெண்ட் செய்து டீன் உத்தரவிட்டார்.


தி.மலையில் தீபத்தன்று மலை ஏற பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை, ''திருவண்ணாமலை தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்து, கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் மற்றும் கோவில் ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோருடன், கலெக்டர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தீப திருவிழாவிற்கு, 7.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. 16 தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், ஒன்பது பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து, கிரிவலப்பாதை வரை, முதியவர்கள், குழந்தைகள் செல்ல, இலவசமாக பஸ் இயக்கப்படும்.
தீபத்தன்று, அதிகளவு பக்தர்கள் மலை ஏறும்போது நெரிசல் ஏற்படுகிறது. மலையில் தீபம் ஏற்றும் நேரங்களில், மர்ம ஆசாமிகள் மரங்களுக்கு தீ வைக்கின்றனர். இதை 
தவிர்க்க, இந்த ஆண்டு முதல், அன்று ஒரு நாள் மட்டும் மலை ஏற தடை விதிக்கப்படுகிறது .
இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 03.07.2026