Wednesday, November 8, 2017

ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு தேதி தள்ளி வைப்பு
தாமதமாவதன் பின்னணி என்ன

'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு எப்போது அறிவிக்கப்படும் என்ற தேதி, மீண்டும் மீண்டும் தள்ளி வைக்கப்படுவதன் பின்னணியில் தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், ராஜாவின் வாதங்களும் அவர் தரப்பில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை ஏப்ரல் மாதமே முடிந்துவிட்டது. இது கிரிமினல் வழக்கு. இதுபோன்ற வழக்குகளில் சிறு சந்தேகம் இருந்தாலும் அதை குற்றவாளிக்கு சாதகமாக அளிக்க வேண்டும்.மாணவி, ஆருஷி கொலை வழக்கில்கூட குற்றத்தை, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறியதாலேயே அந்த சந்தேகத்தின் பலன் ஆருஷியின் பெற்றோருக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராஜா, சந்தேகத்தின் பலனைக் கூட கேட்கவில்லை. 'குற்றப்பத்திரிகையே தவறு' என கூறி, வழக்கின் அடிப்படையையே கேள்விக்கு ஆளாக்கியுள்ளார். ஒரு கொலை நடந்து, 'அதை நான் செய்யவில்லை' என்பது ஒருவகை. 'அப்படியொரு கொலையே நடக்கவில்லை; இதோ உயிருடன் அவர் உள்ளார்' என, வாதிடுவது மற்றொரு வகை; இதில், ராஜா விவகாரம் இரண்டாவது வகை.

நிர்வாக ரீதியிலானது என்றாலும் பெருமளவு தொழில்நுட்ப ரீதியில் அமைந்த நுட்பமானது தான் இந்தஸ்பெக்ட்ரம் வழக்கு. மத்திய தணிக்கைக் குழுவான, சி.ஏ.ஜி., அளித்த அறிக்கைதான், இந்த வழக்கிற்கு அடிப்படையே. ஆனால் அந்த சி.ஏ.ஜி., அறிக்கையே தவறு என்பது தான் ராஜாவின் பிரதான வாதம்.
இதற்கு காரணம், 2010ல், தொலைத்தொடர்பு அமைச்சகம், சி.ஏ.ஜி.,க்கு எழுதிய பதில்கள்.

அதில் சி.ஏ.ஜி.,யின் குற்றசாட்டு ஒவ்வொன்றையும் கடுமையாகசாடியதுடன் 'ஸ்பெக்ட்ரம் குறித்த போதுமான சட்டப்புரிதலோ, தொழில்நுட்ப அறிவோ இல்லாமல் தயாரிக்கப்பட்ட அறிக்கை. போதிய விஷய ஞானமே இல்லாத இந்த அறிக்கை துாக்கியெறியப்படவேண்டியது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எழுதிய உயர் அதிகாரி தான் சி.பி.ஐ., தரப்பின் பிரதான சாட்சிகளில், ஒருவர்; இவர், சாட்சியளிக்க கூண்டில் நின்றபோது, அவரிடம், ராஜாவே குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, 'சி.ஏ.ஜி.,க்கு எழுதியுள்ள பதில்கள் உண்மையே. பிரதமர் அலுவலகம் நிதியமைச்சகம் என அனைத்து தரப்போடும் ஆலோசித்து, கூட்டுமுடிவே எடுக்கப் பட்டது' என, அந்த அதிகாரி ஒப்புக் கொண்டார்.

சி.ஏ.ஜி.,க்கும், தொலைத் தொடர்புத் துறைக்கும் இடையிலான இதுபோன்ற முக்கிய கடித போக்குவரத்துக்கள் இருக்கும் விபரங்களை, சி.பி.ஐ., காவலில் இருந்தபோதுகூட ராஜா, தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்.இந்த ஆவணங்களை கைப்பற்றாமலேயே ஊடகங்கள், சுப்ரீம் கோர்ட் போன்றவற்றின் அழுத்தங்கள் காரணமாக, சி.பி.ஐ.,

அவசரகதியில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் விசாரணை ஆரம்பித்த பிறகு, நீதிபதிமுன்பாக, ஆவணங்களை ஒவ்வொன்றாக ராஜா வெளியில் விட ஆரம்பித்த போதுதான், இத்தகைய ஆவணங்கள் இருப்பதே, மற்றவர் களுக்கு தெரிந்தது.தேதியை மாற்றியது, முதலில் வருபவருக்கே முன்னுரிமை இரட்டை தொழில்நுட்பம் என, சி.பி.ஐ.,யின் குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும், தொலைத் தொடர்புத் துறை, பிரதமர் மற்றும் நிதியமைச்சக ஆவணங்களே எதிராக உள்ளன. ராஜா கூறியோ, கட்டாயப்படுத்தியோ, முடிவுகள் எடுக்பட்டதாக எந்தவொரு இடத்திலும் இல்லை.

வழக்கை கையில் எடுத்த பின்பாவது, 'அமைச்சரின் நிர்ப்பந்தம் காரணமாகவே, இந்த கடிங்களை எழுத நேரிட்டது' என, வாக்கு மூலம் வாங்கியிருக்கலாம்; அதையும், சி.பி.ஐ., செய்யவில்லை.இந்த பின்னணியில்தான், ஆவணங்களை சரிபார்த்து, தரப்போகும் தீர்ப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் நியாயப்படுத்தி, 10 ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக தீர்ப்பு விபரங்கள் தயாராவதே, தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவது தாமதமாவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 5க்கு ஒத்திவைப்பு

தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை. மேலும் மூன்று வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, தீர்ப்பு தேதி குறித்த அடுத்த கட்ட விசாரணை டிசம்பர், 5க்கு ஒத்தி வைக்கப் படுகிறது.

-ஓ.பி.சைனி,
சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி, டில்லி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024