Saturday, November 11, 2017


குவியும் 10 ரூபாய் நாணயங்கள்: வங்கி ஊழியர்கள் தவிப்பு

: நவ 11, 2017 01:24 |




புனே: மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், மலை போல் குவிந்துள்ள, 10 ரூபாய் நாணயங்களை பாதுகாக்க முடியாமல், ஊழியர்கள் தவிக்கின்றனர்.

கடந்த, 2005ல், 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின், 2011ல், சில மாற்றங்களை செய்து, புதிய வடிவில், 10 ரூபாய் நாணயங்களை, ரிசர்வ் வங்கி வெளியிட்டது; 5,200 கோடி ரூபாய் மதிப்பில், 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டன.

இந்நிலையில், சமூக வலைதளம் மூலம், புதிய, 10 ரூபாய் நாணயம் குறித்து தவறான வதந்தி பரவியது. பழைய மற்றும் புதிய நாணயங்களில் இருந்த வேறுபாட்டை தவறாக புரிந்து கொண்ட மக்கள், போலி நாணயமாக கருதி வாங்க மறுத்தனர். வியாபாரிகளும், இந்த நாணயங்களை வாங்க மறுத்ததால், மக்கள் தங்களிடம் இருந்த, 10 ரூபாய் நாணயங்களை, வங்கிகளில் டிபாசிட் செய்தனர். புனே மாவட்ட, கூட்டுறவு வங்கி பெட்டகம், 10 ரூபாய் நாணயங்களால் நிரம்பி வழிவதால், ஊழியர்கள் தத்தளிக்கின்றனர்.

வங்கிகளில், 10 ரூபாய் நாணயங்கள் அதிகளவில் 'டிபாசிட்' செய்யப்படுவதாகவும், இந்த நாணயங்களை பெற்றுக் கொள்ள, வாடிக்கையாளர்கள் முன்வருவதில்லை எனவும், இவற்றை என்ன செய்வதென தெரியாமல், வங்கிகள் தவிக்கின்றன எனவும் புனே கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரெயில் என்ஜின் தானாக ஓடிய விவகாரம் ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம்



கர்நாடகாவில் ரெயில் என்ஜின் தானாக ஓடிய விவகாரம் தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நவம்பர் 10, 2017, 08:28 PM

கலபுரகி,

சென்னை–மும்பை இடையே மும்பை மெயில் என்ற ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில் கடந்த 8–ந் தேதி மதியம் கலபுரகி மாவட்டம் வாடி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது அங்கு வைத்து ரெயிலின் எலெக்ட்ரிக் என்ஜினை மாற்றிவிட்டு டீசல் என்ஜினை பொருத்தும் பணி நடந்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் திடீரென்று எலெக்ட்ரிக் என்ஜின் மட்டும் டிரைவர் இல்லாமல் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு தானாக ஓடியது. பின்னர் என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று துரிதமாக செயல்பட்டு எலெக்ட்ரிக் என்ஜினை நிறுத்தினர். இந்த சம்பவம் கலபுரகியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்படுகிறது. முதல்கட்ட விசாரணையில் எலெக்ட்ரிக் என்ஜின் மட்டும் டிரைவர் இல்லாமல் ஓடியதற்கு வாடி ரெயில் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் 4 பேரின் அலட்சியமே காரணம் என்று தெரியவந்தது.

இதையடுத்து, வாடி ரெயில் நிலைய மேலாளர் சந்தோஷ் தாரே மற்றும் 3 அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் ரெயில் என்ஜின் மட்டும் தனியாக ஓடிய விவகாரம் தொடர்பாக துறை ரீதியிலான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.
டெல்லியில் அரசு பஸ்களில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம்



5 நாட்கள் மக்கள் மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் கூறி உள்ளார்.

நவம்பர் 11, 2017, 03:15 AM
புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசுபாடுவதை தவிர்க்கும் விதமாக, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை வாகனங்களையும் இயக்க அரசு முடிவு செய்தது. இதற்கான சோதனை ஓட்டம் 2 கட்டமாக கடந்த ஆண்டு நடந்தது.

2-வது கட்ட சோதனை ஓட்டம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அவசர காலங்களில் மட்டும் இத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு மிகுந்து கணப்படுவதால் அங்கு வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு முறை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இத்திட்டம் அமலில் இருக்கும் 5 நாட்களிலும் மக்கள் மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் கூறி உள்ளார். இது மக்கள் அரசு போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்கப்படுத்தும் என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
தேசிய செய்திகள்

‘நீட்’ உள்ளிட்ட தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை மத்திய மந்திரிசபை ஒப்புதல்



உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

நவம்பர் 11, 2017, 04:15 AM

புதுடெல்லி,


முன்னேறிய நாடுகளில் இருப்பதுபோல், உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் நடத்த தேசிய தேர்வு முகமை அமைக்கப்படும் என்று நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.


அதன்படி, தேசிய தேர்வு முகமை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடக்கத்தில், சி.பி.எஸ்.சி. நடத்தி வரும் நுழைவுத்தேர்வுகளை மட்டும் இந்த முகமை நடத்தும். பிறகு, படிப்படியாக மற்ற நுழைவுத்தேர்வுகளையும் நடத்தும்.


தற்போது, மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வையும், பல்கலைக்கழக மானியக்குழுவுக்காக கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ‘நெட்’ தேர்வையும் சி.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளை, இனிமேல், தேசிய தேர்வு முகமை நடத்தும். இதன் தலைவரை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமிக்கும்.


இந்த முகமைக்கு ஒரே நேர மானிய உதவியாக மத்திய அரசு ரூ.25 கோடி வழங்கும். இதைக்கொண்டு, முகமை தனது முதல் வருட பணிகளை தொடங்கும். பிறகு தனது செலவுகளை தானே கவனித்துக்கொள்ளும். தன்னாட்சி அமைப்பான இந்த முகமை அமைக்கப்படுவதால், பல்வேறு நுழைவுத்தேர்வுகள் எழுதும் சுமார் 40 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கிராமப்புற மக்களின் குடிநீர் தேவைக்காக, தேசிய ஊரக குடிநீர் திட்டத்தை மாற்றி அமைப்பதற்கும், அதற்கு ரூ.23 ஆயிரத்து 50 கோடி ஒதுக்குவதற்கும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.


கீழ்கோர்ட்டு நீதிபதிகளின் சம்பளத்தை மாற்றி அமைப்பதற்காக 2-வது தேசிய நீதித்துறை சம்பள கமிஷனை அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.பி.வெங்கட்ராம ரெட்டி இருப்பார். 18 மாத காலத்துக்குள் இந்த கமிஷன், மாநில அரசுகளிடம் தனது சிபாரிசுகளை தாக்கல் செய்யும்.


இருப்பு வைக்கப்பட்ட பருப்புகளை மதிய உணவு திட்டம் போன்ற மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக ஹாங்காங்குடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய செய்திகள்

அசைவம் சாப்பிடாதவர்கள், மது அருந்தாதவர்களுக்கே ‘கோல்ட் மெடல்’ பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு


அசைவம் சாப்பிடாதவர்கள் மற்றும் மது அருந்தாதவர்களுக்கு ‘கோல்ட் மெடல்’ வழங்கப்படும் என புனே பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
நவம்பர் 10, 2017, 04:27 PM

புனே,

மதிப்புமிக்க பல்கலைக்கழகம் ‘மோல்ட் மெடலுக்கு’ விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


பல்கலைக்கழகத்தில் தங்க பதக்கம் பெற தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு அதிகமான மதிப்பெண்கள் பெறுவது மற்றும் பல்கலைக்கழக கல்வி நிகழ்வுகளில் பங்கேற்று திறனை வெளிப்படுத்துவது என்பது சிறந்த மாணவர்களுக்கு அவசியமானது என நீங்கள் எண்ணியிருக்கலாம். இப்போது மதிப்புமிக்க புனே பல்கலைக்கழகம் சில விரும்பதக்க நடவடிக்கையையும் இதில் இணைத்து உள்ளது, அதாவது நீங்கள் ‘கோல்ட் மெடல்’ வாங்க வேண்டும் என்றால் அசைவம் சாப்பிடாதவராக இருக்கவேண்டும் மற்றும் மது அருந்தாதவர்களாக இருக்க வேண்டும் என்பதே.

அசைவம் சாப்பிடாத மற்றும் மது அருந்தாத மாணவர்கள் மட்டுமே ‘மோல்ட் மெடல்’ பெறுவதற்கு தகுதியானவர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக 'தி குயின்ட்' செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. இச்செய்தி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதங்களில் பரவி வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை பதிவு செய்து வருகிறார்கள். புனே பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவியும், சரத் பவாரின் மகளுமான எம்.பி. ஸ்ரீபிரியா படேல் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில்,

அதிர்ச்சியாக உள்ளது. நம்முடைய பல்கலைக்கழகத்திற்கு என்ன ஆனது... அப்படியென்றால் படித்து பெரும் மார்க் பற்றி? தயவு செய்து அனைவருக்கும் நியாயமான மற்றும் தரமான கல்விக்கு மட்டும் கவனம் செலுத்துங்கள். மக்களை ஏன் பிளவு படுத்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார். இதுபோன்று சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் கமல்ஹாசன் சந்திப்பு



நடிகர் கமல்ஹாசன் கொல்கத்தாவில் மேற்குவங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

நவம்பர் 11, 2017, 04:00 AM
கொல்கத்தா,

நடிகர் கமல்ஹாசன் ஊழலுக்கு எதிராகவும், விவசாயிகள், மீனவர்கள் பிரச்சினைகளிலும் தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார். அவர் ‘டுவிட்டர்’ அரசியல் செய்வதாக ஆளும் கட்சியினர் விமர்சித்ததை தொடர்ந்து நேரடியாக களத்தில் குதித்தார். கொசஸ்தலை ஆற்றில் அனல் மின்நிலைய சாம்பல் கழிவு கொட்டப்படுவதை ஆய்வு செய்தார்.


பிறந்த நாள் விழாவை ரத்துசெய்து ஏழைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தினார். ரசிகர்களையும் சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார். இன்னொருபுறம் பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

மம்தாவுடன் சந்திப்பு

கேரளா சென்று முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினார். இதனால் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப்போவதாக கூறப்பட்டது. இதனை கமல்ஹாசன் மறுத்தார். பின்னர் ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும் தனது வீட்டில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா புறப்பட்டு சென்றார். அங்கு மேற்குவங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.

திரைப்பட விழா

மம்தா பானர்ஜி தேசிய அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். அவரை கமல்ஹாசன் சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனிக்கட்சி தொடங்குவது சம்பந்தமாகவும், எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் மம்தாவுடன் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். முன்னதாக கொல்கத்தா விமான நிலையம் வந்து இறங்கிய அவர் நிருபர்களிடம் கூறும்போது, “கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்து இருக்கிறேன். மேற்குவங்க திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றை விரும்பி பார்ப்பேன். மம்தா பானர்ஜியையும் பிடிக்கும். அவரை சந்திப்பதில் அரசியல் உள்நோக்கம் இல்லை” என்றார்.
தலையங்கம்
அரசியலில் சலசலப்பு



அரசியலை பொறுத்தமட்டில், ‘நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை’ என் பார்கள். எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பார்கள்.

நவம்பர் 11 2017, 03:00 AM

அரசியலை பொறுத்தமட்டில், ‘நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை’ என் பார்கள். எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பார்கள். அதுபோன்று நடந்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. ‘தினத்தந்தி’யின் 75–வது ஆண்டு பவளவிழா கடந்த 6–ந்தேதி சென்னையில் சீரும் சிறப்புமாக நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். மிகவும் சிறப்பான ஏற்பாடுகளோடு நடந்த இந்தவிழாவில், பிரதமர் மிகவும் மகிழ்வோடு காணப்பட்டார். விழா முடிந்தவுடன் அப்படியே மேடையில் இருந்து அவர் திரும்பி சென்றுவிடவில்லை. மேடையைவிட்டு கீழே இறங்கி தன்னை எதிர்த்து குரல் கொடுத்து கொண்டி ருக்கும் வைகோ 2–வது வரிசையில் அமர்ந்து கொண்டி ருந்தாலும் அவரைப்பார்த்து, ‘வைகோ ஹவ் ஆர் யூ’ என்றுகேட்டு அவருடன் கைகுலுக்கினார். அதேபோன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனான டாக்டர் அன்புமணி ராமதாசுடனும் பேசிவிட்டு சென்றார். பிரதமரின் சுற்றுப்பயணத்தில் ‘தினத்தந்தி’ நிகழ்ச்சியும், அவரிடம் இணைச்செயலாளராக பணி யாற்றிய தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி.சோமநாதன் மகள் திருமணத்திலும் கலந்து கொள்வதாக மட்டுமே இருந்தது.

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டிற்குச்சென்று அவரிடம் உடல்நலம் விசாரித்தார். அதுமட்டுமல்லாமல், ‘‘இங்கிருந்தால் உங்களை சரியாக ஓய்வெடுக்கவிடமாட்டார்கள். எல்லோரும் வந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். டெல்லிக்கு என் வீட்டில் ஓய்வெடுக்க வாருங்கள்’’ என்று அழைத்தார். கருணாநிதி மனைவி தயாளு அம்மாளையும் சென்று பார்த்தார். அவரிடமும் உடல்நலம் விசாரித்தார். அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் தி.மு.க. தலைவர் வீட்டிற்கு மோடி சென்றது அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. மோடி அரசியலுக்காக வரவில்லை என்று மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக சொல்லி விட்டார். அடுத்த 2 நாட்களிலேயே ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து ஒரு ஆண்டான நாளில் அதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டமாக தி.மு.க. பல இடங்களில் நடத்தியது. மதுரையில் நடந்த கூட்டத்தில் பிரதமரை அரசியலுக்காக பயன்படுத்த எந்தநேரத்திலும், எந்த நிமிடத்திலும் நாங்கள் தயாராக இல்லை. இன்றைக்கு அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என சிலர் திட்டமிடுகிறார்கள். அவர்களது கனவு நிச்சயம் பலிக்காது என்று மு.க.ஸ்டாலின் உறுதியாக கூறினார்.

பிரதமரின் வருகையை தொடர்ந்து நடந்த இந்த சம்பவங்களால் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக சொன் னாலும், தமிழக அரசியலில் ஒரு பரபரப்பான நிலையே காணப்படுகிறது. 1977–78–ல் பா.ஜ.க. தொடங்குவதற்கு முன் ‘ஜனசங்கம்’ என்றபெயரில் கட்சி இருந்தது. அப்போது அந்தகட்சியும் அங்கம் வகித்திருந்த ஜனதா அரசாங்கத் திலும், 1988–90–ல் பா.ஜ.க வெளியே இருந்து ஆதரவு வழங்கிய வி.பி.சிங் அரசாங்கத்திலும், தி.மு.க. அங்கம் வகித்திருந்தது. 1999–ல் வாஜ்பாய் அரசாங்கத்திற்கு ஜெயலலிதா திடீரென ஆதரவை வாபஸ் பெற்றநேரத்தில், வாஜ்பாயின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது தி.மு.க. ஆதரவு அளித்தது. இதனைத்தொடர்ந்து பாராளு மன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த தி.மு.க., வாஜ்பாய் அரசாங்கத்தில் 2004 வரை அமைச்சரவையிலும் அங்கம் வகித்தது. 2001–ம் ஆண்டு தி.மு.க.வும், பா.ஜ.கவும் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்தன. 2004–ல் பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட தி.மு.க., காங்கிரசோடு கூட்டணி வைத்தது. 2012–13–ல் காங்கிரசுடன் கூட்டணியை முறித்து மீண்டும் 2016–ல் காங்கிரசோடு கூட்டணி வைத்தது. ஆக, அரசியலில் உறவுகள் மாறி மாறி வரும். ‘‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும்’’ என்பார்கள். ஆக, தேர்தலில் யாரோடு கூட்டணி, யாரோடு உறவு என்பதெல்லாம் இப்போது யார் என்னதான் சொன்னாலும், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் என்ன முடிவு எடுக்கிறதோ, அதன் அடிப்படையில் தான் உறவுகள் அமையும். இது ஒரு ‘அரசியல் சதுரங்கம்’ தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...