Wednesday, April 18, 2018

சமயபுரத்தில் சித்திரை திருவிழா தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published : 18 Apr 2018 07:59 IST

திருச்சி








திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தின்போது, திரளான பக்தர்கள் மத்தியில் ஆடி அசைந்தபடி வந்த தேர். - படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தின்போது, திரளான பக்தர்கள் மத்தியில் ஆடி அசைந்தபடி வந்த தேர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தின்போது, திரளான பக்தர்கள் மத்தியில் ஆடி அசைந்தபடி செல்லும் தேர். - படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர்.

தமிழகத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களில் தனிச் சிறப்பு பெற்று விளங்குவது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைப் பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஏப்.8-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் காலையில் அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெற்றது.

சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய உற்சவமான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 10 மணிக்கு உற்சவ அம்மன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, 10.30 மணியளவில் ஆட்சியர் ராஜாமணி வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்கள் வெள்ளத்தின் நடுவே, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. இரவு 9 மணிக்கு அம்மன் தேரிலிருந்து புறப்பாடாகி மூலஸ்தானத்தை அடைந்தார்.

பக்தர்கள் நேர்த்திக்கடன்

தேர்த் திருவிழாவில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பால்குடங்கள் எடுத்தும், கரகம், முளைப்பாரி ஏந்தியும், பல்வேறு அலகுகளை குத்திக் கொண்டும் மேளதாளங்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே சமயபுரத்துக்கு வந்து, தங்கியிருந்து தேரோட்டத்தில் பங்கேற்றனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் 1,300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேரோடும் வீதிகளில் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் தீயணைப்பு வண்டிகள் மூலம் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் ஏறத்தாழ 1.20 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து ஏறத்தாழ 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலரும், அறநிலையத்துறை இணை ஆணையருமான சி.குமரதுரை, கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

அன்னதானம் வீணடிப்பு

சித்திரைத் தேரோட்டத்துக்கு வந்த பக்தர்களுக்காக நெ.1 டோல்கேட் பகுதி முதல் சமயபுரம் வரை ஏராளமானோர் அன்னதானம் வழங்கினர். ஏராளமானோர் தண்ணீர் பாக்கெட், ஜூஸ் பாக்கெட், பானகம், நீர்மோர், கேழ்வரகுக் கூழ் ஆகியவற்றை வழங்கினர். ஒருசில விவசாயிகள் வெள்ளரிப் பிஞ்சுகளை பக்தர்களுக்கு வழங்கினர்.

ஆனால், ஒரே நேரத்தில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டதால், பலரும் அதை வாங்கி ஓரிரு கவளம் சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ள உணவை ஆங்காங்கே வீசியெறிந்து விட்டுச் சென்றனர். அவற்றை பேரூராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
கல்வித் துறை அவலங்களைப் பேச வேண்டிய தருணம் இது!: ஆய்வு மாணவர்கள் ஆர்டர்லிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்

Published : 17 Apr 2018 09:25 IST

செல்வ புவியரசன்

THE HINDU TAMIL



பேராசிரியை ஒருவர், கல்லூரி மாணவிகளைத் தவறான திசையில் அழைத்துச்செல்ல முயலும் தொலைபேசி உரையாடல் வெளியாகியிருக்கிறது. கடும் அதிர்ச்சிக்கு ஆளான மாணவர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் எளிதில் கடந்துபோகக்கூடிய விஷயமல்ல; உயர்கல்வித் துறை எவ்வளவு சீரழிந்துவருகிறது என்பதன் அறிகுறி. துணைவேந்தர் நியமனங்கள், பேராசிரியர் பணிநியமனங்கள், பதவி உயர்வுகள் என்று உயர்கல்வித் துறையின் உயர்மட்ட அளவில் மட்டும்தான் ஊழல்களும் முறைகேடுகளும் நடக்கின்றனபோலும்; மற்றபடி கல்வித் துறை அதன்போக்கில் சீராகத்தான் இயங்கிக்கொண்டிருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது அதுவும் தகர்ந்துவிட்டது.

பல்கலைக்கழக முறைகேடுகளைத் கண்டித்துவரும் பேராசிரியர் மு.இராமசாமியைப் போன்ற கல்வியாளர்கள், பல்கலைக்கழக முறைகேடுகள் ஆய்வு மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையிலிருந்தே தொடங்கிவிடுவதாகத் தொடர்ந்து சுட்டிக்காட்டுவருகிறார்கள். புறமதிப்பீட்டாளருக்கான வழிச்செலவுகள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டாலும்கூட ஆய்வு மாணவர்களும் மதிப்பீட்டாளருக்கான வழிச்செலவுகளை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் நிலவுகிறது. ஆய்வு வழிகாட்டிகளும் அதற்கு உடன்படுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, ஆய்வு வழிகாட்டியின் வீட்டில் ஆர்டர்லிகளைப் போல மாணவர்கள் நடத்தப்படும் கொடுமையும் நடக்கிறது. ஒரு உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பை முனைவர் பட்டம் வழங்கும் என்ற நம்பிக்கையில் இந்தக் கசப்பை வெளியே சொல்லாமல் விழுங்கிக்கொள்கிறார்கள் ஆய்வு மாணவர்கள்.

ஆய்வு மாணவர்கள் மட்டுமல்ல, கல்லூரியில் அடியெடுத்துவைக்கும் ஒவ்வொரு மாணவரும் மாணவியும் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். மாணவர்களின் தேர்வுச் சுமைகளை குறைக்கும் என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்ட அகமதிப்பீட்டு முறையே, இப்போது மாணவர்களின் கழுத்தின் மேல் தொங்கும் கத்தியாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, மாணவிகளுக்கு!

பேராசிரியையின் தொலைபேசி உரையாடல் கல்வித் துறையில் நடந்துகொண்டிருக்கும் ஒரு இழிவை, பொதுவெளிக்குக் கொண்டுவந்திருக்கிறது. மற்றபடி, இந்தச் சம்பவத்தை விதிவிலக்கு என்று சொல்லிவிட முடியாது. வெளியில் சொல்லமுடியாத வெட்கம்தான் பலரை உண்மைகளைப் பேசவிடாமல் தடுக்கிறது. அதுவே குற்றவாளிகள் தொடர்ந்து தவறுகளைச் செய்யவும் காரணமாக இருக்கிறது. மாணவிகளின் புகாரின்படி, கல்லூரியின் மாண்பைக் கெடுத்திருக்கிறார் என்று முடிவெடுத்து அந்தப் பேராசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். “விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறோம். தேர்வுகள் முடிந்ததும் விசாரணை தொடங்கும்” என்று பதிலளித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். பொதுவெளியில் வராதிருந்தால் அது பெயரளவிலான விசாரணையாக நடந்துமுடிந்திருக்குமோ என்ற சந்தேகம்தான் எழுகிறது. இதற்கிடையே பெரும் பரபரப்புக்கிடையில் அந்தப் பேராசிரியை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

அதிர்ச்சிப் பட்டியல்

சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கும் வழக்கறிஞர் ரயா சர்க்கார், இந்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவிகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய பேராசிரியர்களின் பட்டியலை வெளியிட்டார். பாதிக்கப்பட்ட மாணவிகள், தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பட்டியல் நீண்டது. சமூக வலைதளங்களில் இந்தக் குற்றச்சாட்டுகள் பலரால் பகிரப்பட்டன. சில குற்றச்சாட்டுகள், சட்டபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் அமைந்திருந்தன. சில குற்றச்சாட்டுகள் குறித்து சட்டரீதியாக எந்தப் புகாரும் இதுவரை அளிக்கப்படவில்லை.

“குற்றம்சாட்டும் பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், அவர்களின் பெயர் விவரங்களை வெளியிட மாட்டேன்” என்று அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார் ரயா சர்க்கார். குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர்களில் மிகச்சிலர் மட்டுமே அவற்றை மறுத்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் வாய் திறக்கவேயில்லை. எழுத்துபூர்வமாக எங்களுக்கு எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்று சில கல்வி நிறுவனங்கள் கூறின. எனினும், அத்தவறைக் குறிப்பிட்ட பேராசிரியர்கள் மீண்டும் துணியமாட்டார்கள் என்ற அளவில் இத்தகைய சமூக வலைதள இயக்கங்களுக்குப் பங்கு இருக்கிறது.

பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புக்காகச் செல்லும் மாணவியர்கள், பெரும்பாலும் பேராசிரியைகளைத்தான் ஆய்வு வழிகாட்டிகளாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு வாய்ப்பில்லாதபோது, வழிகாட்டிக்காகக் காத்திருக்கிறார்கள். இல்லையென்றால் ஆய்வுப் படிப்பு ஆசையைத் துறந்துவிடுகிறார்கள். எனில், இந்தப் பிரச்சினையின் பின்னுள்ள அச்சத்தை நாம் புரிந்துகொள்ளலாம். முதுகலைப் பட்டம் பெறும் இந்திய மாணவர்கள் ஆய்வுகளில் ஆர்வம் செலுத்துவதில்லை என்று குறைபட்டுக்கொள்ளும் இந்திய உயர்கல்வித் துறை, இத்தகைய நடைமுறைக் கேவலங்களைக் களைவதில் அக்கறை செலுத்துவதில்லை.

அறிவுத் திருட்டு

ஆய்வு மாணவர்கள், தங்கள் வழிகாட்டிகளுக்குத் தேவையான புத்தகங்களைத் தன் சொந்தச் செலவில் வாங்கிக்கொடுக்க வேண்டும், அவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கான குறிப்புகளைத் தயாரித்துக்கொடுக்க வேண்டும். சில சமயங்களில் அவர்கள் பெயரில் வெளிவரும் முழுக் கட்டுரையையும் எழுதிக்கொடுக்க வேண்டும். இப்படித் தங்கள் அறிவையும் அதன்வாயிலாக அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான அங்கீகாரத்தையும்கூட ஆய்வு வழிகாட்டிகளுக்கு மாணவர்கள் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. சர்வதேச ஆய்விதழ்களில் கட்டுரை எழுதும் பெரும்பாலான பேராசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்தே கட்டுரை எழுதுகிறார்கள். உலகம் போற்றும் பேராசிரியர்கள், தங்கள் ஆய்வு நூலில் பங்களித்த மாணவர்களின் பட்டியலுக்கு சிறப்பிடம் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த ஆய்வுநெறியை இந்தியப் பேராசிரியர்களில் பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதில்லை என்பது வருத்தத்துக்குரியது.

அறிவுத் திருட்டு, உடல் உழைப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் என்று ஏற்கெனவே ஆய்வு மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டுவருகிறார்கள். இப்போது இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்களையும்கூட இந்தச் சீரழிவு நெருங்கிவருகிறது. அகமதிப்பீடு, மேற்படிப்புக்கான உதவித்தொகை என்று ஆசைகளைக் காட்டி மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் கல்வித் துறை அதிகாரிகள் யார் என்பது வெளிவராதவரை, இதுதொடர்பான நடவடிக்கைகள் பலன் தராது. படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோவெனப் போவான் என்று சாபம்விட்டான் பாரதி. படிப்பு சொல்லிக்கொடுப்பவனே பாவம் செய்தால்?

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

காற்றில் கரையாத நினைவுகள் 8: மிதிப்பதும், மதிப்பதும்!

Published : 17 Apr 2018 09:10 IST
 
வெ.இறையன்பு







நாங்கள் பள்ளியில் படிக்கும்போது மிதிவண்டியே அலங்காரத் தேர். வீட்டுக்கொரு மிதிவண்டி அவசியம். இன்று கார்களில் ‘நானோ’ தொடங்கி ‘பென்ஸ்’ வரை தரவரிசை இருப்பதைப் போல அன்று பணக்கார மிதிவண்டிகளும் இருந்தன. கொஞ்சம் முடிந்தவர்கள் உராய்வில் எரியும் (டைனமோ) விளக்கு வைத்த சைக்கிள் வைத்திருப்பார்கள். எளியவர்கள் சைக்கிளில் மண்ணெண்ணெய் விளக்கை மாட்டியிருப்பார்கள். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு அந்த விளக்கு காற்றில் அணையாமல் இருக்கும்.

அன்று எல்லோருக்கும் நடையே பிரதானம். சிலருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. அவர்கள் கிராமத்தில் இருந்து நடந்தே வருவார்கள். இன்று இருக்கின்ற வாகன வசதிகள் அப்போது அறவே கிடையாது. அன்று நடை போக்குவரத்து, இன்று உடற்பயிற்சி.

இரண்டு சைக்கிள்கள் இருக்கும் வீடே வசதியானது. சைக்கிளில் காற்றடிக்க பம்ப் இருக்கும் வீடே பணக்கார வீடு. பள்ளிக்கு முன்னால் இருக்கும் சைக்கிள் கடைகளில் மாணவர்களைக் கவர்வதற்காக அவர்களே காற்றடித்துக் கொண்டால் இலவசம் என்கிற சலுகை வழங்கியிருப்பார்கள்.

பெண்கள் மிதிவண்டி ஓட்டுவது அன்றைய நாட்களில் அபூர்வமாகவே இருந்தது. சிவகாமி டீச்சர் எங்கள் தொடக்கப் பள்ளிக்கு சைக்கிளில் வந்து புரட்சி செய்தார். எல்லோரும் அவரை ‘சைக்கிள் டீச்சர்’ என்றே அழைப்பார்கள். மாணவர்களுக்கு அவரிடம் கொஞ் சம் பயம் ஜாஸ்தி.

அன்று மிதிவண்டி ஓட்டப் பழகுவது பெரிய சாதனை. முதலில் சின்ன சைக்கிளை வாடகைக்கு எடுக்க வேண்டும். ஒருசில கடைகளில்தான் சின்ன சைக் கிள் இருக்கும். சக நண்பர்கள் நான்கு புறமும் பிடிக்க, ஓட்டத் தொடங்க வேண்டும். அவர்கள் ஒரு பக்கம் பிடித்தால், சைக்கிள் மறுபக்கம் சாயும். கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வந்து பெடலை மிதிக்கத் தொடங்கினால், நமக்கு ஓட்ட வந்துவிட்டது என்ற நம்பிக்கையில், நண்பர்கள் பிடித்திருக்கும் கையை எடுத்துவிடுவார்கள். அவர்கள் சைக்கிளைப் பிடிக்கவில்லை என்று தெரிந்துவிட்டால் போதும்.. அதுவரை சுமுகமாக போய்க்கொண்டிருந்த வண்டி தாறுமாறாக ஓடும்.

இடுப்பை வளைக்காதே

சைக்கிள் ஓட்டக் கற்றுத் தருபவர்கள் ‘இடுப்பை வளைக்காதே’ என செல்லமாக தலையில் குட்டுவார்கள். பலமுறை அடிபட்டு, கால் கை காயங்களை வீட்டுக்குத் தெரியாமல் மறைத்து, ஓட்டக் கற்றதும், உலகத்தை வென்ற மகிழ்ச்சி ஏற்படும்.

ஆரம்பத்தில் குரங்குப் பெடலில்தான் சைக்கிள் ஓட்டத் தொடங்குவோம். ‘குரங்குப் பெடல்’ என்கிற அந்தப் பெயர் எப்படி வந்தது என்பது இப்போது வரை சத்தியமாகத் தெரியவில்லை.

பிறகு, குறுக்குக் கம்பி மீது வளைந்து நெளிந்து ஓட்டுவோம். கால் எட்டாதது தான் காரணம். ஒருவழியாக எட்டும் போது நமக்கும் மீசை முளைத்த மகிழ்ச்சி. சைக்கிள் ஓட்டத் தெரியும் வரை அன்று சமூகம் யாரையும் ஆணாக அங்கீகரித்ததில்லை.

டபுள்ஸ் செல்ல தடை

சைக்கிள் ஓட்டக் கற்றதும், அதுவே பல வாகனங்களாக தோன்றத் தொடங்கும். ‘ஷோலே’ படம் வந்தபோது மிதிவண்டியையே குதிரையாக நினைத்து சவாரி செய்வோம். என்னதான் ஓட்டினாலும் அப்பாவின் சைக்கிள் அவருக்கு மட்டுமே. அதை லேசில் நம்மிடம் தரமாட்டார். அதற்கு காற்றடிப்பதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதை துடைத்து வைப்பதும் மகன்களின் வேலை. வாராவாரம் முறைவைத்து துடைப்போம். அப்பா நம்மை நம்பி சைக்கிள் கொடுப்பது, ஆண் குழந்தைகளுக்கு தாவணி போடும் சடங்குபோல.

சைக்கிளில் இருவர் (டபுள்ஸ்) செல்ல தடை இருந்த காலம் ஒன்று உண்டு. அப்படிப் போனதற்காக போலீஸ்காரர்களிடம் பிடிபட்டவர்கள் உண்டு. டபுள்ஸ் போய் மாட்டிக்கொண்டால், சக்கரங்களில் இருக்கிற காற் றைப் பிடுங்கிவிடுவதுதான் அதற்கு தண்டனை. எதிரே வருகிற சில நல்லெண்ணம் கொண்டவர்கள் ‘போலீஸ் பிடிக்குது’ என்று எச்சரிக்கை தர, அங்கு நாங்கள் இறங்கி நடந்து தப்பித்தது உண்டு.

ஒரே ஒரு போலீஸ்காரர் இருந்தால் போதும், ஒட்டுமொத்த திருவிழாவும் ஊரில் எந்தச் சத்தமும் இன்றி நடந்தேறும். அன்று மக்களிடம் அந்த அளவு கட்டுப்பாடு இருந்தது.

‘சைக்கிளின் பின்னால் மூட்டை வைக்க அனுமதிக்கப்படுகிறது. கொஞ்சம் சைக்கிள் அசைந்தால் மனிதனால் குதித்துவிட முடியும், மூட்டையால் முடியுமா?’ என்ற யோசனை அரசுக்கு வர, சைக்கிளில் டபுள்ஸ் போவது அனுமதிக்கப்பட்டது. அதற்குப் பிறகு மூன்று பேர்கூட போய் விதியை மீறத் தொடங்கினார்கள். எப்போதுமே, விதியை மீறுவதில் மக்களுக்கு அலாதி சுகம்.

நாங்கள் வேளாண் கல்லூரியில் படித்தபோது, பரந்த அந்த வளாகத்துக்குள் மாணவர்களும், மாணவிகளும் மிதிவண்டிகளில் சிட்டுக்களைப் போல சிறகடிப்பார்கள். அங்கு அனைத்து மாணவர்களுக்கும் மிதிவண்டி அவசியம். அப்போதுதான் காலை 7 மணிக்கு காக்கி சீருடையில் மண்வெட்டியோடு செய்முறை வகுப்புக்குச் சென்று, நெல் வயலில் நிற்க முடியும். 10 மணிக்குத் திரும்பி வந்து குளித்து முடித்து, தேநீர் பருகி அடுத்த வகுப்புக்கு ஆஜராக முடியும். மாலை வேளைகளில் தாவரப் பூங்காவுக்குப் பயணித்து, பட்டாம்பூச்சிகளை வலைவீசிப் பிடித்துவர முடியும். இரவு தேநீர் விடுதிக்குச் சென்று சூடாக தேநீர் அருந்திவிட்டு வந்து, நள்ளிரவு வரை படிக்க முடியும். பல மாணவிகள் அங்கு வந்த பிறகு, ஒரே மாதத்துக்குள் சைக்கிள் விடுவதற்கு கற்றுக்கொள்வார்கள். எதுவும் தேவை என்கிறபோது, மனசுக்குள் வைராக்கியம் நுழைந்து விடுகிறது.

கோவையில் அப்போது திரையரங்குகளில் ‘சைக்கிள் டிக்கெட்’ என்கிற ஒன்று உண்டு. குறிப்பிட்ட எண்ணிக்கையில் நுழைவுச் சீட்டுகளை ஒதுக்கி, சைக்கிள் கொண்டு வருகிறவர்களுக்கு வரிசை யாக விநியோகிப்பார்கள். நாங்கள் முதல் காட்சி தொடங்கும்போதே சைக்கிளை வரிசையில் நிறுத்திவிடுவோம். இரவுக் காட்சிக்கு எளிதில் டிக்கெட் கிடைத்துவிடும். பூட்டிய கேட்டுகளை தாண்டிக் குதித்து தயாராக ஒருவர் நிற்க, மற்றவர் சைக்கிளை தம் பிடித்துத் தூக்கிக் கொடுப்பதும் உண்டு.

இப்படி முதல் நாளே படத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த நாள் கல்லூரி முழுவதும் தாங்களே அதை இயக்கியது போல சில நண்பர்கள் தம்பட்டம் அடிப்பார்கள்.

இன்று மழலைப் பள்ளிக்குச் சேரும் முன்பே குழந்தைகள் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். காரணம், இரு பக்கமும் சாய்ந்தாலும் விழாத முட்டுக்கொடுக்கும் வசதி. சில நாட்களில் அவர்களே சமத்தன்மையை அறிந்துகொள்கிறார்கள். வாகன சமத்தன்மை வாழ்க்கையிலும் வரும்போது தான் உண்மையான வெற்றி சாத்தியமாகும்.

தூரம் முக்கியம் அல்ல

அன்று மோட்டார் சைக்கிள் அபூர்வம். அதில் அதிக ‘புடுபுடு’ சத்தம் வந்தால் அது உயர்ந்த ரகம் என்று எங்களுக்கு நினைப்பு. அப்படி ஒருவர் ஓட்டி வரும்போது பதினெட்டுப் பட்டிக்கும் அந்தச் சத்தம் கேட்கும்.

இன்றோ இளைஞர்கள் பாத்ரூமுக்குக்கூட பைக்கில் போகிறார்கள். அதிக வேகத்தில் பறந்து, முட்டி மோதி, சிலர் மூளைச் சாவில் முடிகிறார்கள். குறைந்த தூரத்துக்கு சைக்கிளில் சென்று அடிபட்டவர்கள் அன்று யாருமே இல்லை. வண்டியிலேயே இருந்தது வேகத்தடை. பெரும்பாலும் தூரங்களை சைக்கிளால் கடந்தவர்களுக்கு அன்றைய நாட்களில் மருத்துவம் தேவைப்படாத உடல்நலம் வாய்த்தது. இன்று இருசக்கர வாகன வரிசையில் சைக்கிளுக்கு இடமில்லை. எரிபொருளோடு ஓடும் வாகனத்துக்கே அந்த முத்திரை.

கார்கள் அன்று அதிசயம். ஊருக்கு ஒன்று இருப்பதே பெரிது. எந்த கார் என்பது முக்கியமில்லை. எதுவாக இருந்தாலும் அந்தஸ்து. இன்று கார்களை நிறுத்தக்கூட இடம் இல்லாத சூழல். தெருக்கள்தோறும் நிரம்பி வழிகிற நெரிசல்.

தூரம் என்பது முக்கியம் அல்ல; நேரம் என்பதே முக்கியம் என்பது மாநகரங்கள் உணர்த்தும் பாடம். அப்படிப் பார்த்தால் இன்னும் சில நாட்களில் ‘கார்களால் கடப்பதைவிட கால்களால் விரைவில் கடந்துவிடுவோம்’ என்கிற காலம் வரும். மிதிவண்டிகளுக்கு மகுடம் மறுபடியும் வரும். அப்போது மிதிக்கத் தொடங்குவதை மதிக்கத் தொடங்குவோம்!

- நினைவுகள் படரும்...

பள்ளிக்கூடங்களா, சித்திரவதைக் கூடங்களா?

By முனைவர் இரா. கற்பகம் | Published on : 17th April 2018 01:18 AM

காலை ஏழு மணிக்குப் பள்ளி வாகனத்தில் ஏறுகிறார்கள். மாலை ஆறு மணிக்கு வீடு வந்து சேருகிறார்கள். காலை உணவு, விளையாட்டு, பெற்றோர், சகோதர, சகோதரியோடு பேச்சு, சிரிப்பு, கதைப் புத்தகங்கள், எதுவும் கிடையாது. பள்ளி, பாடங்கள், படிப்பு, தேர்வு, பயிற்சி வகுப்பு (ட்யூஷலின்), மதிப்பெண். இவற்றைத் தவிர வேறு எதுவும் கிடையாது. இதுதான் இன்றைய குழந்தைகளின் நிலைமையாகிவிட்டது.

மழலையர் பள்ளியிலேயே ஆரம்பித்துவிடுகிறது சித்திரவதைப் படலம். பள்ளியிலும் படிப்பு, எழுதுதல், வீட்டுக்கு வந்தால் சாப்பிடக்கூட அவகாசமின்றி பயிற்சி வகுப்புக்கு ஓட வேண்டும். அங்கேயும் மறுபடி படிப்பு, எழுதுதல், கூடவே கையை ஒடிக்குமளவு வீட்டுப் பாடம்.
எல்லா பள்ளிகளிலும் எல்லா வகுப்புகளுக்கும் நேரம் ஒதுக்கி அட்டவணை கொடுக்கிறார்கள். நூலகத்துக்கு, விளையாட்டுக்கு, பிற கலைகளுக்கு என்று தனித்தனியே நேரம் ஒதுக்கியிருந்தாலும், பெரும்பாலான பள்ளிகளில் இவ்வகுப்புகளுக்குண்டான நேரத்தில் தேர்வுகளுக்குப் படிக்கச் செய்கிறார்கள் அல்லது வீட்டுப்பாடம் செய்யும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். பல பள்ளிகளில் நூலகமோ, விளையாட்டு மைதானமோ கிடையாது. ஓவியம், தையல், பாட்டு, நடனம், தற்காப்புக் கலைகள், யோகா போன்றவைகளைப் பள்ளி நேரத்தில் சொல்லித் தருவதில்லை. இவற்றுக்குத் தனியாகக் கட்டணம்; பள்ளி நேரத்துக்குப் பிறகே சொல்லித் தருகிறார்கள். மாணவர்களில் யார் யார்க்கு எதெது பிடிக்குமோ, அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூட அவர்களுக்கு இல்லை. கலைகளில் அவரவர்க்குப் பிடித்த ஒன்றையோ இரண்டையோ தேர்ந்தெடுத்து, அவற்றைப் பள்ளி நேரத்திலேயே கடினமான பாட வகுப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் சொல்லிக் கொடுத்தால் படிப்பில் சுவராசியம் கூடுமல்லவா?

மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காகவே அரசு ஒரு கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியே புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் மட்டுமே இதன்படி கற்பிக்கின்றன. தனியார் பள்ளிகள் தேர்வுகளுக்கு முதல் பருவத்திலிருந்து சில பாடங்கள், இரண்டாம் பருவத்திலிருந்து சில, அதில் ஒரு மதிப்பெண் வினாக்கள், இதில் ஐந்து மதிப்பெண் வினாக்கள் என்று மாணவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்கின்றன. அரசு சமச்சீர் கல்வியைக் கட்டாயமாக்கினாலும், பல தனியார்ப் பள்ளிகள் அரசு பாட நூல்ளோடு வேறு பல வெளியீட்டாரின் புத்தகங்களையும் மாணவர்களை வாங்கச் சொல்கிறார்கள். இதில் கொஞ்சம், அதில் கொஞ்சம் என்று மாற்றி, மாற்றிக் கற்பித்து, எதுவுமே மாணவர்கள் அறிவில் ஏறாமல் செய்துவிடுகிறார்கள். பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு என்பதால் அவ்வகுப்பில் மட்டும்தான் சமச்சீர் பாடத்திட்டத்தை மட்டும் பயிற்றுவிக்கிறார்கள்.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையும் குறைந்து போய்விட்டது. பெரும்பாலும் சனிக்கிழமையிலும் முழு நேரம் பள்ளிக்கூடம். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஞாயிறுகளிலும் பள்ளி உண்டு. முழுப் பரீட்சை முடிந்த மறுநாளே, விடுமுறையே இல்லாமல் அடுத்த வகுப்பின் பாடங்கள் நடத்தப் படுகின்றன. 'சிறப்பு வகுப்புகள்' என்று 'சிறப்புப் பெயர்' வேறு. அரசு விடுமுறைகளில் கூடப் பள்ளிகள் இயங்குகின்றன. கல்வித் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தால் எல்லாம் இவர்கள் பயப்படுவதில்லை. அபராதத் தொகையையும் மாணவர்கள் தலையிலேயே கட்டிவிட்டு 'ஜாம் ஜாமென்று' எல்லா விடுமுறை நாட்களிலும் பள்ளிகள் நடத்துகிறார்கள். பல பெற்றோருக்கும் இது செளகர்யமாகவே இருப்பதால் யாரும் இதுபற்றி அதிருப்தியோ, புகாரோ தெரிவிப்பதில்லை! வீட்டு விசேலிஷங்கள், பண்டிகைகள் என எக்காரணத்துக்கும் விடுமுறை எடுக்கக் கூடாது.
மாணவிகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. மாதவிலக்கு நாட்களில் சிலருக்கு முடியாமல் இருக்கும்போதுகூட, கொஞ்சமும் மனிதாபிமானமின்றி, அவர்களை தண்டிப்பதும், வகுப்புக்கு வெளியே நிற்க வைப்பதுமாகப் பல பள்ளிகள் செய்யும் சித்திரவதைக்கு எல்லையே இல்லை!
அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் ஓரளவு கழிப்பறை வசதி, குடிதண்ணீர் வசதி இருக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த வசதிகளும் கிடையாது.
இடைவேளை நேரமும் மிகவும் குறைக்கப்பட்டுவிட்டது. அந்த இடைவேளையிலும் ஆசிரியர் வகுப்பை நீட்டித்துக் கொண்டே போகும்போது, மாணவர்கள் பயந்து, வாய் திறவாது உட்கார்ந்திருக்கிறார்கள். மிச்சமிருக்கும் நேரத்தில் உணவருந்தி, தண்ணீர் குடித்துக் கழிப்பறைக்கும் சென்று வர வேண்டும். நேரம் போதவில்லையென்று பல மாணவர்கள் கழிப்பறைக்குச் செல்லாமலே சமாளிக்கிறார்கள். இதனால் உடற்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு அல்லவா?

பல பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கமே கிடையாது. இருக்கும் சிலவற்றில் அவை முறையாகச் செயல்படுவதில்லை. அப்படியே செயல்பட்டாலும் பெற்றோர் யாரும் துணிந்து பள்ளி நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில்லை; குறைகளை எடுத்துக் கூறுவதில்லை. தப்பித் தவறி யாராவது ஒரு மாணவன் அல்லது மாணவியின் பெற்றோர் நிர்வாகத்தை எதிர்த்துப் பேசினால் அந்த மாணவன்/மாணவி கதி அவ்வளவுதான். எந்த விதத்திலெல்லாம் அவர்களைப் பழிவாங்க முடியுமோ, அந்த விதத்திலெல்லாம் பழி வாங்கும் பள்ளி நிர்வாகம்.
சாப்பிட நேரமில்லாமல், வேடிக்கை, விளையாட்டு இல்லாமல், அடக்குமுறை மற்றும் கட்டுப்பாடுகளோடு ஒரே அறையில் நாள் முழுதும் அடைக்கப்பட்டு, 'படிப்பு, படிப்பு, படிப்பு' என்று வேலை செய்யும் இவர்களும் 'குழந்தைத் தொழிலாளர்கள்'தான். இவர்கள் செய்யும் தொழில், 'படித்தல்'. இவர்களுக்கு சம்பளம் கூடக் கிடையாது. இவர்கள் பணம் கட்டிச் சித்திரவதைக் கூடங்களில் சேர்ந்து 'வேலை பார்க்கிறார்கள்'. இந்தச் சித்திரவதைக் கூடங்களிலிருந்து இக்குழந்தைத் தொழிலாளர்களை எப்படி மீட்கப் போகிறோம்?
பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேட்டி
By DIN | Published on : 18th April 2018 04:25 AM



பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என்றும் தமக்கே அதிகாரம் இருப்பதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள தனது மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ளேன். கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி ஆளுநராகப் பொறுப்பேற்றேன். நானும் பத்திரிகையாளராக இருந்துள்ளேன். ஒருசில கல்லூரிகளில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக செய்தித்தாள்கள் வழியாக திங்கள்கிழமை அறிந்து கொண்டேன். இது மிகவும் ஆபத்தான பிரச்னை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழக் கூடாது. இப்பிரச்னையில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.
ஒரு நபர் விசாரணை: அருப்புக்கோட்டை விவகாரம் தொடர்பாக விசாரித்து என்னிடம் (ஆளுநர்) அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.சந்தானத்தைக் கொண்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் மிகவும் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். அவர் தனது அறிக்கையை இம்மாத இறுதிக்குள் அளிப்பார்.

ஆணையம் அமைக்க உரிமை: வேந்தராக உள்ளதால் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகள் விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கத் தேவையான ஆணையங்களை அமைக்க எனக்கு அதிகாரம் உள்ளது. இதனிடையே, பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவை துணைவேந்தர் கலைத்துள்ளார். நான் அமைத்துள்ள ஒரு நபர் ஆணையமே தீவிரமாக விசாரணை மேற்கொள்ளும். இந்தப் பிரச்னையில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தமிழக மக்களுக்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகத்தைக் கூட பார்த்ததில்லை: அருப்புக்கோட்டை பேராசிரியை எனது பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறுகிறீர்கள். பல்கலைக்கழகங்கள், கல்லூரி நிகழ்ச்சிகளில் பலரும் பங்கேற்பார்கள். நிகழ்ச்சிகளை நடத்துவோர் இங்கும், அங்கும் செல்வார்கள். நீங்கள் (பத்திரிகையாளர்கள்) குறிப்பிடும் பேராசிரியை முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை.

சிபிஐ தேவையில்லை: பேராசிரியை தொடர்பான பிரச்னையில் எனது பெயரை இணைத்துப் பேசுவது அபத்தமானது-அடிப்படை ஆதாரமற்றது. இந்தப் பிரச்னையை விசாரிக்க சிபிஐ தேவையில்லை. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியைக் கொண்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நான் வயதில் மிக மூத்தவன். எனக்கு 78 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. எனக்கு பேரன்கள் மட்டுமல்லாது, அந்தப் பேரன்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
எனக்கே அதிகாரம் உள்ளது: விசாரணை ஆணையத்தை நான் தன்னிச்சையாக அமைத்துள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பேட்டி அளித்ததாகக் கூறுகிறீர்கள். இது தொடர்பாக ஆளுநருக்கான வழிகாட்டிக் கையேடு (நூலாசிரியர்-எஸ்எஸ் உபாத்யாயா) என்ற புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் வேந்தர், அதாவது ஆளுநர் என்பவர் சுயாட்சி அதிகாரம் பெற்றவர். எனவே, துணை வேந்தர் நியமனங்களில் மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்க வேண்டியதில்லை. மேலும், பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு ஒருபோதும் தலையிட முடியாது. இது உயர்கல்வித் துறை சட்ட விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணையத்தில் பெண் இல்லாதது ஏன்?: பேராசிரியை தொடர்பான பிரச்னை என்பதால் விசாரணை ஆணையத்தின் தலைவராக பெண் இல்லாதது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். ஓய்வு பெற்ற மிக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியை விசாரணை ஆணையத் தலைவராக நியமித்துள்ளோம். எனவே, அவர் தனக்கு உதவி தேவைப்பட்டால் பெண் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம்.
பேராசிரியை விவகாரம் தொடர்பாக, மாநில அரசின் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் துறையினர் அவர்களது பணியைச் செய்வார்கள். விசாரணை ஆணையத்தின் அறிக்கையை 15 நாள்களுக்குள் அளிக்க உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை கிடைத்தவுடன் உங்களுக்கும் அது அளிக்கப்படும். ஆளுநர் மாளிகையின் நடவடிக்கைகள், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை முறையைப் பின்பற்ற விரும்புகிறேன்.

அரசியலுக்கு அப்பாற்பட்டவன்: அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரத்தில் அரசியல் கட்சியினர் என்மீது குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் அவர்களது பணியைச் செய்கிறார்கள். நான் எனது பணியை செய்து கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். அருப்புக்கோட்டை கல்லூரி பிரச்னை போன்று எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்து யோசித்து வருகிறேன் என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

இந்தச் சந்திப்பின் போது, ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லதுரை, பதிவாளர் வி.சின்னையா உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.
உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்




அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

ஏப்ரல் 18, 2018, 06:24 AM
ஹூஸ்டன்,

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர்.

பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பார்பரா புஷ் தனது 92-வது வயதில் இன்று மரணமடைந்ததாக முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 பாலியல், புகாரில், ஆதாரமற்றது, என்கிறார், கவர்னர்,மறுப்பு

தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்ததுடன், இதுபோன்ற குற்றச்சாட்டு கூறுவதை, 'நான்சென்ஸ்' என்றும் கண்டித்தார். பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள, அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின், 'ஆடியோ' விவகாரத்தில், வெளிப்படையாக பேசினார். இந்த விவகாரம் குறித்து, ஒரு நபர் கமிஷன் விசாரணை நடக்கும் என்றும்,தேவைப்பட்டால், சி.பி.ஐ., விசாரிக்கும் என்றும் அறிவித்தார். மேலும், இதுபோன்ற தவறுகளை வேரறுக்க, தனி நடைமுறை உருவாக்கப்படும் என்றும், உறுதியாக தெரிவித்தார்.



சென்னை, ராஜ்பவனில், கவர்னர் நேற்று அளித்த பேட்டி:நான் கவர்னராக பதவியேற்று, ஆறு மாதங்கள் முடிகிறது. ஒரு பெண்ணின், தொலைபேசி பேச்சு தொடர்பான பிரச்னையில், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சந்தானம் தலைமையில், ஒரு நபர் விசாரணைக் குழு
அமைக்கப்பட்டுள்ளது.

அவர் சிறந்த அதிகாரி; நேர்மையாக விசாரணை நடத்தி, 15 நாட்களில், அறிக்கை தாக்கல் செய்வார். அந்த அறிக்கை, எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லாமல், பத்திரிகைகளுக்கு வழங்கப்படும்.தேவைப்பட்டால், செய்தியாளர் சந்திப்பு நடத்துவோம். மதுரை காமராஜர் பல்கலை, எங்கள் அனுமதி இல்லாமல், விசாரணை குழுவை அமைத்தது. விசாரணை யின் பாதை மாறாமலிருக்க, அந்தக் குழு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில், யாருக்கு தொடர்பிருந் தாலும், அவர்கள், எந்த அதிகாரத்தில் இருந்தாலும், மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரக் குழந்தைகள்:

அந்த பெண்ணின் பேச்சில், கவர்னர் பெயர் இருப்பதாக கூறுகிறீர்கள். இதெல்லாம், முட்டாள்தனமான, 'நான்சென்ஸ்' பேச்சு. நான், 78 வயதானவன். எனக்கு பேரக் குழந்தைகள், கொள்ளு பேரக் குழந்தைகள்
உள்ளனர். மூத்த குடிமகனான, என்பெயரை, யாரும் தவறாக பயன்படுத்த கூடாது. இந்த குற்றச்சாட்டை கூறுவோருக்கு, 'கவர்னர்' என்ற, மரியாதை கூடவா இல்லை.நீங்கள் கூறும் பெண்ணை, நான் பார்த்தது கிடையாது; அவர் முகம் கூட, எனக்கு தெரியாது. இது, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

என்னைப் பற்றி நாட்டு மக்களுக்கு, நன்றாகத் தெரியும். எம்.பி.,யாக இருந்துள்ளேன்; உங்களைப் போன்று, நானும்பத்திரிகையாளன். என் மீதான குற்றச்சாட்டை புறக்கணிக்கிறேன். என் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில், தவறாக பேச வேண்டாம். இந்த பிரச்னையை பொறுத்தவரை, பல்கலை வேந்தர் என்ற அடிப்படையில், விசாரணைக் குழு அமைக்க, எனக்கு முழு அதிகாரம் உள்ளது.அந்த அடிப்படையில், விசாரணைக் குழுவை அமைத்துள்ளேன். விசாரணையில், யாருடைய தலையீடும் இருக்காது.

மதுரை, காமராஜர் பல்கலை துணை வேந்தர், பதிவாளர் மற்றும் உயர் கல்வித் துறையினர் அனைவரும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவர். விசாரணை குழுவில், பெண் ஒருவர் இடம்பெற வேண்டும் என்றால், எந்த தடையுமில்லை. விசாரணை அதிகாரி, சந்தானம், சுதந்திரமாக முடிவு எடுத்துக் கொள்ளலாம்.விசாரணை குழு அமைப்பது தொடர்பாக, மாநில அமைச்சர்களிடம், கலந்தாலோசிக்க வேண்டியதில்லை. கவர்னருக்கு, அனைத்து அதிகாரமும் உள்ளது.

இந்த பிரச்னை தொடர்பாக, பத்திரிகையாளர் கள் உட்பட, யார் வேண்டுமானாலும், என்னை விசாரிக்கலாம்.விசாரணை முடிந்த பின், தேவைப்பட்டால், அரசியல் கட்சிகள் கேட்பது போல, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடவும், நான் தயாராக உள்ளேன். எனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை என்பதால், ராஜினாமா தேவையில்லை.

நடவடிக்கை

நான் கவர்னராக பதவியேற்ற பின், உயர் கல்வி துறையில், முறைகேடுகள் மற்றும் பிரச்னை களை தீர்க்க, தேவையான நடவடிக்கை
எடுத்து வருகிறேன். இதற்காக, தனி நடைமுறை ஒன்றை தயாரித்துள்ளேன். விரைவில், உயர் கல்வித்துறை மீதான, அனைத்து குற்றச்சாட்டுகளும் நீங்கும் வகை யில், அந்த நடைமுறை அமல்படுத்தப் படும்.

துணை வேந்தர்கள் நியமனங்களில், எந்த குறுக்கீடுகளும் இல்லாமல், தகுதியானவர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலை துணை வேந்தர் நியமனத்திலும், முழுமையான ஆய்வுக்கு பிறகே, நியமனம் நடந்தது. நான், ஐந்து துணை வேந்தர்களை நியமித்துள்ளேன். அதில், இருவர் மட்டுமே, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, நேற்று, மத்திய அமைச்சர், நிதின் கட்கரியுடன் பேசினேன். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, 'ஸ்கீம்' எனப்படும், செயல் திட்டம் அமைப்பது தொடர்பான நடவடிக்கை கள் துவங்கி உள்ளதாக, அவர் தெரிவித்தார். காவிரி பிரச்னை, என் இதயம் போன்றது. அதனால், மிக கவலையுடன், தமிழகத்திற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்.

இங்கு பதவியேற்றவுடன், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திலும், தமிழகத்தின் முக்கிய நீராதார பிரச்னைகளுக்கு, சாதகமான நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டு உள்ளேன். இதில் ஏற்படும் முன்னேற்றங்களை, மாநில அரசுக்கு,அவ்வப்போது தெரிவிக்கிறேன். அரசு திட்டங்கள் குறித்து, மாவட்டந்தோறும் நேரடியாக, ஆய்வு செய்கிறேன். அப்போது, மத்திய திட்டங்கள், மாநில திட்டங்கள் என பாராமல், மக்களுக்கான திட்டங்கள் குறித்து, ஆய்வு செய்கிறேன்.

என் வேலையை, நான் செய்கிறேன். அரசியல் கட்சியினர், அவர்களுடைய வேலையை செய்கின்றனர்.கவர்னர் மாளிகைக்கு, என்னை சந்திக்க வருவோர், எந்த தடையும் இல்லாமல் வந்து சந்திக்கலாம். முன்னர், பல தடைகள் இருந்தன. அப்படிப்பட்ட அதிகாரிகளை எல்லாம், அனுப்பி விட்டோம். இப்போது, செயலரோ, மற்ற அதிகாரிகளோ, என்னை சந்திப்பதற்கு, எந்த குறுக்கீடும் செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால், அவர்களும் மாற்றப்படுவர்.இவ்வாறு கவர்னர் கூறினார்.

சட்ட புத்தகம்!

மாநில அரசின் அதிகாரத்தை மீறுவதாக கூறப்படுவது பற்றிய கேள்விக்கு, கவர்னர்,   பன்வாரிலால் புரோஹித், இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகங்களை எடுத்து காண்பித்தார். பின், 'தி கவர்னர் கைடு' என்ற, வழிகாட்டி புத்தகத்தை காண்பித்து, கவர்னருக்குள்ள உச்சபட்ச அதிகாரங்களை வாசித்தார். அவர் கூறுகையில், ''என் நடவடிக் கைகள் முழுவதும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதாகவே இருக்கும்,'' என்றார்.

- நமது நிருபர் -

 


NEWS TODAY 23.12.2025