Wednesday, April 18, 2018

பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேட்டி
By DIN | Published on : 18th April 2018 04:25 AM



பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது என்றும் தமக்கே அதிகாரம் இருப்பதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள தனது மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ளேன். கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி ஆளுநராகப் பொறுப்பேற்றேன். நானும் பத்திரிகையாளராக இருந்துள்ளேன். ஒருசில கல்லூரிகளில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக செய்தித்தாள்கள் வழியாக திங்கள்கிழமை அறிந்து கொண்டேன். இது மிகவும் ஆபத்தான பிரச்னை. இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழக் கூடாது. இப்பிரச்னையில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.
ஒரு நபர் விசாரணை: அருப்புக்கோட்டை விவகாரம் தொடர்பாக விசாரித்து என்னிடம் (ஆளுநர்) அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.சந்தானத்தைக் கொண்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் மிகவும் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். அவர் தனது அறிக்கையை இம்மாத இறுதிக்குள் அளிப்பார்.

ஆணையம் அமைக்க உரிமை: வேந்தராக உள்ளதால் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரிகள் விவகாரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கத் தேவையான ஆணையங்களை அமைக்க எனக்கு அதிகாரம் உள்ளது. இதனிடையே, பல்கலைக்கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவை துணைவேந்தர் கலைத்துள்ளார். நான் அமைத்துள்ள ஒரு நபர் ஆணையமே தீவிரமாக விசாரணை மேற்கொள்ளும். இந்தப் பிரச்னையில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தமிழக மக்களுக்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகத்தைக் கூட பார்த்ததில்லை: அருப்புக்கோட்டை பேராசிரியை எனது பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறுகிறீர்கள். பல்கலைக்கழகங்கள், கல்லூரி நிகழ்ச்சிகளில் பலரும் பங்கேற்பார்கள். நிகழ்ச்சிகளை நடத்துவோர் இங்கும், அங்கும் செல்வார்கள். நீங்கள் (பத்திரிகையாளர்கள்) குறிப்பிடும் பேராசிரியை முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை.

சிபிஐ தேவையில்லை: பேராசிரியை தொடர்பான பிரச்னையில் எனது பெயரை இணைத்துப் பேசுவது அபத்தமானது-அடிப்படை ஆதாரமற்றது. இந்தப் பிரச்னையை விசாரிக்க சிபிஐ தேவையில்லை. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியைக் கொண்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நான் வயதில் மிக மூத்தவன். எனக்கு 78 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. எனக்கு பேரன்கள் மட்டுமல்லாது, அந்தப் பேரன்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
எனக்கே அதிகாரம் உள்ளது: விசாரணை ஆணையத்தை நான் தன்னிச்சையாக அமைத்துள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பேட்டி அளித்ததாகக் கூறுகிறீர்கள். இது தொடர்பாக ஆளுநருக்கான வழிகாட்டிக் கையேடு (நூலாசிரியர்-எஸ்எஸ் உபாத்யாயா) என்ற புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் வேந்தர், அதாவது ஆளுநர் என்பவர் சுயாட்சி அதிகாரம் பெற்றவர். எனவே, துணை வேந்தர் நியமனங்களில் மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்க வேண்டியதில்லை. மேலும், பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு ஒருபோதும் தலையிட முடியாது. இது உயர்கல்வித் துறை சட்ட விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆணையத்தில் பெண் இல்லாதது ஏன்?: பேராசிரியை தொடர்பான பிரச்னை என்பதால் விசாரணை ஆணையத்தின் தலைவராக பெண் இல்லாதது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். ஓய்வு பெற்ற மிக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியை விசாரணை ஆணையத் தலைவராக நியமித்துள்ளோம். எனவே, அவர் தனக்கு உதவி தேவைப்பட்டால் பெண் ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாம்.
பேராசிரியை விவகாரம் தொடர்பாக, மாநில அரசின் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் துறையினர் அவர்களது பணியைச் செய்வார்கள். விசாரணை ஆணையத்தின் அறிக்கையை 15 நாள்களுக்குள் அளிக்க உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை கிடைத்தவுடன் உங்களுக்கும் அது அளிக்கப்படும். ஆளுநர் மாளிகையின் நடவடிக்கைகள், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை முறையைப் பின்பற்ற விரும்புகிறேன்.

அரசியலுக்கு அப்பாற்பட்டவன்: அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரத்தில் அரசியல் கட்சியினர் என்மீது குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் அவர்களது பணியைச் செய்கிறார்கள். நான் எனது பணியை செய்து கொண்டிருக்கிறேன். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். அருப்புக்கோட்டை கல்லூரி பிரச்னை போன்று எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்து யோசித்து வருகிறேன் என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

இந்தச் சந்திப்பின் போது, ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜகோபால், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி.செல்லதுரை, பதிவாளர் வி.சின்னையா உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...