பள்ளிக்கூடங்களா, சித்திரவதைக் கூடங்களா?
By முனைவர் இரா. கற்பகம் | Published on : 17th April 2018 01:18 AM
காலை ஏழு மணிக்குப் பள்ளி வாகனத்தில் ஏறுகிறார்கள். மாலை ஆறு மணிக்கு வீடு வந்து சேருகிறார்கள். காலை உணவு, விளையாட்டு, பெற்றோர், சகோதர, சகோதரியோடு பேச்சு, சிரிப்பு, கதைப் புத்தகங்கள், எதுவும் கிடையாது. பள்ளி, பாடங்கள், படிப்பு, தேர்வு, பயிற்சி வகுப்பு (ட்யூஷலின்), மதிப்பெண். இவற்றைத் தவிர வேறு எதுவும் கிடையாது. இதுதான் இன்றைய குழந்தைகளின் நிலைமையாகிவிட்டது.
மழலையர் பள்ளியிலேயே ஆரம்பித்துவிடுகிறது சித்திரவதைப் படலம். பள்ளியிலும் படிப்பு, எழுதுதல், வீட்டுக்கு வந்தால் சாப்பிடக்கூட அவகாசமின்றி பயிற்சி வகுப்புக்கு ஓட வேண்டும். அங்கேயும் மறுபடி படிப்பு, எழுதுதல், கூடவே கையை ஒடிக்குமளவு வீட்டுப் பாடம்.
எல்லா பள்ளிகளிலும் எல்லா வகுப்புகளுக்கும் நேரம் ஒதுக்கி அட்டவணை கொடுக்கிறார்கள். நூலகத்துக்கு, விளையாட்டுக்கு, பிற கலைகளுக்கு என்று தனித்தனியே நேரம் ஒதுக்கியிருந்தாலும், பெரும்பாலான பள்ளிகளில் இவ்வகுப்புகளுக்குண்டான நேரத்தில் தேர்வுகளுக்குப் படிக்கச் செய்கிறார்கள் அல்லது வீட்டுப்பாடம் செய்யும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். பல பள்ளிகளில் நூலகமோ, விளையாட்டு மைதானமோ கிடையாது. ஓவியம், தையல், பாட்டு, நடனம், தற்காப்புக் கலைகள், யோகா போன்றவைகளைப் பள்ளி நேரத்தில் சொல்லித் தருவதில்லை. இவற்றுக்குத் தனியாகக் கட்டணம்; பள்ளி நேரத்துக்குப் பிறகே சொல்லித் தருகிறார்கள். மாணவர்களில் யார் யார்க்கு எதெது பிடிக்குமோ, அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கூட அவர்களுக்கு இல்லை. கலைகளில் அவரவர்க்குப் பிடித்த ஒன்றையோ இரண்டையோ தேர்ந்தெடுத்து, அவற்றைப் பள்ளி நேரத்திலேயே கடினமான பாட வகுப்புகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் சொல்லிக் கொடுத்தால் படிப்பில் சுவராசியம் கூடுமல்லவா?
மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காகவே அரசு ஒரு கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியே புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகள் மட்டுமே இதன்படி கற்பிக்கின்றன. தனியார் பள்ளிகள் தேர்வுகளுக்கு முதல் பருவத்திலிருந்து சில பாடங்கள், இரண்டாம் பருவத்திலிருந்து சில, அதில் ஒரு மதிப்பெண் வினாக்கள், இதில் ஐந்து மதிப்பெண் வினாக்கள் என்று மாணவர்களுக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்கின்றன. அரசு சமச்சீர் கல்வியைக் கட்டாயமாக்கினாலும், பல தனியார்ப் பள்ளிகள் அரசு பாட நூல்ளோடு வேறு பல வெளியீட்டாரின் புத்தகங்களையும் மாணவர்களை வாங்கச் சொல்கிறார்கள். இதில் கொஞ்சம், அதில் கொஞ்சம் என்று மாற்றி, மாற்றிக் கற்பித்து, எதுவுமே மாணவர்கள் அறிவில் ஏறாமல் செய்துவிடுகிறார்கள். பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு என்பதால் அவ்வகுப்பில் மட்டும்தான் சமச்சீர் பாடத்திட்டத்தை மட்டும் பயிற்றுவிக்கிறார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையும் குறைந்து போய்விட்டது. பெரும்பாலும் சனிக்கிழமையிலும் முழு நேரம் பள்ளிக்கூடம். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஞாயிறுகளிலும் பள்ளி உண்டு. முழுப் பரீட்சை முடிந்த மறுநாளே, விடுமுறையே இல்லாமல் அடுத்த வகுப்பின் பாடங்கள் நடத்தப் படுகின்றன. 'சிறப்பு வகுப்புகள்' என்று 'சிறப்புப் பெயர்' வேறு. அரசு விடுமுறைகளில் கூடப் பள்ளிகள் இயங்குகின்றன. கல்வித் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தால் எல்லாம் இவர்கள் பயப்படுவதில்லை. அபராதத் தொகையையும் மாணவர்கள் தலையிலேயே கட்டிவிட்டு 'ஜாம் ஜாமென்று' எல்லா விடுமுறை நாட்களிலும் பள்ளிகள் நடத்துகிறார்கள். பல பெற்றோருக்கும் இது செளகர்யமாகவே இருப்பதால் யாரும் இதுபற்றி அதிருப்தியோ, புகாரோ தெரிவிப்பதில்லை! வீட்டு விசேலிஷங்கள், பண்டிகைகள் என எக்காரணத்துக்கும் விடுமுறை எடுக்கக் கூடாது.
மாணவிகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. மாதவிலக்கு நாட்களில் சிலருக்கு முடியாமல் இருக்கும்போதுகூட, கொஞ்சமும் மனிதாபிமானமின்றி, அவர்களை தண்டிப்பதும், வகுப்புக்கு வெளியே நிற்க வைப்பதுமாகப் பல பள்ளிகள் செய்யும் சித்திரவதைக்கு எல்லையே இல்லை!
அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் ஓரளவு கழிப்பறை வசதி, குடிதண்ணீர் வசதி இருக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த வசதிகளும் கிடையாது.
இடைவேளை நேரமும் மிகவும் குறைக்கப்பட்டுவிட்டது. அந்த இடைவேளையிலும் ஆசிரியர் வகுப்பை நீட்டித்துக் கொண்டே போகும்போது, மாணவர்கள் பயந்து, வாய் திறவாது உட்கார்ந்திருக்கிறார்கள். மிச்சமிருக்கும் நேரத்தில் உணவருந்தி, தண்ணீர் குடித்துக் கழிப்பறைக்கும் சென்று வர வேண்டும். நேரம் போதவில்லையென்று பல மாணவர்கள் கழிப்பறைக்குச் செல்லாமலே சமாளிக்கிறார்கள். இதனால் உடற்கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு அல்லவா?
பல பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கமே கிடையாது. இருக்கும் சிலவற்றில் அவை முறையாகச் செயல்படுவதில்லை. அப்படியே செயல்பட்டாலும் பெற்றோர் யாரும் துணிந்து பள்ளி நிர்வாகத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில்லை; குறைகளை எடுத்துக் கூறுவதில்லை. தப்பித் தவறி யாராவது ஒரு மாணவன் அல்லது மாணவியின் பெற்றோர் நிர்வாகத்தை எதிர்த்துப் பேசினால் அந்த மாணவன்/மாணவி கதி அவ்வளவுதான். எந்த விதத்திலெல்லாம் அவர்களைப் பழிவாங்க முடியுமோ, அந்த விதத்திலெல்லாம் பழி வாங்கும் பள்ளி நிர்வாகம்.
சாப்பிட நேரமில்லாமல், வேடிக்கை, விளையாட்டு இல்லாமல், அடக்குமுறை மற்றும் கட்டுப்பாடுகளோடு ஒரே அறையில் நாள் முழுதும் அடைக்கப்பட்டு, 'படிப்பு, படிப்பு, படிப்பு' என்று வேலை செய்யும் இவர்களும் 'குழந்தைத் தொழிலாளர்கள்'தான். இவர்கள் செய்யும் தொழில், 'படித்தல்'. இவர்களுக்கு சம்பளம் கூடக் கிடையாது. இவர்கள் பணம் கட்டிச் சித்திரவதைக் கூடங்களில் சேர்ந்து 'வேலை பார்க்கிறார்கள்'. இந்தச் சித்திரவதைக் கூடங்களிலிருந்து இக்குழந்தைத் தொழிலாளர்களை எப்படி மீட்கப் போகிறோம்?
No comments:
Post a Comment