Wednesday, April 18, 2018

கல்வித் துறை அவலங்களைப் பேச வேண்டிய தருணம் இது!: ஆய்வு மாணவர்கள் ஆர்டர்லிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்

Published : 17 Apr 2018 09:25 IST

செல்வ புவியரசன்

THE HINDU TAMIL



பேராசிரியை ஒருவர், கல்லூரி மாணவிகளைத் தவறான திசையில் அழைத்துச்செல்ல முயலும் தொலைபேசி உரையாடல் வெளியாகியிருக்கிறது. கடும் அதிர்ச்சிக்கு ஆளான மாணவர்களும் பெற்றோர்களும் பொதுமக்களும் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் எளிதில் கடந்துபோகக்கூடிய விஷயமல்ல; உயர்கல்வித் துறை எவ்வளவு சீரழிந்துவருகிறது என்பதன் அறிகுறி. துணைவேந்தர் நியமனங்கள், பேராசிரியர் பணிநியமனங்கள், பதவி உயர்வுகள் என்று உயர்கல்வித் துறையின் உயர்மட்ட அளவில் மட்டும்தான் ஊழல்களும் முறைகேடுகளும் நடக்கின்றனபோலும்; மற்றபடி கல்வித் துறை அதன்போக்கில் சீராகத்தான் இயங்கிக்கொண்டிருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது அதுவும் தகர்ந்துவிட்டது.

பல்கலைக்கழக முறைகேடுகளைத் கண்டித்துவரும் பேராசிரியர் மு.இராமசாமியைப் போன்ற கல்வியாளர்கள், பல்கலைக்கழக முறைகேடுகள் ஆய்வு மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையிலிருந்தே தொடங்கிவிடுவதாகத் தொடர்ந்து சுட்டிக்காட்டுவருகிறார்கள். புறமதிப்பீட்டாளருக்கான வழிச்செலவுகள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டாலும்கூட ஆய்வு மாணவர்களும் மதிப்பீட்டாளருக்கான வழிச்செலவுகளை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளும் கட்டாயம் நிலவுகிறது. ஆய்வு வழிகாட்டிகளும் அதற்கு உடன்படுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, ஆய்வு வழிகாட்டியின் வீட்டில் ஆர்டர்லிகளைப் போல மாணவர்கள் நடத்தப்படும் கொடுமையும் நடக்கிறது. ஒரு உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பை முனைவர் பட்டம் வழங்கும் என்ற நம்பிக்கையில் இந்தக் கசப்பை வெளியே சொல்லாமல் விழுங்கிக்கொள்கிறார்கள் ஆய்வு மாணவர்கள்.

ஆய்வு மாணவர்கள் மட்டுமல்ல, கல்லூரியில் அடியெடுத்துவைக்கும் ஒவ்வொரு மாணவரும் மாணவியும் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். மாணவர்களின் தேர்வுச் சுமைகளை குறைக்கும் என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்ட அகமதிப்பீட்டு முறையே, இப்போது மாணவர்களின் கழுத்தின் மேல் தொங்கும் கத்தியாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, மாணவிகளுக்கு!

பேராசிரியையின் தொலைபேசி உரையாடல் கல்வித் துறையில் நடந்துகொண்டிருக்கும் ஒரு இழிவை, பொதுவெளிக்குக் கொண்டுவந்திருக்கிறது. மற்றபடி, இந்தச் சம்பவத்தை விதிவிலக்கு என்று சொல்லிவிட முடியாது. வெளியில் சொல்லமுடியாத வெட்கம்தான் பலரை உண்மைகளைப் பேசவிடாமல் தடுக்கிறது. அதுவே குற்றவாளிகள் தொடர்ந்து தவறுகளைச் செய்யவும் காரணமாக இருக்கிறது. மாணவிகளின் புகாரின்படி, கல்லூரியின் மாண்பைக் கெடுத்திருக்கிறார் என்று முடிவெடுத்து அந்தப் பேராசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். “விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறோம். தேர்வுகள் முடிந்ததும் விசாரணை தொடங்கும்” என்று பதிலளித்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். பொதுவெளியில் வராதிருந்தால் அது பெயரளவிலான விசாரணையாக நடந்துமுடிந்திருக்குமோ என்ற சந்தேகம்தான் எழுகிறது. இதற்கிடையே பெரும் பரபரப்புக்கிடையில் அந்தப் பேராசிரியை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

அதிர்ச்சிப் பட்டியல்

சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கும் வழக்கறிஞர் ரயா சர்க்கார், இந்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவிகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய பேராசிரியர்களின் பட்டியலை வெளியிட்டார். பாதிக்கப்பட்ட மாணவிகள், தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பட்டியல் நீண்டது. சமூக வலைதளங்களில் இந்தக் குற்றச்சாட்டுகள் பலரால் பகிரப்பட்டன. சில குற்றச்சாட்டுகள், சட்டபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் அமைந்திருந்தன. சில குற்றச்சாட்டுகள் குறித்து சட்டரீதியாக எந்தப் புகாரும் இதுவரை அளிக்கப்படவில்லை.

“குற்றம்சாட்டும் பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், அவர்களின் பெயர் விவரங்களை வெளியிட மாட்டேன்” என்று அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார் ரயா சர்க்கார். குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர்களில் மிகச்சிலர் மட்டுமே அவற்றை மறுத்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் வாய் திறக்கவேயில்லை. எழுத்துபூர்வமாக எங்களுக்கு எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்று சில கல்வி நிறுவனங்கள் கூறின. எனினும், அத்தவறைக் குறிப்பிட்ட பேராசிரியர்கள் மீண்டும் துணியமாட்டார்கள் என்ற அளவில் இத்தகைய சமூக வலைதள இயக்கங்களுக்குப் பங்கு இருக்கிறது.

பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புக்காகச் செல்லும் மாணவியர்கள், பெரும்பாலும் பேராசிரியைகளைத்தான் ஆய்வு வழிகாட்டிகளாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்கு வாய்ப்பில்லாதபோது, வழிகாட்டிக்காகக் காத்திருக்கிறார்கள். இல்லையென்றால் ஆய்வுப் படிப்பு ஆசையைத் துறந்துவிடுகிறார்கள். எனில், இந்தப் பிரச்சினையின் பின்னுள்ள அச்சத்தை நாம் புரிந்துகொள்ளலாம். முதுகலைப் பட்டம் பெறும் இந்திய மாணவர்கள் ஆய்வுகளில் ஆர்வம் செலுத்துவதில்லை என்று குறைபட்டுக்கொள்ளும் இந்திய உயர்கல்வித் துறை, இத்தகைய நடைமுறைக் கேவலங்களைக் களைவதில் அக்கறை செலுத்துவதில்லை.

அறிவுத் திருட்டு

ஆய்வு மாணவர்கள், தங்கள் வழிகாட்டிகளுக்குத் தேவையான புத்தகங்களைத் தன் சொந்தச் செலவில் வாங்கிக்கொடுக்க வேண்டும், அவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கான குறிப்புகளைத் தயாரித்துக்கொடுக்க வேண்டும். சில சமயங்களில் அவர்கள் பெயரில் வெளிவரும் முழுக் கட்டுரையையும் எழுதிக்கொடுக்க வேண்டும். இப்படித் தங்கள் அறிவையும் அதன்வாயிலாக அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான அங்கீகாரத்தையும்கூட ஆய்வு வழிகாட்டிகளுக்கு மாணவர்கள் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. சர்வதேச ஆய்விதழ்களில் கட்டுரை எழுதும் பெரும்பாலான பேராசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்தே கட்டுரை எழுதுகிறார்கள். உலகம் போற்றும் பேராசிரியர்கள், தங்கள் ஆய்வு நூலில் பங்களித்த மாணவர்களின் பட்டியலுக்கு சிறப்பிடம் கொடுக்கிறார்கள். ஆனால், இந்த ஆய்வுநெறியை இந்தியப் பேராசிரியர்களில் பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதில்லை என்பது வருத்தத்துக்குரியது.

அறிவுத் திருட்டு, உடல் உழைப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் என்று ஏற்கெனவே ஆய்வு மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டுவருகிறார்கள். இப்போது இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவர்களையும்கூட இந்தச் சீரழிவு நெருங்கிவருகிறது. அகமதிப்பீடு, மேற்படிப்புக்கான உதவித்தொகை என்று ஆசைகளைக் காட்டி மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் கல்வித் துறை அதிகாரிகள் யார் என்பது வெளிவராதவரை, இதுதொடர்பான நடவடிக்கைகள் பலன் தராது. படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோவெனப் போவான் என்று சாபம்விட்டான் பாரதி. படிப்பு சொல்லிக்கொடுப்பவனே பாவம் செய்தால்?

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

No comments:

Post a Comment

Asset details of government employees cannot be shielded from public: Madras HC

Asset details of government employees cannot be shielded from public: Madras HC These details, particularly the date of joining and superann...