Friday, May 11, 2018

மாநில செய்திகள்

குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் பலி வதந்தி பரப்பினால் 1 ஆண்டு ஜெயில்





குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். #BabyKidnapgang

மே 11, 2018, 05:45 AM

சென்னை,

காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட சில வட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்தும் வடமாநில கும்பலின் நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வருகிறது.

‘வாட்ஸ்-அப்’, ‘முகநூல்’ போன்ற சமூக வலைத்தளங் கள் மூலம் பரவும் இதுபோன்ற வதந்திகளால், இதுவரை அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலர் உயிர் இழந்தும் இருக்கிறார்கள்.

மலேசியாவில் இருந்து வந்த உறவினர்களுடன் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்ற சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் (வயது 65) என்பவர், குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் கிராமவாசிகளால் அடித்துக்கொல்லப்பட்டார். அவருடன் சென்ற 4 பேர் தாக்குதலில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை சாலையில் நடந்த சென்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை, குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து சிலர் அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் சென்னையைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் அமீர் என்றும், அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோன்ற குழந்தை கடத்தல் பீதியால் நேற்று முன்தினம் இரவு மேலும் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார்.

இந்த கொடூர சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் நடந்தது. அங்கு நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று கருதிய கிராம மக்கள் பிடித்து விசாரித்தனர். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அவர் மயங்கி விழுந்து பரிதாபமாக செத்தார். பின்னர் அவரது உடலை மேம்பாலத்தின் சுவரில் கட்டி தொங்கவிட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த உடலை கைப்பற்றி விசாரித்ததில், அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. கிராம மக்களின் சந்தேகத்தால் அப்பாவி ஒருவர் உயிர் இழக்க நேரிட்டது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. பின்னர் அந்த பெண் சிகிச்சைக்காக விருத்தாசலம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே, அந்த பெண்ணை போலீசார் மீட்டுச்சென்றபோது, அவர்களுடன் கிராமவாசிகள் சிலர் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

இதுபோன்ற குழந்தை கடத்தல் புரளி காரணமாக அப்பாவிகள் தாக்கப்படுவதும், அதில் சிலர் உயிர் இழப்பதும் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை கடத்தல் கும்பல் பற்றிய வதந்தியால் அப்பாவிகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க, இதுபோன்ற சம்பவங்கள் நடந்த பகுதிகளில் போலீசார் ஆட்டோக்களில் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் அதுபற்றி போலீசுக்கு தெரிவிக்குமாறும் கூறி வருகிறார்கள்.

குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்புவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 1 ஆண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Thursday, May 10, 2018

 
குணச்சித்திர நடிகர் நீலகண்டன் உடல் நலக்குறைவால் மரணம்!
 
விகடன் 3 hrs ago

 

`பம்மல் கே சம்பந்தம்', 'அந்நியன்', 'கல்யாணம் சமையல் சாதம்' உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் நீலகண்டன். தமிழில் அதிகப் படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்திருக்கிறார். எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாடக மேடைகளிலும் நடித்திருக்கிறார் நீலகண்டன். திரைத்துறையினர் இவரை சுருக்கமாக `நீலு’ என்று அழைப்பார்கள். 83 வயதான நீலு, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீலகண்டன் இன்று காலமானார். இவரது இறுதிச் சடங்கு சென்னை பெசன்ட் நகரிலுள்ள வீட்டில், நாளை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. சினிமா துறையைச் சேர்ந்த பலரும் இவரது இறப்புக்கு தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
அரசுப் பேருந்தில் பயணிகளின் தாகத்தைத் தீர்க்கும் டிரைவர் கண்டக்டர்!
 
விகடன் 2 hrs ago




அரசுப் பேருந்து ஒன்றில் தண்ணீர் கேன்கள் மூலம் பயணிகளின் தாகத்தைத் தீர்த்து வருகிறார்கள் பேருந்தின் டிரைவரும் கண்டக்டரும். இருவரையும் பயணிகளும் பொதுமக்களும் பாராட்டுவதோடு வாழ்த்திவிட்டும் செல்கிறார்கள்.

கோடை வெயில் தமிழகம் முழுவதும் கொளுத்தி எடுப்பதோடு மக்கள் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்களை குஷிப்படுத்தி குளிர்ச்சிப் படுத்தினாலும் காவிரியில் நீர் இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோடைக்கான தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறார்கள். அரசுப் பேருந்தில் இதேபோல் தண்ணீர் கேன் வைத்து பயணிகளின் தாகத்தைத் தீர்த்து வருகிறார்கள் டிரைவரும் கண்டக்டரும். இதை அனைத்துப் பேருந்துகளிலும் பின்பற்றலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியிலிருந்து கல்லணைக்கு ஒருமுறையும் மற்ற நேரங்களில் செங்கிப்பட்டியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகச் சுரக்குப்பட்டி என்ற ஊருக்கும் செல்கிறது 88 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து. இதில் டிரைவராக செல்வராஜ் என்பவரும் கண்டக்டராக முத்தமிழ் செல்வன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த செலவில் தினமும் இரண்டு மினரல் வாட்டர் கேன்கள் வாங்கி டிரைவர் சீட்டுக்கு அருகில் உட்கார்வதற்கு பயன்படுத்தக்கூடிய சிறிய அளவிளான பிளாஸ்டிக் சேரின் மேல் தண்ணீர் கேனை வைத்து பஸ் வேகமாகச் செல்லும்போது கவிழ்ந்துவிடாத அளவுக்கு கயிறு கொண்டு கட்டியிருக்கின்றனர்.

அந்தத் தண்ணீர் கேன் முகப்பில் தன்ணீரை எடுப்பதற்கு பம்ப் வைத்துள்ளனர். அதன் ஒரு டம்ளர் கவிழ்த்து வைத்துள்ளனர். அந்தப் பம்பின் மேல் அழுத்தினால் தண்ணீர் கொட்டுகிறது. இதைப் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் பயன்படுத்துவதற்காக இப்படி ஓர் ஏற்பாட்டை நாங்கள் செய்திருக்கிறோம் என்கிறார்கள். இருவரின் இந்த முயற்சியை அனைவரும் மனமார பாராட்டி செல்கின்றனர். நாமும் பாராட்டிவிட்டு பேசினோம்.

''தினமும் நாங்கள் பணிக்குச் செல்லும்போது வாட்டர் பாட்டிலில் எங்களின் தேவைக்காகத் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்வோம். இப்போது கடுமையான வெயில் வாட்டுகிறது. ஒரு நடைக்கு குறைந்தது 1.30 மணி நேரத்துக்கு மேல் பல குக்கிராமங்கள் வழியாக எங்கள் பேருந்து செல்லும். எல்லா கிராமத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்களும் அரசுப் பேருந்தில் பயணிப்பார்கள். அவர்கள் எல்லாம் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்க முடியாது. பேருந்து சென்றுகொண்டிருக்கும்போது இடையில் நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்கவும் முடியாது.

அதனால் பல நாள்கள் பலபேர் தாகத்தில் தவித்திருக்கிறார்கள். நாங்கள் பாட்டில்களில் வைத்துள்ள தண்ணீரை எடுத்து குடிக்கும்போது சார் எங்களுக்கும் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என அப்பாவியாகக் கேட்பார்கள். நாங்களும் கொடுப்போம். அப்போதுதான் எங்களுக்கு இந்த யோசனை வந்தது. எல்லோரும் தண்ணீர் குடிக்கும் வகையில் பேருந்திலேயே தண்ணீர் வைக்க முடிவு செய்தோம். இருவரும் எங்கள் துறை அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று பயணிகள் குடிக்க தண்ணீர் வைத்து வருகிறோம்.

நாங்களும் அந்தத் தண்ணீரை பயன்படுத்திய மாதிரி ஆச்சு; நாலு பேருக்கு நல்லது செஞ்ச மாதிரியும் ஆச்சு'' என்றவர்கள் தொடர்ந்தனர். ''கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இப்படி செய்து வருகிறோம். இனி கோடை காலம் மட்டும் இல்லாமல் எப்போதும் குடிப்பதற்கு தண்ணீர் வைப்பதற்கு முடிவு செய்துள்ளோம்'' எனப் புன்னகையுடன் சொல்கிறார்கள் செல்வராஜும் முத்தமிழ் செல்வனும்.

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், ''காவிரி தவழ்ந்து செல்லும் தஞ்சாவூரிலேயே கடுமையான வறட்சி நிலவி வருகிறது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் குடிநீருக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோடை வெயில் இந்தப் பகுதியில் அனல் காற்றாக வீசி வெப்பத்தைக் கக்குகிறது. காவிரி செல்லும் திசையில் பயணிக்கும் இந்தப் பேருந்தில் சில நேரங்களில் பிடித்து வைப்பதற்குத் தண்ணீர் இல்லாததால் தங்கள் கைகாசை கொடுத்துதான் இருவரும் தண்ணீர் வாங்கி வைத்து எல்லோரது தாகத்தையும் தீர்க்கிறார்கள் என்பது ரொம்பவே மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இப்போதே குடிதண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் அவலநிலையில் இருக்கிறார்கள் காவிரி ஆற்றின் ஒரத்தில் வாழும் மக்கள். இனி போகப் போக என்ன ஆகுமோ என நினைக்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது'' என்கிறார்.

அடிச்சது 2 மணி நேரம்; ரெஸ்ட் ஒரு மணி நேரமா?’ - வடிவேலு காமெடி நிஜமான கதை
 
விகடன் 16 hrs ago

 


கலவரத்தை அடக்க ஒரு திரைப்படத்தில் ஏட்டு வடிவேலு வித்தியாசமான கெட்டப்பில் போவார். சீருடை அணியாத அவரை மற்ற போலீஸார் அடித்து துவைத்து தொங்கப் போட்டுவிடுவார்கள். அதேபோல நிஜத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னையில் நேற்று கோட்டையை முற்றுகையிட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைது செய்தனர். சம்பவ இடத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் சுப்புராஜ் என்பவர் வெள்ளை உடையுடன் கண்ணாடி அணிந்து துப்பறியும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இந்தச் சமயத்தில் பல இடங்களில் ஓடி ஒளிந்த ஆசிரியர்களையும் அரசு அலுவலர்களையும் போலீஸார் விரட்டி விரட்டி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனர். சுப்புராஜும் பார்ப்பதற்கு ஆசிரியர்போல காணப்பட்டதால், போலீஸார் அவரையும் வேனில் ஏறுமாறு கூறினர். அவரோ... 'சார் நான் போலீஸ் நான் போலீஸ்' என்று கத்தினார். அதை, காதில் வாங்கிக்கொள்ளாத இன்ஸ்பெக்டர் ஒருவர் சுப்புராஜுவின் கன்னத்தில் ஓங்கி அடித்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றார். அடிவாங்கிய பின்னரே, தன் அடையாள அட்டையை எடுத்து சுப்புராஜ் காட்டினார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், 'முதலிலேயே உங்க அடையாள அட்டையைக் காண்பிச்சுருக்கலாமே' என்றவர்கள் தலையைச் சொறிந்தனர். பின்னர், அடித்தற்காக சி.பி.சி.ஐ.டி உதவி ஆய்வாளரான சுப்புராஜிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு நழுவினார். 'தனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வது' என்று நொந்தவாறு சுப்புராஜும் இடத்தைக் காலி செய்தார்.

திருமணமான பத்தே நாளில் கணவனுக்கு நடந்த கொடூரம்- ஃபேஸ்புக் காதலனுக்காக மனைவியின் விபரீதச் செயல் 
 
விகடன் 

 

திருமணமான 10 நாளில் கணவனை ஃபேஸ்புக் காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் செட்டபடி வலச கிராமத்தைச் சேர்ந்தவர் கௌரி சங்கர். இவருக்கும் அவரின் அக்கா மகளான விஜயநகரத்தைச் சேர்ந்த சரஸ்வதிக்கும் கடந்த மாதம் 28-ம் தேதி திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் மே 7-ம் தேதி பைக்கில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது பைக்கை வழிமறித்த கும்பல், கௌரி சங்கரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. சரஸ்வதிக்கும் காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸார் அங்கு வந்து சரஸ்வதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக விஜயநகரம் எஸ்.பி பால்ராஜ் நேரில் சென்று சரஸ்வதியிடம் விசாரணை நடத்தினார். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரஸ்வதியிடம் விசாரித்தபோது கொள்ளையர்கள் தாக்கியதில் தன்னுடைய கணவர் இறந்துவிட்டதாக முதலில் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களைக் கூறினார். இதனால் சரஸ்வதி மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோதுதான் கணவரை கொலை செய்ய அவர் சதித் திட்டம் போட்டது தெரிந்தது.

பட்டப்படிப்பு முடித்த சரஸ்வதி, விசாகப்பட்டினத்தில் கடந்த 3 ஆண்டுகளாகத் தங்கியிருந்தார். அப்போது, சிவா என்பவர் ஃபேஸ்புக் மூலம் சரஸ்வதிக்கு அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இந்தக் காதல் விவகாரம் சரஸ்வதியின் பெற்றோருக்குத் தெரியாது. இதனால், சரஸ்வதியின் படிப்புக்கு பண உதவி செய்த அவருடைய மாமா கௌரி சங்கருக்குப் பெற்றோர் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். விருப்பம் இல்லாமல் நடந்த இந்தத் திருமணத்தால் மன வேதனையடைந்துள்ளார் சரஸ்வதி. காதலன் சிவாவுடன் ஆலோசித்து கௌரி சங்கரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

நண்பர்கள் மூலம் இந்தக் கொலை நடந்துள்ளது. செலவுக்குப் பணம் கொடுக்க திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார் சரஸ்வதி. திட்டமிட்டபடி இரவில் பைக்கில் வரும்போது கௌரி சங்கரை கூலிப்படையினர் கொலை செய்துள்ளனர். அதன் பிறகு, எதுவுமே நடக்காததுபோல நாடகமாடியுள்ளார். ஆனால், சரஸ்வதியின் நடவடிக்கைகள், அவருக்கு வந்த போன் அழைப்புகள் மூலம் அவர் எங்களிடம் சிக்கிக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின்படி காதலன் சிவா, அவரின் நண்பர் கோபி உட்பட 4 பேரை கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் சரஸ்வதியும் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

சரஸ்வதி போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், "சம்பவத்தன்று நானும் என்னுடைய மாமாவும் பைக்கில் வீட்டுக்குச் சென்றோம். கருகுபள்ளி என்ற இடத்துக்கு வந்தபோது பைக்கை நிறுத்தும்படி மாமாவிடம் கூறினேன். அப்போது அங்கு மறைந்திருந்த கோபி, சிவா மற்றும் சிலர் இரும்பு ராடால் கௌரி சங்கரைத் தாக்கினர். பிறகு, என்னையும் தாக்கினர். அதன் பிறகு, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து என்னுடைய நகைகளைக் கழற்றி, உள்ளாடைக்குள் மறைத்து வைத்தேன். பிறகு, போலீஸாரிடம் நகைக்காக கொலை நடந்ததுபோல நடித்தேன். ஆனால், போலீஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்


  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு 116 பேர் விண்ணப்பம்
 
தினகரன் 

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு 116 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள துணை வேந்தர் மணியனின் பதவிக் காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் துணை வேந்தர் பதவிக்கு 116 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
  `என் மகளை இழந்திருக்கிறேன்; கடைசிவரை போராடுவேன்!’ - விஷ்ணுபிரியாவின் தந்தை உருக்கம்
 
விகடன்

 

"திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கை கைவிட்டுவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ள நிலையில் 'என் மகளுக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவேன்' என்று விஷ்ணுபிரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான விஷ்ணுபிரியாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விளக்கும் இறுதி நம்பிக்கையாக இருந்த சி.பி.ஐ, அந்த வழக்கைக் கைவிடுவதாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி, சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கிழக்குத் தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இளைஞரான கோகுல்ராஜ் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தார் என்றும், அதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது. மேலும், அதன் பின்னணியில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து, தமிழகமே கொந்தளித்தது. இந்தத் தகவல் வெளியான உடனே தலைமறைவான யுவராஜ் வாட்ஸ் அப் வழியாக ஆடியோ அனுப்பி, போலீஸை அதிரவைத்தார். சாதிய மோதலாகவும் போலீஸுக்கான சவாலாகவும் கோகுல்ராஜ் வழக்கு உருவெடுத்த சமயம், 2015 செப்டம்பர் 18-ம் தேதி கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி விஷ்ணுபிரியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். நாடே அதிர்ந்தது. அது தற்கொலையா, கொலையா என எழுந்த சந்தேகம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.

விஷ்ணுபிரியாவின் மரணத்துக்கு அப்போது நாமக்கல் மாவட்ட எஸ்.பி-யாக இருந்த செந்தில்குமார்தான் காரணம் என்று அவரின் குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர். விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழியான டி.எஸ்.பி மகேஸ்வரியும் எஸ்.பி செந்தில்குமார் மீதுதான் குற்றம்சாட்டினார். 'கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தமே இல்லாதவர்கள்மீது குண்டாஸ் போடச்சொல்லி எஸ்.பி செந்தில்குமார் கொடுத்த டார்ச்சர்தான், விஷ்ணுபிரியாவைக் கொன்றது. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன என்று போலீஸ் அதிகாரியான மகேஸ்வரி கண்ணீரோடு சொல்ல ஒட்டுமொத்த காவல்துறையும் ஆடிப்போனது.

அந்தப் பரபரப்பை அடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. "குற்றம் சாட்டப்படும் எஸ்.பி-யை எதுவும் விசாரிக்காமல் விஷ்ணுபிரியாவுக்கு காதல் பிரச்னை. அதனால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லி யார் யாரையோ அழைத்து விசாரணை நடத்தியது சி.பி.சி.ஐ.டி போலீஸ். இதனால் விஷ்ணுபிரியாவின் குடும்பம் அதிருப்தியடைந்தது. அவரின் தந்தை ரவி, சி.பி.ஐ விசாரணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். நீதிமன்ற உத்தரவையடுத்து வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரிப்பதால் உண்மை வெளிவரும் என்று எல்லோரும் நம்பி இருந்த சூழலில்தான், " டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. எனவே வழக்கைக் முடித்துக்கொள்வதாகக் கோவை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது சி.பி.ஐ.

இதுதொடர்பாகத் தங்கள் கருத்தை தெரிவிப்பதற்காகக் கோவை நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி. அதன்படி இன்று அவர் கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கின் விசாரணையை வருகிற 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மலர் மன்னன் உத்தரவிட்டார். அதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, "சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள அறிக்கை, இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை. அதைப் படித்த பிறகுதான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க முடியும். அந்த அறிக்கையைக் கேட்டு மனு செய்துள்ளோம். நான் என் மகளை இழந்திருக்கிறேன். ஒரு தந்தையாக அவளுக்காக நான் கடைசிவரை போராடுவேன்’’ என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு.

NEWS TODAY 30.12.2025