Thursday, May 10, 2018

அரசுப் பேருந்தில் பயணிகளின் தாகத்தைத் தீர்க்கும் டிரைவர் கண்டக்டர்!
 
விகடன் 2 hrs ago




அரசுப் பேருந்து ஒன்றில் தண்ணீர் கேன்கள் மூலம் பயணிகளின் தாகத்தைத் தீர்த்து வருகிறார்கள் பேருந்தின் டிரைவரும் கண்டக்டரும். இருவரையும் பயணிகளும் பொதுமக்களும் பாராட்டுவதோடு வாழ்த்திவிட்டும் செல்கிறார்கள்.

கோடை வெயில் தமிழகம் முழுவதும் கொளுத்தி எடுப்பதோடு மக்கள் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்களை குஷிப்படுத்தி குளிர்ச்சிப் படுத்தினாலும் காவிரியில் நீர் இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோடைக்கான தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகத்தை தீர்த்து வருகிறார்கள். அரசுப் பேருந்தில் இதேபோல் தண்ணீர் கேன் வைத்து பயணிகளின் தாகத்தைத் தீர்த்து வருகிறார்கள் டிரைவரும் கண்டக்டரும். இதை அனைத்துப் பேருந்துகளிலும் பின்பற்றலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியிலிருந்து கல்லணைக்கு ஒருமுறையும் மற்ற நேரங்களில் செங்கிப்பட்டியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகச் சுரக்குப்பட்டி என்ற ஊருக்கும் செல்கிறது 88 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து. இதில் டிரைவராக செல்வராஜ் என்பவரும் கண்டக்டராக முத்தமிழ் செல்வன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த செலவில் தினமும் இரண்டு மினரல் வாட்டர் கேன்கள் வாங்கி டிரைவர் சீட்டுக்கு அருகில் உட்கார்வதற்கு பயன்படுத்தக்கூடிய சிறிய அளவிளான பிளாஸ்டிக் சேரின் மேல் தண்ணீர் கேனை வைத்து பஸ் வேகமாகச் செல்லும்போது கவிழ்ந்துவிடாத அளவுக்கு கயிறு கொண்டு கட்டியிருக்கின்றனர்.

அந்தத் தண்ணீர் கேன் முகப்பில் தன்ணீரை எடுப்பதற்கு பம்ப் வைத்துள்ளனர். அதன் ஒரு டம்ளர் கவிழ்த்து வைத்துள்ளனர். அந்தப் பம்பின் மேல் அழுத்தினால் தண்ணீர் கொட்டுகிறது. இதைப் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் பயன்படுத்துவதற்காக இப்படி ஓர் ஏற்பாட்டை நாங்கள் செய்திருக்கிறோம் என்கிறார்கள். இருவரின் இந்த முயற்சியை அனைவரும் மனமார பாராட்டி செல்கின்றனர். நாமும் பாராட்டிவிட்டு பேசினோம்.

''தினமும் நாங்கள் பணிக்குச் செல்லும்போது வாட்டர் பாட்டிலில் எங்களின் தேவைக்காகத் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்வோம். இப்போது கடுமையான வெயில் வாட்டுகிறது. ஒரு நடைக்கு குறைந்தது 1.30 மணி நேரத்துக்கு மேல் பல குக்கிராமங்கள் வழியாக எங்கள் பேருந்து செல்லும். எல்லா கிராமத்தைச் சேர்ந்த அடித்தட்டு மக்களும் அரசுப் பேருந்தில் பயணிப்பார்கள். அவர்கள் எல்லாம் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்க முடியாது. பேருந்து சென்றுகொண்டிருக்கும்போது இடையில் நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்கவும் முடியாது.

அதனால் பல நாள்கள் பலபேர் தாகத்தில் தவித்திருக்கிறார்கள். நாங்கள் பாட்டில்களில் வைத்துள்ள தண்ணீரை எடுத்து குடிக்கும்போது சார் எங்களுக்கும் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என அப்பாவியாகக் கேட்பார்கள். நாங்களும் கொடுப்போம். அப்போதுதான் எங்களுக்கு இந்த யோசனை வந்தது. எல்லோரும் தண்ணீர் குடிக்கும் வகையில் பேருந்திலேயே தண்ணீர் வைக்க முடிவு செய்தோம். இருவரும் எங்கள் துறை அதிகாரியிடம் உரிய அனுமதி பெற்று பயணிகள் குடிக்க தண்ணீர் வைத்து வருகிறோம்.

நாங்களும் அந்தத் தண்ணீரை பயன்படுத்திய மாதிரி ஆச்சு; நாலு பேருக்கு நல்லது செஞ்ச மாதிரியும் ஆச்சு'' என்றவர்கள் தொடர்ந்தனர். ''கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இப்படி செய்து வருகிறோம். இனி கோடை காலம் மட்டும் இல்லாமல் எப்போதும் குடிப்பதற்கு தண்ணீர் வைப்பதற்கு முடிவு செய்துள்ளோம்'' எனப் புன்னகையுடன் சொல்கிறார்கள் செல்வராஜும் முத்தமிழ் செல்வனும்.

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர், ''காவிரி தவழ்ந்து செல்லும் தஞ்சாவூரிலேயே கடுமையான வறட்சி நிலவி வருகிறது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் குடிநீருக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோடை வெயில் இந்தப் பகுதியில் அனல் காற்றாக வீசி வெப்பத்தைக் கக்குகிறது. காவிரி செல்லும் திசையில் பயணிக்கும் இந்தப் பேருந்தில் சில நேரங்களில் பிடித்து வைப்பதற்குத் தண்ணீர் இல்லாததால் தங்கள் கைகாசை கொடுத்துதான் இருவரும் தண்ணீர் வாங்கி வைத்து எல்லோரது தாகத்தையும் தீர்க்கிறார்கள் என்பது ரொம்பவே மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இப்போதே குடிதண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் அவலநிலையில் இருக்கிறார்கள் காவிரி ஆற்றின் ஒரத்தில் வாழும் மக்கள். இனி போகப் போக என்ன ஆகுமோ என நினைக்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது'' என்கிறார்.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...