Thursday, May 10, 2018

  `என் மகளை இழந்திருக்கிறேன்; கடைசிவரை போராடுவேன்!’ - விஷ்ணுபிரியாவின் தந்தை உருக்கம்
 
விகடன்

 

"திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கை கைவிட்டுவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ள நிலையில் 'என் மகளுக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவேன்' என்று விஷ்ணுபிரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான விஷ்ணுபிரியாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விளக்கும் இறுதி நம்பிக்கையாக இருந்த சி.பி.ஐ, அந்த வழக்கைக் கைவிடுவதாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி, சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கிழக்குத் தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இளைஞரான கோகுல்ராஜ் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தார் என்றும், அதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது. மேலும், அதன் பின்னணியில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து, தமிழகமே கொந்தளித்தது. இந்தத் தகவல் வெளியான உடனே தலைமறைவான யுவராஜ் வாட்ஸ் அப் வழியாக ஆடியோ அனுப்பி, போலீஸை அதிரவைத்தார். சாதிய மோதலாகவும் போலீஸுக்கான சவாலாகவும் கோகுல்ராஜ் வழக்கு உருவெடுத்த சமயம், 2015 செப்டம்பர் 18-ம் தேதி கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி விஷ்ணுபிரியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். நாடே அதிர்ந்தது. அது தற்கொலையா, கொலையா என எழுந்த சந்தேகம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.

விஷ்ணுபிரியாவின் மரணத்துக்கு அப்போது நாமக்கல் மாவட்ட எஸ்.பி-யாக இருந்த செந்தில்குமார்தான் காரணம் என்று அவரின் குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர். விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழியான டி.எஸ்.பி மகேஸ்வரியும் எஸ்.பி செந்தில்குமார் மீதுதான் குற்றம்சாட்டினார். 'கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தமே இல்லாதவர்கள்மீது குண்டாஸ் போடச்சொல்லி எஸ்.பி செந்தில்குமார் கொடுத்த டார்ச்சர்தான், விஷ்ணுபிரியாவைக் கொன்றது. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன என்று போலீஸ் அதிகாரியான மகேஸ்வரி கண்ணீரோடு சொல்ல ஒட்டுமொத்த காவல்துறையும் ஆடிப்போனது.

அந்தப் பரபரப்பை அடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. "குற்றம் சாட்டப்படும் எஸ்.பி-யை எதுவும் விசாரிக்காமல் விஷ்ணுபிரியாவுக்கு காதல் பிரச்னை. அதனால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லி யார் யாரையோ அழைத்து விசாரணை நடத்தியது சி.பி.சி.ஐ.டி போலீஸ். இதனால் விஷ்ணுபிரியாவின் குடும்பம் அதிருப்தியடைந்தது. அவரின் தந்தை ரவி, சி.பி.ஐ விசாரணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். நீதிமன்ற உத்தரவையடுத்து வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரிப்பதால் உண்மை வெளிவரும் என்று எல்லோரும் நம்பி இருந்த சூழலில்தான், " டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. எனவே வழக்கைக் முடித்துக்கொள்வதாகக் கோவை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது சி.பி.ஐ.

இதுதொடர்பாகத் தங்கள் கருத்தை தெரிவிப்பதற்காகக் கோவை நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி. அதன்படி இன்று அவர் கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கின் விசாரணையை வருகிற 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மலர் மன்னன் உத்தரவிட்டார். அதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, "சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள அறிக்கை, இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை. அதைப் படித்த பிறகுதான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க முடியும். அந்த அறிக்கையைக் கேட்டு மனு செய்துள்ளோம். நான் என் மகளை இழந்திருக்கிறேன். ஒரு தந்தையாக அவளுக்காக நான் கடைசிவரை போராடுவேன்’’ என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...